புதுச்சேரி – ஒரு வரலாற்று பார்வை

மனித குல வரலாற்றில் மிகப்பெரிய நாகரீகமாக கருதப்படுவது பழங்கால ரோமானியர்களின் நாகரீகம். கி.மு. எட்டாம் நூற்றாண்டில் மத்திய இத்தாலியில் உள்ள தைபர் நதிக்கரையில் சிறிய நகரத்தில் இது தொடங்கியது. கண்ணை கவரும் ரோமாபுரி களரி போர் வீரர்கள் (Gladiators), ராஜபோகமான விருந்தினர் கூட்டங்கள், ரோமானியர்களின் கட்டிடக்கலை, வாழ்க்கை முறை என்று அனைத்துமே மிகவும் விசித்திரமானது, ரசிக்கத்தக்கது. உலகளாவிய கடல் கடந்த வணிகத்தில் பழங்கால ரோமானியர்கள் தொன்று தொட்டு ஈடுபட்டு வந்துள்ளனர். இந்திய அளவில் இதுவரை நடந்த தொல்லியல்துறை ஆய்வில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ரோமானியர்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்த சான்றுள்ளது. அது நமது பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த மண்ணான பாண்டிச்சேரி. இந்தியாவின் யூனியன் பிரதேசங்களான அந்தமான் மற்றும் நிக்கோபார், லக்சதீவுகள், சண்டிகார், தாத்ரா மற்றும் நாகர், டாமன் மற்றும் டயு உடன் பாண்டிச்சேரியும் ஒன்று என்பது நாம் அறிந்த விஷயம். பாண்டிச்சேரி என்றாலே பிரெஞ்சு நாகரீகம் பொதிந்த மண்ணாயிற்றே. எப்படி ரோமானியர்கள் என்ற கேள்வி எழலாம். பாண்டிச்சேரி கி.பி. முதல் நூற்றாண்டில் தொடங்கி சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கான வரலாற்றை தன்னுள் தாங்கி நிற்கிறது.

தொல்லியல் துறை ஆய்வுகள்

புதுச்சேரி என்பதன் பிரெஞ்சு மொழிமாற்றம் அல்லது மருவிய சொல்லாக பாண்டிச்சேரி இருக்கலாம் என்று அறியப்படுகிறது. புதுச்சேரி நகரின் தெற்கு பகுதியில் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் நடந்த தொல்லியல் துறை ஆய்வில் ரோமானியர்கள் வாணிபம் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் இருந்து நவீன புதுச்சேரி’க்கான அடித்தளம் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் கடல் கடந்த வாணிபம் பல இடங்களில் நூற்றாண்டுகளாக நடந்துள்ளது. சோழர் காலத்தில் மீன்பிடி கிராமமாக இருந்த அரிக்கமேடு அதில் ஒன்று. அயல்நாட்டு வரலாற்றாசிரியர் ஒருவரின் குறிப்புகளில் இந்த இடத்தை “பொதுகே” என்று குறிப்பிடுகிறார். கிரேக்க மொழியில் வணிகஸ்தலம் (Emporium) என்று இது பொருள்படுகிறது. வண்ணத்துணிகள், கண்ணாடி கற்கள், உருக்குமணிகள், மண்பாண்ட வேலைப்பாடுகள், தங்கம் மற்றும் அலங்கார நகைகள் முதலியவை கிரேக்க ரோமானிய துறைமுகங்களுக்கும் பிற கிழக்கு நாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகியுள்ளது. உருகும் தன்மையுடைய கண்ணாடி மணிகளை உருக்கி அதை வேலைப்பாடுகளுடனும், நவரத்தினங்களையும் பெருமளவில் வணிகம் செய்துள்ளனர். அலங்கார மணிகளின் தாயகம் என்று அயல்நாட்டினரிடையே பாராட்டப்பட்டுள்ளது இந்தப் பகுதி. ரோமானியர்கள் (யவனர்கள்) பயன்படுத்திய ரோமானிய காசுகள், ரோமானியர்கள் கலாச்சார கூர்மையான ஜாடிகள், மோதிரம், மட்பாண்டங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பொருட்கள் புதுச்சேரி அருங்காட்சியகத்தில் வைக்கப்படுள்ளது. யவனர்கள் யார் என்ற சர்ச்சைகளை சற்று தள்ளி வைப்போம்.

Arikkamedu (Pic: realbharat)

வேதபுரீஸ்வரர் ஆலயம் சங்க இலக்கியங்களில்

புதுச்சேரி’யின் வரலாற்றை நான்காக பிரிக்கலாம். வேத காலம், மன்னர்கள் காலம், காலனி ஆதிக்கம், பின்பு சுதந்திரம் அடைந்த நகரம். வேத காலத்தில் இந்நகரத்தை “வேதபுரம்” “வேதிபுரி” என்று அழைத்துள்ளனர். அகத்தியர் இங்கு வருகை தந்து எண்ணற்ற பணிகளை மேற்கொண்டுள்ளார். இது அகஸ்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டதாக கூட ஒரு குறிப்பு உண்டு. மன்னர் காலத்தில் முற்கால சோழர்களுக்கு பிறகு நான்காம் நூற்றாண்டு வரை பல ஆட்சியாளர்களை கண்டது புதுச்சேரி.

Vedapureeshwarar Temple (Pic: wikipedia)

புதுவையின் சரித்திர பயணம்

நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் புதுச்சேரியை ஆட்சி செய்து வந்தனர். காஞ்சியை ஆண்ட பல்லவர்கள் புதுச்சேரியை தக்க வைப்பதில் பாண்டியர்களும் சோழர்களும் தொடர் சிக்கல்களையும் மோதல்களையும் கொடுத்து கொண்டிருந்தனர். இடைக்கால வரலாற்றில் முதலில் சோழர்கள் கட்டுபாட்டில் இருந்து பின்பு 13 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை பாண்டியர்களின் கட்டுபாட்டிற்கு புதுச்சேரி வந்தது. இதன் முடிவில் மதுரையை நிர்வாக தலைமையிடமாக கொண்ட இஸ்லாமிய ஆட்சியாளர்கள் சில காலம் புதுச்சேரியை ஆட்சி செய்தனர். இதன் பின்னர் தென்னிந்தியா’வில் கால் பதித்த விஜயநகர பேரரசு 17 ஆம் நூற்றாண்டு வரை புதுச்சேரி’யை தன் ஆளுமையில் வைத்திருந்தது. பின் பீஜப்பூர் சுல்தான் கரங்களில் இந்த பாரம்பரியம் தொடர்ந்தது. இடைக்கால வரலாற்றில் ஆட்சியாளர்களின் மாற்றம், சாம்ராஜ்யங்களின் ஏற்றமும் சரிவும் சமூக பொருளாதாரத்தில் புதுவையில் வெகுவான மாற்றங்களை கொண்டு வந்தது என்றே சொல்லவேண்டும்.

Bijapur Sultan (Pic: wikimedia)

பரங்கியர்கள் வருகை

இன்றைய நவீன புதுச்சேரிக்கு வித்திட்டவர் பீஜப்பூர் சுல்தான். வருடம் 1638-ல் செஞ்சியை ஆண்ட பிஜப்பூர் சுல்தான்கள் புதுச்சேரியையும் ஆண்டனர். இவரது ஆட்சி காலத்தில் அயல்நாட்டினரின் அதீத வாணிபத்தையும், போக்குவரத்தையும் கொண்டது இந்த பூமி. கடல் கடந்த வணிகத்திற்கும், கடல் பயணத்திற்கும் மிக முக்கியமான துறைமுகமாக கருதப்பட்டது. இந்தியாவின் கிழக்கு கடற்கரை வாணிபத்தின் முக்கியத்துவம் காட்டுத்தீ போல் பரவியது. போர்த்துகீசியர்கள், டச், டேனிஷ் என்று புதுவை விழாக்கோலம் பூண்டது. பரங்கியர்களின் (ஐரோப்பியர்கள்) வருகையால் பொருளாதார, வணிக வர்த்தகத்தில் பெரும் முன்னேற்றம் கண்டது. முதலில் வணிக மையங்களை புதுவையில் அமைத்தது போர்த்துகீசியர்கள், பின்பு வந்த டச் மற்றும் டேனிஷ் வர்த்தகர்களும் போர்ட் நோவோ மற்றும் கடலூரில் தங்கள் மையங்களை அமைத்து கொண்டனர். போர்த்துகீசியர்கள் மேலிருந்த நம்பிக்கையை பீஜப்பூர் சுல்தானுடைய செஞ்சி அரசு இழந்ததால் பிரெஞ்சு வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்தது. காலனிகளாக உள் நுழைந்த பிரெஞ்சு மக்கள் வர்த்தகத்துடன், தங்கள் கட்டமைப்பையும் புதுவையில் நிறுவ ஆரம்பித்தனர். பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தோன்றிய வருடம் 166 4.

French Colonial (Pic: seetheworldinmyeyes)

பிரெஞ்சு ஆளுமையில் புதுவை

போர்த்துகீசியர்களை புதுச்சேரியை விட்டு வெளியேற கட்டளையிட்ட செஞ்சி அரசு, டச் வணிகர்களுக்கு போட்டியாக வர்த்தகம் புரியவே பிரெஞ்சு வணிகர்களை அழைத்தது. ஆனால் அதுவே பிரெஞ்சின் ஆளுமைக்கு புதுவையை இட்டுச் சென்றது. பிரான்ஸ் அதிகாரி பெல்லாங்கர், புதுச்சேரியின்  கட்டுபாட்டில் இருந்த டேனிஷ் லாட்ஜ் என்ற இடத்தை பிரெஞ்சின் கட்டுபாட்டிற்கு கொண்டு வந்தார். மெல்ல பிரெஞ்சு புதுச்சேரியில் தன் ஆதிக்கத்தை செலுத்த 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இதை தொடர்ந்து பிரான்கோயிஸ் மார்டின் என்பவர் முதல் புதுச்சேரியின் ஆளுநராக பதவியேற்ற வருடம் 167 4. புதுவையின் வர்த்தகஸ்தலங்களை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டார். இதனிடையே வருடம் 1693, டச் அரசு  புதுவையை கைப்பற்றியது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வருடம் 1699 ல் ஹாலந்து அரசிற்கும் (டச்) பிரெஞ்ச் அரசிற்கும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை தொடர்ந்து மீண்டும் புதுச்சேரியை பிரெஞ்சு அடைந்தனர்.

பிரெஞ்சு அரசு மாஹி பகுதியை 1720 ஆம் வருடமும், யானம் பகுதியை 1731 ஆம் வருடமும், காரைக்கால் பகுதியை வருடம் 173 8 ஆம் வருடமும் தம் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தது. மதராஸபட்டினத்தை கைப்பற்ற வருடம் 1746 முயற்சி செய்த பொழுது அது தோல்வியில் முடிந்தது. நீண்டகால மோதல்களில் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இருந்தனர். வருடம் 176௦, பிரிட்டிஷ் ராணுவம் புதுச்சேரி’க்குள் நுழைந்து மோசமான தாக்குதல் ஒன்றை நிகழ்த்தி புதுவையை கைப்பற்றியது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வருடம் 1765 ல் ஒரு சமாதான உடன்படிக்கை இருவருக்கும் ஏற்படுகிறது. பிரிட்டிஷ் புதுவையை திருப்பி பிரெஞ்சிற்கு அளிக்கிறது. பிரெஞ்சு ஆளுநர் லா டி லாரிஸ்டன் பிரிட்டிஷாரால் பாதிப்படைந்த புதுவையை மறு சீரமைப்பு செய்தார். வருடம் 1816 ல் பிரெஞ்சின் முழு ஆளுமைக்கு புதுச்சேரி வந்தது. சுமார் 138 ஆண்டுகள் நீடித்த அந்த பிரெஞ்சு காலனி ஆதிக்கம் வருடம் 1954 ல் புதுச்சேரி யூனியன் பிரதேசமாக அறிவிக்க பட்ட பின் முடிவிற்கு வந்தது.

Karaikal (Pic: team-bhp)

யூனியன் பிரதேசங்கள் உருவான கதை

இந்திய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட முக்கிய காரணிகள் சில உள்ளன. இந்த பிரதேசங்கள் அனைத்தும் எளிதாக அருகாமையில் உள்ள மாநிலத்தில் இணைக்க முடியாமலும், தனி மாநிலமாக அறிவிக்க முடியாத அளவிற்கு சிறிதாக உள்ளதால் அவை யூனியன் பிரதேசங்களாக சிறப்புத் தகுதி பெற்றது. அந்தமான் & நிக்கோபார், லக்சதீவுகள் ஆகியவை மிக தொலைவில் உள்ளபடியால் முன்னர் மத்திய அரசின் நேரடி கட்டுபாட்டில் அவற்றை கொணர்ந்து உள்ளூர் பிரதிநிதிகளை பணியமர்த்தியது. புதுச்சேரி பிரெஞ்சு காலனியாக இருந்தது போல, டாமன் மற்றும் டயு, தாத்ரா மற்றும் நாகர் ஆகியவை போர்த்துகீசியர்கள் காலனிகளாக இருந்தன. பல்வேறு மொழிகள், கலாச்சாரம், நிர்வாக முறைகள் இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற உடனே இந்த பகுதிகளை அப்படியே பிரிட்டிஷ் காலனி மாநில மக்களுடன் இணைப்பதில் நிர்வாக சிக்கல்கள் இருந்தபடியால் அவை யூனியன் பிரதேசங்கள் ஆனது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை பிரிக்கும் பொழுது சண்டிகார் ஒரு முக்கிய பெருநகரமாக உள்ளதால் அதை இரு மாநிலங்களும் உரிமை கோரினர். மத்திய அரசு சண்டிகாரை யூனியன் பிரதேசமாக அறிவித்து தன்னகத்தே வைத்து கொண்டது.

Auroville (Pic: realbharat)

இந்தியாவின் பிரான்ஸ்

இந்திய பாராளுமன்றத்தில் பாண்டிச்சேரியை புதுச்சேரி’யாக மீண்டும் பழைய பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றொரு கோரிக்கை வைக்கும் பொழுது புதுச்சேரி ஏறத்தாழ 12,0௦0 ஆண்டுகள் பழமையானது என்று சில குறிப்புகள் வாசிக்கப்பட்டது. சற்றே சிலிர்க்க வைக்கும் வரலாற்று பூமி தான் போலும்.

War Memorial (Pic: realbharat)

இந்த மண் காணாத மொழிகள், கலாச்சாரங்கள், யுத்தங்கள், புதுமைகள் இல்லை என அடுக்கி கொண்டே போகலாம். கல்வி, மருத்துவம், ஆன்மிகம், சுற்றுலா, உணவு என்று இன்றைய புதுச்சேரி’யும் உலக சுற்றுலா ஸ்தலங்களின் வரிசையில் ஒன்றாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை. இன்றும் புதுவையை விட்டு அகலாத 50,00௦ குடும்பங்களுக்கு மேலான பிரெஞ்சு குடியிருப்புகள், கட்டிடங்கள், நினைவு சின்னங்கள், உணகவங்கள்  என்று “இந்தியாவின் பிரான்ஸ்” என்ற பெயரை தாங்கி நிற்கிறது புதுவை.

Web Title: The History Of Pondicherry

Featured Image Credit: pondicherryinfo

Related Articles