மொரீஷியஸின் வரலாற்று பாதையில் பழந்தமிழர்

பத்தாம் நூற்றாண்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக யார் கண்களிலும் அகப்படாமல் இருந்த அந்த அழகான குட்டி தீவில்  16ஆம் நூற்றாண்டு வரை யாரும் இருந்ததற்குச் சான்றுகள் இல்லை. 16 ஆம் நுற்றாண்டுக்குப் பிறகே ஒரு சில போனீசியர்களும்,  மலாய் மக்களும்,  சுவாஹிலியர்களும்,  அரபு மாலுமிகளும் பயணம் செய்தனர். ஆனால்,  அவர்கள் அந்தத் தீவில் நிரந்தரமாகத் தங்கிவிடவில்லை. கடல், மலைகள்,  காடுகள்,  அருவிகள் என அந்தத் தீவு ஓர் உல்லாச சொர்க்கமாகவே இருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் அருகில் இருக்கும் அந்தத் தீவின் பெயர் மொரீஷியஸ். உலகில் உள்ள அழகிய தீவுகளில் மொரிஷியஸுக்கு எப்போதும் ஒரு தனியிடம் உண்டு. இந்தத் தீவின் மொத்த நீளம் 65 கி.மீ,  அகலம் 45 கி.மீ மட்டுமே. தீவின் மொத்த நிலப்பரப்பு 2045 சதுர கி.மீ. தீவின் தற்போதைய மொத்த மக்கள் தொகையினர் 12,68,315. இதில் 68 விழுக்காட்டு மக்கள் இந்திய வம்சாவழியினர்,  27 விழுக்காட்டினர் ஆப்பிரிக்க வம்சாவழியினர்,  3 விழுக்காட்டினர் சீன வம்சாவழியினர்,  2 விழுக்காட்டினர் பிரிட்டீஷ் வம்சாவழியினர்.

இந்தத் தீவு, மிக அழகான இயற்கை அமைப்பைக் கொண்டது.  அழகை வர்ணிக்கும்போது  இறைவன்  மொரீஸியத் தீவைப் படைத்துவிட்டு அதன் சாயலில் சொர்க்கத்தைப் படைத்தான்  என்று பெருமையாகச் சொல்வர்கள். அவ்வளவு அழகிய கடல் கொண்ட இந்த தீவில் பல இடங்களில் ஒரு குண்டூசியைப் போட்டாலும் அதைப் பார்த்து எடுத்துவிடலாம் அந்த அளவுக்குத் தெளிவான தண்ணீர் உள்ளது. சில இடங்களில் நீங்கள், கரையிலிருந்து கடலுக்குள் ஒரு கி.மீ நடந்தாலும் இடுப்பளவு நீரிலேயே இருப்பீர்கள். கடல் மீன்களும் கடல் அழகும் உங்களைக் கவரும். இந்த நாட்டில் உல்லாசப் பயணிகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். காரணம், அந்தக் கடல், அவர்களை அவ்வளவு ஈர்க்கிறது. கடற்கரையை மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் பேணிக் காக்கின்றனர். மொரிஷியசில் அழகிய அருவி ஒன்றும் உள்ளது. பல வித நிறங்களில் மணல் உள்ளது மேலும் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் எட்டு நிறங்களில் மணல் உள்ளது என்பது மிகவும் ஆச்சரியமுட்டும் ஒன்றாகவே உள்ளது. மொரிஷியஸில் ஒரு காலத்திலே அதிகமான தீப்பிழம்புகள் இருந்தன என்றும் கூறப்படுகிறது. அந்தத் தீப்பிழம்புகள்,  கற்பாறைகளாக உறைந்துள்ளமையை இன்றும் காணலாம்.

படம்: omlanka

இன்று மொரிஷியஸ் தீவின் முன்னேற்றத்திலும்,  அதன் பொருளாதார வளர்ச்சியிலும் தவிர்க்க முடியாத சக்திகளாகப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருக்கின்றனர். ஆனால் என்னவோ  வரலாறு இந்தியர்களுக்கு இந்தப் பெருமையை அவ்வளவு  சுலபமாக வழங்கிடவில்லை என்பதே உண்மை. வாழ்வாதாரம் தேடிச்சென்ற இந்தியர்கள் மூன்று நூற்றாண்டுகளாகக் கொடுத்த விலை எவராலும் மதிப்பிட முடியாதது. கி.பி 1500-களில் முதன்முதலாக போர்த்துக்கீசியர்கள் உலக மக்களுக்கு அந்தத் தீவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதன்பின் நூறு ஆண்டுகள் கழித்து டச்சுக்காரர்கள் அந்தத் தீவைக் கைப்பற்றினார்கள்.

பிறகு 1715-ல் பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி அந்தத் தீவில் கால் பதித்தது. நம்மை நாட்டை கைப்பற்றி அடிமைப்படுத்தியது போலவே அங்கேயும் அந்த தீவை கைப்பற்றியது. வணிகம் செய்ய,  துறைமுகம் அமைக்க வேண்டியிருந்தது. அதற்கு பணியாட்கள் தேவைப்பட்டதால்  பிரெஞ்சு ராஜ்ஜியத்தின் துணையோடு,  இந்தியர்களையும்  ஆப்பிரிக்கர்களையும் தீவுக்கு அடிமைகளாக வரவழைத்தது. அந்த துறைமுகமும் சிறப்பாகக் கட்டி முடிக்கப்பட்டது அதுவே போர்ட் லூயிஸ் துறைமுகம். ஆதிக்க சக்திகளின் ஆட்சிக்காலத்தில் அடிமைகளாக நடத்தப்பட்ட மக்கள்  உரிமைகளை இழந்து விடுபட முடியாமல்  வேலை செய்ய மறுக்க முடியாமல் உழைப்புக்கான ஊதியம் பெற உரிமை இல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறே இந்தியர்கள் அடிமைகளாக மொரிசியஸ் மண்ணில் முதன்முதலாகக் கால் தடங்களை பதித்தனர்.

படம்: bluepennymuseum

1721-ல் தீவின் முழு கட்டுப்பாடும் பிரெஞ்சு அரசாங்கத்திடம் மாறியதால் தீவின் பாதுகாப்புக்கு அரண்களை அமைக்கவும்,  மருத்துவமனைகள் கட்டுவதற்கும்,  கரும்பு சாகுபடி செய்வதற்கும் அந்த அடிமைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டனர். தீவின் அதிகமான பொருளாதாரம் கரும்பு சாகுபடியை நம்பி இருந்தது. 1810-ல் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் பிரெஞ்சு அரசைத் தோற்கடித்து அந்தத் தீவு முழுவதையும் சொந்தமாக்கிக்கொண்டது. அதன்பின் கரும்புப் பயிரிடுவதில் மிகப்பெரும் புரட்சி ஏற்பட்டது. கரும்பு ஆலைகளும், அதன் தொழில்நுட்பங்களும் மிக அதிகமாக வளர்ந்தது. அதேவேளையில் தொழிலாளர்களின் உழைப்பும் பெருமளவில் சுரண்டப்பட்டது.

1814 ஆம் ஆண்டில் கையெழுத்தான பாரிஸ் ஒப்பந்தத்தின்படி தீவில் வாழும் பிரெஞ்சு குடியேறிகள் பிரெஞ்ச் மொழியையும், சட்டங்களையும் பின்பற்றலாம் என்று பிரிட்டிஷால் அறிவிக்கப்பட்டது. 1834 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் “The Great Experiment”  என்ற ஒன்றை மொரிஷியஸில் முதன்முதலாக நடைமுறைப்படுத்தியது. இதனடிப்படையில் அடிமைகளை அடிமைகளாக நடத்தாமல்,  குறைந்தபட்ச ஊதியத்துடன்  தங்கும் வசதியுடன்  ஒப்பந்தத் தொழிலாளர்களாக நடத்துவது என்கிற முடிவுக்கு வந்தது. இந்தச் சம்பவமே இந்திய வரலாற்றில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உருவாவதற்கு அடித்தளம்.

படம்: mauritiusattractions

இந்த மாற்றத்துக்கு அடிப்படை காரணம், அடிமைகளை வாங்கவும், விற்கவும் தடைவிதித்து இயற்றப்பட்ட Slavery Abolition Act-1833. அப்போது பதிவு செய்யப்பட்ட அடிமைகளாக இருந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 68,616 நபர்கள் என்று தெரிவிக்கிறது பிரிட்டிஷாரின் பதிவேடு.  அப்போது தொழிலாளர் நலன்சார்ந்த விசயங்களில் கரும்பு நிறுவனங்களுக்கு பிரிட்டிஷ் அரசு கடுமையான சட்டதிட்டங்களை விதித்தது. இருந்தபோதும் நடைமுறையில் தொழிலாளர் நலன் என்பது பல நிறுவனங்களால் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை.

சுரண்டல்கள் போக, பஞ்சத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள், வாழ்வாதாரப் பிரச்சினையைச் சரிசெய்ய கடல் கடந்து போய் உழைக்கவும் தயாராகினர். 1830 முதல் 1920 வரையில் சுமார் 4,50,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரிஷியஸுக்குப் புலம்பெயர்ந்தனர். இன்று ஏறத்தாழ சுமார் 2 மில்லியன் மக்கள் மொரிஷியஸுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். இதில் சரிபாதி இந்தியர்கள். குறிப்பாக வட இந்தியாவைச் சேர்ந்த பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து சென்றவர்களே அதிகம். இது வரலாற்றில் மிகப்பெரும் புலம்பெயர்வாகப் பார்க்கப்படுகிறது.

படம்: fijisun

இந்தியத் தொழிலாளர்கள் மொரிஷியஸில், முதலில் தங்க வைக்கப்பட்ட இடம் லூயிஸ் நகரின் கடலோரத்தில் அமைந்திருக்கும் ஆப்ரவாசி. அடுக்கிவைக்கப்பட்ட கற்பாறைகளால் ஆன இந்தக் கட்டடம் முன்பு, ஒரு பகுதி குடியேற்ற அலுவலகமாகவும், மற்றொரு பகுதி மருத்துவமனையாகவும், அதுவே சேவை மையமாகவும் இருந்துள்ளது. இந்தியர்கள் இங்கு நாள் கணக்கில் தங்க வைக்கப்பட்டனர். முறையான அனுமதி வரும்வரை அவர்கள் இந்த அறைகளில் தான் இருக்க வேண்டும். அதன்பின்னே தீவினுள் செல்ல முடியும். கடல் கடந்து செல்லும் தொழிலாளர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டால் அந்த இடத்தில் தான் சிகிச்சை வழங்கப்படும். அந்த இடத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதால் பல தொழிலாளர்கள் கிடங்குகளிலும், பொதுவெளியிலும் தங்க வைக்கப்பட்டனர். இருந்தபோதும் தொழிலாளர்கள் அன்று ஒன்றுசேரும் இடமாக ஆப்ரவாசி இருந்தது. தற்போது இந்தியத் தொழிலாளர்களின் மிக நீண்ட வரலாற்றை ஆப்ரவாசி கட்டடம் தாங்கி நிற்கிறது.

படம்: balajiviswanathan

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் மொரிஷியஸ் அரசின் கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட Aapravasi Ghat Trust Fund (AGTF) என்கிற அமைப்பு ஆப்ரவாசியை நிர்வகித்து வருகிறது. இந்தியர்களின் கலாசார பாரம்பரியங்களை உணர்த்தும் வகையில் இந்தியர்கள் பயன்படுத்திய பொருட்களைப் பாதுகாத்து வருகிறது ஆப்ரவாசி அருங்காட்சியகம். உலகெங்கிலுமிருந்து ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் பார்வையாளர்கள் ஆப்ரவாசி இடத்துக்கு வந்து செல்கின்றனர். இன்றும் மொரிஷியஸில் வாழும் இந்திய வம்சாவழியினருக்கு ஆப்ரவாசி கட்டடங்கள் மீது உள்ளூரப் பிணைப்பு இருக்கிறது. கடந்த 2006 ஆம் ஆண்டில், ‘ஆப்ரவாசி உலகில் பாதுகாக்க வேண்டிய பாரம்பரிய இடம்’  என அறிவித்தது யுனெஸ்கோ.

பல்வேறு சோதனைகளை தாண்டி அந்த தீவிற்கு சுதந்திரம் பெற்று தமிழ் மொழியில் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்ட தீவாக விளங்குவது நம் முன்னோர்கள் செய்த தியாகங்களும் விடா முயற்சியையும் நினைத்தால் நம் அனைவருக்கும் எத்தனை வியப்பிற்குரிய ஒன்றாக உள்ளது. அதுமட்டுமல்ல மொரீஷியஸில் தமிழ் ஆட்சி மொழியாக இருப்பது கூடுதல் சிறப்பு.

Web Title: History of Tamils in mauritius

feature image creditmea.gov

Related Articles