Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி

இந்திய துணைகண்டத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான மராத்திய சாம்ராஜ்யம் வருடம் 1674 முதல் 1818 வரை நீடித்தது. மன்னர் சிவாஜி மராத்திய சாம்ராஜ்யத்தை மேற்கிந்தியாவில் இருந்து தோற்றுவித்தார். பதினேழாம் நூற்றாண்டின் தலை சிறந்த மாவீரர்களில் மன்னர் சிவாஜியும் ஒருவர். வெறும் 16 வயதே ஆன சிறுவனாக இருக்கும் பொழுது தொடங்கிய அந்த வீரனின் வேட்கையும், துணிச்சலும் பீஜப்பூர் சுல்தானின் கோட்டையை கைப்பற்றுவதிலிருந்து தொடங்கி மராத்திய சாம்ராஜ்யம் உருவாக நுழைவு வாயிலாக அமைந்தது. பல புதுமைகளை கண்ட இராணுவம், கொரில்லா தாக்குதல் என்றழைக்கப்படும்  மறைமுகமான நிலப்பரப்பில் பதுங்கியிருந்து அதிவிரைவாக, அதிர்ச்சி வைத்தியம் அளித்து தன்னை விட பலம் வாய்ந்த எதிரிகளை கூட துவம்சம் செய்தல் என்று சிவாஜியின் போர் பாணியே தனி.

குழந்தை பருவம் மற்றும் ஆரம்பகால வாழ்க்கை

சிவாஜியின் இயற்பெயர் சிவாஜி ராஜே போன்சலே. அவர் பிறந்த வருடம் பிப்ரவரி 19, 1627. இவர் பூனே மாவட்டத்தின் ஜுன்னார் எனும் பகுதியில் அமைந்துள்ள சிவனேரிக் கோட்டையில் தளபதியான சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாய் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். சிவாஜியின் தந்தை பீஜப்பூர் சுல்தானின் கீழ் ஒருங்கிணைந்த மூன்று தளவாடங்களாகிய அஹ்மத்நகர், பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா ஆகிய பகுதிகளுக்கு இராணுவத்தளபதியாக பதவி வகித்திருந்தார். பூனே பகுதியில் உள்ள நில உடமைகளுக்கு ஜகீர்தாராகவும் இருந்தார். சிவாஜி சிறு வயது முதலே அன்னையின் அன்பில் வளர்ந்தார். இதிகாசங்களிலும், புராணங்களிலும் அதீத ஈடுபாடு கொண்டிருந்தார். அதுவே அவரை ஹிந்து மத கலாச்சாரத்திலும் அதன் கருத்துக்களிலும் தீவிரமான பற்றை உண்டாக்கியது. தனது சிறுவயது முதலே அமைச்சர்கள், நிர்வாகிகள், வீரர்கள் போன்றோரின் தொடர்பில் இருந்தார். சிவாஜியின் தொடக்க காலம் நிர்வாகம், போர் பயிற்சி, சித்தாந்தங்கள் என்று வீரம் விளைந்த ஒரு ஆளுமையாக அவரை மாற்றியது. சிவாஜிக்கு இராணுவ பயிற்சிகளான குதிரை ஏற்றம், வாள் வீச்சு, யானை ஏற்றம் ஆகியவைகளை கற்பிக்க வல்லுனர்கள் பணியமர்த்தப்பட்டனர். சாய்பாய் நிம்பல்கர் என்பவரை 1640 ஆம் ஆண்டு சிவாஜி மனம் முடிந்தார். சிவனேரிக் கோட்டையை சுற்றியுள்ள சகாயத்ரி மலைகளில் சிவாஜி கால்படாத இடமில்லை. அந்த மலைகளை சுற்றியுள்ள பகுதிகளை ஒரு நாள் கைப்பற்றுவோம் என்பதில் தீர்க்கமாக இருந்தார்.

Sivaji (Pic: gkquestions2014)

தொடங்கிய சூறாவளி

இந்துக்களின் சுயாட்சி (மராத்திய மொழியில் ஹிந்தவி சுயராஜ்) என்கிற சித்தாந்தத்தில் சிவாஜி பெரிதும் ஈர்க்கப்பட்டார். தனது மாவால் பகுதி நண்பர்களுடனும், சில படை வீரர்களுடனும் ஒரு இந்து கோவிலில் ஒரு இந்து பேரரசை நிறுவ உறுதிமொழி எடுத்துக்கொண்டார். சிவாஜியின் இலக்கு பிற மத ராஜ்ஜியங்களை ஒழிக்க வேண்டும் என்பதல்ல. அடிமைத்தனமாக மக்களை வழி நடத்ததாத ஒரு சுதந்திர இந்து ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவரது சித்தாந்தத்தின் அடிநாதமாக விளங்கியது.

தனது இலக்கு நோக்கிய பயணம் தொடங்கியது. சிவாஜிக்கு 16 வயதிருக்கும் பொழுது தனக்கு மிகவும் நெருக்கமான ஒரு சிறய இராணுவ படையை அழைத்துக் கொண்டு முதல் தாக்குதலுக்கு ஆயுத்தமானார். தமது பிராந்திய சுல்தானாகிய பீஜப்பூர் சுல்தானின் பூனே’வை சுற்றியுள்ள கோட்டைகளின் மீது போர் தொடுக்கத் துவங்கினார் சிவாஜி.

Sivaji In War (Representative Pic: jayshivajimaharaj)

கோட்டைகளை கைப்பற்றுதல்

வருடம் 1645, தோர்ணா கோட்டையை தளபதி இணயத் கானிடம் கைப்பற்றி முதல் போரிலேயே வெற்றி கண்டார். வருடம் 1647, கொண்டானா மற்றும் ராய்காட் கோட்டைகளையும், அத்துடன் மேற்கத்திய தொடர்களின் கோட்டைகளான சிங்கஹார் மற்றும் புரந்தார் என்று சென்ற இடமெல்லாம் போரில் வெற்றி கண்டு கோட்டைகளை கைப்பற்றி தமது பகுதிகளை மெல்ல விஸ்தரிக்க தொடங்கினார் சிவாஜி.

பீஜப்பூர் சுல்தானிற்கு பெரும் அச்சுறுத்தலாக சிவாஜி இருந்ததால் சிவாஜியின் தந்தை சாஹாஜியை போலி காரணங்களை சொல்லி கைது செய்ய வருடம் 1648 ல் ஆணை ஒன்றை பிறப்பித்தார் சுல்தான். சிவாஜி எதிர்காலத்தில் எந்த ஒரு ஆக்கிரமிப்பையும் நடத்தக் கூடாது என்ற நிபந்தனையின் பெயரில் பின்னர் சாஹாஜி விடுதலை செய்யப்பட்டார். சஹாஜி இறக்கும் வரை சிவாஜி எந்த ஒரு போரிலும் ஈடுபடவில்லை.

Shahji Temple (Pic: indianholiday)

மீண்டும் போர் மேகங்கள்  

சிவாஜி தன்னுடைய விஸ்தரிப்பு பணியை தந்தையின் மரணத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கினார். பீஜப்பூரின் ஜாகிர்தாரின் ஒருவரான சந்திரராவ் என்பவர் ஆண்டு வந்த ஜவாலி பள்ளத்தாக்கின் பகுதிகள் கைப்பற்றபட்டன. பீஜப்பூர் சுல்தான் தன்னுடைய தலைமை தளபதியான அப்சல்கானை சிவாஜியிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்த ஆணையிட்டார்.

ஒரு மலையின் மேல் ஒரு கூடாரத்தில் படைகளின்றி தனியாக இருவரும் சந்தித்து கொண்டனர். இது தனக்கு அமைக்கப்பட்ட பொறியாக கூட இருக்கலாம் என்று சிவாஜி சற்று எச்சரிக்கையாக இருந்தார். அவரது யூகம் சரியானது. பேச்சுவார்த்தையின் போது எதிர்பாராத தருணத்தில் தளபதி அப்சல்கானின் (பிச்சுவா) கத்தி சிவாஜியின் மார்பை பதம் பார்த்தது. சிவாஜி அணிந்திருந்த உள்கவசம் அவரை காப்பாற்றியது. அதற்கு பதிலடியாக சிவாஜி மறைத்து வைத்திருந்த சிறிய அளவிலான புலி நெகங்கள் வடிவிலான உலோகத்தினால் அப்சல்கானை கொடூரமாக தாக்கினார். அப்சல்கானின் உயிர் பிரிந்தது. தளபதி இல்லாத பீஜப்பூர் படைகளை நோக்கி தாக்குதல் நடத்தும்படி சிவாஜியின் சமிக்கைகளுக்காக காத்திருந்த தமது படைகளுக்கு கட்டளையிட்டார்.

பிரதாப்கர் யுத்தம் நடந்த வருடம் 1659. பிஜப்பூரின் படைகளை நாலாப்புறமும் சிதறி ஓட விட்டது சிவாஜியின் படைகள். சுமார் 3,௦௦0 பிஜப்பூர் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்சல்கானின் இரு மகன்களும், இரண்டு தளபதிகளும் சிறை பிடிக்கப்பட்டனர். பீஜப்பூரின் முஹம்மது அதில்ஷா அதற்கு சளைத்தவர் அல்ல. மிகப்பெரிய படை ஒன்றை ஒன்று திரட்டி இராணுவத்தளபதி ரஸ்டம் ஜமான் தலைமையில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தினார். வருடம் 1659 கோல்ஹாபூர் யுத்தம் தொடங்கியது. போரின் முடிவில் இராணுவ தளபதி உயிர் பிச்சை கேட்டு தப்பித்து ஓடினார். அதில்ஷாக்கு இறுதியில் ஒரே ஒரு வெற்றி மட்டும் கிடைத்தது. பண்ஹாலா கோட்டையை சிவாஜி அடையும் முயற்சியை வருடம் 166௦ ல் தளபதி சித்திக் முறியடித்தார். இதற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு வருடம் 1673ல் சிவாஜி பண்ஹாலா கோட்டையை அடைந்தார்.

சிவாஜியின் பீஜப்பூர் சுல்தானுடனான மோதல்களும் தொடர் வெற்றிகளும் மொகலாய சக்கவர்த்தி ஔரங்கசீப் கவனத்திற்கு வந்தது. ஔரங்கசீப் ராஜ்ஜியத்தின் விரிவாக்கத்திற்கு சிவாஜி பெரும் தடையாக அமைவார் என்று எண்ணினார். இதற்கிடையில் வேறொரு வகையில் பிரச்சினை வந்தது. சிவாஜியின் தளபதி மற்றும் சில படை வீரர்கள் அகமத்நகர் மற்றும் ஜூன்னார் அருகில் உள்ள சில மொகலாய பிரதேசங்களின் பகுதிகளுக்கு சென்று பெரியளவில் கொள்ளையடித்து வாரிசூருட்டி கொண்டு வந்தனர். ஔரங்கசீப் மழைக்காலம் என்பதால் டெல்லி கோட்டையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அதலால் தன்னுடைய தாய் மாமனும், டெக்கான் பகுதியின் கவர்னருமான ஷாயிஸ்தாகானை சிவாஜியின் கதையை முடித்து கட்ட நியமித்தார்.

ஔரங்கசீப் சக்தி வாய்ந்த மன்னர்களுள் ஒருவர். அவரது படை அளப்பரியது. ஷாயிஸ்தாகானின் படை மாபெரும் தாக்குதல் ஒன்றை நடத்தி சிவாஜியின் பல கோட்டைகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. சிவாஜியின் தலைநகரான பூனாவையும் சேர்த்து இழந்தார். சிவாஜி மீண்டு வந்து நடத்திய பதில் தாக்குதல்களில் ஷாயிஸ்தாகான் படுகாயமடைந்தார். பூனா காப்பாற்றபட்டது. ஷாயிஸ்தாகான் ஓய்ந்தபாடில்லை. சில நாட்களுக்கு பிறகு பல முனை தாக்குதல்களை நடத்தி கொங்கன் பகுதிகளில் சிவாஜியின் பலத்தை பன்மடங்கு குறைத்தார்.

இதற்கு பதிலடியாக சிவாஜி இரவு நேரம் ஒன்றில் மொகலாயர்களின் வர்த்தக தலைநகரான சூரத்’தில் புகுந்து அதன் பெரும் வளங்களை கொள்ளையடித்து புறப்பட்டார். கடுங்கோபம் அடைந்த ஔரங்கசீப் தனது தளபதி ஜெய் சிங் தலைமையில் சுமார் ஒன்றரை லட்சம் வீரர்களுடன் சிவாஜியின் ராஜ்ஜியத்தின் மேல் தாக்குதல் நடத்த ஆணையிட்டார். சிவாஜியின் கோட்டைகள் பறிபோனது, வளங்கள் உருவப்பட்டன, வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு மேல் இழப்புகளை தடுக்கும் பொருட்டு சிவாஜி சமாதான ஒப்பந்தத்திற்கு உடன்பட்டார். புரந்தார் ஒப்பந்தம் தளபதி ஜெய் சிங்’கிற்கும் சிவாஜிக்கும் கையெழுத்தான வருடம் 1665. சிவாஜி தன்னுடைய 23 கோட்டைகளையும் அளித்து 400,000 பணத்தையும் நஷ்ட ஈடாக மொகலாயர்களுக்கு அளித்தார்.

Aurangazeb (Pic: muslimworldjournal)

ஆக்ரா பயணம்

ஔரங்கசீப் சிவாஜியை ஆக்ரா வர சொல்லி அழைத்தார். தன்னுடைய படைகளை கொண்டு ஆப்கானிஸ்தான் பகுதிகளை மேம்படுத்த அழைப்பு விடப்பட்டது. தன்னுடைய எட்டு வயது மகன் சம்பாஜியுடன் சிவாஜி ஆக்ரா பயணித்தார். ஆக்ரா அரண்மனையில் அவருக்கு கிடைத்தது அவமானங்களுக்கும் அதிர்ச்சியும் தான். இருவரையும் வீட்டு காவலில் வைக்க உத்தரவிட்டார் ஔரங்கசீப். ஔரங்கசீப்’பின் சூழ்ச்சி வலைக்குள் தான் விழுந்ததை உணர்ந்த சிவாஜி அங்கிருந்து தப்பிக்க ஆயத்தமானார். சிவாஜியை கைது செய்த மகிழ்ச்சியில் ஔரங்கசீப் ராஜ்ஜியத்தில் உள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அரண்மனை விழாக்கோலம் பூண்டது. அரண்மனைக்கு வரும் பூக்கூடையில் ஒன்றில் சிவாஜியும், மற்றொரு கூடையில் சம்பாஜியும் பதுங்கி தப்பி வெளியேறிய வருடம் 1666. பூனாவில் உள்ள கோட்டைக்கு சிவாஜி திரும்பியதை மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடினர். சமாதான ஒப்பந்தம் சுமார் வருடம் 1670 வரை நீடித்தது.

மொகலாய இளவரசர் பகதூர்ஷாவுடன் சிவாஜிக்கு இருந்த நட்பினால் ஔரங்கசீப்’ பிறகு சந்தேகம் ஏற்பட்டது. இருவரின் ஒற்றுமையினால்  தம்முடைய ஆட்சிக்கு சிக்கல் வந்துவிடும் என்று எண்ணினார். மீண்டும் ஔரங்கசீப்  யுத்தத்தை தொடங்கினார். இம்முறை போரிட்ட சிவாஜி இழந்த பெரும் பகுதிகளை நான்கே மாதங்களில் மீட்டார். பூனா மற்றும் கொங்கன் பிரதேசங்கள் முழுமையாக தம் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் சிவாஜி ராஜ்ஜியத்தை முழு ஹிந்து பேரரசாக அறிவித்தார். மராத்திய சாம்ராஜ்ய பேரரசராக ஜூன் 6, 1674 அன்று ராய்காட்’டில் முடிசூட்டு விழா கோலாகலமாக நடந்தது. சுமார் 5௦,௦0௦ பேர் கூடிய நிகழ்வில் மாமன்னர் சிவாஜிக்கு பல பட்டங்கள் வழங்கப்பட்டன. சத்ரபதி (தலைசிறந்த மன்னர்), சககர்தா (புதிய சாகப்தத்தை உருவாக்கியவர்), சத்ரிய குலவந்தாஸ் (சத்ரியர்களின் தலைவன்), ஹைந்தவ தர்மோதாரக் (இந்து தர்மத்தை நிலை நிறுத்துவுவபர்) என்று பல பட்டங்கள் அளிக்கப்பட்டன.

மராத்தியர்கள் சிவாஜியின் கட்டளைப்படி தக்காண பகுதிகள் முழுவதும் இந்து சுயாட்சி கொள்கைப்படி ஆட்சி நடத்தினர். அதில்ஷாவின் பகுதிகளான தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையும், செஞ்சி கோட்டையும் சிவாஜியால் கைப்பற்ற பட்டவையே. பின்பு தமது சகோதரர் வெங்கோஜியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி வெங்கோஜி ஆண்டு வந்த தஞ்சாவூர் மற்றும் மைசூர் பகுதிகளுடன் அவைகளை இணைத்தார். தக்காண பகுதிகள் முழுவதும் மொகலாயர்களையும், சுல்தான்களையும் விரட்டி இந்து மக்கள் சுயாட்சி அமையவேண்டும் என்கிற சிவாஜியின் லட்சியம் நிறைவேறியது.

Veer Sivaji (Pic: youtube)

 

மாமன்னர் சிவாஜியின் இறப்பு

மொகலாயர்களின் காலத்தின் ஆட்சி மொழியாக இருந்த பெர்சிய மொழியை அறவே ஒழித்தார். மராத்தி மற்றும் ஹிந்தி மொழிகள் அரண்மனையின் ஆட்சி மொழியானது. சுமார் எட்டு அமைச்சர்களை பல்வேறு துறைகளுக்கு நியமித்து பொறுப்புகளை பிரித்து வழங்கினார். பெண் விடுதலை, தீண்டாமை ஒழித்தல் என்று முற்போக்கு கருத்துக்களுடன் ஆட்சியை வழி நடத்தலானார்.

Brave Sivaji (Pic: liupis)

தமது பகுதிகளை நகரம், சிறு நகரம், கிராமம் என்று பிரித்து அதற்கேற்ற நிர்வாகிகளை பணியமர்த்தி மக்களுக்கான சிறப்பானதொரு நல்லாட்சியை அளித்து வந்தார். இதனிடையே மார்ச் 1680, சிவாஜி நோய்வாய்பட்டார். கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்றுகடுப்பினால் பாதிக்கபட்டார். ஏப்ரல் 3, 1680 அன்று நோயின் தீவிரத்தால் சிவாஜியின் உயிர் பிரிந்தது.

Web Title: HIstory of King Shivaji

Featured Image Credit: staticflickr

Related Articles