தண்டவாளங்களில் இலங்கை

”நிலக்கரியைச் சாப்பிட்டுக் கொண்டு நீரைக் குடித்துக் கொண்டு கொழும்பை நோக்கி ஓடும் உலோகப் பேய்களை” உங்களுக்குத் தெரியுமா? முதன்முறையாக இலங்கையில் ரயில்வண்டி ஓடிய போது அதைக்கண்டு பயந்த இலங்கை மக்கள், அதனை இப்படித்தான் வர்ணித்தார்கள்.

1858 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கை ரயில் சேவை ஒன்றரை நூற்றாண்டுகள் கடந்தும் மக்களுக்குச் சேவையாற்றுகின்றது. கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்ற இதன் வலையமைப்பு 1,508 கிலோமீற்றர் தூரத்திற்கு விரிந்துள்ளது. அதன் தண்டவாளப் பாதைகள் எழில் கொஞ்சும் மலைப்பாதைகளூடாகவும், ஆற்றங்கரைகளோடும் அலையெறிந்து இசைபாடும் கடலின் கரைகளோடும் செல்கின்றன. 

முதல் படம் இலங்கையில் முதன்முறை கொழும்பில் இருந்து இயக்கப்பட்ட ரயில்
2வது படம் 1870 வதுகளில் கண்டி ரயில் நிலையம்
3 ஆம் படம் கடுகண்ணாவ ரயில் பாதை
பட உதவி: www.ft.lk

இலங்கை முழுவதையும் 1815 ஆம் ஆண்டு தமது ஆளுகைக்குள் கொண்டுவந்த பிரித்தானியர்களே, ரயில்சேவைக் கட்டமைப்பை உருவாக்கினார்கள். மலையகத்தில் விளைந்த அவர்களது உற்பத்திகளை கொழும்புத் துறைமுகத்திற்கு கொண்டுவருவதற்காகவே முதலில் இந்த ரயில்பாதை அமைக்கப்பட்டது. தேயிலையும் கோப்பியும் அந்த உற்பத்திகளில் முதன்மையாக இருந்தன. கொழும்பிலிருந்து அம்பேபுஸ்ஸவுக்கே முதலாவது ரயில்பாதை அமைக்கப்பட்டது. இது 54 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்டதாக அமைந்தது. 

அப்போது தலைமைப் பொறியியலாளராக இருந்த Guilford Lindsey ரயில்சேவைத்துறையின் முதலாவது பணிப்பாளர் நாயகமாக பதவியேற்றார். 1867, 1874, 1885, 1894 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் இலங்கையின் ரயில்சேவைத்துறை தன்னை விரிவாக்கிக் கொண்டது. கண்டி, நாவலப்பிட்டிய, நானு ஓய, பண்டாரவெல மர்றும் பதுளை ஆகிய இடங்களுக்கே விரிவாக்கத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டது. 1880 ஆம் ஆண்டில் மாத்தளைக்கும் 1905 ல் வடக்கிற்கும் ரயில்பாதைகள் அமைக்கப்பட்டன. மன்னாருக்கான ரயில் பாதை 1914 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1928 ஆம் ஆண்டில் திருகோணமலையும் மட்டக்களப்பும் தண்டவாளங்களால் கொழும்புடன் இணைக்கப்பட்டன.

இலங்கையின் ரயில்சேவைத்துறையின் முதலாவது பணிப்பாளர்
Sir. Guilford Lindsey Molesworth
பட உதவி: gracesguide.co.uk

இலங்கை ரயில்சேவையின் பொற்காலம் எதுவென்று கேட்டால், 1955 ஆம் ஆண்டிலிருந்து 1970ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியையே பலரும் சுட்டிக்காட்டுகின்றார்கள். B. D. Rampala என்று அழைக்கப்பட்ட பமுனுசிங்கே ஆராய்ச்சிகே டொன் ரம்பல என்பவரின் ஆளுகையின் கீழ் அப்போது இலங்கை ரயில்சேவை இருந்தது.  ரயில்சேவையில் நேர முகாமைத்துவத்திற்கு அதிக முன்னுரிமை கொடுத்தார் ரம்பல. அதன் காரணமாக அக்காலத்தில் ரயில்கள் சரியான நேரத்திற்கு பயண முடிவிடத்தை அடைந்ததோடு, சரியான நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கவும் செய்தன.

D. Rampala என்று அழைக்கப்பட்ட திரு. பமுனுசிங்கே ஆராய்ச்சிகே டொன் ரம்பல
பட உதவி : en.wikipedia.or

பயணிகளின் சௌகரியத்தையும் கருத்திற்கொண்டு பணியாற்றிய ரம்பல, முதலில் தலைமை இயந்திரவியற் பொறியியலாளாராக இருந்து பின்னர், இலங்கை ரயில்சேவைத்துறையின் பொது முகாமையாளராக பதவி உயர்வும் பெற்றார். கொழும்புக்கு வெளியில் உள்ள பிரதான ரயில் நிலையங்களை அபிவிருத்தி செய்யும் பணியிலும் அவர் ஆர்வமாக உழைத்தார். பிரித்தானியர் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் போடப்பட்ட தண்டவாளப் பாதைகள், ரம்பலவின் காலத்திலேயே புனர்நிர்மாணம் செய்யப்பட்டன. இன்றும் நாம் காணும் கடுகதி ரயில்கள், ரம்பலவின் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டவையே.

இலங்கையில் புகழ் பெற்ற கண்டி – எல்ல பாதையில் தெமோதர Nine Arch பாலத்தில்
பயணிக்கும் நீலநிற ரயில் வண்டி
பட உதவி: Dennis Binzen/Flickr

1953 ஆம் ஆண்டுவரை இலங்கையின் ரயில்சேவைத்துறை தனது ரயில் வண்டிகளுக்கு நீராவி இயந்திரங்களையே பயன்படுத்தியது. ரம்பலவின் கட்டுப்பாட்டின் கீழ் ரயில்சேவைத்துறை இருந்த காலத்திலேயே, டீசலில் இயங்கும் ரயில் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.  இவ்வாறு, 1955 ஆம் ஆண்டிலிருந்து 1970 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இலங்கையின் ரயில்சேவைத்துறை தனது உன்னதமான முன்னேற்றத்தைக் கண்டது.

1953 முதல் 1983 வரை சேவையில் இருந்த M1 ரக ரயில்வண்டி
பட்டிபொல நிலையத்தில் தரித்து நிற்கும் காட்சி. 
பட உதவி: railpagesrilanka.blogspot.com

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரயில்சேவைத்துறை கவனிப்பாரற்றுப் போனதாகக் கூறப்படுகின்றது. மூன்று தசாப்தங்களாக ஆள்வோரால் ரயில்சேவையின் அபிவிருத்து அலட்சியப்படுத்தப்பட்டதாக சில கருத்துகளும் உண்டு. இலங்கையின் அரசாங்கம் காலப்போக்கில் வீதி அபிவிருத்தியில் கவனம் செலுத்தியது. மேலும், இலங்கை பெருந்தோட்ட விவசாயத்திலில் தங்கியிருந்த காலம் போய், தொழிற்றுறைகளை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தி வந்தது. இவ்வாறு பல்வேறு காரணங்களால் ரயில்சேவைத்துறை பாதிக்கப்பட்டது.

இலங்கையில் நிலவிய உள்நாட்டுப்போர் முடிவடைந்த பின்னர், அரசாங்கம் ரயில்சேவையை மீண்டும் சீரமைக்கும் முடிவுக்கு 2010 ஆம் ஆண்டில் வந்தது. இது இலங்கை ரயில்சேவையின் மறுமலர்ச்சி என்று கூறலாம்.  2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக, ரயில் வலையமைப்பின் தென் மார்க்கம் அடைந்திருந்த பாதிப்பும், 2012 ஆம் ஆண்டில் சீர்செய்து முடிக்கப்பட்டது.  போரால் பாதிக்கப்பட்டிருந்த வடமாகாண ரயில்மார்க்கம் திருத்தி மீளமைக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கும் காங்கேசந்துறைக்கும் ரயில்கள் செல்ல ஆரம்பித்தன. 

இதேவேளை, தெற்கு ரயில் மார்க்கம் மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரை விரிவாக்கப்பட்டது. இதன் காரணமாக, புனித யாத்திரைத் தலமாக இந்துக்களாலும் பௌத்தர்களாலும் கருதப்படுகின்ற கதிர்காமத்திற்கு, இலங்கை மக்கள் புகையிரதம் மூலம் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது.

அண்மையில் ரயில் சேவை ஊழியர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட போது பொது மக்கள் அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட்ட காட்சி
பட உதவி: dailynews.lk

சுற்றுலாவை பிரதான வருமான வழிகளில் ஒன்றாகக் கொண்டிருக்கின்ற இலங்கைக்கு, ரயில்சேவை என்பது மிக முக்கியமானது. எனினும், அண்மைக்காலங்களில் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ரயில்சேவை ஊழியர் பணிப்புறக்கணிப்புகள் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்த வண்ணம் இருக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது, இலங்கை மக்களில் கணிசமானோர் தமது அன்றாடப் போக்குவரத்துக்கு ரயில்சேவையை நம்பியிருக்கின்றனர். இந்த நிலையில், ரயில்சேவையில் ஏற்படும் செயற்கையான தடங்கல்கள், மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிக் கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

முகப்புபடம் - மனோஜ்நாத் சதாசிவம் / Roar Media

Related Articles