இலங்கையில் பாலர் கல்விக்கு வித்திட்ட – மரியா மாண்டிசோரி

குழந்தைகள் ஏன் பள்ளிக்குச் செல்ல அடம் பிடிக்கிறார்கள் என்று யோசித்ததுண்டா? பள்ளிகள் குழந்தைகளை பயமுறுத்துகிறதா என்று நினைத்துப் பார்த்ததுண்டா? குழந்தைகள் ஆனந்தமாக வந்து போக கற்றுத்தேர்கிற இடமாக ஆரம்பக் கல்வியை மாற்ற முடியும் என்று நிரூபித்தவர் மரியா மாண்ட்டிசோரி. நாம் மாண்ட்டிசோரி அல்லது நெர்ஸரி என்று அழைக்கும் இந்த ஆரம்பக் கல்வியை பாலர் கல்வி என்று விளிக்கலாம். இதில் கல்வி முதன்மையாக இல்லாது என்றாலும் கூட ஏதோ ஒன்றை கற்றுக்கொள்கிறோம் என்பதால் பாலர் கல்வி என்றே சொல்லுவோம்..

இலங்கையில் மரியா மாண்டிசோரி அவர்களின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்ட அஞ்சல் தலை

மாண்ட்டிசோரி என்பது கிட்டத்தட்ட இந்த கட்டுரையை வாசிக்கும் அனைவரும் சென்று பயின்ற ஒரு இடம்தான். ஆனாலும் இந்த மாண்ட்டிசோரியின் கதையும் இது வந்த விதமும் இந்த மொண்டசோரியின் பெயர் வந்த வரலாறும் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மரியா மாண்ட்டிசோரி… இவர்தான் குழந்தைகளுக்கான மாண்ட்டிசோரி கல்வி முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்… ஏன் இலங்கைக்கு வந்து அதனை நிறுவியரும் அவரே..

நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாமில் அவர் பயிற்றுவிக்கும் சில காட்சிகள்

கல்வி சார்ந்த இத்தாலியில் ஐம்பது ஏழைப்பிள்ளைகளுக்கு கண்காணிப்பாளராக ஆரம்பத்தில் இருந்தார் மரியா.. பிள்ளைகளை மிரட்டுவதோ, அடிப்பதோ  பிடிக்காத அன்பான நபர் அவர். அங்கே இருந்த பிள்ளைகளின் பொழுதை எப்படி உற்சாகம் நிறைந்ததாக ஆக்குவது என்று அவர் யோசித்தார். புத்தகங்களுக்கு பதில் பொம்மைகளை அவர்களின் கையில் கொடுத்தார். எழுத்துக்களை சொல்லித்தருவதற்கு முன்னர் அவற்றை உணர்கிற வகையில் பொருட்களை காட்டினார். வீட்டில் குழந்தைகள் வேலையே செய்ய விடக்கூடாது என்று இருந்த பொழுது எளிய செயல்களை செய்ய  வைத்து பிள்ளைகளை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டார்.மாணவர்கள் ஆசிரியர்களை கவனிக்க வைக்க நாம் முயலக்கூடாது, ஆசிரியர் மாணவரை கவனித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னவர் அப்படியே பிள்ளைகளை நடத்தினார். வண்ண அட்டைகள், ஒலி எழுப்பும் கருவிகள், ஓவியங்கள் என்று குழந்தைகளின் கற்றலை வண்ணமயமானதாக வகுப்புக்களை உருவாக்கினார்.

இன்று உலகம் முழுக்க 20 ஆயிரம் பள்ளிகள், 110 நாடுகள் என்று விரிந்திருக்கும் அவரின் கனவு முழுக்க முழுக்க குழந்தைகளுக்கானது… திருமதி மரியா மாண்ட்டிசோரி என்பதுதான் அவரின் முழுப் பெயர். மரியா மாண்ட்டிசோரியின் இந்த உலகப் புகழ்பெற்ற கல்வி முறை இலங்கைக்கு அறிமுகமாகி 74 ஆண்டுகள் ஆகின்றன. மரியா மொண்டசோரி குழந்தைகளுக்கான இந்தக் கல்விமுறையை இலங்கைக்கு வந்து அறிமுகப்படுத்திக் கொடுத்தார் என்பதுதான் இங்கே விசேடமாக குறித்துக் காட்டவேண்டிய விடயம். மாண்ட்டிசோரி கல்வி (Montessori education) என்பது ஒருவகை பயிற்றுவிப்பு முறையாகும். இத்தாலியைச் சேர்ந்த மருத்துவரும் கல்வியாளருமான மரியா மொண்டசோரியால் உருவாக்கப்பட்ட கல்வி முறையை உலகம் முழுவதுமாக சுமார் 20,0000 பள்ளிக்கூடங்கள் பின்பற்றுகின்றன. மொண்டசோரி கல்வி என்பது சுதந்திரத்தை வலியுறுத்தி, அச்சுதந்திரத்தை வரையறைக்குள் கொண்டுவந்து, குழந்தைகளின் இயல்பான உளவியல், உடல் மற்றும் சமூக வளர்ச்சியை மதிப்பதைக் குறிப்பதாக உள்ளது. 

இலங்கை மற்றும் இந்தியாவில் மரியா நடத்திய ஆசிரியர் பயிற்சிப் பட்டறை

1906 ஆம் ஆண்டில், மரியா மாண்ட்டிசோரி ஏ.எம்.ஐ அல்லது அசோசியேஷன்  என்ற சர்வதேச மாண்ட்டிசோரி குழந்தை கல்வி முறையை அறிமுகப்படுத்தினார். இந்தக் கல்விமுறையை இலங்கையில் பரப்பும் பணி 1944 ஆம் ஆண்டில் கத்தோலிக்க திருச்சபையின் திருக்குடும்ப கன்னிய சபையினருக்கு முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. கடந்த 73 ஆண்டுகளாக, இவர்கள் இலங்கையில் பாலர் குழந்தைகளின் கல்வியை வடிவமைப்பதில் முன்னிலை வகித்து வருகின்றனர். மேலும் இந்த முறையைப் பின்பற்றி ஆயிரக்கணக்கான ஆசிரியர்களையும் உருவாக்கியுள்ளனர்.

கொட்டாஞ்சேனை Good Shepherd   கல்லூரியில் மரியா மாண்ட்டிசோரி நடத்திய பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறையில்  கலந்துகொண்டஜோய்ஸ் குணசேகர

1935 ஆம் ஆண்டில் மரியா மாண்ட்டிசோரி நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாமில் அசோசியேஷன் மாண்ட்டிசோரி சர்வதேச தலைமையகத்தை நிறுவினார். இந்தத் தலைமையகத்துடன் இணைந்து இலங்கையில் இயங்கும் ஒரே பாடசாலைகயாக Good Shepherd Maria Montessori விளங்குகின்றது. 1944 ஆம் ஆண்டு இலங்கையில் பாலர் கல்வியில் மிக முக்கிய ஆண்டாகக் கருதப்படுகின்றது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அழைப்பின் பேரில், திருமதி மரியா மாண்ட்டிசோரி தனது மகன் மரியோவுடன் இலங்கைக்கு வந்து இங்கு முதல் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியை நடத்தினார். இந்தியாவில் ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை முடித்த பின்னர் மரியா மாண்ட்டிசோரி அங்கிருந்து இலங்கைக்கு வந்திருந்தார். இலங்கையின் ஜோய்ஸ் குணசேகர மற்றும் லீனா விக்ரமரத்ன ஆகியோர் இந்தியாவில் பயிற்சியில் கலந்து கொண்டனர். இது பின்னர் இலங்கையில் முதன்மையான மொண்டிசோரி கல்வியாக மாறியது. கொட்டாஞ்சேனை Good Shepherd  கல்லூரியில் மரியா மாண்ட்டிசோரி நடத்திய பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் ஜோய்ஸ் குணசேகர மற்றும் லீனா விக்ரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். அதன்பிறகு இந்த இருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பாலர் பாடசாலைகளை இலங்கையில் மேம்படுத்துவதற்காகவே செலவிட்டனர்.

இலங்கையில் மரியா மாண்டிசோரி ஆரம்பித்து வைத்த பாலர் பாடசாலைக்கான ஆசிரியர் பயிற்சிப் பட்டறை

மரியா மாண்ட்டிசோரி இலங்கையில் நடத்திய இந்த ஆசிரியர் பயிற்சிப் பட்டறையில் 300 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனராம். அதிபர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் குழந்தைகள், தங்கள் குழந்தைகளின் கல்வியில் ஆர்வமுள்ள தாய்மார்கள் மற்றும்  ஏராளமான கன்னியாஸ்திரிகளும் பங்கேற்றுள்ளார்கள். இந்தப் பயிற்சிப் பட்டறையை நிறைவுசெய்து திரும்புகையில் பாலர் பாடசாலை முறையை அப்போதைய நல்லாயன் மடத்திடம் (Good Shepherd Convent) ஒப்படைத்துவிட்டுச் சென்றார். அதன்படி இலங்கையின் முதலாவது பாடலர் பாடசாலை அதாவது மொண்டசோரி 1944ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை நல்லாயன் மடத்தில் (Good Shepherd Convent) ஆரம்பிக்கப்பட்டது.

நெதர்லாந்தில் உள்ள மரியா மாண்டிசோரியின் கல்லறை

இதே ஆண்டில் லீனா விக்கிரமரத்னவினால் கொள்ளுப்பிட்டியில் ஒரு சிறுவர் இல்லம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகு லீனா விக்கிரமரத்னவின் சொந்த ஊரான கண்டிக்கு  மாற்றப்பட்டப்பட்டது.1948ஆம் ஆண்டு மரியா மாண்ட்டிசோரி அவர்கள் மீண்டும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். இம்முறை இலங்கை அரசு விடுத்த விசேட அழைப்பின் பேரில் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவே அவர் இலங்கைக்கு வந்திருந்தார். அப்போது ஜோய்ஸ் குணசேகரவினால் ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் இல்லத்தை திறந்துவைத்தார். இலங்கையில் பாலர் பாடசாலையை அறிமுகப்படுத்தி இளமைக் கல்வியை இலங்கையில் ஊக்குவித்த மரியா மாண்ட்டிசோரி நெதர்லாந்தில் அமைந்திருந்த சர்வதேச மொண்டசோரி தலைமையகத்திற்கு திரும்பினார். இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளரும் மனோதத்துவ மருத்துவருமான மரியா மொண்டசோரி இத்தாலியி்ன் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண் என்ற சிறப்பையும் பெருகிறார். தனது இறுதி நாட்களில் இலங்கையிலும் இந்தியாவிலும் மொண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்தி அதனைப் பெரிதும் பிரபலப்படுத்தி உழைத்த மரியா மாண்ட்டிசோரி மே 6 ஆம் திகதி 1952 ஆம் ஆண்டு தனது 81ஆவது வயதில் உயிரிழந்தார். 

Related Articles