கீழடி முடிவோடு இராகிகரி அகழ்வாராய்ச்சி முடிவு – ஒரு ஒப்பீடு

அகழ்வாராய்ச்சி என்பதே பண்டைய கால மக்களின் கலை, மற்றும் வாழ்க்கைமுறையை கண்டறிவதற்காக மேற்கொள்வது. பண்டைய கால மக்களின் வாழ்க்கைமுறையை அறிய அகழ்வாராய்ச்சியாளர்கள் நிலம் சார்ந்த மண்ணை சோதிப்பதோடு, நிலத்தினுள் புதைந்து கிடக்கும் பொருட்களைக் கொண்டு தான் இந்த ஆய்வுகள் நடத்துகின்றனர். நிலத்தினில் புதையுண்டு கிடக்கும் பண்டைய கால மனிதர்களின் கண்டுபிடிப்புகள், பயன்படுத்திய பொருட்களை எடுத்து அதனை ஆய்வுக்கூடத்தில் பதனிடும் வேலைகளில் ஈடுபடுத்தி,பொருளின் ஆயுட்காலம், தன்மை, பயன்படுத்தும் விதம் அனைத்தையும் கொண்டு, ஆய்வரிக்கையை தயாரித்து வெளியிடுவர். இந்த கட்டுரையில் நாம் காண இருப்பது சமீபத்தில் வெளியான இராகிகரி அகழ்வாராய்ச்சி முடிவோடும், கீழடி அகழ்வாராய்ச்சி முடிவோடு இருக்கும் ஒற்றுமை மற்றும் வேறுபாடுகள்.

பூர்வீக இந்தியர்கள் யார்?

இந்த பத்தியின் தலைப்பு தான் சில தசாப்தங்களாக பல்வேறு இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்காடு மன்றங்களின் தலைப்பு. இந்தியா பல மொழிகளையும், கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே, நமது கோட்பாடு. பலவிதமான வேறுபாடுகள், வழிபாட்டுமுறை முதல், வாழ்க்கை முறை, கலாச்சாரம், உணவுப் பழக்கம், தொழில் வரை உள்ளது. இதன் காரணமாக நடக்கும் பல கலந்துரையாடல்களும், விவாதங்களும், நடைபெறுவதுண்டு. பல நேரங்களில் இந்த கலந்துரையாடல்களில் இந்தியாவின் மூத்தகுடி யாம் தான் யாம் தான் என்று ஒவ்வொரு பிரிவினரும் தன்னை மூத்தகுடி என்று  முன்னிருத்துவதில் தான் வந்து சேரும். இப்போது எந்த தீர்மானத்தையும் முன்னிறுத்தாமல் இரண்டு அகழ்வாராய்ச்சி முடிவுகளை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.

Unity In Diversity (Pic: theodysseyonline)

கீழடி அகழ்வாராய்ச்சி முடிவு

காவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு மத்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி கீழடியில் நடத்தப்பட்டது தான். கீழடியில் அக்கால மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தொழிற்கூடங்கள் செயல்பட்டதற்கான சாட்சியங்கள் கிடைந்துள்ளன. அதற்கு ஒரு சான்றாக கீழடியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கார்பன் மாதிரிகளின் காலத்தைக் கண்டறிய அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள ‘பீட்டா அனலடிக்’ என்ற நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அவை அனுப்பிவைக்கப்பட்டன. அதன் முடிவுகள் கூறியது என்னவென்றால் ‘கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டுகளுக்கும், மற்றொரு பொருள் 2,220 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் கிடைத்த இந்த முடிவுகளைக் கொண்டு தான் ‘கீழடி நகர நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.’

மேலே மேற்கோளில் இருக்கும் செய்தியை வெளியிட்டதே அப்போது மத்திய கலாச்சார இணையமைச்சராக இருந்த மகேஷ் சர்மா தான்.

கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 5300 தொன்மையான பொருட்களைக் கொண்டு தள அருங்காட்சியகம் அமைக்க மாநில அரசு விருப்பம் தெரிவித்தது. அதனைக் கொண்டு, வெகு சில நாட்கள் மட்டும் அந்த தொன்மையான் பொருட்கள் மக்கள் பார்வைக்கு கீழடியிலேயே வைக்கப்பட்டது. அதனை பார்வையிட்ட பல தமிழ் கலாச்சார ஆர்வலர்கள் தன் பங்கிற்கு அதன் தெளிவுரையை மக்களுக்கு எடுத்துச் செல்ல பல கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதி வெளியிட்டனர்.

சங்க கால குறியீட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திர போஸ், 25,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை தமிழ் எழுத்துக்கள் எனவும், சிந்து சமவெளி நாகரீகத்தில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் எனவும் தெரிவித்தார். இதற்கு ஆதாரங்கள் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இதுவரை கீழடியில் இரண்டு சதவிகிதம் மட்டுமே ஆராய்ச்சி நடத்தப்பட்டதாக மத்திய தொல்லியல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார். சரி அடுத்து நாம் சமீபத்தில் வெளியான இராகிகரி அகழ்வாராய்ச்சி முடிவைப் பற்றி பார்ப்போம்.

Keezhadi Excavation (Pic: urbanvaastu)

இராகிகரி அகழ்வாராய்ச்சி முடிவு

இராகிகரி, ஹரியானா மாநிலத்தில் ஹிசார் மாவட்டத்தில் இருக்கிறது. டாக்டர். வசந்த் ஷிண்டே தலைமையில், 2015ல் நடந்த அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் பல தாமதங்களுக்குப் பிறகு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்த முடிவினை ஒட்டிய இணைய செய்திகளின் தலைப்பே “இராகிகரியில் கிடைத்த 4500 ஆண்டுகள் பழமையான டிஎன்ஏ பிரதிபலிப்பு இந்துத்துவ தேசியவாதிகள், அந்த காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை” என்பது தான்.

இந்த அகழ்வாராய்ச்சியில் 4500 ஆண்டுகல் பழமையான மனித உடலின் எலும்புக்கூடுகளைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் டிஎன்ஏ மாதிரிகளை கண்டறிந்து ஆராய்ந்தனர். அதிலும் குறிப்பாக மனித மண்டை ஓட்டின் உள் பகுதியில் இருக்கும் ‘பெட்ரௌஸ் எலும்பு’ பகுதிகளில் உள்ள டிஎன்ஏ மாதிரிகளை எடுத்து ஆராயத் தொடங்கினர். அதற்கான காரணம், உடலின் மற்ற பகுதிகளில் இருக்கும் டிஷ்யூக்களை விட ‘பெட்ரௌஸ் எலும்பு’ பகுதிகளைச் சுற்றியுள்ள திசுக்கள் 100 மடங்கு அதிகமான டிஎன்ஏ க்களை கொண்டுள்ளதாக இருக்கும். இதன் காரணமாக ‘பெட்ரௌஸ் எலும்பு’ பகுதிகளில் இருக்கும் டிஎன்ஏ க்களை ஆராய்ந்ததில் கண்டறிந்தவற்றை தெரிவித்தனர்.

அவை பின் வருமாறு, சமஸ்கிருத மொழியும், இந்து மத வேதங்களும், சிந்து சமவெளி நாகரிக காலத்தில் தோன்றியதில்லை. அந்த டிஎன்ஏ மாதிரிகளில் இருக்கும் ஜீன்களின் தன்மையும், தற்போதைய காலத்தில் வாழும் ஒரு பகுதி இந்தியர்களின் ஜீன்களின் தன்மையும் ஒத்துப்போகின்றது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், அந்த ஜீன் ஒற்றுமை திராவிடர்களின் ஜீனோடு தான் ஏற்படுகின்றது. அதாவது குறிப்பாக தென்னிந்தியர்களுடன் தான் ஒற்றுப்போகின்றது எனலாம், என்று திட்டவட்டமாக கூறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், இந்திய அளவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு தான், 2017 லிருந்து வெளியிடாமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இந்த இராகிகரி அகழ்வாராய்ச்சி டாக்டர். வசந்த் ஷிண்டேவின் தலைமையில் தான். அவரிடம் இத்தனை நாட்கள் அதனை மறைத்து வைத்திருப்பதற்கு டாக்டர். வசந்திடம் கேட்டதற்கு, இது அரசியல் ரீதியாக சர்ச்சைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு என்பதால் வெளியிடவில்லை என்றார். ஆனால் இப்போது வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பு தேசமெங்கிலும் பலரை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது எனலாம்.

மேலே குறிப்பிட்ட டிஎன்ஏ ஆராய்ச்சி முடிவின் தெளிவான அறிக்கையில், 4500 ஆண்டுகள் பழமையான மனித எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ தன்மைகள் சரியாக ஒத்துப்போவது, இன்றைய தினத்தில் தமிழகத்திற்குட்பட்ட நீலகிரி மலைத்தொடரில் வாழும் பழங்குடியினர்களில் ஒரு பிரிவினரான இருளர்களோடு ஒத்துப்போவதாக தெரிவிக்கின்றது.

குறிப்பாக இந்த இராகிகரி அகழ்வாராய்ச்சி முடிவு, சிந்து சமவெளி நாகரிகம் பற்றி வேறு துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கு பாதகமாகவும் அமைந்ததை நம்மால் மறுக்க முடியாது.

இதே இராகிகரியில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக ஆய்வு செய்ய பூமியைத் தோண்டி, இரண்டு ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு பிறகு முற்றிலுமாக மூடப்பட்டது. அந்தப்பகுதி சரியாக ஹிசார் மாவட்டத்தில் உள்ள இரு கிராமங்களாகிய இராகி ஷா மற்றும் இராகி காஸ்-க்கு இடையில் உள்ள ஒரு மண்மேடு. இப்போது அங்கு ஆள் நடமாட்டம் சிறிதுமில்லை. அதுமட்டுமில்லாமல், தற்போது அந்த இடத்தில் மாட்டு சாணங்கள் குவியல் குவியல்களாக வைக்கப்பட்டிருக்கிறது. கூடவே ‘வாட்ச் டாக் ஹெரிடேஜ் ஃபண்ட்’ உலகின் ஆபத்தான 10 பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ல் இந்த இடத்தைப் பார்வையிடச் சென்ற மாணவக்குழு சந்தேகத்துடன் அந்த இடத்தை தோண்ட  முற்பட்டனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இறுதியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு தோண்டப்பட்ட இடங்களை மூடும்போது, சில இடங்களை குறித்து வைத்தனர். அத்தகைய குறியீடுகள் அழிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாயினர் அந்த மாணவர்கள்.

2012ல் வந்த செய்திகளின்படி, அந்த இராகிகரி பகுதியை பல வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக பார்க்க விரும்புவர். அதுமட்டுமல்லாமல், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கலைப்பொருட்களை அவர்கள் 50 ரூபாய்க்கு ஒன்று, 100 ரூபாய்க்கு ஒன்று என்கிற கணக்கில் வாங்கிச்செல்வர். அந்த கலைப்பொருட்களை இவ்வளவு மலுவு விலைக்கு விற்பனை செய்யும்  முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது விசித்திரமான ஒன்று தான்.

இந்த இராகிகரி அகழ்வாராய்ச்சி தொடர்பாக சூன் மாதம், ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஆரம்பக்கட்ட ஆராய்ச்சியின்படி, இராகிகரியில்  கண்டெடுக்கப்பட்ட 4500 ஆண்டுகளுக்குப் பழமையான மனித எலும்புகளிலிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ க்களை உட்படுத்திய ஆரம்பக்கட்ட ஆராய்ச்சியில், சில வெளிநாட்டவர்களின் குறியீடுகள் தென்பட்டதாகவும், அடக்கம் செய்யப்பட்ட விதத்தில், ரிக் வேதங்களை போதித்த காலங்களில் ஆரியர்களால் பின்பற்றப்பட்ட அடக்கம் செய்யும் முறை தென்பட்டதாகவும் தெரிவித்தார்.  குறிப்பாக ரிக்வேத காலங்களில் வாழ்ந்த ஆரியர்கள் சாமர்த்தியசாளிகள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Rakigarhi Excavation (Pic: pagalguy)

ஒப்பீடின் புரிதல்

ஒரு அகழ்வாராய்ச்சியின் முடிவுகளை மட்டும் வைத்துக்கொண்டு, ஆதி முதல் அந்தம் வரையிலான கதைகளை யூகிக்கக்கூட முடியாது என்பது மட்டும் உறுதி. ஆகஸ்டு மாதம் வெளியிட்ட இராகிகரி அகழ்வாராய்ச்சி முடிவையும் கீழடியில் நடத்தப்பட்ட இரண்டு சதவிகித அகழ்வாராய்ச்சி முடிவையும் வைத்துக்கொண்டு, யார் மூத்தக்குடி? என்கின்ற கேள்விக்கு ஒரே வரியில் பதில் கூறுதல் கடினம் தான். இன்னும் பல அகழ்வாராய்ச்சி முடிவுகள், நம் நாட்டில் பல அலைகளை எழுப்பும் என்பதில் ஐயமில்லை. உங்கள் புரிதலையும் தெரிந்துக்கொள்ள யாம் விரும்புகிறேன்.

Web Title: Comparing Keezhadi And Rakigarhi Archeological Findings, Tamil Article

Featured Image Credit: urbanvaastu/swarajyamag

Related Articles