Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பாபரின் கனவு தேசம்

                            இந்த கட்டுரை, நமது இணையத்தில் சிறிது நாட்களுக்கு முன் வெளியான பாபரைப் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி. கூடுதல் பாபரின் கனவு தேசத்தை விருவிருப்பு குறையாமல் படித்து தெரிந்துகொள்ள முந்தைய கட்டுரையை வாசித்திவிட்டு வந்தால் சிறப்பு.

மன்னர்களின் அழைப்பு

                            பாபரை பார்க்க வந்த தௌலத் கான் லோடி, அவரிடம் இந்துஸ்தானத்தின் மீது படையெடுத்து வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். இதை கேட்ட உடன் கோபம் தெளிக்க பேச ஆரம்பிக்கிறார் பாபர், அவர்களின் உப்பை தின்று வாழ்ந்த நீங்கள் இப்பொழுது ஏன் அவர்களுக்கு எதிராக நம்பிக்கை துரோகம் செய்ய துணிந்தீர்கள். 

                             இதை சற்றும் எதிர் பாராத தௌலத் கான் லோடி நிலைமை அறிந்து பாபருக்கு விளக்கி கூறுகிறார்,’ அரசே நாங்கள் இன்றும் இப்ராஹிம் லோடி அவர்களின் பரம்பரைக்கு விசுவாசத்தோடே உள்ளோம் ஆனால் அவரை பார்க்க சென்ற என்  மகன் இன்னும் என்ன ஆனான் என தெரியவில்லை அதுமட்டுமில்லை லோடி வம்சத்தினரின் விசுவாசிகளான இருபத்து மூன்று முக்கிய மந்திரிகளை இப்ராஹிம் லோடி கொன்றுவிட்டார். இதன் காரணமாகவே தங்களுக்கு அழைப்பு விடுத்தேன் இதுதான் அவரால் பாதிக்கப்பட்டவர்களின் விருப்பமும்கூட. பாபர் இம்முறை அமைதியாக அனைத்தையும் கேட்டுவிட்டு ‘ சரி உதவுகிறான் ‘ என நம்பிக்கை வார்த்தை கூறி தௌலத் கான் லோடியை அனுப்பிவைக்கிறார்.       

                              பின் காபூலின் அரச வேலைகளை தொடர்ந்த சில நாட்கள் கழித்து ராஜபுத்திரர்களின் சார்பாக ரானா சங்காவின் தூதுவர் காபூலுக்கு வருகிறார். பாபர் அவரை சந்தித்து வந்த செய்தியை கேட்கிறார் அதிலோ மற்றுமொரு அழைப்பு வேண்டுகோள், ரானாவும் இந்துஸ்தானத்தின் மீது படையெடுத்து வந்து இப்ராஹிம் லோடியை தோற்கடிக்க வாருங்கள் உங்களுக்கு நாங்கள் பக்கபலமாக நிற்கிறோம் இதுதான் அந்த செய்தி. கேட்டவுடன் பாபருக்கு மகிழ்ச்சி எவ்வளவு பெரிய தேசம், வளமையும் செழுமையும் கொட்டிக்கிடக்கிறது. சமர்கண்ட் எனக்கு எட்டாத கனவாகவே இருக்கிறதே  போதும்! இனி என்னுடைய லட்சியம் இந்துஸ்தானை அடைவதே என புதிய போர் வியூகத்தை தயார் செய்கிறார்.

Daulat Khan (Pic: alchetron)

இந்துஸ்தான் வாசல்

                             1524,  பெரும்படை கொண்டு பஞ்சாப் மாகாணத்திற்குள் நுழைந்து வெற்றி பெறுகிறார் உடன் தௌலத் கான் லோடி படையும் இருந்தனர். டெல்லியை கைப்பற்றுவதுதான் திட்டம் இடையில் தௌலத் கான் லோடி பஞ்சாப் முழுவதும் தனக்கு வேண்டும் என்று மாத்தி பேசுகிறார் இதனால் இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நம்பகத்தன்மை இல்லாத நபருடன் பயணிப்பது மிக ஆபத்தானது என்பதை உணர்ந்த பாபர் காபூலை நோக்கி பின்வாங்கினர். சிறிது  யோசித்து, தனது ஒரு பகுதி படையினரை லாகூரில் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு செல்கிறார். 

                            1525 நவம்பர் பனிக்காலம் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் மீண்டும் டெல்லியை நோக்கி கிளம்பினார் பாபர். பனிபடர்ந்து மலைக்காடுகள் காணப்பட்டதால் பயணம் சிரமமாகவே இருந்தது. இடையில் புதிய எதிரியாக உருவெடுத்திருந்தார்  தௌலத் கான் லோடி. சிந்து நதியை கடந்து போரில் இறங்கினர் பாபர். லோடியின் படையை சிதறடித்து தௌலத் கானை சரணடைய வைத்தார். தௌலத் கானை பார்த்து உணர்ச்சிவசமாக பேசுகிறார் பாபர் தன்  தந்தை இடத்தில் வைத்து உங்களுக்கு உண்டான மரியாதையை செய்தேன் இறுதியில் நீங்களும் எனக்கு எதிராக போர் புரிந்து நம்பிக்கை துரோகம்  செய்துவிட்டீர்கள் இனி என் கண்ணில் படாதீர்கள் என சொல்லி அங்கிருந்து தனது லட்சியமான டெல்லியை நோக்கி நகர்கிறார். 

                             1526, கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்தது அந்நேரம் சட்லெஜ் நதியை கடந்து யமுனை அருகே படைகளுடன் முகாம் அமைக்க தயார் செய்கின்றனர் போர் வீரர்கள். தன்னுடன் போர்புரிய பாபர் வந்துகொண்டிருப்பதை தெரிந்துகொண்ட இப்ராஹிம் லோடி படைகளை தயார் செய்கிறார் இதற்கிடையில் போர் வேண்டாம் என அரண்மனை ஜோதிடர்கள் கூற காதில் போட்டுக்கொள்ளாமல் தன் வேலையை தீவிர படுத்துகிறார் லோடி. போர் இடம் முடிவு செய்யப்படுகிறது அது “பானிபட்” பல போர்களை பார்த்த மண் அடுத்த பிணக்குவியலுக்கு தயாரானது. 

                             வடக்கில் இருந்து முகலாய படைகள் பானிப்பட்டை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர் இதன் எதிர் திசையில் தெற்கில் இருந்து ஆப்கான் படை. வெறும் 12000 வீரர்களுடன் வந்துகொண்டிருந்த பாபர் நடுவே லோடியின் மீது அதிருப்தியில் இருந்த குறுநில மன்னர்களும், சிற்றரசர்களும் பாபருடன் இணைந்து கொண்டனர்.பானிப்பட்டை அடையும்போது முகலாய வீரர்களின் எண்ணிக்கை 20000 மாக உயர்ந்தது. 

                              ஆப்கன்  வீரர்கள் லட்சம் பேர் மற்றும் ஆயிரம் யானைகள் என பெரிய படைபலத்தை வைத்திருந்தது. இவர்களின் படைக்கு முன் பாபரின் படை தூசுபோல இருந்தது ஆனாலும் தன்  போர் வியூகத்தை ஆழமாக உருவாக்கி இருந்தார். இதில் எதிர்பாராத அம்சமே துப்பாக்கிகளையும் பீரங்கிகளை பெரிதும் வியூகத்திற்குள் கொண்டு வந்து இருந்தார். இங்கே வரலாற்று செய்தி என்னவென்றால் இந்தியாவிற்குள் முதன்முதலாக வெடிமருந்துகளை அறிமுக படுத்தியவர் பாபர்தான். அவரிடம் அன்று 4000 துப்பாக்கி போர் வீரர்கள் இருந்திருந்தனர். 

                            விழிப்புடனே இருந்த பாபர் தன் படையின் சில வீரர்களை அனுப்பி பானிபட்டில் கள ஆய்வு மேற்கொள்ள செய்து ஆய்வின் முடிவு நம்பிக்கையூட்டும் விதமாக இல்லை என்பதை புரிந்துகொண்ட பாபர் காரணத்தை கேட்டறிந்தார். பானிபட் பரந்து விரிந்த களம், ஒரு மரம் கிடையாது, மறைவிடம் கிடையாது. ஆங்காங்கே காய்ந்த புதர்களும் முள்செடிகளுமே இருக்கின்றன. சற்று யோசித்த பாபர், மீண்டும் சில வீரர்களை அனுப்பி பானிபட் நகரை ஆராய்ந்து வரச்சொல்லி சொன்னார். யோசித்தவாரே இருந்த பாபர் வந்த செய்தியை கேட்டு நம்பிக்கை அடைந்தார். 

                          வியூகத்தை மாற்றி படையை பானிபட்டின் நகருக்குள் செலுத்தினார். வலது வரிசை வீரர்கள் வீடுகளை கைப்பற்றி ஆய்தங்களோடு பதுங்கிக்கொண்டனர். இடது வரிசை வீரர்கள் நகரத்திற்கும் ஆற்றங்கரைக்கு இடையே இருந்த பரப்பில் பள்ளங்களையும் பதுங்கு குழிகளையும் உருவாக்கினார்கள் அங்கு தெம்பூட்டும் விதமாக குறைந்த அளவில் மரங்கள் காணப்பட்டன. முன்வரிசையில்  அரண்களை அமைக்கச்சொல்லி அதன் பின் வண்டிகள், பீரங்கிகள், எட்டு துப்பாக்கி வீரர்கள், இதுபோல்  நான்கு மீட்டர் இடைவெளியில் முன்வரிசையை  தயார் செய்யப்படுகிறது. முகலாய படையை சுற்றி வளைக்காதவாறு அரண் தயாரானது. லோடி தேடி வருவார் என பாபர் நம்பினார் ஆனால் லோடியின் எண்ணம் வேறுவிதமாக இருந்தது.

                           நம்மை நோக்கித்தான் வருகிறார்கள் டெல்லி அடைவதற்கு முன்னே அவர்களை வீழ்த்திவிடலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தார் லோடி. நாட்கள் நகர்ந்தது முகலாய படைகளின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது. ஆறு நாட்கள் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எதிரிகள் வருகிறார்களா இல்லையா என்றுகூட தெரியாமல் பொறுமை இழந்த பாபர் சிறுபடை ஒன்றை அனுப்பினார் அவர்கள் போன வேகத்தில் ஆப்கான் படைமீது அம்பை எய்திவிட்டு திரும்பி வந்துவிட்டனர். இது எதிரியை தூண்டிவிடும் தந்திரம் இதேபோல் நான்கைந்து முறை செய்தும் பலனில்லாமல் குழம்பியவாறு இருந்தார் பாபர். இங்கு லோடி பொறுமை காத்தார் பாபர் பொறுமை இழந்தார். 

                          இரவு தாக்குதலுக்கு சுமார் ஐயாயிரம் வீரர்களை தயார் செய்து ஏப்ரல் 19 ஆம் தேதி நள்ளிரவில் அனுப்புகிறார். பாபர் செல்லவில்லை. நள்ளிரவிலும் விழிப்போடு இருந்த ஆப்கன் வீரர்கள் முகலாயர்கள் தாக்குவதற்கு முன்னமே அணிவரிசையாக அம்பு விழ ஆரம்பித்தது சுதாரித்த வீரர்கள் இருந்தால் பெரும் இழப்பு நேரிடும் என உணர்ந்து அதே வேகத்தில் பின் வாங்கினர். முகலாய முகாமிற்குள் பேரமைதி. இந்தமுறை பாபர் உறுதியாக நம்பினார் லோடி வருவார் என்று காத்திருந்து வந்த சிறு படையும் பயத்தில் திரும்ப ஓடிவிட்டார்கள் இனியும் காலம் தாழ்த்த கூடாது இந்த சிறிய படையை சூறையாடவேண்டும் என தப்புக்கணக்கு போட்டு கிளம்பினார் லோடி.

                           மெல்ல விடிந்துகொண்டிருந்த நேரம் நினைத்தது போல் அவர் படை வருவதாக செய்தி வருகிறது. பானிபட் யுத்தத்திற்கு தயாரானது. பாபர் முகத்தில் புன்னகை வலையில் சிக்கிவிட்டார் லோடி என நினைத்து அனைத்து வீரர்களையும் தயாராக இருக்கும்படி கூறுகிறார். ஆப்கன் வீரர்களோ தங்களுக்கு பிறப்பித்த ஆணையை நிறைவேற்ற புயல் வேகத்தில் புழிதியை கிளம்பிக்கொண்டு பானிபட் நகர எல்லைக்குள் விரைந்து வருகின்றனர், இதில் முகலாய படைகள் U வடிவில் அரண் அமைந்திருந்ததை கவனிக்காமல் உள்ளே நுழைந்ததும் பெரும் சத்தம், அளவில்லாத புகை, மின்னல் வேகத்தில் உடலை துளைத்துக்கொண்டு போகிறது குண்டுகள் வீரர்கள் கொத்து கொத்தாக சரிந்து விழுந்துகொண்டு இருந்தனர். ஆப்கனிய படைக்குள் பெரும் குழப்பம் லோடியோ  இது என்ன புதுவகை ஆயுதமாக இருக்கிறது என திகைத்துப்போகிறார். 

                          பெரிய பலமாக இருந்த யானைகளும் குண்டு சத்தத்தில் மிரண்டு பிளிறி ஒட பல வீரர்கள் மிதிபட்டு மடிகிறார்கள். இந்த நிகழ்வில் இருந்து மீள்வதற்குள் வலது மற்றும் இடது புறமாக இருந்த முகலாய வீரர்கள் மூர்க்கத்தனமாக தாக்குகிறார்கள். எங்கு சுற்றி பார்த்தாலும் ஒரே ரத்தமாக இருக்கிறது, சிதறிக்கிடக்கும் உடல் பாகங்கள், மரணஓலங்கள் இடையில் பாபரும் நுழைந்து துவம்சம் செய்கிறார். ஆரம்பத்திலிருந்தே வெற்றியின் பக்கமே இருக்கிறது முகலாய படை இறுதியில் களத்தின் மத்தியில் இருந்த முகலாய வீரர்கள் லோடியின் தலையை கொண்டு வருகின்றனர் வெற்றி உறுதியாகிறது. லோடியின் தலையை கண்ட அதே கணம் போர் அறம் கருதி மரியாதை செய்கிறார் பாபர். உண்மையான போர் வீரர் என்றும் இவர் உடலை கண்டுபிடித்த  இடத்திலேயே உடலை தகனம் செய்யும்படி உத்தரவிடுகிறார். இனி டெல்லி முகலாயர்கள் கையில். இந்தியாவில் முகலாயர்களின் முதல் வெற்றி. 

Mughal Victory (Pic: historydiscussion)

முதல் முகலாய சாம்ராஜ்ஜியம்

                                   முதல் ராஜ்ஜியம் இந்துஸ்தானத்தில், ஆனந்தத்தில் மூழ்கி இருந்தார் பாபர். அதே நிலையில் தனது பதினெட்டு வயது மகன் ஹுமாயூனை அழைத்து ‘ நீ உனது படைகளுடன் லோடியின் தலைநகரமான ஆக்ராவிற்கு சென்று செல்வங்களை கைப்பற்றுமாறும், கஜானாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருமாறும் உத்தரவிடுகிறார். மற்றுமொரு படைப்பிரிவை டெல்லியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும்படி  அனுப்பிவிடுகிறார். பாபர் அங்கே இருந்து தப்பித்த மற்றவர்களையும் தேடி கொல்கிறார். நிறைவாக டெல்லிக்குள் காலடி எடுத்து வைக்கிறார் “பாட்ஷா பாபர்”. 

                                  சில நாட்கள் ஓய்வு, அரண்மனை, மாளிகைகள், கருவூலங்கள், தோட்டங்கள், கட்டடங்கள், மசூதிகள் இவை அனைத்தையும் பார்வை இடுகிறார். அதிகாரபூர்வமாக வெள்ளிக்கிழமை பகல் தொழுகை முடிந்து முறைப்படி டெல்லியின் சுல்தானாக அறிவிக்கப்படுகிறார். அதை தொடர்ந்து மே 4 தலைநகரின் எல்லையை அடைந்தார் இருப்பினும் ஜோதிடர்களின் அறிவுரைப்படி மே 10 ஆம் தேதி வரை நகருக்கு வெளிய கூடாரமிட்டு தங்க ஏற்பாடு செய்யப்படுகிறது  அதற்குள் ஆக்ரா நகரம் முழுவதும் அலங்கரிக்கப்படுகிறது. குறித்துக்கொடுத்த நாள் வந்ததும் முகலாயர்கள் ஆரவாரத்துடன் கொண்டாட, ஆக்ராவிற்குள் இந்தியாவின் பேரரசராக காலடி எடுத்து வைக்கிறார் முகலாய “பாட்ஷா பாபர்”.

                                   பாபருக்கு பேரானந்தம். ஆனால் அவரின் நடவடிக்கைகளை பார்த்த முகலாய வீரர்கள் உற்சாகம் இழந்தனர் ஏனெனில், இனி இங்குத்தான? தாய் மண் காபூலுக்கு திருப்பமுடியாத என்ற ஏக்கம் அனைவரின் கண்ணிலும் தென்பட்டது. அரசரின் காதில் இந்த ஆதங்கம் விழ அனைவரின் முன் பாபர் பதிலளிக்கிறார் ‘ ஏன் திரும்ப வேண்டும்? நம் போராட்டத்திற்கும் இழப்பிற்கு கிடைத்த மாபெரும் பரிசு. இனி இங்குதான் நம் வாழ்க்கை இதன் எல்லைகளை விரிவாக்குவதே நம் லட்சியம்’ என பேசி முடிக்கிறார். ஒருவரும் மறுவார்த்தை பேசாமல் கலைந்து செல்கின்றனர். என்னதான் இப்படி கூறினாலும் இந்துஸ்தானத்தின் கலாச்சாரம் , கலைகள், மற்றும் மக்கள் மீது பாபருக்கு நாட்டம் இல்லாமல் இருந்தது. இந்திய மக்களாலும் முகலாயர்களை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை கொள்ளை கூட்டத்தை பார்ப்பதை போலவே நடுங்கினர்.

                                   இங்கு ஆட்சியை நடத்துவது அவ்வளவு எளிதானதாக இல்லை என்பதை புரிந்து கொண்டார் ஏனெனில் விழிப்புடன் இல்லையேல் அரசபதவி பறிபோகும். இடையில் வீரர்களோ காபூலுக்கு செல்வது பற்றி பேச மீண்டும் உங்களை காபூலுக்கு அனுப்பி ஒரு துயரமான வாழ்க்கையை தர நான் விரும்பவில்லை என்று பாபர் எடுத்துரைக்கிறார். இருப்பினும் சில பேர் பிடிவாதமாக இருப்பதை பார்த்து அவர்களை சில தளபதிகளின் தலைமையில் அனுப்பி வைக்கிறார். இரண்டு மாதங்கள் கழிந்தன, எந்த அசம்பாவிதங்களும் நடக்காததால் முகலாயர்கள் மீது மக்களுக்கும்  நம்பிக்கை வளர்ந்திருந்தது. இதனிடையில் நட்பு பாராட்டி சுற்றி இருந்த அரசர்கள் தங்களுடைய ஆதரவை முன்வந்து தெரிவித்தனர்.

                                     எல்லை விரிவாக்கத்தை பற்றி யோசிக்கும் பொழுது பல ஆப்கன்கள் பீகாரிலும்,குஜராத்திலும் இருப்பதை அறிந்துகொண்டார். டெல்லியின் தெற்கே சுல்தான்களின் ஆட்சியை ஒழித்து இந்துஸ்தானில் ஓர் இந்து பேரரசாக வரவேண்டும் என போராடும் ராஜபுத்திரர்கள். அதற்கும் கீழ் கிருஷ்ண தேவராயர் சிறப்பான ஆட்சி செய்வதை அறிந்து கொள்கிறார் பாபர்.

Krishna Devaraya (Representative Pic: thefamouspeople)

சவால்கள்

                            முதல் சவால், கிழக்கில் ஆப்கானியர்கள் ஒன்று கூடுகின்றனர். கன்னோஜில்(உத்திரபிரதேசம்) முகலாய படைக்காக காத்து இருக்கின்றனர் ஆனால்  பாபர் மாபெரும் படையுடன் வருகிறார் என தெரிந்ததும் பயந்து சிதறி ஓடிப்போனார்கள் கன்னோஜ் முகலாயர்கள் கட்டுப்பாட்டிற்கு வந்தது. மேலும் ராஜபுத்திரர்கள் ரானா சங்காவின் தலைமையில் ஒன்று கூடுகின்றனர் இதில் சில ஆப்கன் படை மற்றும் இப்ராஹிம் லோடியின் சகோதரர் மஹ்மூத் லோடியும் கைகோர்க்கிறார் என்பதை அறிந்து கொண்ட பாபர். ராஜபுத்திரர்கள் படைகளை பற்றி தப்புக்கணக்கு போடுகிறார் ஆனால் முகலாய படைகளை விட இரு மடங்கு பெரிது மற்றும் மிக வலிமையானது சங்காவின் கூட்டணிப்படை. 

                              மழைக்காலம் தொடங்கிற்று போருக்கு ஓய்வு இதனிடையில் ஆக்ராவை கலை நகரமாக்க உத்தரவிடுகிறார் பாபர். மலை முடிந்து பனிக்காலம் ஆரம்பமானது. ரானா பெரும்படையுடன் ஆக்ராவை நோக்கி வந்துகொண்டு இருக்கிறார் என்ற செய்தி  கிடைக்கிறது. பாபருக்கு கோபமும்  வருத்தமும் ரானா சொல்லித்தான் அவருக்கு உதவினோம் இவரும் தௌலத் கான் லோடி போல் வார்த்தை தவறிவிட்டார். ரானாவின் எண்ணமோ பாபர் ராஜபுத்திரர்களின் நிலத்தை கைப்பற்ற துடிக்கிறார் என எண்ணி இதுவரை இருந்த சுல்தான்களின் ஆட்சி போதும் இனி ராஜபுத்திரர்களின் பேரரசுதான் இருக்கவேண்டும் என பாபரை எதிர்த்து நிற்கிறார்.

                              பாபர் நினைத்ததை விட ரானா பெரும் வீரர். பல போர்களை கண்டவர். தன்னை எதிர்த்து வந்தவர்களின் உயிர் தப்பிவிடமாட்டார். ரானாவிற்கு ஒரு விபத்தில் கண் ஒன்றை இழந்தார் மேலும் உடம்பில் எட்டு இடங்களில் மாபெரும் போர் தழும்புகள். இதுமட்டும் இல்லாமல் ரானாவின் படைகள் பற்றியும் வீரர்கள் பற்றியும் தெரிந்தவுடன் முகலாயர்கள் புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். மீண்டும் காபூல் சென்றுவிடலாம் அதுதான் நல்லது என்ற அளவிற்கு புலம்புகிறார்கள். 

                               இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் பாபருடைய நம்பிக்கையான ஜோதிடர் முகம்மத் ஷெரிஃப் அரசரை சந்திக்கிறார். தற்போது கிரக அமைப்பு சரி இல்லாமல் இருப்பதால் போரை தவிர்க்கவும் இல்லையேல் ரானாவிடம் தோற்றுப்போக கூடும் என கூறுகிறார். இதை கேட்ட எல்லோரும் அதிர்ந்து போகிறார்கள் ஆனால்  பாபர் மட்டும் எந்த சலனமும் இல்லாமல் பொறுமையாக பேசுகிறார் ‘ இது மாதிரியான கெட்ட சொற்களுக்கு செவி சாய்க்க வேண்டாம் நாம் வெல்வது உறுதி என கூறி அடுத்தகட்ட வேலையை பார்க்குமாறு கட்டளை இடுகிறார்.

                                      பிப்ரவரி 11, 1527. ஆக்ராவில் இருந்து படைகள் கிளம்பின. முகாமிடும் இடங்களில் மிகுந்த விழிப்புணர்வோடு தக்க பாதுகாப்பு அரண்கள் அமைத்தே தங்கினார். வீரர்கள் அரசரின் கட்டளைக்கு அடிபணிந்தார்களே தவிர பானிபட் போரில் இருந்த உத்வேகம் இல்லாமல் இருந்தது. போதுமான போர் பயிற்சி இருக்கிறது ஆனால் மனப்பயிற்சிதான் தேவை என்றுணர்ந்த பாபர் ஒரு நாள் வீரர்களை அழைத்து பேசுகிறார் ‘ நம் சாம்ராஜ்யத்தின் மிக முக்கியமான போர் இது. நமக்கு இது கடவுளின் ஆணை. ஆகவே ஒழுக்கம் முக்கியம் , பேசிக்கொண்டே ஒரு ஜாடி மதுவை எடுத்து தரையில் ஊற்றினார்.எந்தவித உல்லாச கேளிக்கைகளிற்கும் இடம் தரக்கூடாது. இந்த யுத்தம் புனிதமானது.

                                      ஜிஹாத்!. பாபர் உணர்ச்சி பொங்க பேசிய பிறகு வீரர்கள் அனைவரும் மது நிரம்பிய ஜாடியை சேர்ந்து உடைக்கிறார்கள். தொழுகை சேர்ந்து செய்கின்றனர் பின் பாபர் மீண்டும் பேசுகிறார் நம்மை இந்த போரில் கடவுள்தான் இறக்கி விட்டுள்ளார். மரணம் வந்தால் அது தியாகம், வெற்றி கிட்டினால் அது எதிரிக்கு நம் அளிக்கும் மரண பரிசு என வீர முழக்கமிடுகிறார். வீரர்களின் முகத்தில் தெளிவும், புத்துணர்வும் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறார் பாபர். ஆக்ராவிற்கு மேற்க்கே சுமார் முப்பது மைல்கள் தொலைவிலுள்ள சிறிய கிராமம் கானுவா.அந்த கிராமத்தில் முகலாய படைகள் தயார் நிலையில் இருந்தனர். 

                                    நினைத்தது போலவே ரானாவின் படைகள் நெருங்கிவிட்டன. இதற்குமுன் பானிபட்டில் அமைத்த அதே யுக்தி வலது, இடது வீரர்கள், முன் அரண் பின் துப்பாக்கி வீரர்கள். மறுநாள் காலை போர் தொடங்கிற்று,’ ராஜபுத்திரர்களின் கூட்டணிப்படை நெருங்கி வர பீரங்கிகளும், துப்பாக்கிகளும் வேலையே காட்ட ஆரம்பித்தன. ரானாவிற்கு முதல் சறுக்கல், சுமார் இரண்டு லட்சம் வீரர்கள் வந்திருந்தாலும் வெடிக்கும் சத்தத்தில் சிதறி போனார்கள் இருந்தும் பானிபட் போல யுத்தம் சுலபமாக இல்லை இரு படைகளும் வீறுகொண்டு போர் புரிந்தனர் துப்பாக்கி குண்டு துளைத்து ராஜபுத்திரர்கள் மண்ணில் சாய்கிறார்கள் மறுபக்கம் அம்பின் வேகம் முகலாயர்களின் உடலை துளைத்துக்கொண்டு ரத்தம் தெளிக்கிறது. இருபுறமும் பலத்த உயிர் இழப்பு.                    

                                     மாலை சூரியன் மறைந்திருந்த வேளையில் மீதி இருந்த ராஜபுத்திர வீரர்கள் பின் வாங்க ஆரம்பித்தார்கள். மஹ்மூத் லோடி தப்பி ஓடிவிட்டார். ரானாவின் தலை எதிர் பார்த்தவராய் பாபர் களத்தில் இருந்தார். சில குதிரை வீரர்கள் பாபர் நோக்கி வந்தனர் ‘ மன்னிக்க வேண்டும் அரசே ரானவை தேடி பார்த்தோம் கிடைக்கவில்லை தப்பி ஓடிவிட்டார். கிட்டத்தட்ட பத்துமணி நேர யுத்தம், பெரும் இழப்பில் கிடைத்த வெற்றி. மேவார்(ராஜஸ்தான்) பாபர் வசமானது. இதற்காக காஸி (Ghazhi) – புனித போராளி என்ற பட்டம் பாபருக்கு கிடைக்கிறது. 

                                     இறந்த எதிரிகளின் தலைகளை மட்டும் வெட்டி குவியுங்கள் பாபரின் கட்டளை. குன்றுபோல் இருந்தது தலைகள், முகலாயர்கள் வழக்கம். முகலாயர்களின் மீதான பயத்தை அதிகப்படுத்த உருவாக்குவதே இந்த செயல். அன்றிரவு தனது கூடாரத்தில் இருந்தார் ஜோதிடர் ஷெரிஃப் அரசரை பார்க்க வருகிறார். வந்தவர் உள்ளே சென்று தனது வாழ்த்துக்களை அரசரிடம் கூற அவர் நன்றாக உபசரித்து பின் கொஞ்சம் செல்வதை கொடுத்து ‘ இனி நீ என்  ஜோதிடன் அல்ல’. என் எல்லைக்குள் நீ இருக்க கூடாது சென்றுவிடு கோபமாக கூறுகிறார் அரசர்.

Rajput Warriors (Pic: wikimedia)

கலைகளின் ஆர்வம்                                    

                                  வெற்றி என்பது ஒரு மாயாசூழல், எப்போதும் ஜெயித்துக்கொண்டே இருப்பவன்கூட அதனை தக்கவைத்துக்கொள்ள போராடிக்கொண்டே இருக்கவேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும் யார் யாருடனும் கூட்டணி வைத்து எதிரி ஆவார்கள் எப்படி வேண்டுமானாலும் ஆபத்து நிகழும் என்பதை புரிந்த பாபர் ஓய்விலும் விழிப்போடே இருந்தார். 

                                  மீண்டும் ஆக்ராவின் கலை அழகை ரசித்தவராய், கவிஞர்களை வரவேற்று கவிதை கேட்டும் எழுதவும் செய்தார். இந்திய இசையில் மூழ்கினர், அறிஞர்களிடம் விவாதித்தார், புதிதாக கிடைத்த அரிய புத்தகங்களை வாசித்தார். புதிய எழுத்துக்களை உருவாக்கினார், அதற்கு அவர் வைத்த பெயர் ” பாபுரி “. இந்த நேரத்தில்தான் தனது சுயசரிதையை எழுதினார் பாபர். அப்புறம் கொஞ்சம் ஓபியம், நிறைய ஒயின். 

                                 இந்திய மக்களின் மனதை அறிவதற்காக நிறைய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார். அப்படி போகும்போது குவாலியர் செல்கிறார் அங்கே ஏரிக்கரை ஓரம் அமைந்திருந்த ஜைனக் கோயில் அவரை உறுத்தியது, ‘அந்தரங்க உறுப்புக்களைக்கூட மறைக்காத முழு நிர்வாண சிலைகள்.இடம் நன்றாகவும் சிலை மோசமாகவும் இருப்பதால் அழிக்க கட்டளையிடுகிறார். பாபர் தனது பானிபட் வெற்றியின் நினைவாக இந்தியாவில் கட்டிய முதல் மசூதியை கட்டி முடிக்கிறார்(1528).அதன் பெயர் காபுலி பாக். 

                                இந்தியாவை கைப்பற்றிய விதத்தில் வெற்றியாளராக இருந்த பாபர் நிர்வாகத்திலும் ஆட்சி செய்யும் விதமும் படுதோல்வியாகத்தான் கூறப்படுகிறது. அடிக்கடி நிதி நெருக்கடியில் சிக்கி நிதி திரட்ட கொள்ளை அடியுங்கள் எனவும் கூறி இருக்கிறார் பாபர்.  இதற்கிடையில் தனக்கு நெருக்கமான அமீர்களில் விருப்பம் உள்ளவர்களை காபூலிற்கு அனுப்பி வைத்து உடன் தன் மகன் ஹுமாயூனை பாதக்க்ஷனிற்கு ஆளுநராக அனுப்பி வைக்கிறார். 

Baburi (Pic: 99wiki)

இறுதி போர்கள்

                               1528 ன் மழைக்காலம் முடிந்து மற்றுமொரு படையெடுப்பு, வடகிழக்கு மால்வாவின் சந்தேரிக் கோட்டை வீழ்ந்தது. இறுதி வரை அரசர் மேதினி ராயும் அவர் வீரர்களும் போரிட்டு உயிர் இழந்தார்கள். அன்றைய காலகட்டத்தில் “ஜாஹர்” என்ற சடங்கை ராஜபுத்திரர்கள் பெண்களும் மக்களும் கடைபிடித்து வந்தனர் அது என்னவென்றால் எதிரியிடம் சிக்கிக்கொள்ளாமல் குழுவாக கிணற்றில் குதித்தோ,நெருப்பில் விழுந்ததோ மரணமடைவது. இதை கண்ட  முகலாயர்கள் ஆடிப்போனார்கள். 

                               அடுத்த சவால் மஹ்மூத் லோடியை பாட்னாவில் வீழ்த்துகிறார் எஞ்சியிருந்தவர்கள் உயிர் தப்பி ஓடி விட்டனர் மிக எளிமையாக கிடைத்த வெற்றி (மே 6,1529). இதுதான் பாபர் கடைசியாக பங்குபெற்ற யுத்தம். அந்த சமயத்தில் சமர்கண்ட்டை பிடிக்க ஒரு வாய்ப்பு அமைகிறது பாரசீகர்கள் உஸ்பெக்குகள் மீது ஆதிக்கம் செய்கிறார்கள். ‘ கனவு மீண்டு அழைத்தது இந்தமுறை விடக்கூடாது, பாதக்க்ஷனில் இருந்து ஹுமாயூனை படை திரட்டி வரும்படி செய்தி வருகிறது. இந்தியாவில் இருந்து பாபர் செல்ல தயாராகி கொண்டிருக்கும் சில தினங்களில் திரும்பவும் உஸ்பெக்குகள்  இழந்ததை  மீட்டு விடுகின்றனர் என்ற செய்தி. 

                               பெருத்த ஏமாற்றத்துடன் ஹுமாயூன் திரும்புகிறார் பாபரும்  அமைதியாகிறார். ஆக்ராவில் பாபரின் உடல் நிலை சரியில்லாமல் போகிறது காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மற்றும் ரத்தத்துடன் வரும் எச்சில். இருந்தும் அவரின் மனஉறுதியை அவரை சரிசெய்கிறது. இதை அறிந்த ஹுமாயூன்  தந்தையை பார்க்க வருகிறார் முதலில் பாபர் கோபம் கொள்கிறார் பாதக்க்ஷனை விட்டு ஏன் வந்தாய் என்று பின் ஹுமாயூன்  தங்களை பார்க்க வந்ததாக கூற அமைதி ஆகிறார். 

                              சிலநாள் தந்தையுடன் கழித்து விட்டு பின் பாதக்க்ஷன் கிளம்புகிறார் ஹுமாயூன் அப்போது வழியில் சம்பலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்நிலையில் இளவரசருக்கு உடல்நிலை மிக மோசமாக உள்ளது அவர் அம்மா இருந்தால் நன்றாக இருக்கும் என செய்தி வருகிறது. பதறிப்போனர்  பாபர், மாஹமா பேகம் உங்களுக்கு நிறைய பிள்ளைகள் உண்டு ஏன் கண்கலங்கவேண்டாம் என கூற பாபர் எத்தனை பேர் இருந்தாலும் என்  அருமை புதல்வன் ஹுமாயூனுக்கு ஈடு கிடையாது. பாபர் ஆணை பிறப்பித்து உடனே ஹுமாயூனை படகில் அழைத்து வர சொல்கிறார். வருவதற்குள் நினைவிழந்து துவண்டு காணப்பட்டார் ஹுமாயூன். 

                             பாபர் ஒரு முடிவிற்கு வருகிறார் ‘என்  உயிரை கொடுத்தாவது என் மகன் உயிரை மீட்பேன்’ என்கிறார். பலரும் கதறுகின்றனர், நம்மிடம் உள்ள பெரும் மதிப்புடைய கோஹினூர் வைரத்தை கொடுத்தாவது இளவரசனை காப்போம் என்கின்றனர் உடனே பாபர் ஹுமாயூன் உயிருக்கு முன் எதுவுமே மதிப்பில்லை என மறுத்துவிடுகிறார்.

Babur (Pic: india)

அன்பும்,இறப்பும்

                                   இறுதில் தனது  மகன் படுக்கையை மூன்றுமுறை சுற்றி வலம் வந்து,’இறைவா எனது மகன் உடலில் உள்ள வியாதிகள் அனைத்தையும் என் உடலுக்கு கொடுத்துவிடு’ மனம் உருகி வேண்டுகிறார். அடுத்தடுத்த நாட்களில் மன்னர் படுத்த படுக்கைக்கு செல்கிறார். ஹுமாயூன்  உடல் கொஞ்சம் கொஞ்சமாக தேற கண்விழிக்கிறார். தன் தந்தை இப்படி இருப்பதை பார்த்து குமுறுகிறார் ஹுமாயூன். மகன் தேறி வந்ததை பார்த்த பாபர் முக்கியமான அமைச்சர்களை அழைத்து இடப்பட்டிருந்த அரியணையில் அமரும்படி செய்து, ஹுமாயூனை அடுத்த பேரரசர் என அறிவிக்கிறார். 

Humayun (Representative Pic: thefamouspeople)

                                  இறுதியாக ஹுமாயூன்  கையை இருக்க பிடித்துக்கொண்டு தட்டு தடுமாறி பேச ஆரம்பிக்கிறார்,’ உன் சகோதரர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காதே, அவர்கள் உனக்கு உண்மையாக இருக்கும்வரை’. டிசம்பர் 26, 1530 மாபெரும் போராளி பாபர் இறக்கிறார். ஆக்ராவில் இறுதிச்சடங்கு நடக்கிறது தன்  இறுதி ஓய்விடம் காபூலில் அமைய வேண்டும் என்பது பாபரின் விருப்பம். 1539 ல் பாபரின் உடலை தோண்டி எடுக்கப்பட்டு காபூலில் அவர் அமைத்திருந்த பாக்-ஐ-பாபர் என்ற தோட்டத்தில் புதைக்கப்படுகிறது.

Web Title: Babur Dream Land Tamil Article

Featured Image Credit: novom

Related Articles