ஆங்கிலேயர் இந்தியாவுக்கு கொடுத்ததும் பிடுங்கியவையும்

ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலம் கடந்து நமக்கு நாமே ஆட்சி செய்ய துவங்கி வருடங்கள் பல உருண்டோடி விட்டன. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நமக்கு செய்த நன்மை, தீமைகள் பற்றி இன்றளவும் சர்ச்சைகளும் விவாதங்களும் நடந்து கொண்டுதான் இருகின்றன. ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுச்சென்றது, அள்ளிச்சென்றது ஆகியவற்றில் முக்கியமான சிலவற்றை நாம் புரட்டி பாப்போம்.

பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தால் நாம் அடைந்தது

இந்தியா என்று ஒரு நாடாக ஒருங்கிணைப்பு

வெள்ளையர்கள் வணிகம் செய்யவே இந்தியாவிற்குள் நுழைந்தனர். அவர்கள் வணிகத்தை விரிவுபடுத்தும்பொழுது அவர்கள் ராஜ்யத்தையும் விரிவுபடுத்திக்கொண்டனர். ஒருங்கிணைந்த இந்தியா இல்லாதபொழுது மன்னர் ராஜ்ஜியங்களும், மதவாதிகளும் தாங்கள் ஆளும் மாநிலத்தை மையமாக வைத்து தங்கள் ராஜ்யத்தை விரிவுபடுத்த கடும்போர் புரிந்தனர். பிரிட்டிஷ் படைகள் நாலாபுறமும் ஊடுருவி மன்னர் ராஜ்ஜியங்களை ஒவ்வொன்றாக கைப்பற்றி ஒரே நாடாக நிறுவி பிரிட்டிஷ் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இரயில் சேவை

இந்திய இரயில் நிலையம் – வெள்ளையர்களின் ஆட்சிக் காலம் படம் – columbia.edu

ஆங்கிலேயர் வணிக நோக்கத்திற்காகவும், தொழில் விஸ்தரிப்புக்காகவும் பல திட்டங்களை வகுத்தனர். மூலபொருட்களை இந்தியாவில் இருந்து அவர்கள் நாட்டிற்கு அனுப்பவும், தயாரித்த பொருட்களை திரும்ப இந்திய மக்களுக்கு அதிக விலைக்கு விற்கவும் துறைமுகங்கள் வரையிலான இரயில் சேவை அவர்களுக்கு அவசியமாக தேவைப்பட்டது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் இரயில் போக்குவரத்திற்கான திட்டத்தை 1840 ஆம்  ஆண்டு அப்போதைய ஆளுநர் லார்ட் ஹார்டிங் பிரபுவிடம் அளித்து ஒப்புகை பெறப்பட்டது.

1845 ஆம் ஆண்டு கிழக்கிந்திய இரயில்வே கம்பெனி மற்றும் அகில இந்திய தீபகற்ப இரயில்வே கம்பெனி என்ற இரு அமைப்புகள் இதற்காக இயக்கப்பட்டன. இரயில் சேவைகள் அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. 1907 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இரண்டு இரயில்வே கம்பெனிகளையும் அரசுடைமையாக்க ஆணை பிறப்பித்து முழு நிர்வாகத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்டது. மக்கள் சேவைக்காக இரயில்வே போக்குவரத்தை அவர்கள் தொடங்கவில்லை என்றாலும் இன்றளவும் அனைத்து தரப்பினர்களுக்கும், குறிப்பாக ஏழை மக்களுக்கு ஒரு வரமாகவே இரயில் சேவை இருக்கிறது.

தபால் நிலையங்கள்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு முன்னரே தபால் சேவைகள் இந்தியாவில் இருந்துள்ளன. அது ஒரு சில மாநிலங்களின், அல்லது ராஜ்ஜியங்களின் எல்லைக்கு உட்பட்டு இருந்திருக்கின்றன. கிழக்கிந்திய கம்பெனி தங்கள் வணிக தொடர்புகளுக்காக தனித் தபால் நிலையங்களை பம்பாய், கொல்கத்தா, மற்றும் மதராஸில் 1688 ஆம் ஆண்டு துவங்கினர். லார்ட் கிளைவ் அதனை விரிவாக்கம் செய்தார். வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டும் பயன்படுத்த அனுமதி அளித்தார். அக்டோபர் 1, 1837 ஆம் ஆண்டு “இந்திய தபால் நிலையம்” என்ற பெயரில் அவர்கள் அரசால் முழுமையாக நிறுவப்பட்டது.

ஆங்கில மொழி மற்றும் கல்வி

பம்பாயில் இயங்கிய பெண்கள் பாடசாலையொன்று படம் – oldindianphotos.in

1828 முதல் 1835 வரை கவர்னர் ஜெனெரலாக இருந்த லார்ட் வில்லியம் பெண்டின்க் பொருளாதாரம், நீதி மற்றும் கூட்டுறவு துறைகளை நிர்வகிப்பதில் மொழி வேற்றுமைகளால் இருக்கும் குறைபாடுகளை கண்டறிந்தார். அரசர்கள் ஆளும் பொழுது பெர்சியர்கள், அரேபியர்கள், சமஸ்கிருத பண்டிதர்கள் என்று நிதித்துறையில் மதம் சார்ந்த தீர்ப்புகள் வழங்க நியமிக்கப்பட்டிருந்தனர். வாணிப தொடர்புகளுக்கு அவர்கள் ஆங்கிலத்தை பயன்படுத்தினாலும் அது மற்ற துறைகளில் உதவவில்லை. ஒரே மொழிக் கொள்கை இருந்தால் மட்டுமே நிர்வாகத்திற்கும், கூட்டுறவுகளுக்கும் உதவும் என்று முடிவு செய்த பெண்டின்க் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக அறிவித்தார்.

ஆங்கிலேயர் கல்வித்துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தனர். பெரும்பாலான இடங்களில் பள்ளிகள் நிறுவப்பட்டன. இந்தியர்களது பழங்கால வாழ்க்கைமுறை மற்றும் வளம் போன்ற அனைத்தும், வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் வில்லியம் ஜோன்ஸ், இருவரால் சேகரிக்கப்பட்டு மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டது.

உடன்கட்டை ஏறுதல் நிறுத்தப்படல் – கொள்ளையர்கள் விரட்டப்படல்

கணவனை இழந்த விதவைகள் உடன்கட்டை ஏறுவதால் தங்கள் பதிபக்தி முழுமையடைவதாக கருதி வந்தனர். ராஜ ராம் மோகன் ராய் போன்றவர்கள் இதை தடுப்பதற்காக முழுமையாக போராடி வந்தனர். பிரிட்டிஷ் அரசும் இதை கடுமையாக எதிர்த்து காட்டுமிரண்டிதனமான செயல் என்றது. மதரீதியாக வேருன்றி கிடந்த லட்சோப லட்சம் மக்களின் சிந்தனையை மாற்றுவது அவர்களுக்கு மிக கடினமான செயலாக இருந்தது. கடும் போராட்டங்களும் சர்ச்சைகளும் வெடித்தன. இறுதியாக 4 டிசம்பர் 1829 அன்று உடன்கட்டையேறுதல் குற்றம் என சட்டம் இயற்றப்பட்டு அது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.

உடன்கட்டை ஏறுதல். படம் – ostokdelo.blogspot.com

வழிப்பறி செய்பவர்கள் மற்றும் கொலை கொள்ளைகளில் ஈடுபடுபவர்கள் ரகசிய கூட்டணியை ஏற்படுத்தி “பன்சிகர்கள்” என்ற பெயரில் கூட்டமாக செயல்பட்டு வந்தனர். ஆறு ஆண்டுகள் போராடி இரண்டாயிரம் கொள்ளையர்களை சிறையில் அடைத்தும் தூக்கில் இட்டும் குற்றங்களை தடுத்து நிறுத்தினர்.

1829 ஆம் ஆண்டு குழந்தை திருமணத்தை நிறுத்தவும், 1856 ஆம் ஆண்டு விதவைகள் மறுமணத்தை ஆதரித்தும் சட்டம் இயற்றப்பட்டது.

மருத்துவம்

இந்தியாவில் சிறந்த முறையில் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகள் ஆங்கிலேயர் காலத்திற்கு முன்னரே நடைமுறையில் இருந்தன. தேர்ச்சி பெற்ற சிறந்த மருத்துவர்களும் அதிக அளவில் இருந்தார்கள். கிழக்கிந்திய கம்பெனி தடம் பதித்ததில் தாவரவியல், விலங்கியல், புவியியல் வல்லுனர்களும் மற்றும் யூரோப்பிய முறை மருத்துவமும் ஆதிக்கம் செலுத்தின. அவர்களின் சில மருந்துகள் குறுகிய காலத்தில் வியாதிகளுக்கு நிவாரணம் அளித்தன. சின்னம்மை, மலேரியா போன்ற வியாதிகள் கட்டுபடுத்தபட்டன.

கட்டுமானங்கள் 

இந்தியா கேட். படம் – culturalindia.net

டஃபெரின் பாலம், ஹௌரா பாலம், தி சட்லஜ் பாலம், விக்டோரியா பாலம், ஃபோர்ட் வில்லியம், கோட்டை செயிண்ட் ஜார்ஜ், இந்தியா கேட், டீன் முர்டி ஹவுஸ், பாராளுமன்ற கட்டிடம், விக்டோரியா மெமோரியல் என பல கட்டிடங்கள், அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் வெள்ளையர்களால் நிறுவப்பட்டன. நாட்டிற்கான சிறந்த கட்டமைப்பின் தொடக்கமாக அது அமைந்தது.

பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தால் நாம் இழந்தது

பொருளாதார சரிவு

இந்தியாவை “தங்கப்பறவை” என்றே ஒரு காலத்தில் அழைத்தார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர் முதன் முதலில் கால் பதித்த பொழுது நல்ல வளமிக்க நாடாக இருந்துள்ளது. உலக நாடுகளின் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 22 சதவீதமாக இருந்துள்ளது. (அப்பொழுது மொத்த ஐரோப்பிய நாடுகளின் உற்பத்தி 23 சதவீதம் மட்டுமே) ஆங்கிலேயர்கள் இங்கிருந்து செல்லும்பொழுது உலக நாடுகளின் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு வெறும் இரண்டு சதவீதமே. நமது பொருளாதாரத்தை நசுக்கிய காரணிகளில் சிலவற்றை இப்பொழுது காணலாம்.

சொற்ப விலைக்கு பருத்தி அனைத்தையும் கொள்முதல் செய்து பிரிட்டிஷ் நாட்டில் நெசவு நிறுவனங்களை நிறுவினர். படம் – pseudoerasmus.files.wordpress.com

  • இந்தியா ஒரு பருத்தி கூடாரமாகவே இருந்துள்ளது. சொற்ப விலைக்கு பருத்தி அனைத்தையும் கொள்முதல் செய்து பிரிட்டிஷ் நாட்டில் நெசவு நிறுவனங்களை நிறுவினர். ஒட்டு மொத்த பிரிட்டனின் தொழில் புரட்சியும் ஏழை இந்தியர்களின் கல்லறை மேல் கட்டப்பட்டது.
  • தரமில்லாத பட்டு துணிகளை சொற்ப விலைக்கு அவர்கள் சந்தைப் படுத்தியதால் பட்டு உற்பத்தியும் சரிவை சந்தித்தது.
  • நிர்வாக காரணங்களை கொண்டு மிக கடுமையான வரி மற்றும் வருவாய் சட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் இயற்றியது.
  • வரி விதிப்பால் பாதிகப்பட்ட விவசாயிகள் குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்ட கடன் வாங்கினர். அவர்கள் சூழ்ச்சியால் ஏமாற்றவும் பட்டனர்.
  • ஆங்கிலேயரின் இரானுவ படைகளை இந்தியாவில் பராமரிக்க ஆகும் செலவு இந்தியர்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு சுமார் 19 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது.

எடுத்துச் சென்றவை

இன்று பிரிட்டிஷ் அரண்மனையை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் (1௦5 காரட்), இந்தியாவின் மிகப் பெரிய வைரமாக கருதப்பட்டது. படம் – static.independent.co.uk

இந்தியாவின் வளமான சொத்துக்கள் முக்கியமாக குறிவைத்து அபகரித்து அள்ளி செல்லப்பட்டன. ஒரு உத்தேச ஆய்வின்படி தங்கம் மற்றும் நவரத்தினங்கள் அல்லாமல், சுமார் மூவாயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு வளங்கள் எடுத்து செல்லப்பட்டதாம். இன்று பிரிட்டிஷ் அரண்மனையை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் (1௦5 காரட்), இந்தியாவின் மிகப் பெரிய வைரமாக கருதப்பட்டது.

நரித்தனமும் சூழ்ச்சிகளும்

இந்தியாவின் எண்ணற்ற கலவரங்களுக்கும், போர்களுக்கும், அவர்கள் ஒரு காரணமாக இருந்தனர். திறன்பட நடக்கும் ஆட்சியை மக்கள் கலவரத்தால் உடைக்க திட்டமிட்டு மராத்தியர்கள், சீக்கியர்கள், ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரத்தை உண்டாக்கினர். மறைமுகமாக இவ்வாரான கலவரங்களில் அவர்கள் பங்கேற்பு இருந்தது. இரண்டு பூனைகள் ஒரு ரொட்டி துண்டுக்காக சண்டையிடும்பொழுது ஒரு குரங்கு இடைவெளியில் அபகரித்த கதை தான்.

இந்திய பிராந்திய மொழிகளின் நிராகரிப்பு

சமஸ்கிருதம், தமிழ், குஜராத்தி, போன்ற மொழிகளின் பயன்பாடு சுருங்கியது. ஆங்கிலம் கற்றால் மட்டுமே சிறப்பு என்ற தவறான நம்பிக்கை மக்களிடம் பரப்பப்பட்டது. இன்றளவும் ஜப்பான், சீனா, மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் அவர்கள் தாய் மொழியே ஆட்சி மொழியாக அனைத்து  இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்கில மொழியின் ஆதிக்கம் இந்தியாவில் இன்றளவும் வேரூன்ற அவர்கள் விதைத்த விதை காரணமாக இருந்திருக்கலாம்.

ஒழுங்கற்ற சட்டம்

இந்தியர்களுக்கு அவர்களின் அரசியல் உரிமைகள் மறுக்கபட்டன. சட்ட விதிமுறைகளை உருவாக்கும் கூட்டமைப்பில் ஒரு இந்தியருக்கு கூட இடம் வழங்கப்படவில்லை. அவர்கள் உருவாக்கியதே சட்டம், அவர்கள் வைத்ததே தண்டனைகள் என்று அனைத்தையும் அவர்களே தீர்மானித்தனர்.

கொடூர நடத்தை

திறன்பட நடக்கும் ஆட்சியை மக்கள் கலவரத்தால் உடைக்க திட்டமிட்டு மராத்தியர்கள், சீக்கியர்கள், ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரத்தை உண்டாக்கினர். படம் – newsapi.com.au

ஆங்கிலேயர்கள் ஒரு நாளும் இந்தியர்களை சரிசமமாக நடத்தவில்லை. அவர்கள் நிர்வாக கட்டிடங்களில் ஒரு சிலவற்றில் “நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் அனுமதியில்லை” என்று பலகைகள் வைத்திருந்தனர். இந்தியர்கள் அடிமைகள் என்ற ஆதிக்க மனப்பான்மை அவர்களிடம் அதிகமாக இருந்துள்ளது. இந்திய ஆண்கள் தாக்கப்படுவதும் பெண்கள் கற்பழிக்கப்படுவதும் வழக்கமான நிகழ்வாகவே நடந்துள்ளது. ஜெனரல் டயர் நடத்திய ஜாலியன்வாலாபாக் படுகொலை ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்தது நாம் அறிந்ததே.

லாலா லஜிபதி ராய் ஒரு போராட்டத்தின் பொழுது காரணமே இல்லாமல் சிறைப்பிடித்து கொல்லபட்டார். சுமார் நாற்பது லட்சம் மக்கள் காலனி ஆதிக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

இறுதியாக, ஆங்கிலேயர் காலத்திற்கு முன்னரே இந்தியர்கள் கலை, அறிவியல், பண்பாடு, தத்துவம், மருத்துவம், ஜோதிடம், தொழில், கட்டிடக்கலை இன்ன பிற விஷயங்களில் சிறந்து விளங்கினர். ஐரோப்பிய, மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு நமது இந்திய மன்னர்கள் எள்ளளவும் சளைத்தவர்கள் இல்லை. நமது மக்களின் ஒரு சில பழக்க வழக்கங்களையும், தவறான நம்பிக்கைகளையும் அவர்கள் மாற்றி அமைத்தனர். மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்கள் கால் பதிக்காமல் இருந்திருந்தாலே, இன்றளவில் அதிக வளத்துடன், அந்த வளர்ச்சியை இந்தியா தன்னிச்சையாக பெற்றிருக்கும்.

Related Articles