நாம் மறந்த பண்டைய போர்க்கருவிகள்(ஆயுதங்கள்)

உலகின் அனைத்து நாடுகளும் தங்கள் பலத்தினை நிறுவ, அதன் இராணுவ ஆயுதங்களையே நம்புகின்றன. எந்த ஒரு நாடு இராணுவ ஆயுதபலத்தில் பின்தங்கி  உள்ளதோ, அவற்றை தங்கள் வணிகத்தலமாக மாற்றவும் முனைப்போடு செயலாற்றுகின்றன, அதில் பலம் பொருந்திய மற்ற நாடுகள். மனிதன் நாகரிகம் எனும் சொல்லறியா காலத்தில், விலங்குகளை வேட்டையாட பயன்படுத்த துவங்கியவை இவ்வாயுதங்களெனில், உலகின் தொன்மையான மனித கண்டுபிடிப்பும் இவையாகத்தான் இருக்க முடியும். ஆயுதங்கள் எனும் சொல்லிற்கு, தமிழில் போர்க்கருவிகள் என்று கொள்ளலாம்.

அண்மையில் இந்தியா கூட தங்கள் இராணுவ பலத்தினைக்கூட்ட, S-400 Triumf எனும் ஏவுகணைகளை வாங்க, இரசியாவுடன் சுமார் 38,230 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்திருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும், இந்தியாவினை அச்சுறுத்த நினைக்கும் நாடுகளுக்கு THAAD, PATRIOT, DAVID’S SLING, MEADS போன்ற ஏவுகணைகளை அமெரிக்கா தராது என்று கொள்ள முடியாது. இப்படி பலம் வாய்ந்த நாடுகள், போர்க்கருவிகளை வழங்கி ஏனைய பலமற்ற நாடுகளை பாதுகாக்கத்தான் முயல்கின்றன என்பதும், நாம் தெளிவுடன் எண்ணிக்கொள்ள வேண்டிய ஒன்றுதான். உண்மையிலேயே, S-400 தான் ஏனைய அனைத்து நாடுகளின் வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட ஏவுகணைகளில் முன்னிலை வகிக்கிறது.

இப்போது ஒரு நவீனப்போர்க்கருவியானது, மின்னணு பொறியியல், தேர்ந்த தகவல்தொழில்நுட்பம், நுணுக்கம், வேகம் என அனைத்தையும் ஒருசேரக்கொண்டிருக்கும்போது, கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட போர்க்கருவிகளும் நம்மை சில நேரம் வியப்பிற்குள்ளாக்கி விடுகிறது. அவற்றுள் சில கீழே,

பெரியவில்

ஆங்கிலத்தில், ‘லாங்போ’ என்றழைக்கப்படும் இக்கருவி, ஒரு ஆளுயரம் கொண்டிருந்தது. துனிசியா, அல்சீரியா மற்றும் மொராக்கோ ஆகிய பகுதிகளில் இதன் மிகப்பழமையான பாகங்கள் கிடைத்தமை வைத்து, இதன் வரலாறு ஏறத்தாழ  கி.மு. 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கின்றனர். 1340-ல் நடைபெற்ற நூறாண்டுபோரில், ஆங்கிலேய படைகளும் பிரெஞ்சு படைகளும் போரிட்டபோது, இவ்வகை பெரிய வில்லானது பயன்படுத்தப்பட்டதாக, ஜீன் ஃபிராய்சர்ட்’ஸ் கிரோனிக்ல் எழுத்துப்பிரதி மூலம் தெரியவருகிறது. பல ஆயிரம் ஆண்டுகள்  வரலாற்றுப்போர்களில் பயணித்து, 1508-ல் இங்கிலாந்தில், குறுக்கு வில் தடைசெய்யப்பட்டு, ‘பெரியவில்’ பயன்பாடு பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டது.

Longbow(Pic:realmofhistory)

பலிஸ்ட்டா

பலிஸ்ட்டா – கற்களை எதிரியின் மீது எரியும் ஒருவகை பொறியாகும். பெரிய கற்கள், மற்றும் கணைகளை தொலைவிலிருந்து எரியும் திறன் பெற்றது. கோட்டைச்சுவர்களை சேதப்படுத்த இடைக்காலங்களில் போர்க்கருவியாக பயன்படுத்தப்பட்டது. தேவைக்கேற்றாற்போல், சிறிய (அ) பெரிய அளவுகளில் செய்யப்படும். கி.மு.4-ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் இதைப்போன்ற போர்க்கருவியினை பயன்படுத்தியதாக சான்று உண்டு. இருப்பினும், அந்த காலகட்டத்தில், பலிஸ்ட்டா, பண்டைய ரோம் நகரத்தில் போர்க்கருவியாக பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பலிஸ்ட்டா எனும் சொல், பாலிஸ்டஸ் எனும் கிரேக்கச்சொல்லிலிருந்து பெறப்பட்டது. கோட்டைச்சுவர்களை சேதப்படுத்த மட்டுமல்லாது போரின் போது, எதிரிகளை கொல்லவும், பலிஸ்ட்டா பயன்படுத்தப்பட்டது. தற்காத்துக்கொள்வோருக்கு, ஒரு கூடுதல் பயனும் உண்டு. அவர்கள், கோட்டையின் சுவர்கள் மேல், இக்கருவியினை ஏற்றிவைத்தால், அதிக தூரம் தாக்கவரும் எதிரிகளை எதிர் தாக்குதல் செய்திடமுடியும்.

Warwick Castle Ballista(Pic:Wikipedia)

க்ளாடிஸ்(The Gladius)

ரோம் நகரத்து போர்வாள். இருவர் சண்டைகளில், அதிகமாக பயன்படுத்தப்பட்டது. குறைந்தது, 50 செ.மீ நீண்ட அளவுள்ள இருபக்க விளிம்புகளைக்கொண்டது. கூர்மையான முனையினை உடையது. பெரும்பாலும் குத்திக்கொல்வதற்காக பயன்படுத்தப்பட்டது. இதன் வாளுறையானது, மரம், தோல் மற்றும் தகரம் போன்றவற்றால் செய்யப்பட்டது. வாளின் எடை ஏறத்தாழ, 1 கிலோ கிராம் இருக்கும். எதிரி தடுப்புறை எனப்படும் கவசம் அணிந்திருந்தாலும், அழுத்தமான உந்துதலால், அதனையும் கிழித்து உள் நுழையும் ஆற்றல் கொண்டது.

Gladius(Pic:pinshape)

ஹேலடி(Haladie)

இது இருமுனையுடன் கத்தி போன்ற அமைப்பினைக்கொண்ட, ஒரு போர்க்கருவி. இக்கருவி, இந்திய மற்றும் சிரிய நாட்டு பாரம்பரியங்களில் பயன்படுத்தப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. இது இலக்கினை துண்டாக்க மற்றும் குத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது. ஹேலடி போர்க்கருவியை இந்தியாவில் இராஜபுத்திரர்கள் பயன்படுத்தினர். இந்த போர்க்கருவி 6-ஆம் நூற்றாண்டிலிருந்து 12-ஆம் நூற்றாண்டு கால வகையினைச் சேர்ந்தது என, அதே காலத்தில், வலிமையாகவும் நிலைத்தன்மையுடனும் ஆண்ட இராஜபுத்திரர்கள் மூலம் அறியமுடிகிறது.

இது மற்ற வாள் போன்று இல்லாமல், நீளமான கத்திமுனைகளைக் கொண்டது. தோராயமாக அதன் வளைந்த கத்தி அமைப்பானது 22 செ.மீ. வரை இருக்கும். அதாவது, இக்கருவியின் ஒவ்வொரு முனையின் அமைப்பும் ஒரு முழு போர்வாளினை ஒத்திருக்கும்.

ஹேலடியின் கைப்பிடி இரு கத்தி முனைகளையும் இணைக்கும் மையப்பகுதியில் இருக்கும். இக்கருவி கேடயத்துடன் பயன்படுத்த தகுந்ததாக கருதப்பட்டது. இக்கருவி பின்னாளில் அரேபியர் வரை பயன்படுத்தப்பட்டது.

Haladie(Pic:battlingblades)

மட்டுவு

இது தமிழர் பயன்படுத்திய ஹெலடி என்றால் நம்ப முடிகிறதா? ஹெலடியில் கத்தி மற்றும் கைப்பிடி மட்டுமே இருக்கும். கேடயம் தனியாக பயன்படுத்தவேண்டும். ஆனால், மட்டுவு போர்க்கருவியில் சிறிய கேடயமும் மையப்பகுதியில் இணைந்தே பயன்படுத்தப்படும். தமிழர்களின் போர்க்கருவிகளில் தலைசிறந்து விளங்கிய, இன்றைய தலைமுறையினர் அதிகம் தெரிந்திராத ஒரு கருவிதான், ’மட்டுவு’. மட்டுவு என்னும் கலை வடக்கில் ‘மது’ என்ற பெயரில் மருவி அறியப்பட்டுள்ளது. மான் கொம்பை கேடயத்தில் இரண்டு பக்கமும் வைத்து சிலம்பாட்டத்தை போல் சுற்றும்பொழுது, எதிரிகள் தடுமாறுவர். அந்த ‘மட்டுவு’ சுற்றில், எதிரிகள் சுழற்றும் போர்க்கருவிகளை தடுக்கும் வல்லமை பெற்ற கருவி, மட்டுவு.

தமிழரின் பண்டைய போர்க்கலைகளுள் ஒன்றான இஃது, ஏறக்குறைய அழிந்தே விட்டது.

Maduvu or Madu or Mattuvu(Pic:Wikipedia)

ஷுரிக்கேன்(Shuriken)

ஜப்பானில், நிஞ்ஜா எனும் வீரர்கள், கையினால் தூக்கி எறிந்து பயன்படுத்தப்பட்ட ஓர் போர்க்கருவிதான் ஷுரிக்கேன். உண்மையில் ஷூரிகன்(Shuriken) என்ற சொல்லுக்கு ஜப்பானிய எழுத்துக்கள் ஷு(கை), ரி(வெளியீடு), கென்(கூர்மையான கத்தி), அதாவது “கைகளால் வெளியிடப்பட்டு பயன்படுத்தப்படும் கத்தி” என்பது பொருளாகும். மேலும் “கைகளுக்குள் மறைக்கப்பட்ட கத்தி” எனும் பொருளிலும் குறிப்பிடப்படுகிறது. இஃது அதிகபட்சமாக 30 அடி தூரமுள்ள இலக்கினையும், குறி வைத்து தாக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றின்படி, இரண்டு வகை ஷுரிக்கேன் போர்க்கருவிகள் இருந்துள்ளது. ஒன்று இருபக்க பெரிய கூர்முனைகளைக்கொண்ட ‘போ ஷுரிக்கேன்’. மற்றொன்று இன்றும் பெரிதாக அறியப்படும் ‘ஹிரா ஷுரிக்கேன்’. ஹிரா ஷுரிக்கேன், மையப்பகுதியில் ஓர் துளையுடன் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூர்முனைகளை விளிம்புகளாக கொண்டதாகும். ஹிரா ஷுரிக்கேன், எதிரியை கொல்வதற்காக அல்லாமல் அவர்களை திசைதிருப்பும் பொருட்டும், புதரில் அல்லது சுவற்றுப்பகுதியில் மறைந்து தாக்கும் உத்திகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Shuriken(Pic:pinterest)

முக்குத்துவாள்

எங்கு பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவாக இல்லை. ஒரு வாள் கத்தியாக இருந்து, ஒரு பொத்தானை அழுத்தும்போது, இரண்டு கத்திகள் அந்த ஒரு கத்தியின் இரு பக்கங்களிலிருந்தும் பிரிய, மூன்று கத்திகளாய் மாறும் வடிவமைப்பினைக் கொண்டது.

Ttiple Dagger(Pic:ranker)

உருமி

உலகிலேயே மிகப்பழமை வாய்ந்த களரி எனும் கலைகளுள், முக்கியமான போர்க்கலை தான், இந்த உருமி. தொல்தமிழ் சொல்லான உருமி, சுட்டுவாள்(சுழலும் வாள்) என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இதுவரை நாம் கண்ட போர்க்கருவிகள் கற்றுத்தேர ஓரிரு ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால், இக்கருவியை தேர்ந்து பயன்படுத்த பல ஆண்டுகள் பிடிக்கும். சாட்டை போன்ற தசையினை எளிதில் கிழித்துவிடும் பல கூர்மையான நெகிழும் கத்திகளை சரியாக கையாளாவிடின், அதை பயன்படுத்துபவரையே தாக்கிவிடும் கருவியாகும். ஒவ்வொரு நெகிழும் கத்தியும் கைப்பிடியுடன் பிணைக்கப்பட்டு, நான்கிலிருந்து ஆறடி நீளமும்(சில நேரங்களில் அதனினும் நீளமாய்), ஒரு இன்ச் அகலமும் கொண்டவையாக இருக்கும். பயன்படுத்துபவர், சீற்றத்துடன், வளையும்படியான வேகத்தில், தலை மற்றும் தோள் பகுதிக்கு மேல் சுழற்ற வேண்டும். இஃது சற்று ஆபத்தான செய்கையெனினும், தொடர்ச்சியான இயக்கத்தினைக் கொண்டவாறு பயன்படுத்தப்படுவதால், இதன் வேகம் எதிரியினை தாக்கிய பிறகும் குறையாது, இயங்குநிலையிலேயே இருக்கும். பல்முனை ஆட்களின் தாக்குதல்களை, சுழற்றுதலின் மூலம் எதிர்கொள்ளக்கூடியது. வலது கையில் உருமியும், இடதுகையில் கேடயமும் கொண்டு போரிடும் வழக்கம் கொண்டதாக அறியமுடிகிறது. இதுவும் தமிழர் அறவே மறந்து விட்ட கலைகளுள் ஒன்றாகும்(பண்டைய தமிழர்களான கேரள மக்களால் தற்போது ஆங்காங்கே பாதுகாக்கப்பட்டு வருகிறது).

Urumi(Pic:atlasobscura)

வேல் (அ) ஈட்டி

இக்கருவி உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஒன்றுதான். நமக்கு தற்போது முருகன் எனும் இறை மூலம் மட்டுமே அறிந்திட முடிந்த இப்போர்க்கருவி, ஏனைய அனைத்து போர்க்கருவிகளுக்கும் பழமை வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. பண்டைய தமிழ் இலக்கியங்களில், முல்லை நிலத்தின் கருப்பொருள் தெய்வம் என ‘மாயோனும்’ குறிஞ்சி நிலத்தின் தெய்வமென ‘சேயோனும்’(உச்சரிப்பு – ஸேயோன் அல்ல, ச்சேயோன்) குறிப்பிடப்படுகின்றனர். குறிஞ்சி மலை சார்ந்த பகுதியாதலால், அதன் தெய்வமான சேயோன்(முருகன்) கையில் வேல் வைத்திருந்தமை, வியப்பினை ஏற்படுத்தும் ஒன்றில்லை. பலவும், மறைந்து திரிந்து சான்றுகள் சிதைக்கப்பட்ட வரலாற்றையே நாம் தற்போது கற்றும், விவாதித்தும் வருகிறோம், என்பது நம் கலைகளை மறந்த அத்தருணத்தில் இருந்தே நிறுவப்பட்டது.

Vel and Eetti(Pic:murugan)

நாம் மறந்த போர்க்கருவிகள் மற்றும் போர்க்கலைகள், தங்களுக்கு தெரிந்திருந்தால், அவற்றை கீழே கமெண்டில் தெரியப்படுத்தவும்.

Web Title: Ancient Weapons We Totally Forgotten, Tamil Article

Featured Image Credit: ajitvadakayil

Related Articles