அசுணம் பற்றிய சங்ககால ஈழத்துப் புலவரின் பாடல்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் ஒரு அதிசய விடயம் இருக்கிறது. அசுணம் என்னும் ஒரு அதிசய மிருகம் பற்றிய தகவலே அது. கற்பனை ஓவியங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் அழிந்துப் போன விலங்குகள் எவ்வளவோ உள்ளன. தொல்விலங்கியல் (Paleontolgy or Paleo zoology) என்னும் துறை இது போன்ற விலங்குகளின் எலும்புக்கூடுகள் ,படிம அச்சுக்கள் (Fossils) ஆகியவற்றை சேகரித்து வைத்துள்ளன. ஆனால் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அசுணம் பற்றிய எந்தவொரு தடயமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனை பற்றி சங்க இலக்கியங்களில் ஈழத்துப் புலவர் பூதந்தேவனாரும் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த அதிசய அசுணம் பற்றி சங்க இலக்கியங்கள் கூறும் விபரங்கள்:

பூதந்தேவனார் எழுதிய பாடல்:

இரும்புலி தொலைத்த பெருங்கை யானைக்
கவுள்மலிபு இழிதரும் காமர் கடாஅம்
இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ்செத்து,
இருங்கல் விடர் அலை அசுணம் ஓர்க்கும்
காம்புஅமல் இறும்பில் பாம்புபடத் துவன்றிக்
கொடுவிரல் உளியம் கெண்டும்
வடுஆழ் புற்றின வழக்குஅரு நெறியே?

யார் பூதந்தேவனார்?

மேலே உள்ள பாடலானது அகநானூறு களிற்றியானை நிரை -88 ஆகும். இதை எழுதியவர் பூதந்தேவனார். இவரைப் பற்றி பேச என்ன இருக்கிறது என்கிறீர்களா? சங்க இலக்கியத்தில் ஈழக் கவிஞர்களின் பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது என்றால் அது இவருடைய பாடல்கள் மட்டும்தான் என்பது விசேடம். மதுரைக் கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவரான பூதந்தேவனார் ஈழ நாட்டிலிருந்து பாண்டியநாடு சென்று மதுரைச் சங்கத்தில் புலவராய் நிலவினார். இவர் தனது தந்தை பூதனோடு மதுரை சென்று கற்று புலவரானார் என்று கூறப்படுகின்றது. ஈழத்து பூதந்தேவனார் என்று இவரின் பெயர் நற்றிணையிலுங் குறுந்தொகையிலும் செய்யுள் முகப்பில் வரையப்பட்டுள்ளது. சங்க நூல்களில் இவர் எழுதிய ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவரது பாடல்கள் அகநானூறு 88, 231, 307, குறுந்தொகை 189, 343, 360, நற்றிணை 366 ஆகியனவாகும்.

இப்பொழுது அவரின் பாடலின் பொருளை பார்ப்போம்.”புலியை கொல்லும் பெரிய கையுடைய யானையின் கண்களில் இருந்து வடியும் மத நீரை வண்டுகளில் கூட்டம் மொய்க்கும். அதன் ரீங்காரத்தை யாழின் ஒளிதான் என்று எண்ணி பெரிய குகைகளில் வாழும் அசுணப் பறவைகள் உற்றுக் கேட்கும். அத்தகைய காட்டில் பாம்புகள் இறந்த போகும் அளவுக்கு கரடிகள் புற்றுகளைத் தோண்டும். இப்படிப்பட்ட கடினமான பாதை வழியேதான் என் காதலன் சென்றானோ?” என்று காதலனின் வரவை எண்ணி வாடுகிறாள் காதலி.

அசுணம் என்றால் என்ன ?

அகநானூறு பாடலில் வரும் அசுணம் எனும் விலங்கை அல்லது பறவையை சங்ககாலப் பாடல்களின் பல இடங்கிங்களில் “அசுணமா” என்றே அறியப்படுகின்து. இசையை அறியக்கூடிய அல்லது கேட்ககூடிய ஒரு உயிரிணமாம் இந்த அசுணமா. இந்த விலங்கினம் அடர்ந்த காடுகளில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இதன் சிறப்பம்சம், இசையை உணர வல்லது. இசைக்கு மயங்கும் தன்மை கொண்டது. ஆனால் மிகவும் பலமானது. எனவே இதை எதிர்த்து நின்று வேட்டையாடுவது என்பது கடினம்.

இதை உணர்ந்த வேடுவர்கள் இந்த விலங்கை வேட்டையாட, மனதை மயக்கும் அழகிய இசையை, இசைகருவிகள் கொண்டு மீட்டுவர். அந்த இசைக்கு மயங்கி, அசுணமா இசை கேட்கும் திசை நோக்கி நகர்ந்து வரும். இசை மயக்கத்தில் அருகில் நெருங்கி வந்ததும், காதைக் கிழிக்கும் அளவுக்கு சத்தமான ஒலியை பறை போன்ற இசைக்கருவிகளால் ஏற்படுத்துவர். அந்த சப்தத்தைக் கேட்டு தாங்க முடியாது, காதுகளில் வலிவந்து மிரண்டுவிடும் சூழ்நிலையில் ஆயுதங்களால் தாக்கி கொன்றுவிடுவர். அழகான இசை மீட்டி ஏமாற்றி வரவழைத்து, மிக அதிகமான சத்தம் உண்டாக்கி துடிக்கவிட்டு அசந்த நேரம் பார்த்து ஆயுதங்களால் தாக்கி வஞ்சகமாக கொன்றுவிடுவர் என்று சொல்கிறார்கள்.

மனதை மயக்கும் அழகிய இசையை, இசைகருவிகள்

இலக்கியங்களில் அசுணம் இடம்பெற்ற பாடல் வரிகள்

நற்றிணைப் பாடல் 304 – பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார்

மணிமிடை பொன்னின் மாமை சாய, என்
அணிநலம் சிதைக்குமார் பசலை; அதனால்
அசுணம் கொல்பவர் கைபோல், நன்றும்
இதன் பொருள் – குளிர்ந்த மணம் கமழும் மாலை அணிந்த என் காதலனின் மார்பு அசுணம் என்னும் விலங்கைக் கொல்பவர் கை போன்றது. அதாவது இன்பம் தந்து பின்னர் துன்பத்தைக் கொடுக்கும் என அசுணத்தின் இயல்புக்கு உவமிக்கிறார்.

நான்மணிக்கடிகை பிற்கால பதினென் கீழ்க்கணக்கு

பறைபட வாழா அசுணமா…” – இதன் பொருள் பறையின் ஒலி செவியில் விழுந்தால் ‘அசுணமா’க்கள் உயிர் வாழாது.

சரி இந்த உயிரினம் உண்மையில் இருந்ததா அல்லது கற்பனையா என்பது குறித்த விரிவான விளக்கங்கள் எங்கும் காணோம். ஆனாலும் வரலாற்றில் கற்பனை உயிரினங்கள் பல இருக்கின்றன. உதாரணத்திற்கு பீனிக்ஸ் பறவை, சீனாவின் ட்ரகன், கொம்புள்ள குதிரை, ஐந்து தலை நாய், இருதலைப்புள் (கண்டபேருண்டப் பறவை),கோழிப்பாம்பு, இசுபிங்சு, கடற்கன்னி, கிறிப்பன், யாளி என்று இன்னும் பல..

கற்பனை ஓவியங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் அழிந்துப் போன விலங்குகள்
பட உதவி : pm1.narvii.com

இந்த வரிசையில் வரும் அசுணமாவின் விசேடம் என்னவென்றால் அது எமது தமிழ் இலக்கியத்தோடு சேர்ந்திருப்பதுதான்.

மாசுணம் தான் அசுணமா?

சங்க இலக்கியத்தில் மலைப்பாம்பை ‘மாசுணம்’ என்று சங்கப்புலவர்கள் பெயரிடுகின்றனர். அசுணமா தொடர்பான வடிவங்களும், செய்திகளும் ‘மாசுணம்’ என்னும் மலைப்பாம்பைக் குறிப்பதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மலைப்பாம்பின் இயல்பு நீளமாக இருத்தல் ,வளைந்து செல்லுதல், உடலில் அழகிய வடிவமிருத்தல், பெரிய வடிவில் இருத்தல் ஆகியனவாகும். அசுணமாவை வளைந்து செல்லும் , நீளமான அழகிய தேமலை உடைய பெரிய உயிரினமாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த மாசுணமானது மிகவும் பெரிய பாம்புகளைக் குறிக்கின்றது. நாம் இப்போது வியக்கும் அனகொண்டா பாம்புகளை விடவும் பெரிய மலைப்பாம்புகளை மாசுணம் என்று அழைக்கின்றார்.

பட உதவி : tamilandvedas.files.wordpress.com

அசுணம் ,மாசுணம் எனவரும் இரு சொற்களும் சொல்,பொருள் என இரு நிலைகளிலும் ஒன்றென்பது இக்கருத்துக்களால் புலனாகிறது. பாம்புகளுக்கு கேட்கும் திறன் இல்லை என்கின்றது விஞ்ஞானம். ஆனால் உணரும் திறன் இருக்கின்றதாம். பாம்பாட்டி ஊதும் மகுடிக்கு ஆடுவதைவிட பாம்பாட்டி காலை தட்டித் தட்டி எழும்பும் அதிர்வுக்கு ஆடுவதுதான் பாம்பாட்டம் என்றும் சொல்லப்படுகின்றது. அந்தவகையில்பார்த்தாலும் ஒலியை இந்த உயிரினம் உணரலாம் என்றும் எடுத்துக்கொள்ள முடியும்.

அசுணமா? மாசுணமா? விலங்கினமா? பறவையினமா? பாம்பினமா?
பட உதவி : dumielauxepices.net

ஆக இது அசுணமா? மாசுணமா? விலங்கினமா? பறவையினமா? பாம்பினமா? இப்படி ஒன்று இருந்ததா? அல்லது கற்பனையா என்றெல்லாம் ஒரு முடிவுக்கு இந்தக் கட்டுரையினால் வந்துவிட முடியாது. ஆனால் இப்படியொரு உயிரனத்தைப் பற்றிய குறிப்புகள் தமிழ் சங்க இலக்கியங்களில் உள்ளன. அதனை ஈழத்து கவிஞர்களும் உரைத்திருக்கிறார்கள் என்பதுதான் இதன் சிறப்பேயாகும். 

Related Articles