நெசவுத் தொழிலில் தமிழர்களின் பங்கு

தொழிலே ஒரு நாட்டின் உயிர்த்துடிப்பு. தொழிலில் சிறந்து விளங்கும் நாடுதான்  பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கும். தாம் வாழ்ந்த திணைகளுக்கு பொருந்தியது போல் தமிழர்கள் மேன்மைமிகு தொழில் செய்து சிறப்புற்றிருக்கிறார்கள். அதிலும் நெசவுத் தொழிலிலும் அதன் சந்தையிலும் தமிழர்களின் பங்கு பற்றியதே இந்தக் கட்டுரை.

முதலில் நம் இந்தியாவின் ஆடை தொழில் வளர்ச்சியை பல்வேறு வெளிநாட்டவர் புகழ்ந்து உள்ளனர். பல புத்தகங்களையும் எழுதி உள்ளனர். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மெர்லாஞ்ச் என்ற அறிஞர் ”இந்தியப் பட்டின் சாயல்” என்னும் பொருள் பற்றி இலண்டனில் உள்ள இந்தியக் கழகத்தில் 1983-ல் ஒரு சொற்பொழிவாற்றினார். அதில்  ”பண்டு தொட்டு பாரத நாட்டில் பட்டு நெசவு ஒரு தனிச் சிறப்புடையதாய் விளங்கி வந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆல். பில்ட்டர் என்ற பிரெஞ்சுப் பேரறிஞர்,  இந்தியத் துணிகள் என்ற நூலில் இந்திய நெசவுத் தொழிலின் செய்முறைகளையும் வண்ணச் சிறப்பையும் அதில் ஒளிரும் தாமரை,  முல்லை,  அரும்பு, மாம்பிஞ்சு போன்ற உருவங்களையும் வியந்து பாராட்டியுள்ளார். பருத்தி நெசவு முதன்முதல் இந்தியாவில்தான் செய்யப்பட்டதென்றும், அங்கிருந்தே மேனாடுகளுக்குப் பரவியதென்றும் ‘வயவர் சாண் மார்சல்’ கூறுகிறார். பண்டைக்கால வரலாற்றாய்வாளர்கள்,  மேற்கத்திய நாடுகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த பொருள்களுள்  துணியும் ஒன்றெனத் தவறாது குறிப்பிடுகின்றனர்.

படம்: isha-sadhguru.com

எகிப்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த அரசர்களின் உடல்கள் பலவிதப் பொருள்களால் பதமிடப்பட்டு அழியாது கல்லறைகளில் வைத்துப் பாதுகாக்கப் பெற்றுள்ளது. அந்த உடல்கள் இந்திய மசுலின் துணிகளால் பொதியப் பெற்றுள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் பல்வேறு வண்ண ஆடைகள் இருந்து வந்தன. மகளிர் பட்டிலும்,  பஞ்சிலும் நெய்த பூந்துகில்கள் பல அணிந்து வந்துள்ளனர். தமிழக மக்கள் நாற்பதிற்கும் மேற்பட்ட வண்ணங்களை அறிந்திருந்தனர். சித்தன்னவாசல்,  தஞ்சைப் பெரிய கோவில் ஆகியவற்றில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பட்ட ஓவியங்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு உட்பட்டும் அதன் நிறம் மாறாது, பொலிவு குன்றாது,  புத்தம் புதிய வண்ணம்போல ஒளிர்விட்டுக் கொண்டிருப்பதே தக்க எடுத்துக்காட்டாகும். முற்காலத்தில் நமது நாட்டில் ஆடைகளின் வண்ணங்கள் மட்டுமல்ல;  அதன் உடலும்,  விளிம்பும் முன்றானையும் பல்வேறு கொடிகளாலும், பூக்களாலும் பிறவற்றாலும் செய்யப்பட்டு அவைகளுக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டன. ஆடையின் தன்மைக்கேற்ப துகில், பூந்துகில், புட்டகம், உடுக்கை என்று பல்வேறு பெயர்கள் உள்ள ஆடை வகைகளும் அளவிலாதிருந்தன. துகில், வெண்மை நிறம் உடையதாயும் சிவப்பு நிறம் உடையதாயும் இருக்கும். பூந்துகில்,  தாமரை,  மல்லிகை போன்ற மலர்களின் வடிவம் பொலிவதாய் இருக்கும். அவைகளில் சிலவற்றின் பெயர்கள் தமிழ் இலக்கியங்களில் தரப்பட்டுள்ளன. அவை :

”துகில்சேர் மலர்போல் மணிநீர் நிறைந்தன்று” – பரிபாடல்

”புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்” – பரிபாடல்

”நீலக்கச்சைப் பூராடை” – புறநானூறு

”கோத்தன்ன தோயாப் பூந்துகில்” – பெரும்பாணாற்றுப்படை

”ஆவியன்ன அவிநூற் கலிங்கம்”

”பாம்பு பயந்தன்ன வடிவின்

காம்பின் கழைபடு சொலியின்

இழைமணி வாரா ஒண்பூங் கலிங்கம்” –புறநானூறு

”நோக்கு நுழை கல்லா நுண்மை யழக்கனிந்து

அரவுரி யன்ன அறுவை” – பெரும்பாணாற்றுப்படை

”மிப்பால் வெண்துகில் போர்க்குநர்

பூப்பால் வெண்துகில் சூழப்பக குழல் முறுக்குநர்” – பரிபாடல்

”புகைவிரித்தன்ன பொங்குறுகி துடிஇ” – புறநானூறு

மேற்கூறிய சங்க இலக்கியப் பாடல்களினின்று முற்காலத்தில் தமிழகத்தில் பல்வேறு விளிம்புகளும், முன்றானைகளும் உடலும் உள்ள அழகிய ஆடைகள் இருந்தன என்பது நன்கு விளங்கும். முற்காலத்தில் பாண்டிய நாட்டில் நெய்யப் பெற்ற தாமரை மலர்கள் பொறித்த பட்டுத்துணிகள் உரோம், கிரேக்கம்,  எகிப்து,  அரேபியா,  இலங்கை,  கடாரம்,  சாவகம்,  சமபாகம், போர்சுகம் முதலிய பல்வேறு நாட்டு மன்னர்களின் அரண்மனைகள் அனைத்தையும் அலங்கரித்து, 19 நூற்றாண்டில் இங்கிலாந்து அரண்மனையிலும் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து இராணி எலிசபெத் அவர்களின் பள்ளியறையில் இந்திய நாட்டுப் பங்கயப்பட்டு இடம் பெற்றுள்ளது. முந்தைய காலங்களில் இருந்து இன்று வரை நம் தமிழ்நாடு ஆடை தொழிலில் முக்கிய பங்காற்றுகிறது.

படம்: covaipost

தமிழ்நாட்டில் ஆடைத் தொழிலில் சிறந்து விளக்கும் பல மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்கள்  இந்தியாவின் ஆடைத் தொழில் வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு,  நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் பொறியியல்,  தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள், நெசவாலைகள்,  ஆடை ஏற்றுமதி,  விவசாய உபகரணங்கள், மோட்டார், கிரைண்டர் உற்பத்திக்கும்,  ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், கரூர்  உப-சவுளி ஏற்றுமதி மற்றும் கனரக வாகன கூடு கட்டும் தொழில்களுக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு,  அலுமினியம் ஆலைகளுக்காகவும்,  சவ்வரிசி,  மாம்பழம்,  பட்டு சேலை, பருத்தி உற்பத்திக்கும், கனரக தொழிற்சாலைகளுக்கும், மின்சார உற்பத்திக்காகவும்,  கனரக வாகனங்கள் கட்டுமானத்திலும்,  நிலக்கடலை, கரும்பு,  தக்காளி போன்ற பயிர் உற்பத்திக்கும் பெயர் பெற்றதாக உள்ளது.

கோயம்புத்தூர் தமிழ் நாட்டில் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த ஒரு நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம்  என்றும் தென்னிந்தியாவின் துணி உற்பத்தியின் தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வெற்றிகரமாக விளங்கும் பருத்தி விளைச்சல் நெசவுத் தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது. இங்கு முதல் நெசவு நூற்பாலை 1888 இல் அமைக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது நூற்றுக்கு அதிகமான நூற்பாலைகள் இயங்கி வருகின்றது. இது உறுதியான பொருளாதாரம் ஏற்படவும் கோயம்புத்தூர் புகழ் மிக்க நூற்பாலை நகரமாக உருவெடுக்கவும் காரணமாக அமைந்தது. இங்கு 25000ற்கு மேல் சிறு நடுத்தர பெரிய தொழிற்சாலைகளும், நூற்பாலைகளும் உள்ளன.

படம்: rediff

அடுத்து  ஈரோடு துணி மார்க்கெட் இந்திய அளவில் 5ஆம் இடம் பெறுகிறது. கைத்தறி – நெசவுத் தொழில் பெருந்துறை,  தாராபுரம்,  ஈரோடு,  பவானி ஆகிய இடங்களில் நடக்கிறது. அந்தியூரில் மட்டும் 3000 விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் 5000 பேர் பணியாற்றுகின்றனர். இங்கு டையிங் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. சென்னிமலையில் ஜமக்காளம் மற்றும் போர்வைகள்,  பவானியில் கைத்தறி ஜமக்காளம்,  படுக்கை விரிப்புகளுக்கு புகழ்பெற்றது. ஈரோடு மாவட்டம் இங்கு தயாரிக்கப்படும் கைத்தறி மற்றும் விசைத்தறி துணிகளுக்கு பெயர்பெற்றது. இங்கு பருத்திப் புடவைகள்,  துண்டுகள்,  படுக்கை விரிப்புகள்,  லுங்கி,  வேட்டிகள் ஆகியன தயாரிக்கப்படுகின்றன. கோபிச்செட்டிப்பாளையம்,  தாளவாடி, சத்தியமங்கலத்தில் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் முதல் தானியங்கி பட்டு நூற்கும் இயந்திரம் கோபிசெட்டிப்பாளையத்தில் நிறுவப்பட்டுள்ளது.

படம்: hindubussinessline

இது போல இன்னொரு சிறப்புமிக்க மாவட்டம்தான் திருப்பூர். தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர். லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த, வாழ்வளிக்கும் நகரம் திருப்பூர். தென்மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள். ஆண்டுதோறும் பத்தாயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பின்னல் ஆடைகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றவை. பருத்தி பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் 35 இருக்கின்றன. ஆண்டுக்கு 27000 கோடி ரூபாய் மதிப்புள்ள உள்ளாடைகள் உற்பத்தியாகின்றன. பனியன் தொழில் வளர்ச்சிக்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் அயராது பாடுபட்டு வருகிறது. இதில் 5000 உறுப்பினர்கள் உள்ளனர். அகில இந்திய காதி மற்றும் கிராமத்தொழில் நிறுவனம்,  கையால் செய்யப்படும் காகிதம் மற்றும் சுத்தமான எண்ணெய் தயாரிக்கும் தொழிலும் திருப்பூரில் நடைபெறுகிறது. திருப்பூர் காதி வஸ்திராலயத்தின் தலைமையிடமாக திருப்பூர் இருக்கிறது. திருப்பூருக்கு மேலும் சிறப்பு செய்யும் தொழிலாக வெளிநாடுகளுக்கான ஆடை ஏற்றுமதித் தொழில் பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளில் கால் சதவீதம் இங்கிருந்தே நடக்கிறது என்பது பெருஞ் சிறப்பாகும். இந்திய ஆடை வளர்ச்சிக்கு தமிழ்நாடு ஒரு முக்கிய ஆற்றலாக செயலாற்றி வருகிறது.

Reference:

 

 

Related Articles

Exit mobile version