இந்திய கல்வித்துறை வளர்ச்சியின் வரலாறு

ஒரு மனிதனுடைய வாழ்வில் இன்றியமையாத தேவைகளில் கல்வியும் ஒன்றாகிவிட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வியில் தலைசிறந்து விளங்கி உலகுக்கே அறிவு ஒளி காட்டிய தேசம் இந்தியா. நாளந்தா, தட்சசீலம் போன்ற பல்கலைக்கழகங்களில் லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் தங்கி தங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொண்டு சென்றதற்கு ஆதாரமாக வரலாறே விளங்குகிறது. அத்தகைய புகழ்மிக்க இந்திய தேசத்தின் நவீன கால கல்வித் துறை கடந்து வந்த வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை பயன்படும்.

குருகுலக் கல்வியும் பாடசாலைகளும் மதரசாக்களும்

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நம்முடைய தேசத்தில் ஆதிக்கம் பெறுவதற்கு முன்பு வரையிலும், நம் தேசத்தில் பாடசாலைகள், மதரசாக்கள் மூலம் கல்வி கொடுக்கும் முறையே பிரதானமாக இருந்தது. அந்தப் பாடசாலைகள் பெரும்பாலும் ஒரே ஆசிரியரைக் கொண்டு, பல்வேறு வயதுடைய மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கும் வழிமுறையைப் பின்பற்றின. மேலும் மன்னர்கள், பிரபுக்கள், அரசு அதிகாரிகள் வீட்டுக் குழந்தைகள் அவரவர் வீடுகளுக்கே ஆசிரியரை வரவழைத்துப் பாடம் கற்றுக் கொண்டனர். தமிழகத்தில் அக்காலத்தில் 700க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இருந்ததாக 1797ன் கிழக்கிந்திய கம்பெனிக் குறிப்பேடு தெரிவிக்கிறது.

The Gurukul system of Education (Pic:edubilla)

1813ன் கல்வி சாசனம் (CHARTER OF 1813)

இத்தகைய பாடசாலைகள் ஒரு கட்டத்தில் மறையத் தொடங்கின. ஆங்கிலேயர்கள் மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களைக் கைப்பற்றி அங்கு அவர்களின் அதிகாரம் ஏற்பட்டபோது மேற்கத்திய கலாச்சாரமும் மெல்ல ஊடுருவ ஆரம்பித்தது. இதன் விளைவாக கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்கு கட்டப்பட்ட தேவாலயங்கள் மதமாற்றத்தை மட்டுமின்றி அவை ஏற்பட்ட இடங்களை சுற்றி நூலகம், பள்ளி என கட்ட வழி ஏற்பட்டது. இந்தக் கல்வியானது மதத்திணிப்பு போல் இருந்ததால் இந்தியர்களிடையே எதிர்ப்பு எழுந்தது.

இதன் விளைவாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதங்கள் எழுந்தன. 1813ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியர்களுக்கு கல்வி வழங்குவதை தனது பணியாக ஏற்பதாக அறிவித்தது. கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளுக்கு வருடா வருடம் 1 லட்சம் ரூபாய் வரை உதவித் தொகையாக வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கையே இந்திய பாடசாலைகளுக்கும், மதரசாக்களுக்கும் முடிவுரை எழுதியது. இந்த நடவடிக்கை “1813ன் கல்வி சாசனம்” (CHARTER OF 1813) என்று அழைக்கப்படுகிறது.

இந்த சாசனம் “இந்திய மக்களுக்கு கிழக்கிந்திய கம்பெனியின் பல்வேறு துறைகளில் வேலை செய்ய சாதி மதம் அந்தஸ்து எதுவும் தேவையில்லை. கல்வித்தகுதி அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும்.” என்று அறிவித்தது. இந்தக் கல்வித் தகுதி “ஆங்கில வழி” கல்வி ஆகும்.

East India Company (Pic:hubert-herald)

மெக்காலே குறிப்புகள்( MACAULAY’S MINUTES)

1813 க்கும் 1833 ஆம் ஆண்டுக்கும் இடையிலான 20 ஆண்டு காலத்தில் மேலும் ஒரு திட்டத்தை ஆங்கிலக் கல்வியை விரிவுபடுத்த பிரிட்டிஷ் அரசு முன்மொழிந்தது. இந்தியாவின் மேல்தட்டு வர்க்கக் குடும்பங்களை ஆங்கிலக் கல்வியை நோக்கி இழுத்து அவர்களை அரசு வேலைகளில் அமர்த்த வேண்டும். இந்த நடவடிக்கை மற்றவர்களையும் ஆங்கிலக் கல்வியை நோக்கி இழுக்கும் என்று எதிர்பார்த்தது.

1834-ல் மெக்காலே இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த பென்டிங் பிரபு, மெக்காலேவை “பொது போதனை துறை” (Public instruction) எனும் கல்வித் துறையின் தலைவராக நியமனம் செய்தார். நான்கு மாதங்கள் இந்தியாவின் கல்வி முறையை ஆய்வு செய்த மெக்காலே, MACAULAY’S MINUTES(மெக்காலே குறிப்புகள்) எனும் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

மெக்காலேவின் நோக்கம் “வர்ணாஸ்ரம தர்மத்தை” கடைப்பிடித்து வந்த இந்திய பாரம்பரியக் கல்வி முறையை மாற்றி அனைவருக்கும் கல்வி வழங்குவதாக இருந்தது.

“நாம் இப்போது செய்ய வேண்டிய முக்கிய பணி, நமக்கும் நாம் ஆளுகின்ற மக்களுக்கும் இடையே நல்லெண்ணத் தூதுவராக செயல்படவேண்டிய புதிய வர்க்கம் ஒன்றைக் கல்வியின் மூலம் தோற்றுவிப்பது ஆகும். இவர்கள் ரத்தத்தால், நிறத்தால் இந்தியர்கள். ஆனால் உணர்வால், நிலைப்பாட்டால் நடத்தையால், எண்ணத்தால், விருப்பு வெறுப்பால் ஆங்கிலேயர்கள்” என்றார்.

மேலும், அதாவது கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் அனைத்து இந்தியருக்கும் கல்வி அளிப்பதும், ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதும் கடினம். அது மட்டுமன்றி ஆங்கிலேயர்களுக்கு அவர்களது மொழியைப் புரிந்து கொண்டு அதை அவர்கள் ஆளும் மக்களிடம் அவர்களது மொழியில் பேச ஆட்கள் உடனடியாக தேவைப்பட்டது. எனவே முதலில் ஆங்கிலத்தை இந்தியாவில் உள்ள ஒரு சிலரிடம் கற்றுக்கொடுப்போம். அவர்கள் ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்து தங்களது மொழியில் மொழி பெயர்த்து அனைவருக்கும் கொண்டு செல்லட்டும்” என்றார்.

1835 ஆம் ஆண்டு இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த பென்டிங் பிரபு மெக்காலேவின் பரிந்துரைகளை அமல்படுத்தினார்.

Lord Macaulay (Pic:etsy)

வுட் நடவடிக்கை(Wood’s Despatch)

இந்த வுட் நடவடிக்கை இந்திய கல்வியின் “MAGNA CARTA” என்று அழைக்கப்படுகிறது. 1853-ல் இங்கிலாந்து கல்விக் கட்டுப்பாட்டு குழுமத்தின் (The Board of Control of Education) தலைவராக இருந்த சார்லஸ் உட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. “கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்திலிருந்து கல்வி அதிகாரத்தை பிடுங்கி நேரடியாக பிரிட்டிஷ் அரசே அதை மேற்கொள்வது சாத்தியமா?” என்பதை ஆராய்ந்து அறிவதே இக்குழுவின் நோக்கம்.

இந்தக் குழு தான் ஆரம்பக் கல்வியை பிராந்திய மொழிகளிலும் இடைநிலை மற்றும் உயர் கல்வியை ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளிலும், பட்டப்படிப்புகளை ஆங்கில மொழியில் மட்டும் வழங்கவும் வழி செய்தது. மேலும் இந்தியாவில் பெண்கள் கல்வி பெறுவதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தது. கல்விக்கான முதல் இயக்குநரகத்தை தோற்றுவித்தது. இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் தொடங்க வழி செய்தது.

Sir Charles Wood (Pic:fineartamerica)

ஹன்டர் கமிஷன் (HUNTER COMMISION)

1882-ஆம் ஆண்டு வில்லியம் ஹன்டர் என்பவர் தலைமையில் ஒரு கல்விக் கமிஷனை இங்கிலாந்து அரசு நியமனம் செய்தது. இது இந்திய கல்விக் குழு(INDIAN EDUCATION COMMISION) என்று அழைக்கப்பட்டது. இந்தியாவின் ஆரம்பக் கல்வியின் தரத்தினை ஆராய்வதற்காக இக்குழு அமைக்கப்பட்டது.

நமது வகுப்பறைகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு மற்றும் மாதாந்திரத் தேர்வுகளும் இக்குழு மூலமாகத் தான் அறிமுகமாயின. மேலும், பள்ளிகளில் சீருடைகளை அறிமுகப்படுத்தியதும், பிராந்திய மொழி கல்வியை, பரவலாக்கியதும் இக்குழுவின் சாதனைகள். அதிகமான மாணவர்கள் ஆரம்பக் கல்விக்குள் நுழையவும் இக்குழு வழிவகுத்தது.

Sir William Wilson Hunter (Pic:wikipedia)

காந்தியக் கல்வி

சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்த மாகாணங்களின் அமைச்சர்களைக் கூட்டி 1937 ஆம் ஆண்டு வார்தாவில் கல்வி மாநாடு ஒன்று நடந்தது.

அந்த மாநாட்டில் சில கல்விக் கொள்கைகளை அந்தக் கட்சி முன்வைத்தது.

  • 6 வயது முதல் 14 வயது வரை விலையின்றி இலவசமாகக் கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும்
    தொடக்கக் கல்வி கட்டாயமாகத் தாய்மொழியில் இருக்க வேண்டும்.
  • ராட்டை உட்பட பள்ளியில் மாணவர்கள் வாழ்க்கைத் தொழில் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும்
  • தன் சொந்தக் காலில் நிற்க சுயக் கட்டுப்பாடு மிக்க குழந்தைகளை உருவாக்குவதே கல்வியின் நோக்கம்

என்று இந்த மாநாடு முன்மொழிந்தது.

இந்தியா விடுதலை அடைந்தபோது வெறும் 14 சதவீதத்தினரே கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். இந்த நிலை மாற சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பல குழுக்களை உருவாக்கினார். இந்த முதல் கல்வி கமிஷனுக்கு அப்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய, அதன் பின்னர் இந்திய துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் பதவி வகித்த டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

Dr. Radhakrishnan (Pic:gangslangs)

லட்சுமணசாமி முதலியார் குழு

டாக்டர் ராதாகிருஷ்ணன் குழுவில் இருந்த லட்சுமணசாமி முதலியார் தலைமையில் 1952 ஆம் ஆண்டு ஒரு கல்விக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு இரண்டு பரிந்துரைகளை முன்வைத்தது.

  • பெண்களுக்கான தனி பள்ளிகளை அங்கீகரித்தல்.
  • முழுக்க முழுக்க அந்தந்த பிராந்திய மொழிக் கல்வியை வளர்த்தெடுத்தல்.

நேரு அவர்கள் 1964-ல் அப்போதைய பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் டி.எஸ் கோத்தாரி அவர்களின் தலைமையில் ஒரு கல்விக் குழுவை நியமித்தார். அதில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் இடம் பெற்றனர். நாட்டு நலத்திட்டம், விளையாட்டு ஆசிரியர், ஓவிய ஆசிரியர் போன்ற செயல்பாடுகள் இக்குழுவின் பரிந்துரைகளால் தான் நிறைவேற்றப்பட்டன.

அதன்பிறகு சர்வதேச தரத்திலான கல்வியை மாணவர்களுக்கு வழங்க திரு.ராஜீவ் காந்தி அவர்கள் ஆட்சியில் “நவோதயா பள்ளிகள்” நாடு முழுவதும் திறக்கப்பட்டன.

Dr. A. Lakshmanaswami Mudaliar (Pic:veethi)

திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமர் ஆன பிறகு 2002ஆம் ஆண்டு 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்கவும், 8 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்கவும், மாணவர்கள் பள்ளி இடைநிற்றலை தடுத்திடவும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தினை (SARVA SHIKSHA ABHIYAN) செயல்படுத்தினார்.

இவ்வாறாக இந்திய கல்வித் துறை பல மாற்றங்களுக்கு உள்ளாகி, நம் தேசத்தின் கல்வியறிவை 76 சதவீதமாக உயர்த்த வழி செய்துள்ளது. உலக நாடுகளைப் போல் நம் தேசமும் கல்வியிலும், மனித வளக் குறியீடுகளிலும் முன்னிலை பெறப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

Web Title: History of Development in Indian Education System, Tamil Article

Featured Image Credit: tompietrasik

Related Articles