இங்கிலாந்து – இரத்மலானை – நியூசிலாந்து: விமானப்பந்தயத்தில் வென்றது யார்?

காற்றைக் கிழித்தபடி வானவெளிதனில் உலவும் விமானங்கள் மனிதகுல வரலாற்றின் மாபெரும் கண்டுபிடிப்பு! பறத்தல் குறித்த பெரு விருப்பை ஆதிகாலத்திலிருந்தே மனிதன் கொண்டிருந்தான். அவன் தனது குழந்தைகளுக்குச் சொன்ன கதைகளிலும், எழுதி வைத்த காவியங்களிலும் பறத்தலுக்கான சாத்தியப்பாடு குறித்த அளவற்ற நம்பிக்கை வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. காலப்போக்கில் இடம்பெற்ற தொழினுட்பப்புரட்சியால் மனிதனின் நெடுநாட் கனவு நிஜமாகியது.

எரிபொருள் நிரப்புப் பணிக்காக கொழும்பு இரத்மலானை விமான நிலையம்

1953 ஆம் ஆண்டில் உலகப் பிரசித்தி பெற்ற சர்வதேச விமானப் பறப்புப் பந்தயமொன்று இடம்பெற்றது. பிரித்தானியாவின் இலண்டன் நகரில் அமைந்துள்ள ஹீத்ரோ விமானநிலையத்திலிருந்து நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சேர்ச் விமான நிலையம் வரை, இந்தப் பந்தயத்தில் கலந்து கொண்ட விமானங்கள் பறந்தன. இந்த இரு விமான நிலையங்களும் பூமியின் இருவேறு தொலைவுப் பகுதிகளில் இருக்கின்றன. அவற்றுக்கு இடையேயான தூரம் 19,800 கிலோமீற்றர் ஆகும். இந்த சர்வதேச விமானப் பறப்புப் பந்தயத்தில் கலந்துகொண்ட விமானங்கள் ஆங்காங்கே கீழிறங்கி, எரிபொருளை நிரப்பிக் கொண்டே தமது இலக்கினை நோக்கிச் சென்றன. அவ்வாறான எரிபொருள் நிரப்பும் பணிக்காக கொழும்பின் தென் பகுதியில் அமைந்துள்ள இரத்மலானை விமான நிலையமும் பயன்பட்டிருந்தது.

கன்டபரி சர்வதேச விமானப்பறப்புப் பந்தயப் பேரவை

இந்த சர்வதேச விமானப் பறப்புப் பந்தயப் போட்டியை, கன்டபரி சர்வதேச விமானப்பறப்புப் பந்தயப் பேரவை ஏற்பாடு செய்திருந்தது. அப்போதைய காலப்பகுதியில் அதுவே உலகின் அதிக நீளமான விமானப் பறப்புப் பந்தயப் போட்டியாக அமைந்தது. இந்தப் போட்டி இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அதிவிரைவுப் பிரிவு ஒன்றாகவும் போக்குவரத்துப் பிரிவு மற்றையதாகவும் இந்தப் போட்டிப்பகுதிகள் அமைந்தன.

விமான எரிபொருள் நிலையங்கள்

அந்தக்காலத்தில் இவ்வளவு பாரிய தூரத்தை ஒரே தடவையில் கடக்குமளவுக்கு, விமானங்களில் எரிபொருள் கொள்ளளவு இருக்கவில்லை. அதன் காரணமாக, இந்தப் பந்தயப் போட்டியில் கலந்து கொண்ட விமானங்கள், சில நாடுகளில் தரையிறங்கி எரிபொருளை நிரப்பிக் கொண்டு மீண்டும் தங்களின் பறப்பைத் தொடரலாமென திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அதன்படி, மத்திய கிழக்கின் பஹ்ரேன், இலங்கையின் இரத்மலான விமான நிலையம், மற்றும் குக்கூ தீவு ஆகியனவற்றில் இந்த விமானங்கள் எரிபொருளை நிரப்பிக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டன.

போட்டி ஆரம்பமானது

இந்தப் போட்டியின் முதலாவது பகுதியில் நான்கு நாடுகளைச் சேர்ந்த 8 விமானங்கள் பங்குபற்றின. 1953 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி, இந்த விமானங்கள் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து, தமது சவால் மிக்க பயணத்தைத் தொடங்கின.

பந்தயத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் பங்குபற்றிய விமானங்கள் லண்டன் விமான நிலையத்தில் நிற்கும் போது

லண்டனிலிருந்து முதலில் பஹ்ரேனுக்குச் சென்ற இந்த விமானங்கள் அங்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு, இலங்கைக்குப் புறப்பட்டன. இலங்கையின் இரத்மலான விமான நிலையம் அந்த விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இரத்மலானையிலிருந்து நேராக குக்கூ தீவுக்குச் சென்ற விமானங்களில் ஒன்று விபத்தை எதிர் கொண்டது. அதன் சக்கரம் விமான ஓடுபாதையில் சேதமடைந்தமை காரணமாக அந்த விமானம் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

ஐக்கிய இராஜ்ஜியம் வெற்றி ஈட்டியது..

ஐக்கிய இராஜ்ஜியத்தின் விமானப்படையான றோயல் எயார் ஃபோர்ஸின் விமானமே, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. English Electric Canberra என்று அழைக்கப்படும் அந்த விமானம் ஜெட் இயந்திரம் கொண்ட ஒரு குண்டு வீசும் விமானம் ஆகும். WH773 எண்ணைக் கொண்ட அந்த விமானத்தை, Wing Commander Hodges செலுத்தியிருந்தார்.

ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம் நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சேர்ச் விமான நிலையத்தை அடைவதற்கு 23 மணித்தியாலங்கள் 51 நிமிடங்களை எடுத்துக் கொண்டது. அந்தப் பந்தயப் பயணத்தில் இரத்மலானை விமான நிலைய ஓடுபாதையில் எரிபொருள் நிரப்புவதற்காக அந்த விமானம் வந்த காட்சி, நிழற்படமாக்கப்பட்டு, இன்றும் காணக் கிடைக்கின்றது.

Related Articles