Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இந்திய யூனியன் பிரதேசங்களின் வரலாறு

‘தில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே’ என்றொரு திரைப்படப்பாடல் இருக்கிறது. பாமர மக்கள்கூட, அதிகம் அலட்டுகிறவர்களைப்பார்த்து, ‘அவன் என்ன பெரிய தில்லி மஹாராஜாவா?’ என்பதுண்டு. அநேகமாக அந்தக்காலத்தில் தில்லியிலிருந்தபடி இந்தியாமுழுவதையும் ஆட்சிசெய்த பேரரசர்களைப்பார்த்து இப்படியொரு பயன்பாடு வந்திருக்கலாம்.

தில்லியில் ஆட்சி

இன்றைக்குத் தில்லிக்கு ராஜா இல்லை; முதலமைச்சர் இருக்கிறார்; ஆனால், அவர் தன்னுடைய சொந்த வேலையைக்கூடச் செய்யமுடியாமல் நீதிமன்றப்படியேறிக்கொண்டிருக்கிறார். ‘என் அரசாங்கத்தின் பணிகளை ஒழுங்காகச் செய்யவிடாமல் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தடுக்கிறார்’ என்று புலம்புகிறார்.

தில்லி முதல்வரைவிடத் துணைநிலை ஆளுநர் பெரியவரா என்கிற சர்ச்சையை உச்சநீதிமன்றம் சமீபத்தில் முடித்துவைத்தது, ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்குதான் செயல்படும் உரிமை; துணைநிலை ஆளுநர் அவர்களுடைய நிர்வாகப்பணிகளில் தலையிடமுடியாது.’

இந்த உத்தரவு வெளியானபிறகும், தில்லி முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவாலின் பிரச்னைகள் தீர்ந்துவிடவில்லை. அவர் இன்னும் மத்திய அரசு, துணைநிலை ஆளுநருடன் மோதிக்கொண்டுதானிருக்கிறார்.

Angry Kejriwal (Pic: firstpost)

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

இன்னொருபக்கம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரிக்குப் பொருந்துமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது; அங்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் ஒத்துப்போகவில்லை. ‘இவர் எல்லாவற்றிலும் தலையிடுகிறார்’ என்று முதலமைச்சரும் அமைச்சர்களும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

முதல்வருக்கே சவால் விடுமளவுக்கு யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா? உண்மையில் இந்தத் துணைநிலை ஆளுநர் என்ற பதவி எதற்காக உருவாக்கப்பட்டது? மற்ற மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் என்ன வித்தியாசம்? அவற்றை ஏன் வேறுவிதமாக அமைத்திருக்கிறார்கள்? வரலாற்றைப் புரட்டினால் பல சுவாரஸ்யங்கள் தென்படுகின்றன.

இந்தியாவில் இப்போதுள்ள யூனியன் பிரதேசங்கள் (ஒன்றியப் பகுதிகள்) ஏழு:

* சண்டிகர் (ஹரியானா, பஞ்சாப் அருகிலுள்ளது)
* தாத்ரா, நகர் ஹவேலி (குஜராத், மஹாராஷ்டிரா அருகிலுள்ளது; தலைநகரம்: சில்வாஸ்ஸா)
* தமன், தியூ (குஜாராத் அருகிலுள்ளது; தலைநகரம்: தமன்)
* லட்சத்தீவுகள் (அரபிக்கடல் பகுதியில் உள்ளது; தலைநகரம்: கவரட்டி)
* புதுச்சேரி
* அந்தமான், நிகோபர் தீவுகள் (வங்காள விரிகுடாப் பகுதியில் உள்ளது; தலைநகரம்: போர்ட் ப்ளேர்)
* தில்லி

Supreme Court (Pic: scroll)

ஒற்றுமை மற்றும் மாறுபாடு

இந்தியாவில் உள்ள மற்ற பகுதிகளனைத்தும் ஏதோ ஒரு மாநிலத்தின் கீழ் அமைந்துள்ளன; இவை மட்டும் தனித்து யூனியன் பிரதேசங்களாக அறியப்படுவது ஏன்? இவற்றினிடையில் என்ன ஒற்றுமை என்று யோசித்தால், முதலில் நிலப்பரப்பு: சண்டிகரின் பரப்பு 114சதுரகிலோமீட்டர், நம் சென்னையின் பரப்பில் பத்தில் ஒருபங்குதான். லட்சத்தீவுகள் அதைவிடச் சிறியது, 32சதுரகிலோமீட்டர்தான்; அந்தமான், நிகோபரைத்தவிர மற்ற யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறு பகுதிகள்தான்.

அந்தமான், நிகோபர் அளவில் பெரியதாக இருப்பினும், மற்ற அனைத்து மாநிலங்களிலிருந்தும் கணிசமான அளவு தள்ளியிருக்கிறது; ஆகவே, அதனை இன்னொரு மாநிலத்துடன் இணைத்து நிர்வகிக்கச்செய்வது சிரமம்; அதைத் தனி மாநிலமாக அறிவிக்கலாம் என்றால், மற்ற மாநிலங்களைவிட அது மிகச்சிறியதாக இருக்கும்.

யூனியன் பிரதேசங்களின் மக்கள்தொகையும் குறைவுதான்; தில்லிதவிர மற்ற பகுதிகளில் வாழ்வோரின் எண்ணிக்கை சில லட்சங்கள்தான்.

இந்தியச் சுதந்தரத்துக்குமுன், புதுச்சேரி ஃபிரெஞ்சுக் காலனியாக இருந்தது; தாத்ரா, நகர் ஹவேலி, தமன், தியூ போன்ற பகுதிகள் போர்ச்சுக்கீசியாவின்கீழ் இருந்தன; இதனால், மீதமுள்ள இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இந்தப் பகுதிகளின் கலாசாரம் கணிசமாக மாறுபட்டிருக்கிறது; இதுவும் ஒரு முக்கியமான மாறுபாடு.

Cake Walk (Pic: youtube)

சண்டிகர் கதை

இவற்றுடன் ஒப்பிடும்போது, சண்டிகரின் கதை வேறுவிதமானது. 1947ல் இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்தபோது, பஞ்சாப் மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி பாகிஸ்தானில் சேர்க்கப்பட்டது; முக்கியமாக, அன்றைய பஞ்சாபின் முதன்மை நகரமான லாகூர் இப்போது பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டது.

சமீபத்தில் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டபோது, பழைய (ஒருங்கிணைந்த) ஆந்திராவின் தலைநகரமான ஹைதராபாத் தெலங்கானாவுக்குச் சென்றுவிட்டது. ஆகவே, புதிய ஆந்திரப்பிரதேசம் வேறொரு தலைநகரத்தை உருவாக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியப் பிரிவினையின்போது இதேபோன்ற காரணத்துக்காக சண்டிகர் உருவாக்கப்பட்டது; பஞ்சாபின் புதிய தலைநகரமானது.

1966ல் பஞ்சாப் மீண்டும் பிரிந்தது; ஹர்யான்வி மொழி பேசும் மக்கள் அதிகம் நிறைந்த பகுதி ‘ஹரியானா’ என்ற மாநிலமானது.

இதனால், ஒரு புதிய பிரச்னை தொடங்கியது: தலைநகரம் சண்டிகர் இந்த இரு மாநிலங்களின் எல்லைப்பகுதியில் இருந்ததால், ‘எங்களுக்குதான் சண்டிகர் வேண்டும்’ என்று இருவரும் மோதத்தொடங்கினார்கள். எப்படி யோசித்தாலும் இரு மாநிலங்களுக்கும் சண்டிகரின்மீது உரிமை இருப்பதாகத் தோன்றியது. ஆகவே, சண்டிகர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது; இரு மாநிலங்களும் அந்நகரத்தைப் பகிர்ந்துகொள்ளலாம், ஆனால், அதன் நிர்வாகப்பொறுப்பை மத்திய அரசு கவனித்துக்கொள்ளும்.

சண்டிகருக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படுவதற்குப் பல ஆண்டுகள் முன்பாக (1956ல்) இந்தியத் தலைநகரமான தில்லியும் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. இதனை NCT (National Capital Territory: தேசியத் தலைநகரப் பகுதி) என்று அழைக்கிறார்கள்.

Rock Garden (Pic: ridlr)

மற்ற யூனியன் பிரதேசங்கள்

இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்தபோது, புதுச்சேரியும் அதைச்சுற்றியிருந்த சில பகுதிகளும் பிரெஞ்சு ஆதிக்கத்தின்கீழ் இருந்தன. அவற்றைத் தன்னுடன் இணைத்துக்கொள்ள இந்தியா முயன்றது. ஃபிரான்ஸுக்கு இதில் சம்மதம்தான்; ஆனால், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டுமல்லவா?

அன்றைய புதுச்சேரியை ஆண்டுவந்த மக்கள் பிரதிநிதிகளில் பிரெஞ்சுக் காலனியாகவே தொடர விரும்பியவர்களும் இருந்தார்கள்; இந்தியாவுடன் இணைய விரும்பியவர்களும் இருந்தார்கள்; தங்களுக்கு எது நல்லது என்று பலவிதமாக ஆராய்ந்தபிறகு, பெரும்பான்மைத் தலைவர்களின் ஒப்புதலுடன் 1954ல் புதுச்சேரி இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது; பின்னர் 1962ல் இது யூனியன் பிரதேசமானது.

இதனிடையில், 1956ல் அந்தமான் நிகோபர் தீவுகளும், பல தீவுகளின் தொகுப்பான லட்சத்தீவுகளும் யூனியன் பிரதேசங்களாகின; ஐந்தாண்டுகளுக்குப்பின் (1961ல்) தாத்ரா, நகர் ஹவேலி தனி யூனியன் பிரதேசமாகவும், கோவா, தமன், தியூ ஒரு யூனியன் பிரதேசமாகவும் ஆகின.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் தான் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களும் உருவாகின; அதாவது, ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுவோர் அதிகமுள்ள பகுதிகள் தனி மாநிலங்களாகப் பகுக்கப்பட்டன; எடுத்துக்காட்டாக, கன்னடர்கள் அதிகமுள்ள பகுதி கர்நாடகம் என்றும், மராத்தி பேசுவோர் அதிகமுள்ள பகுதி மஹாராஷ்டிரா என்றும், குஜராத்திகள் அதிகமுள்ள பகுதி குஜராத் என்றும் மாறின.

இந்த மாற்றங்களின் அதிர்வுகள், கோவாவில் ஒரு புதிய பிரச்னையைத் தொடங்கிவைத்தன: கோவா யாருடன் சேரவேண்டும்?

கோவாவில் அதிகப்பேர் பேசும் மொழி கொங்கணி. அதனை மராத்தியின் ஒரு வடிவம் என்று கருதுபவர்கள் இருந்தார்கள்; ஆகவே, கோவா மஹாராஷ்டிராவுடன் இணையவேண்டுமென்று இவர்கள் விரும்பினார்கள். இன்னொருபக்கம், கோவா யூனியன் பிரதேசமாகத் தொடரவேண்டும் என்று விரும்புகிறவர்களும் இருந்தார்கள்.

உண்மையில் கோவா மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக 1967ல் ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கானோர் வாக்களித்த இந்தத் தேர்தலில், 54% மக்கள் கோவா யூனியன் பிரதேசமாகத் தொடரவேண்டும் என்று தெரிவித்திருந்தார்கள். ஆகவே, அது மஹாராஷ்டிராவுடன் இணைக்கப்படவில்லை.

அதன்பிறகு, கோவாவைத் தனி மாநிலமாக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தொடர்ச்சியான அழுத்தங்களுக்குப்பிறகு, 1987ல் கோவா தனி மாநிலமானது. தமன், தியூ யூனியன் பிரதேசமாகத் தொடர்ந்தது.

இப்படிப் பல சூழ்நிலைகளில் பல காரணங்களுக்காக யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவற்றிடையிலுள்ள பொதுவான விஷயம்: இவை யூனியன் அரசால், அதாவது, மத்திய அரசால் ஆளப்படுகின்றன, இவற்றுக்கான வளர்ச்சி நிதியையும் மத்திய அரசு வழங்குகிறது; யூனியன் பிரதேசங்களை நிர்வகிப்பதற்குக் குடியரசுத்தலைவர் நிர்வாகிகளை நியமிப்பார் என்கிறது இந்திய அரசியல் சட்டம்.

இதன்படி, தில்லி, புதுச்சேரி, அந்தமான், நிகோபர் பகுதிகளுக்கு மத்திய அரசின் பிரதிநிதிகளாகத் ‘துணைநிலை ஆளுநர்’கள் நியமிக்கப்படுகிறார்கள். மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு நிர்வாகிகள்மட்டும் நியமிக்கப்படுகிறார்கள்.

மாநிலங்களைப்போல, யூனியன் பிரதேசங்களிலிருந்தும் பிரதிநிதிகள் இந்திய மக்களவைக்குச் செல்கிறார்கள். தில்லிக்குமட்டும் ஏழு மக்களவை உறுப்பினர்கள், மற்ற அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் தலா ஒரு மக்களவை உறுப்பினர். தில்லிக்கு மூன்று, புதுச்சேரிக்கு ஒன்று என நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இத்துடன், புதுச்சேரி, தில்லி ஆகிய இரு யூனியன் பிரதேசங்களுக்குமட்டும் ஒரு கூடுதல் உரிமையும் அளிக்கப்பட்டுள்ளது: இங்கு வாழும் மக்கள் தங்களுக்கான அரசாங்கத்தை வாக்களித்துத் தேர்ந்தெடுக்கலாம்; சட்டமன்றம் உண்டு, அமைச்சரவை உண்டு, முதலமைச்சர் உண்டு.

Beach Of Goa (Pic: sterlingholidays)

அங்கேதான் பிரச்னை தொடங்குகிறது: நிர்வாகி என்று ஒருவரை மத்திய அரசு நியமித்திருக்கிறது; இதுதவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றும் அமைகிறது; இவர்கள் இருவருக்கும் ஒத்துப்போகாவிட்டால் யாருடைய தீர்மானம் வெல்லும்? அரவிந்த் கேஜ்ரிவால் வலுவாக முன்னெடுத்துச்செல்லும் இந்தச் சர்ச்சையால் முக்கியமான இந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்தால் நல்லது!

Web Title: History Of Indian Union Territories

Featured Image Credits: lonelyplanet

Related Articles