சாமானிய பெண் சம்பல் இராணியாக மாறிய வரலாறு

கொள்ளை கும்பலில் தன்னை அடையாளப்படுத்தி பின்னாளில் அரசியல்வாதியாகவும் மாறிய ஒரு பெண்ணின் கட்டுரையே இது. பூலான் தேவி என்னும் இப்பெண் கொள்ளையரசி அல்லது பண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் நபர். இந்த பெண்  உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். இவளின் தந்தை தேவிதீன் மற்றும் தாயார் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டிப் பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு தன்னை விட இருபது வயது முதிய ஆளுடன்  திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். ஏற்கனவே அவன் இரு முறை திருமணம் ஆனவன். அன்றைய வழக்கத்தில் திருமணம் ஆன பெண் வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் தான் இருப்பார்கள் ஆனால் அவளது கணவன் அவளை பலவந்தமாகக்  கூட்டிச்  சென்று பலாத்காரம் செய்தான். அவனது கொடுமைகள் தாங்காமல் முடிவில் தன் பெற்றோரிடமே வந்து விட்டாள். அவளது கணவன் மறுபடியும் வேறு திருமணம் செய்து கொண்டான்.

பெண் மல்லா என்ற உத்திரப்பிரதேசத்தின் தாழ்த்தப்பட்ட இனப்பிரிவை சேர்ந்தவர். அந்த ஊரில் உயர்ந்த சாதியினருக்கும் இவர்களின் சாதியினருக்கும் ஏற்பட்ட இனவெறியர்களின் இனவேற்றுமைகளால் உயர் சாதியினர்களின் கீழ்த்தரமான செயல்களாலும் இவள் கொள்ளைகாரியாக மாற வேண்டிய சூழல் உருவானது. பூலான்தேவியின் மாமா மையாதீன் என்பவன் பல வழிகளிலும் தொல்லை கொடுத்து வந்தான். அவள் வாழ்ந்த அந்த கிராமத்தில் ஒரு முறை அந்த பணக்கார உயர் சாதியினரால் அவள் பெற்றோரின் கண் முன்னே கற்பழிக்கப்பட்டாள். இதனால் அவள் வாழ்க்கையில் வெறுப்படைந்து தன் சகோதரிகளுடன் ஊரைவிட்டே ஓடிவிட்டாள். காவலர்கள் அவளுடைய பெற்றோரை சிறையில் அடைத்தார்கள். அப்போதும் அவன் மாமா அடங்காமல் மேலும் பூலான் தேவிக்கு கொள்ளையர்களுடன் தொடர்பு உள்ளது என்று கிராம மக்களை தூண்டி விட்டு அவளையும் கைது செய்யும் படி தொல்லை கொடுத்தான். பாவம் அந்த பெண் காவலின் பிடியில் சிக்கி சட்டம் காக்கும் காவல் நிலையமே அவளின் கற்பை சூறையாடும் நிலைக்கு தள்ளப்பட்டாள். தன் இளம்வயதில் அந்த பெண் பசி,பட்டினி, பலர் கற்பழிக்கப்பட்டது என்று பல இன்னல்களை சந்திக்க வேண்டியானது. இதனால் விரக்தி அடைந்த பெண் இதையெல்லாம் எதிர்த்து போராட வேண்டும் என்று மனதில் வெறிக்கொண்டு சவாலாக அந்த செயலை செய்ய துணிந்தாள்.

எதிர்த்து போராட வேண்டும் என்று மனதில் வெறிக்கொண்டு கிளம்பினார். (படம்: thequint)

பூலான்தேவி மீதான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 15 வயதில் கொடூர தாக்குதல்களுக்கு அவள் ஆளாகி இருப்பதை உணர்ந்த நீதிபதி கருணை காட்டி அவளை விடுவிக்க உத்தரவிட்டார். ஓராண்டுக்குப் பின் திடீரென்று ஒருநாள் பாபு குஜார்சிங் என்ற கொள்ளைக்காரன் பூலான்தேவியை கடத்திச்சென்றான். அந்த கொள்ளைக் கும்பலில் இருந்தபோதுதான் பூலான்தேவி குதிரை ஏற்றம் மற்றும் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் பயிற்சியை பெற்றாள். அந்த கும்பலில் இருந்த விக்ரம்மல்லா என்பவன் இவளை பாதுகாப்பாக பார்த்துக்கொண்டான். அவன் மீது இவள் காதல் வயப்பட்டாள். அந்த கொள்ளை கும்பல் தலைவன் பாபு குஜார்சிங் கொல்லப்பட்டு அவன் இடத்திற்கு விக்ரம்மல்லா அமர்த்தப்பட்டான். இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். பூலான் தேவி தனது பழைய கணவனை சந்தித்து அவனை பிரம்பால் தன் வெறி தீர  அடித்து தனது ஆத்திரத்தை தீர்த்து கொண்டாள். சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளை கூட்ட தலைவியாக வளம் வந்தவள் வாழ்வில் தீடிரென்று புயல் வீசியது. அவளது கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தான் கொள்ளையடித்த பொருட்களை கொடுத்துதவினாள்.

இந்த நிலையில் 1980_ம் ஆண்டு ஆகஸ்டு 13_ந்தேதி கொள்ளை கோஷ்டிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் விக்ரம் மல்லா கொல்லப்பட்டான். இதனால் பூலான்தேவி மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டாள். தாகூர் வகுப்பைச் சேர்ந்த சிலர் பூலான்தேவியை சிறை பிடித்து சென்றனர். அவளது கற்பை சூறையாடினார்கள். பிறகு கிராமவாசிகள் உதவியுடன் காட்டுக்குள் தப்பித்துச் சென்றாள். தனது காதல் கணவனை கொன்றவர்களை பழி வாங்க துடித்து கொண்டிருந்த அவளுக்கு மான்சிங் என்ற கொள்ளைக்காரனின் உதவி கிடைத்தது. டெல்லி அருகே உள்ள பிக்மாய் என்ற பகுதிக்கு தனது கொள்ளைக்கும்பலுடன் 1981ஆம் ஆண்டு பிப்ரவரி 14ந் தேதி சென்றாள். விக்ரம் மல்லாவை கொன்றவர்களுக்கு அந்த கிராமவாசிகள் தஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டினாள். அந்த கிராம மக்கள் “எங்களுக்கு எதுவுமே தெரியாது” என்று எவ்வளவோ கெஞ்சியும் பூலான்தேவி அந்த கிராமவாசிகளை வரிசையில் நிற்க வைத்து குருவியை சுடுவதுபோல் சுட்டாள். அதில் 22 பேர் துடிதுடித்து செத்தார்கள். 8 பேர் கை கால்களை இழந்தனர். இந்த கொலை சம்பவம் இந்தியாவையே குலுக்கியது. இவளது இந்த செயல் நாடு முழுவதும் பரவியது. உத்திரப்பிரதேச அரசியலில் பெரும் மாற்றத்தையே கொண்டு வந்தது.  உத்திரப்பிரதேச முதல்வர் வி.பி.சிங் பதவியை ராஜினாமா செய்தார். காவலர்களால் அவள் தேடப்பட்ட போதிலும் அவளை பிடிக்க முடியாமல் போனதால் அவளை பிடித்து கொடுப்போருக்கு 2லட்சம் பரிசு தொகை என்று அறிவித்தது காவல் துறை. ஆனால் அந்த பெண்ணோ போலிஸ் கண்ணில் படாமல் திரிந்தாள். தனது எதிரிகளை கொலை செய்த வண்ணமே இருந்தாள். நேபாளத்துக்கு அவள் தப்பி ஓடிவிட்டதாக பேசப்பட்டது. ஆனாலும் சிறிது நாளிலேயே அவள் உ.பி.க்குள் திரும்பினாள் .1982 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜாலன் மாவட்டத்தில் சேர்ந்த 3 பணக்காரர்களை கடத்திச்சென்றாள். இதுவே அவள் கடைசியாக அரங்கேற்றிய தாக்குதலாகும்.

இறுதியில் 1983ஆம் ஆண்டு பிப்ரவரி  12ந்தேதி மத்திய பிரதேசத்தில் அப்போதைய முதல்வர் அர்ஜுன்சிங் முன்னிலையில் சரண் அடைந்தாள். குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டாள் பின்பு புற்றுநோய் சிகிச்சை பெற டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டாள். 11 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்தும் வழக்கு முடிவுக்கு வராத காரணத்தால் தன்னை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்டில் முறையீடு செய்தாள். இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் பதவி ஏற்ற முலாயம் சிங் யாதவ் தலைமையிலான கூட்டணி அரசு,  பூலான்தேவிக்கு எதிராக இருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றது. பூலான் தேவியின் அரசியல் பிரவேசத்திற்கு சிவப்புக் கம்பளம் விரித்தவர் சமாஜ்வாதி கட்சித் தலைவரான முலாயம் சிங் யாதவ்தான்! பூலான் தேவிக்கு பொது மன்னிப்பு வழங்கி, அவர் விடுதலைக்கு வழி செய்தவர் முலாயம். அவரை தன் கட்சியில் இழுத்துப் போட்டவரும் அவரே. பூலான் தேவி, ஒரு தனி மனுஷியாக வாழ்க்கையை ஓட்டுவதை விட  அரசியல் பின்பலத்துடன் இருப்பது உத்தமம் என்று நினைத்து சமாஜ்வாதி கட்சியில் சேர்த்துவிட்டார். எனினும் 2001 சூலை 25 ஆம் தேதி,  பூலான் தேவி புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மகிழுந்தில் ஏறிப் புறப்படுகையில் முகமூடி அணிந்த மூவரால் சுடப்பட்டு இறந்தார். அவரது தலையில் மூன்று தடவைகளும், உடம்பில் இரண்டு தடவைகளும் சுடப்பட்டது. சுட்டவர்கள் மாருதி வாகனத்தில் ஏறித் தப்பிச் சென்றனர். இவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் இவரை கொன்றவர்கள் யாரென்று தெரியாமல் போனது.

இவரது வாழ்க்கை வரலாறு கொண்டு பவாந்தர் என்னும் இந்தி திரைப்படம் வெளிவந்தது. பாராளுமன்றம் வரை சென்றும் நீதி கிடைக்காத ஒரு அப்பாவி பெண் “பண்டிட் குயின்’ என்ற கதைக்கு உரியவள் தான் பூலான் தேவி. இவளின் வாழ்க்கை வரலாற்றை மாலா சென் என்ற பத்திரிக்கையாளரும் புத்தகமாக வெளியிட்டுள்ளார். பல இன்னல்களை கடந்தும் கூட இறுதியில் இப்பெண்ணுக்கு கிடைத்தது துப்பாக்கி சூட்டில் மரணமே.

Web Title: A normal women turns to a gangster as bhandit queen

Featured Image Credit: kickstarter

Related Articles