Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

வியக்க வைக்கும் பண்டைய இந்தியாவைப் பற்றிய வரலாற்று உண்மைகள்

வியக்க வைக்கும் முதல் உண்மை, ‘இந்தியா’ எனும் பெயர்தான். விந்திய மலைக்கு அப்பால் இருந்த பகுதிகளை ‘ஆர்யவர்தா’(தற்போதைய வடஇந்தியா) என அழைத்தனர். அதன் பின் ஒட்டுமொத்த நிலப்பகுதியும்,  ஜம்புத்வீபா, நாபிவர்ஷா, பரதவர்ஷா, பரதகண்டம்(அல்லது பரதக்ஷேத்ரா), ஹிந்துஸ்தான்(ஹிந்து எனும் வார்த்தை – அன்றைய சிந்து சமவெளி பகுதிகளுக்கு பெர்சியன் பயன்படுத்திய சொல், ஸ்தான்-என்றால் நாடு, பகுதி, இடம் அல்லது நிலம் எனப்பொருள்படும் – உ-ம்: பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான்; சமக்கிருதத்திலும் ‘ஸ்தான’ என்றால் அதே பொருள்தான் – உ-ம்: சமஸ்தான, தேவஸ்தான), என்று பல பெயர்களை பெற்று, ஒருவழியாக இந்த நிலப்பகுதி கொண்ட, ‘இந்தியா’ எனும் பெயர், ‘இண்டஸ்-வேலி’(சிந்து-சமவெளி) எனும் வார்த்தை மூலம் வந்ததாகக்கூறி ஏற்றுக்கொண்டு நடப்பிலுள்ளது.

இந்தியாவில் இரும்புக்காலம்(கி.மு.1500 – கி.மு.200)

  • ஆரிய வருகையுடன் வேத காலம் என அழைக்கப்பட்ட இஃது ஏறத்தாழ 1000 ஆண்டுகள் வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில்தான் இந்துத்துவம் எனும் கொள்கைக்கான அடிப்படை புத்தகங்கள் கருத்துருவாக்கம் பெற்றன. பின் பல காலங்கள் கழித்து வேதங்களாக எழுதப்பட்டதாக கூற்று.
  • பிறகு, ஜெயின் மற்றும் புத்த மதங்களின் துவக்கம்.
  • சிந்துசமவெளிக்கு பின்பு பெரிய நாகரீகமாக கங்கை நதிக்கிளைகள் அருகே, மஹாஜனபதஸ் நாகரிகம்.
  • மகதப்பேரரசு – ஹர்யான்கா குல பிம்பிசாரா
  • சிசுங்கா பேரரசு – காலசோகா
  • நந்தா பேரரசு – மஹாபத்ம-நந்தா, தன-நந்தா
  • பெர்சியன் – கிரேக்கம்: அலெக்சாண்டர் கி.மு. 327.

மௌரியப்பேரரசு(கி.மு.321-கி.மு.185): சந்திரகுப்த மௌரியர், பிந்துசாரர் மற்றும் அசோகர் ஆகியோர் மௌரிய வரலாறு படைத்தவர்களில் முக்கியமானவர்கள். அதே சமயத்தில், கி.மு.300-ல் பாண்டிய, சேர(சத்யபுத்ரா, கேரளபுத்ரா என்று சமக்கிருத்தில் அழைக்கப்பட்டது), சோழர் ஆட்சி அப்போதைய தென்னிந்திய பகுதிகளில் நடந்துகொண்டிருந்தது.

Ancient Civilization In India(Pic: aphilomathsjournal)

கணிதத்தில் ‘பை’ மதிப்பு:

கணிதத்தில் மிக முக்கியமான அங்கம் வகிக்கும் ‘பை’ என்பதன் தோராயத்தில்  சரியான மதிப்பான 3.14159-ஐ, முதலில் கண்டறிந்தவர் யார்(ஆர்க்கிமிடிஸ் 22/7 எனும் ‘பை’ மூலத்தினை கண்டறிந்ததாக ஒரு கூற்று) என்பது தெளிவின்மையாக இருப்பினும், சில ஆதாரங்கள் மூலம், கி.மு.800-ல் ‘புதாயானா’ எனும் இந்தியர் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. கிசாவில் உள்ள பிரமிடின் கட்டமைப்பு ‘பை’ மதிப்பின் 2 மடங்கு விகிதத்தில் அமைந்திருப்பது, ‘பை’ மதிப்பினை கண்டறிந்த மூலம் எதுவென்று, சற்று குழப்பத்தான் செய்கிறது(பாபிலோனியர்கள்தான் முதலில் தோராயமான ‘பை’ மதிப்பினை கண்டுபிடித்ததாகவும் செய்தி உண்டு).

The Value of Pi found by India(Pic: rd)

சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள்

உலகின் மிகப்பழமையான மருத்துவ முறைகள். இன்று இந்தியாவில், அதிகபட்சமாக 80% மக்கள், ஏதோ ஒருவகையில் இவ்விரு முறைகளுள் ஒன்றை மருத்துவதிற்காக பயன்படுத்துகின்றனர்(இந்தத்தகவல் ஏற்படுத்தும் பொருளாதார தாக்கம் இப்போதிருக்கும் பெருநிறுவனங்களுக்கும் தெரியும், ஒரு வணிக உத்தியாக தற்போது பயன்முறையில் உள்ளது). இந்த மருத்துவ முறைகளை கண்டறிந்தது இந்தியர்களே. மூலிகைகள் மற்றும் தாவரங்களின் மூலம் இயற்கைசார் குணப்படுத்தும் முறையினைக்கொண்டது. ஏறக்குறைய 3000 ஆண்டுகளாவது பழமை பெற்றதுமாக கருதப்படுகிறது.

Ayurveda Herbs on a Cup(Pic: healthideas)

துத்தநாகம்

துத்தநாகம் மற்றும் தாமிரம் உடலிற்கு ஒப்பில்லா நன்மை பயக்கக்கூடியது. அதனால்தான்,  பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரையில் கூட, நாம் பித்தளை பாத்திரங்களை அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளோம். தாமிரத்தினையும், துத்தநாகத்தினையும் கொண்ட பித்தளையிலிருந்து மாசற்ற துத்தநாகத்தினை மட்டும் வடிகட்டி பிரித்தெடுத்தல் முறையினை கண்டறிந்தது, இந்தியர்தாம். இராஜஸ்தானில் உள்ள ஜாவர் எனும் இடத்தில், கி.மு.600-க்கு முற்பட்ட காலத்தினைச்சேர்ந்த சுரங்கங்கள், இதை நிறுவுகின்றன. துத்தநாகம், குறை கொதிநிலை புள்ளியான 907° செல்ஸியஸை கொண்டது. வெப்பநிலை சற்று கூடினாலும், துத்தநாகம் ஆவியாகிவிடும். சரியான கட்டுப்பாட்டில் வெப்பத்தினை வைத்திருந்து, துத்தநாகத்தினை பிரித்தெடுக்கும் முறையினை அப்போதே கண்டறிந்தது மிக்க வியப்பளிப்பதாகும்.

Zinc Balls(Pic:mining)

சுஷ்ருதா – பிளாஸ்டிக் சர்ஜரி

உடற்கூறியல் பற்றி ஆராய்ந்த ஒருவர் மற்றும் கி.மு.600-களில் இன்று வாரணாசி என்றழைக்கப்படும் இடத்தில் வசித்தவராக அறியப்படும் சுஷ்ருதா என்பவர், அப்போதே, மூக்கு, காதுகள், சிறுநீர்ப்பை, கண்புரை, மூட்டுகள் போன்றவற்றிற்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டவராக(பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை போன்றவற்றையும்) கருதப்படுகிறார். அவருடைய நூல்தொகுப்பான ‘சுஷ்ருதா சம்ஹிதா’-வில் 300 அறுவைசிகிச்சை வழிமுறைகளையும், 120 அறுவைசிகிச்சை கருவிகளையும் மற்றும் மனித அறுவைசிகிச்சையின் 8 வகைகளையும் குறிப்பிட்டுள்ளார்.

Sushruta – Father of Indian Plastic Surgery(Pic: newsgram)

சுழியம்(ஜீரோ)

இந்த ஒரு எண்ணை மட்டும் எண்ணியலில் இருந்து எடுத்துவிட்டால், இன்று உலகே இயங்குநிலை தடைபடும் பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. டிஜிட்டல் உலகின் அடிப்படையான பைனரியில் இருக்கும் இரண்டே மதிப்புகளில் ஒன்றாக சுழியம் தான் உள்ளது. இத்துனை சிறப்பு பெற்ற இக்குறியீட்டின் மூலம் எதுவென்று தேடும் தனிப்படை உலகம் முழுக்க உள்ளது. ‘ப்ராஜெக்ட் ஜீரோ’ எனும் ஓர் அமைப்பு இதற்காகவே இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது. ராபர்ட் காப்லன் என்பவர் ‘சயின்டிபிக் அமெரிக்கன்’ எனும் நூலில், மெசபத்தோமிய சுமேரியர்கள் தான் சுழியத்தின் கருத்தினை முதலில் கண்டறிந்ததாக எழுதியுள்ளார். ஆனால், பண்டைய இந்தியாவில் , ‘பஃஷாலி’ எனும் நூல் ஒன்றில் சுழியம் பற்றி குறிப்பிட்டிருப்பதாக ஆக்ஸ்போர்ட்  (University of Oxford’s Bodleian Library) நூலகத்தின் அறிஞர்கள் அண்மையில் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தனர். நூலின் கார்பன் வயது உண்மையாயிருந்தால், இதுவே சுழியத்தினை உரிமைகொண்டாடுவதற்கு, மிகப்பழமையான இந்திய ஆதாரமாகும்.

The Origin of the Number Zero Inscription(Pic: smithsonianmag)

சிந்துசமவெளி நாகரிகம்

பண்டைய இந்திய வரலாற்றினைப்பற்றி பேசவேண்டும் எனில், சிந்துசமவெளி நாகரிகம் பற்றி குறிப்பிடாமல் விடுவது சற்று கடினம் தான். உலக நாகரிகங்களில் சிந்துசமவெளி, மூன்று மிகப்பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும். தற்போதைய, பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருந்தது. நீர்ப்பாசனம், தாதுக்களை பிரித்தெடுத்தல், ஊடுருவல் மற்றும் அறிவியல் என பல துறைகளிலும் முன்னோடியாக திகழ்ந்ததற்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. குறைந்தபட்சம், கி.மு. 2300 – கி.மு. 2200 பழமைவாய்ந்த மண்பாண்டங்கள், கலைப்பொருட்கள் உட்பட பல பொருட்களும் அதில் அடக்கம்.

Indus Valley and Harappa Civilizations(Pic: dkfindout)

யோகக்கலை

யோகப்பயிற்சி என்பது உடல் ரீதியான, மன ரீதியான மற்றும் ஆன்ம ரீதியான நலனை பேண ஒரு கருவியாக வேத காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருவதாக தெரிகிறது. சித்தர்களின் தியான நிலை, தவநிலை முதலானவை யோகப்பயிற்சியின் மூலம் என்றே கருதப்படுகிறது. மனத்தின் போக்கினை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்தும் யோகப்பயிற்சி போன்றொரு கலைக்கு மாற்று இவ்வுலகிலேயே இல்லை என்பது சற்று உண்மைதான். யோகா எனும் கலை முதலில் உருவானதாக கருதப்படும் நாடும் பண்டைய இந்தியாதான். புத்தம் மற்றும் ஜெயின் ஆகியவை தழைத்தோங்கிய காலக்கட்டமான கி.மு.6-ஆம் கி.மு.5-ஆம் நூற்றாண்டுகளில், யோகக்கலை வளர்ச்சியுற்றதாக அறியப்படுகிறது. இன்றும் மேற்கத்திய நாடுகள் ஆவலோடு கற்றுக்கொள்ளும் மற்றும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் முனைப்பினை யோகக்கலைதான் ஏற்படுத்தியுள்ளது(சில போலி சாமியார்களுக்கு சாதகமான கருவியாகவும் பயன்படுத்தப்பட்டும் வந்துள்ளது).

Padmasana Yoga – Surya Namashkaram(Pic: gesundheitszentrum-am-auesee)

மற்றவை

பண்டைய இந்தியாவில், அப்போது மற்ற உலக நாடுகள் பலவற்றிலும் இருந்த ‘அடிமைத்தன’ மக்கள் என்று எவரும் இல்லையென, கிரேக்க தத்துவவியலாளர்கள் மற்றும் வரலாற்றறிஞர்களின் கூற்று தெரிவிக்கின்றது. பெரும்பாலும் இங்கு மக்கள் சுதந்திரமாகத்தான் இருந்துள்ளமை தெரிகின்றது. (வேறு சில சான்றுகள், படையெடுப்புகளால் தொன்மை சிதைவுற்றபின், சில இடங்களில் மக்கள் அடிமைகளாக இருந்ததாகவும் தெரிவிக்கின்றது)

பண்டைய காம சூத்திரம் என்பது, ஏழு நூல்களை உள்ளடக்கியது. அதில் ஒரு நூல் மட்டுமே காமம் பற்றி கூறுவது. ஏனைய நூல்கள், பணம் சம்பாதிப்பது எப்படி? கிளியினை பேசப்பழக்குவது எப்படி? எலுமிச்சை பானம் தயாரிப்பது எப்படி? எனும் தலைப்புகளையும் உள்ளடக்கியுள்ளன.

கல்லணையை மறந்து விடுதல் ஏற்புடையதாகாது. உலகின் இரண்டாம் பழமையான நீர் கட்டுப்பாடு மற்றும் மடை மாற்றும் கட்டமைப்பாக இன்னும் கல்லணை திகழ்வது வியக்கத்தகுந்த ஒன்றாகவே கருதப்படுகின்றது.

பெண் கல்வி, பெண் உரிமை பற்றி பேசும், போராடும் இந்த காலத்தில், அன்றே பல பெண்கள் நாட்டை ஆட்சி புரிவதில் சமபங்கு வகித்ததிலிருந்து, புலவப்பெருமக்கள் என்பதுவரை புகழ்பெற்று திகழ்ந்ததும் இங்கு நடந்தேறியதினை நினைவுகூர்தல் வேண்டும். (உ-ம்: வெள்ளிவீதியார்; ஒளவையார்)

சதுரங்கம், பரமபதம் எனும் அறிவிற்கான விளையாட்டுகளை முதலில் கண்டறிந்தவர்களும் இந்தியர்களே.

Rare Old Rajastan Chess Set(Pic: folomojo)

இவ்வாறாக பல பெருமைகளை இன்றைய இந்தியர்களாக நாம் தேடித்தேடிப்படித்தாலும், கற்றாலும், பெருமைப்பட்டுக்கொண்டாலும், பண்பாட்டளவில், கலாச்சார அளவில் ஒரு மொழி மற்றொரு மொழியை அழிக்கும் சிந்தனையும் இங்குதான் மலர்ந்தது என்பதையும் மறுக்கமுடியாது. இன்னும் பல உண்மையான வரலாறுகள் கி.மு.300-களில் இருந்து மட்டுமே கிடைக்கப்பெறுவதாய்(கொசுறு போல், இலக்கியமும், இலக்கண நூல்கள் அல்லாது), தமிழுக்கு மட்டும் ஏன் இந்த அவலம் என்று நினைக்கும்போது, மலர்ந்த அந்த சிந்தனை கனியுற்று, கனி விதை சிந்தி மரம் பெற்று, மரம் வேரூன்றி ஓர் அடர்ந்த வனம் கொண்டு, வரலாறு எனும் நிலத்தினை காரிருளில் மறைத்துவிட்டதாகவே தோன்றுகிறது. இன்னொரு பெருமையும் நமக்கு உண்டு. உலகிலேயே தன் மொழியின் சொற்களை பேச தானே தயங்கும், பிறமொழி சொற்களை பெருமையுடன் ஏற்றுக்கொள்ளும் ‘தமிழர்’ எத்தனை பேருக்கு, தமிழில் பிழையின்றி பேசவும் எழுதவும் தெரியும்? மிகச்சொற்பம். உலகப்பொதுமறை, நீதிநூல் என்றழைக்கப்படும் திருக்குறளினை இயற்றிய திருவள்ளுவருக்கு கூட மதச்சாயம் பூசப்படும் கொடுமைக்கான பெருமையும் நம்மையே சாரும்(மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோவில், நுழைவுவாயில் வள்ளுவர் சிலை நெற்றியே அதற்குச்சான்று). உண்மைகள் எனும் தலைப்பாதலால், இவற்றையும் எடுத்துரைத்தேன். வியப்பும் அல்லவா?!!

Web Title: Historical Facts of Ancient India That Makes You Wonder, Tamil Article

Featured Image Credit: testblogmo

Related Articles