மாமல்லபுரம் கற்கோயில் | #தமிழ்பாரம்பர்யமாதம்

மகேந்திர பல்லவ மன்னனாலும் மாமல்ல நரசிம்மனாலும் தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட புதையலே மாமல்லபுரம் கற்கோயில். உண்மையிலேயே மகேந்திர மன்னன் கல்லிலே கலைவண்ணம் கண்டுள்ளார் என்றே சொல்லலாம். சிவகாமியின் சபதத்தில் கல்கி அழகிய சொல் வண்ணத்துடன் மகேந்திர மன்னனின் சிற்பக் கலை ஆர்வத்தை எடுத்துரைத்திருப்பார். மகேந்திர மன்னன் சிற்பக் கலையில் சிறந்து விளங்கியவர் ஒரு கல்லை பார்த்த உடனே அதை எந்த உருவத்தில் செதுக்கினால் நன்றாக இருக்கும் என்பது வரை சிந்திக்கக் கூடியவர். மகேந்திர மன்னன் ஒரு முறை எல்லோரா குகைக்கு சென்று வந்து விட்டு தனது ஆயன சிற்பியிடம் நாம் செய்யும் சிற்பங்கள் எளிதில் ஒளி மங்கி காட்சியளிக்கிறது. ஆனால் அங்கு பல நூற்றாண்டுகளை தாண்டியும் இன்றளவும் அதன் பொலிவு மாறாமல் புதிது போலவே காட்சியளிப்பது எப்படி என்று வினவினார். மேலும் அவர் ஓவியக் கலையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

அதன் ரகசியத்தை தெரிந்துக் கொள்ள  மிக ஆவல் கொண்டிருந்தார். இறுதியில் அதற்கான பதிலையும் அவர் தெரிந்துக் கொண்டார். பாறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் அமைத்திருக்கும் அதனைக் கொண்டு வண்ண பூச்சு தயாரித்து அந்த வண்ணப்பூச்சைக் கொண்டு ஓவியங்கள் வரையலாம் அப்போது அதன் பொலிவு மாறாமல் அப்படியே இருக்கும் என்பதை அறிந்துக் கொண்டார். அதே போல் அந்த பாறைகளில் செதுக்கப்படும் பாறைகளும் இன்று செதுக்கியது போல காட்சி அளிக்கும் என்பதை அறிந்திருந்தார்.

பாரம்பரிய சின்னமான மாமல்லபுர சிற்பங்கள்

ஓவியக் கலையில் பல்லவர்கள் கொண்ட ஈடுபாடே, சித்தன்ன வாசலின் ஓவியங்கள் இன்றும் தனிச்சிறப்பு கொண்டு விளங்குவதற்கு மிக முக்கிய காரணம். 1400 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட அந்த ஓவியங்கள் இன்றும் அதன் வண்ணக் கலவை மாறாமல் காட்சியளிக்கிறது. சித்தன்ன வாசல் ஓவியங்கள் சமண சமயத்தை குறிப்பதாகவே உள்ளது. அவர் அறிந்து கூறிய ஒன்றே இன்று கடற்கரையோரத்தில் பார்ப்பவரின் கண்ணை கவரும் வண்ணம் அழகிய கற்கோயிலாக வீற்று இருக்கும் மாமல்லபுரம் கற்கோயில். மாமல்லபுரத்தின் சின்னமாக விளங்கும் இந்த கடற்கரை கோயில்களை இரண்டாம் நரசிம்ம வர்மன் கட்டியதே. ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் கடந்தும் அதே பொலிவுடன் காண்பவரை பிரமிப்படைய செய்யும் வகையில் அமைந்துள்ளது. குன்றுகளை குடைத்தெடுத்த கோயில்களை போல் அல்லாமல் குன்றுகளில் கோயில்களை பெயர்த்துக் கொண்டு வந்து கட்டிய கோயிலாகவே காட்சியளிக்கிறது. தமிழகத்திற்கு அழியாப் புகழ் அளிக்கும் வகையில் அமைந்துள்ள அற்புத சிலைகள் பொலிவுடன் மாமல்லபுரத்தில் காட்சியளிக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சிறந்த முன்னோடியாக திகழ்கிறது மாமல்லபுரம் கற்கோயில்கள்.  யுனஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக மாமல்லபுரம் கோயில்களை அறிவித்துள்ளது. நம் பண்பாட்டுச் சின்னமான மாமல்லபுர கோயில்கள் நமது பெருமையையும் கலாச்சாரத்தையும் உலகுக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த இடத்தை சுற்றி பார்க்க நாள்தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

கி.பி.300  முதல் கி.பி.850  வரை சுமார் 550 ஆண்டுகள் தமிழகத்தில் நிலையாக இருந்து ஆட்சி செய்தவர்கள் பல்லவ வம்சம் மட்டுமே. கற்களை கவின்மிகு கலைகளாக மாற்றிய பெருமை பல்லவ மன்னர்களையே சாரும். தமிழர்களின் பெருமையை புகழை உலகிற்கு உணர்த்தி சென்றவர்கள் பல்லவர்கள். மாமல்லபுரம் கோயில்கள் கலைக் கருவூலங்களாக விளங்குகிறது. மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடவரை மண்டபங்கள் போன்ற புராதான கலைச்சின்னங்கள் காணப்படுகிறது.

இந்த மாமல்லபுரம் கற்கோயிலில் முதலில் பெருமாள் தரையில் படுத்து இருக்கும் கோலத்தில் ஒரு கோயில் அமைந்துள்ளது. அதன் இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி உள்ள கோயில் ஐந்து அடுக்கு கோபுரம் கொண்ட உயரமான கோயில். மேற்கு நோக்கி அமைந்துள்ள கோயில் மூன்று அடுக்கு கோபுரம் கொண்ட சிறிய கோயில். ராஜசிம்ம பல்லவ மன்னனால் எழுப்பப்பட்ட அதிரணசண்ட பல்லவேஸ்வர இருப்பிடம் இது. இரண்டு கோயில்களின் பின்புற சுவரிலும் சோமாஸ்கந்தர் எனும் சிவன், உமையாள், குழந்தை வடிவிலானா குமரன் என்ற மூன்று தெய்வங்களும் சேர்ந்து இருக்கும் சிற்பம் காணப்படுகிறது. எப்போதும் இந்த மூன்று தெய்வங்களும் இங்கு தங்கி இருக்கட்டும் என்று இங்கு காணப்படும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.  இந்த கோயிலில் உள்சுற்று ஒன்றும் காணப்படுகிறது. தமிழகத்தில் உள்ள குடைவரைக் கோயில்களில் வேறுபட்ட அமைப்பைக் கொண்டது புலிக்குகை. 16 யாளித் தலைகளுடன் காணப்படும் இந்த புலிக்குகை யாளிக் குடைவரை கொற்றவைக்காக அமைக்கப்பட்டது.

நமது தமிழ்நாட்டில் பிற்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களுக்கு முன் மாதிரியே நம் மாமல்லபுரம் கோயில்களே. அந்த காலத்தில் கற்கோயில்களை கற்றளி என்றே அழைத்துள்ளனர். கற்களை அல்லது பாறைகளை குடைந்து செதுக்கப்படும் கோயில்களே கற்றளி எனும் கற்கோயில்கள். மாமல்லபுர கோயில்களின் சுவர்களில் பல இடங்களிலும் பல்வேறு வகையான தெய்வச் சிற்பங்கள் மற்றும் புராண கதாப்பாத்திரங்கள் காணக்கிடைக்கிறது. கற்களை வெட்டி எடுத்து ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிச் செய்யப்பட்டது தான் இந்த மாமல்லபுரம் கற்கோயில்கள். மாமல்லபுரத்தில் மூன்று பல்லவர் காலக் கட்டுமானக் கோயில்கள் உள்ளது. முகுந்தநாயனார் கோயில் இந்த கோயில் தரையில் கட்டப்பட்ட கோயில் ஆகும். உழக்கெண்ணெய் ஈசுவரர் கோயில் இந்த கோயில் மலையின் மீது கட்டப்பட்ட கோயில் ஆகும். மூன்றவதாக கட்டப்பட்ட கோயில் கடற்கரைக் கோயில்.

மாமல்லபுர சிற்ப தொகுதிகள் 

மாமல்லபுர புடைப்பு சிற்ப தொகுதிகள் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத காணக் கிடைக்காத புதுமையாக விளங்குகிறது. கிருஷ்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல் அர்ச்சுனன் தபசு போன்ற சிற்பங்கள் இங்கு காணப்படுகிறது. இந்த சிற்ப தொகுதி மீது ஒரு மண்டபம் தற்போது கட்டப்பட்டுள்ளது. அர்ச்சுனன் தபசு என்பது சுமார் முப்பது மீட்டர் உயரம் அறுபது மீட்டர் அகலம் கொண்ட சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே ஆகும். வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள், எனப் பல்வேறு வகையான சிற்பங்கள் இங்கு காணப்படுகிறது. ஒற்றைக்காலில் ஒரு முனிவர் தவம் புரியும் காட்சியும் அவர் அருகில் ஓர் ஆயுதத்தை ஏந்திய படி சிவன் மற்றும் பூதகணங்கள் சூழ நின்று வரம் அளிப்பது போலவும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பலர் இந்த சிற்பத்தை அர்ச்சுனன் பாசுபத அஸ்திரத்தை வேண்டி சிவனை நோக்கி தவம் இருக்கும் காட்சி என்கின்றனர். வேறு சிலர் இது பகீரதன் கங்கையை வர வைக்க வேண்டி சிவனிடம் தவம் புரியும் காட்சி இது என்கின்றனர். இன்னும் சிலர் இந்தச் சிற்பமே ஒரு சிலேடை இரு காட்சிகளை ஒரே சிற்பத்தில் காட்டும் முயற்சி என்றும் கூறுகின்றனர். சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியாளர் இங்கு தவம் செய்வத பாசுபத அஸ்திரம்  வேண்டி நிற்கும் அர்ச்சுனன் தான் என்றும் ஆனால் இந்த சிற்பம் மகாபாரதத்தில் வனபர்வத்தின் இமயமலையை சித்தரிக்கும் காட்சி என்றும் கூறியுள்ளார். இந்தச் சிற்ப தொகுதி நிச்சயம் மாமல்லபுரத்தின் அதிசயம் என்றே கூறலாம்.

பெருமாள் வராக அவதாரம் எடுத்து பூமித்தேவியைக் காப்பற்றி மேலே கொண்டு வரும் காட்சி வராக மண்டபத்தில் காணப்படும் மிக முக்கிய காட்சிகளில் ஒன்று. திரிவிக்கிரம சிற்பத் தொகுதி வராக மண்டபத்தில் அமைந்துள்ள மற்றொரு சிற்பத் தொகுதி. இதில் திருமால் திரிவிக்கிரம அவதாரம் எடுப்பார். பல வகையான விலங்குகளும் பறவைகளும் விளையாடுவது போன்றும் அமர்ந்து போன்றும் பல்வேறு காட்சிகள் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது. மகிசாசுரமர்த்தினி மண்டபத்தில் செதுக்கியுள்ள மிக அழகான சிற்பத் தொகுதி சக்தி துர்க்கை வடிவத்தில் சிங்க வாகனத்தில் ஏறி மகிசன் எனும் எருமைத் தலை உடைய அரக்கனை வதம் செய்யும் காட்சி. துர்க்கை பத்து கைகளுடன் ஆயுதங்களை ஏந்தி மிக ஆக்ரோஷமாக இருக்க மகிசாசூரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி மிக தத்ரூபமான சிற்பங்கள் காணப்படுகிறது.

Arjunas (Pic: columbia)

மாமல்லபுரத்தில் ஓர் கங்கை

திறந்த வெளியில் காணப்படும் பாறைகளில் மட்டும்  15௦-க்கும் மேற்பட்ட சிற்பங்களை சிற்பிகள் செதுக்கி உள்ளனர். இந்த சிற்பங்களை அர்ச்சுனன் சிவனிடம் பாசுபத அஸ்திரம் வேண்டும் காட்சி, உடல் மெலிந்து உடலில் உள்ள எலும்பும் நரம்பும் வெளியே தெரியக்கூடிய தவக்கோலத்தில் ஒற்றைக் காலில் நின்று இரு கைகளையும் கூப்பி சூரிய வணக்கம் செய்யும் அர்ச்சுனன் கையில் பாசுபத ஆயுதத்தை வைத்து நிற்கும் சிவன் சுற்றி பூதகணங்கள் போன்ற வகைகளாக பிரித்துள்ளனர். இரு பாறைகளின் பிளவுகளுக்கு இடையே கங்கை ஆறு ஓடிவருமாறு மிக அழகாக தத்தூருபமாக செய்யப்பட்டிருக்கும் பாதை அந்த பாதையில் காணப்படும் நாகம்.

மழைப் பொழியும் காலங்களில் இந்தப் பாதை வழியே நீர் ஆறுபோலவே ஓடும் காட்சியை காணலாம். கங்கை ஆற்றின் இருபுறமும் ஆறை நோக்கி வரும் சூரியன், சந்திரன், தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், கீழ் உள்ள உடல் பறவை போலவும் மேல் உள்ள உடல் மனிதர் போலவும் காட்சி அளிக்கும் கின்னார்கள், பத்ரிநாத் எனும் திருமால் ஆலயம், அந்த கோயிலின் முன் அமர்ந்திருக்கும் சில முனிவர்கள், கங்கை ஆற்றில் குளித்துச் சடங்குகள் செய்யும் பக்தர்கள் வேடர்கள் என்று பல்வேறு சிற்பங்களை உள்ளடக்கியதே மாமல்லபுரம் சிற்பக் கோயில்கள்

Pancharatas (Pic: notey)

நேரில் காசிக்கு சென்று கங்கையில் குளித்து வர தன் மக்கள் அனைவராலும் இயலாது என்பதாலோ என்னவோ மாமல்லன் மாமல்லபுரத்திலேயே காசியையும் புனித நீரான கங்கை நீரையும் மக்களுக்கு இன்ப பரிசாக அளித்து சென்று உள்ளான் போலும். மாமல்லபுரம் கற்கோயில்களை அறிந்துக் கொள்ளும் ஆவலை என்னுள் ஏற்படுத்தியவர் கல்கி என்று கூறுவதே மிக நிதர்சனமான ஒன்று. அவரின் சொல்வண்ணம் மூலமே நான் மாமல்லனின் கலை வண்ணத்தை கண்டேன். மாமல்லபுர கற்கோயில் பார்த்து நாம் அதிசயித்து போனது போல நீங்களும் இந்த கற்கோயில் எனும் கற்றளியை கண்டு வாருங்கள் நிச்சயம் என் பிரமிப்பு உங்களையும் தொற்றிக் கொள்ளும்.

Web Title: Artistic Temple Mahapalipuram

Featured Image Credit: thrillingtravel

Related Articles