இலங்கைத் தேயிலையை சூப்பர் ஸ்டார் ஆக்கிய கோப்பியின் கதை

இலங்கையை ஆண்ட பிரித்தானியர் தேயிலையை அறிமுகம் செய்தமை காரணமாக, இன்று அது இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக இருக்கின்றது. ஆனால் தேயிலை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர், பிரித்தானியரின் பெருந்தோட்டச் செய்கை வரலாற்றில், மற்றுமொரு உற்பத்தியே பிரதானமாக இருந்துள்ளதை பலரும் அறிய மாட்டார்கள். அது நாம் இன்றும் அருந்துகின்ற கோப்பி.

யேமன் நாடும், அங்கு இஸ்லாமிய யாத்திரிகர்கள் கோப்பிப் பயிரை பயிரிடும் காட்சியும்.

யாரால் கொண்டு வரப்பட்டது?

கோப்பிப் பயிர் இலங்கைக்கு பிரித்தானியரால் கொண்டுவரப்பட்டதாக சிலர் எண்ணுகின்றார்கள். இன்னும் சிலர் ஒல்லாந்தர் கோப்பியைக் கொண்டு வந்ததாக நினைக்கின்றார்கள். ஆனால், கோப்பிப்பயிர் மத்திய கிழக்கிலிருக்கும் யேமன் பகுதியிலிருந்து, இந்தியாவினூடாக இலங்கையை வந்தடைந்ததாக கூறப்படுகின்றது. இஸ்லாமிய யாத்திரிகர்கள் 17 ஆம் நூற்றாண்டில் கோப்பிப் பயிரை இலங்கைக்கு கொண்டுவந்து சேர்த்தார்கள்.

ஆனால், அந்தக் கோப்பிப்பயிர் அந்தக் காலத்தில், தற்போது பயன்படுத்தப்படுவதைப் போல பயன்படவில்லை. அதிலிருந்து எந்தப் பானமும் உருவாக்கப்படவில்லை. கோப்பிப்பயிரின் இலைகள் கறி சமைக்கவும், அதன் மலர்கள் மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள இறைத் திருவுருக்களுக்கு அர்ப்பணிக்கவும் பயன்பட்டன.

கோப்பிப்பயிரின் இலைகளும் அதன் மலர்களும்

வாழ்வும் தாழ்வும்

கோப்பியின் முறையான பயிர்ச்செய்கை ஒல்லாந்தர்களின் காலமான 1740ல் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டது. அப்போதைய இலங்கையின் ஒல்லாந்து ஆளுநராக இருந்த Gustaaf Willem van Imhoff இதனைத் தொடக்கி வைத்தார். அவருக்குப் பின் வந்த ஒல்லாந்து ஆட்சியாளர்களும் அதனை ஊக்குவித்தனர். இலங்கையின் அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றியிருக்காத ஒல்லாந்தர்கள், நாட்டின் தாழ்நிலப் பகுதிகளிலேயே கோப்பிப் பயிர்ச்செய்கையை முன்னெடுத்தனர். அதனால், அந்தப் பயிர்ச்செய்கை அவர்களுக்கு வெற்றியளிக்காமற் போனது.

ஒல்லாந்தர்களின் கோப்பிப் பயிர்ச்செய்கை வெற்றியளிக்காமைக்கு, அவர்களின் தலைமைப் பீடமான டச்சு கிழக்கிந்திய கம்பனியின் நிர்வாக முடிவுகளும் காரணமெனக் கூறபடுகின்றது. இந்தோனேசியாவின் ஜாவா தீவிலும் அவர்கள் தங்களது கோப்பித்தோட்டங்களை வைத்திருந்தனர். அந்த ஜாவா கோப்பிக்கு இலங்கையில் விளையும் கோப்பி போட்டியாக வந்துவிடக் கூடாதென டச்சு கிழக்கிந்திய கம்பனி நிர்வாகம் கருதியதாகவும் சில கதைகள் உண்டு.

1880களில் இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளிகள் – பட உதவி: specialcollections-blog

பிரித்தானியர்கள் 1796 இல் இலங்கைக்கு வந்த போதிலும் முழு நாட்டின் அதிகாரத்தையும் 1815 ஆம் ஆண்டிலேயே கைப்பற்றினார்கள். ஒல்லாந்தர்களால் மேற்கொள்ளப்பட்ட கோப்பிப் பயிர்ச்செய்கை மீதான சோதனை நடவடிக்கைகள் பிரித்தானியர்களாலும் தொடரப்பட்டன. கோப்பியின் தொழில்முறையான ஆரம்பப் பயிர்ச்செய்கை முயற்சிகள் காலி நகரத்தைச் சுற்றியமைந்த கரையோரப் பகுதிகளிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தன. பயிர் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் கோப்பியின் வளர்ச்சிக்கு பொருத்தமானதாக இருக்கவில்லை. இதன்காரணமாக, பயிச்செய்கை தோல்வியைத் தழுவியது.

இலங்கையில் பிரித்தானியர்களின் வெற்றிகரமான முதலாவது தொழில்முறையான கோப்பிப் பயிர்ச்செய்கையை சாதித்துக் காட்டிய George Bird.

உச்சம் தொட்ட கோப்பி

இலங்கையில் பிரித்தானியர்களின் வெற்றிகரமான முதலாவது தொழில்முறையான கோப்பிப் பயிர்ச்செய்கையை George Bird சாதித்துக் காட்டினார். அந்த வெற்றிகரமான கோப்பிப் பயிர்ச்செய்கை செய்யப்பட்ட இடம் என்ற பெருமையை, மத்திய மாகாணத்தில் உள்ள சிங்கபிட்டிய பகுதி பெற்றுக் கொண்டது. 1824 ஆம் ஆண்டில் இலங்கைக்கான பிரித்தானிய ஆளுநராக பதவியேற்ற Edward Barnes மற்றுமொரு கோப்பித் தோட்டத்தை கன்னொருவ பகுதியில் 1825 ஆம் ஆண்டில், அமைத்தார். கோப்பிப் பயிர்ச்செய்கையின் ஆரம்பகால தொழில் முயற்சிகள், பொருளாதார நன்மையைப் பெற்றுத் தரவில்லை. எனினும் கண்டியைச் சார்ந்த பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பிற பகுதிகளுக்கும் விரிவடைந்த கோப்பிப் பயிர், சில ஆண்டுகளில் பொருளாதார நன்மையை பெற்றுத் தர ஆரம்பித்தது.

இலங்கையின் கோப்பித்துறையின் பிரதான போட்டியாளராக இருந்த மேற்கிந்தியத்தீவுகளில் நிகழ்ந்த சமூகப் புரட்சி, அங்கு விளைந்து வந்த கோப்பியின் தலையெழுத்தைப் புரட்டிப் போட்டது. மேற்கிந்தியத் தீவுப் பகுதிகளில் உள்ள கோப்பித்தோட்டங்களில் அடிமைகளை வைத்தே ஆரம்பத்தில் வேலை வாங்கப்பட்டது. எனினும், ஒரு கட்டத்தில், அங்கு அடிமை முறை ஒழிக்கப்பட்டது. இதன் காரணமாக, மேற்கிந்திய கோப்பித் தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டிய நிலை உருவானது. இந்த நிலை காரணமாக, மேற்கிந்திய கோப்பிப் பயிர்ச்செய்கையில் கிடைத்த ஏராளமான இலாபம், காணாமல் போனதையடுத்து, அந்தத் தொழிற்றுறை அங்கு வீழ்ச்சி அடைந்தது. இது இலங்கைக் கோப்பிக்கு நல்ல செழுமையான நிலையை உருவாக்கியதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

இலங்கையில் முதலில் கோப்பி பயிரிடப்பட்ட  ஊர் சிங்கப்பிட்டிய  மற்றும் கோப்பி பயிர்ச்செய்கை தொழிலாளர்கள்.

கிருமி அழித்த கதை

1830 களில் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களின் கடுமையான உழைப்பை உறுஞ்சியே இலங்கையில் கோப்பித்துறை செழித்தது என்று கூறினால் அது மிகையில்லை. ஐரோப்பிய சந்தையில் கோப்பிக்கென உருவாகிய கேள்வி தொடந்தும் அதிகரித்தமை காரணமாக, இலங்கையில் கோப்பிப் பயிச்செய்கை விரிவடைந்தது. இதன் போது, இலங்கையில் ஏறத்தாழ ஒரு லட்சம் ஏக்கர் பரப்பிலான மழைக்காடு அழித்துத் துடைக்கப்பட்டு, அந்த நிலம் கோப்பிப் பயிர் வளர்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது.

1860 களில், உலகில், இலங்கை, பிரேசில் மற்றும் இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகளுமே கோப்பி பயிர்ச்செய்கையின் பாரிய உற்பத்தியாளர்களாக இருந்தன என்றால், நாம் நம்பித்தான் ஆக வேண்டும். ஆனால், இந்த வானுயர்ந்த கோபுரத்தை, உடைத்துச் சரித்தது ஒரு கிருமி. அதன் பெயர் Hemileia vastatrix.

கோப்பிப் பயிர்ச்செய்கையை வீழ்ச்சியடைய செய்த Hemileia vastatrix என்ற ஃபங்கஸ் கிருமி

இலங்கையில் மட்டுமல்லாது கோப்பி விளைந்த பிற ஆசிய நாடுகளிலும் Hemileia vastatrix என்ற அந்த ஃபங்கஸ் கிருமியின் தாக்கத்தினால், கோப்பிப் பயிர்ச்செய்கை கடுமையான வீழ்ச்சியை எதிர்நோக்கியது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு, கோப்பிப் பயிர்ச்செய்கையை வர்த்தக ரீதியாக உயர்த்தவே இயலாத நிலைமை அப்போது காணப்பட்டது. மெல்ல மெல்ல கோப்பி பயிரிடப்பட்ட காணிகளின் பரப்பு சுருங்கியது. அந்த இடத்தை தேயிலை ஆக்கிரமித்துக் கொண்டது.

இலங்கையில் கோப்பிப் பயிர்ச்செய்கை பாரிய வீழ்ச்சியைக் கண்ட போதும், இன்று வரை இலங்கையர்களின் உணவுப் பழக்கத்தில் தனக்கான இடத்தை இன்னும் இழக்கவில்லை. கோப்பியின் சாம்ராஜ்ஜியத்தை தேயிலை கைப்பற்றிக் கொண்ட போதும், கோப்பியை மக்கள் மனதிலிருந்து யாராலும் துடைத்தழிக்க முடியவில்லை.

முகப்பு பட உதவி : artfinder.cpm

Related Articles