Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

தேயிலை பற்றி அதிகம் அறிந்திடாத தகவல்கள்

தேநீர். இன்றைய உலகில் நீருக்கு அடுத்தபடியாக அதிகமாக உட்கொள்ளப்படும் பானம். இலங்கையர்கள் என்ற வகையில் ஏனைய  நாட்டவர்களை விட தேயிலை மற்றும் தேநீர் ஆகியவற்றுடனான உறவு நமக்குச்சற்றே அதிகம். காலையில் எழுந்தவுடன் அந்நாளுக்கான ஆரம்பம் ஒரு கோப்பை தேநீர். மாலை நேர இடைவெளிக்கு ஒரு கோப்பை தேநீர். தலை வலி என்றால் ஒரு கோப்பை தேநீர். விருந்தினர் வருகையென்றால் தேநீர். இரவுநேர விழித்திருப்புகளுக்கு துணை செய்வதும் ஒரு கோப்பை தேநீர். இவ்வாறு வெவ்வேறு சேர்மானங்களுடனான தேநீர் நம்மில் பலரது வாழ்க்கையுடன் நீண்டநாளாக பயணம் செய்தவண்ணமே இருந்து வருகிறது. இந்த தேநீரின் தாயகம் எது? ஏன் இது இன்றளவில் உலக  மக்களிடையே இத்துணை பிரபல்யம் பெற்றிருக்கிறது? இக்கேள்விகளுக்கான விளக்கத்தை அளிப்பதே இந்த ஆக்கம்.

தேயிலையின் தாயகம் 

இன்றைய உலகின் மாபெரும் மக்கள் தொகையை தன்வசம் பேணிவரும் சீனாவே தேயிலையை முதன்முதலில் பயிர்செய்த நாடாக அடையாளம் காணப்படுகிறது. சீன புராணங்களின் படி விவசாயத்தை உலகத்திற்கு வெளிப்படுத்திய முதலாவதும், தெய்வீகமானவருமான விவசாயி ஷென்னோங் ஒரு நாள் கானகத்தில் உண்ணக்கூடிய பச்சைத்தாவரங்களை கண்டறியும் நோக்குடன் செயற்பட்டுக்கொண்டிருந்த போது, தவறான தாவரங்களை உண்டு 72 முறை பாதிப்படைந்தார். ஆனால் அந்த தாவர விஷங்கள் ஷென்னோங்கை முழுமையாக பாதிப்பதற்கு முன்னராக காற்றில் பறந்து வந்த இலையொன்று அவரது வாயில் விழுந்தது. அதனை உண்டவுடன் ஷென்னோங்கை தங்கியிருந்த விஷங்கள் செயலற்று போகலாயின. இவ்வாறே இவ்வுலகின் முதல் விவசாயி தேயிலையை கண்டறிந்தார். இந்த புராணக்கதை உண்மையாக இல்லாமல் போயினும் இக்கதை அக்கால சீனர்கள் தேயிலையை மருத்துவ நோக்கத்துக்காக பயன்படுத்தினார்கள் என்பதை நமக்கு வெளிப்படுத்துகிறது.

சீனாவில் தேயிலைப் பயிர்ச்செய்கை நடைபெற்றுவந்த முறை
பட உதவி : i2.wp.com

எகிப்தின் ஃபாரோக்கள்  கீசா பிரமிட்டுகளை கட்டுவதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அதாவது 6000 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்தே தேயிலையானது சீனாவில் பயிர்செய்யப்பட்டு வருவதாக கருதப்படுகிறது. எனினும் கி.மு மூன்றாம் நூற்றாண்டின் அளவிலேயே தேநீர் பயிரிடல் குறித்தான வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கப்படுகின்றன. ஆரம்பகாலங்களில் தேயிலையை ஒரு கீரை வகையாக பயன்படுத்தி தானியக்கஞ்சி வகைகளை செய்து வந்தனர். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே அவை உணவில் இருந்து குடிப்பானமாக மாற்றம் அடைந்தது. ஆரம்பகால தேயிலை இன்று நாம் பார்ப்பது போல தூளாக இருக்கவில்லை, மாறாக பச்சை தேயிலை நீராவியில் அவிக்கப்பட்டு அச்சுக்களில் அழுத்தி ஒரு கேக் வடிவத்தில் சேமிக்கப்பட்டது. இதனை சீனர்கள் muo-cha என்று அழைத்தனர். தற்போது அதுவே motcha என்று மருவியுள்ளது. 

தனியே ஒரு பானமாக மட்டுமில்லாது வேறு பல வழிகளிலும் தேநீருக்கு சீனத்தில் அதிக முக்கியத்துவம் இருந்தது.ஆரம்பகால சீன இலக்கியங்கள் ஒவ்வொன்றிலும் தேநீரானது முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மேலும் சீனாவின் பல பேரரசர்கள் தேநீரை விரும்பி உட்கொண்டமையால் தேநீரானது ஒரு சமூக அந்தஸ்து மிக்க பொருளாக இருந்தது. தற்கால நவீன கோஃபி ஷோப்களில் செய்யப்படும் coffee painting போலவே அக்கால சீனத்தில் தேயிலை சாயத்தை பயன்படுத்தி ஓவியங்கள் வரையப்பட்டது. நீண்டகாலமாகவே சீனாவுக்குள் மாத்திரமே அடைப்பட்டிருந்த தேயிலையானது கி.பி 9ம் நூற்றாண்டில் நிலவியிருந்த டாங் பேரரசின் ஆட்சியில் ஜப்பானிய துறவியொருவர் மூலமாக ஜப்பானுக்கு சென்றது. காலப்போக்கில் தேயிலையை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளில் புதிய மாற்றங்கள் உண்டாகிய வண்ணமே இருக்க கி.பி 14ம் நூற்றாண்டிலேயே இன்று நாம் காணும் தேயிலை தூளுக்கான வடிவம் தரப்பட்டது. அக்காலத்தில் சீனத்தை ஆண்ட மிங் அரச குடும்பம் தேயிலையை பல நாட்களுக்கு சேகரித்து வைக்கக்கூடிய வகையில், பச்சை தேநீரை அவிக்காது, சூடான சட்டிகளில் வறுத்து பொடியிட்டு வைத்துக்கொண்டனர். சீனா பல காலமாக மேற்கத்தைய நாடுகளுடன் வணிகத்தொடர்புகளை பேணி வந்தது. அந்த வகையில் சீனத்தில் இருந்து ஏற்றுமதியான பிரதான பண்டங்க்ள் தேயிலை, சீனப்பட்டு மற்றும் போசளின். 

ஐரோப்பிய தேநீர் கலாசாரம். 

இன்றைய உலகில் தேநீருக்கான கேள்வி அதிகரித்து இருப்பதற்கான காரணம் 1600களில் தேநீர் ஐரோப்பிய கலாச்சாரத்தில் ஏற்படுத்திய தாக்கமே. முதன்முதலில் ஐரோப்பிய மதத்துறவிகள் மூலமே தேயிலையின் அறிமுகத்தை மேற்கு நாடுகள் கண்டன. பிறகு ஐரோப்பிய நாடுகள் தாமாக சீனாவுடன் தேயிலை வர்த்தகத்தை நடத்தின. கிழக்குலக வர்த்தகத்தின் ஆரம்ப சக்தியாக பரிணமித்தவர்கள் டச்சுக்காரர்களே. இவர்கள் தான் முதல் ஐரோப்பிய தேயிலை வியாபாரிகள். கி.பி 1658இல் முதல்முறையாக டச்சுக்காரர்கள் லண்டனில் தேயிலையை விற்கலாயினர். அப்போது தேயிலைக்கு வழங்கப்பட்ட விளம்பரப்படுத்தல் அதன் மருத்துவ ரீதியான பயன்களே. டச்சுக்காரர்களின் வியாபாரத்தின் விளைவாக ஐரோப்பாவின் சிலபகுதிகளில் தேயிலைக்கான சந்தைகள் உருவான போதிலும் பாரிய அளவு முன்னேற்றங்கள் எதுவும் உருவாகவில்லை. 

இளவரசி கேத்தரின் தன் தோழிகளுடன் தேநீர் அருந்தும் காட்சி
பட உதவி : img-fotki.yandex.ru

கி.பி 1662 இல் போர்த்துக்கள் நாட்டின் இளவரசியான கேத்தரின் ஆஃப் ப்ரகான்ஸா இங்கிலாந்தின் அரசரான சார்ள்ஸ் 2 ஐ மணம் செய்தமையே தேயிலைக்குரிய அந்தஸ்தை ஐரோப்பாவில் உயர்த்தியது. 17ம் நூற்றாண்டில் இருந்தே உலகசக்தியாக வளர்ச்சியடைந்து வந்த பிரித்தானியாவிற்கு அரசியாக வேண்டும் என்ற நோக்கக்த்திற்க்காகவே இளவரசி கேத்தரின் சார்ள்ஸை மணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்காக போர்த்துக்கள் தரப்பில் இருந்து பாரியளவில் சீர்வரிசைகள் பிரித்தானியாவிற்கு சென்றது. அதில் ஒன்றே அரசி கேத்தரினின் விருப்பத்திற்குரிய தேயிலை. கேத்தரின் அரசியானதும் கேத்தரினிடம் இருந்த தேநீர் பழக்கம் பிரித்தானிய உயர்குடி பெண்களிடம் வேகமாக பரவியது. மாலை நேரங்களில் பெண்கள் ஒன்றாக இணைந்து தேநீர் பரிமாறிக்கொள்ளும் டீ டைம் பழக்கம் இன்றளவும் ஐரோப்பாவில் வழக்கில் உள்ளது. Motcha என்று அழைக்கப்பட்ட தேயிலைக்கு Tea என்ற பெயர் வருவதற்கு காரணமாக இருந்ததும் அரசி கேத்தரின் தான் என்ற கருத்து நிலகிவுகிறது. கேத்தரின் தேயிலைகளை கொண்டுவந்த பெட்டியில் 

Transporte de

Ervas

Aromalsicus

என்று எழுத்தப்பகிட்டிருந்தது. இந்த மூன்று வார்த்தைகளின் முதல் எழுத்துக்களும் இணைந்தே TEA என்ற வார்த்தை உருவானது என்று கருதப்படுகிறது.

பிரித்தானியவில் உருவான இந்த புதிய கலாச்சாரம் வெகுவிரைவில் அண்டைய நாடும், ஐரோப்பாவின் மற்றுமொரு சக்தியுமான பிரான்சில் சூடுபிடிக்க ஆரம்பித்தது. தேயிலைக்கான கேள்வியில் மிகவேகமாக உயர்வடைந்தது. முதன்முதலில் தேநீரில் பால் சேர்க்கும் முறையானது ஐரோப்பாவிலேயே தோற்றம் பெற்றது. பிரித்தானியாவில் இன்னும் சற்றுக்கூடுதலாக மேற்கிந்திய தீவுகளில் இருந்து பெறப்பட்ட கரும்புச்சக்கரையும் சேர்க்கப்பட்டது. தேயிலையின் தாயகமாக சீனா இருந்தாலுமே கூட, இன்று நம்மில் பலர் தேநீர் அருந்தும் முறை ஐரோப்பாவுக்கு உரியதே. 1700களில் கோஃபியை காட்டிலும் 10 மடங்கு அதிகமாக தேயிலை நுகரப்பட்டது. தேநீருக்கு உருவான இந்த அதீதகேள்வியின் விளைவாக ஐரோப்பிய கடல் வணிகத்தில் பெரும் போட்டி சூழ்நிலை உருவானது. உலகின் மிகவேகமான கப்பல் வகையான க்ளிப்பர் கப்பல்கள் உருவாக இந்த தேயிலை வணிகமே காரணம் ஆகியது. சீனத்தில் இருந்து எவர் விரைவாக தேயிலை கொண்டு வருகின்றனரோ அவர் பெரும் லாபத்தை காணலாகினார். இந்த திடீர் பொருளாதார மாற்றமானது விரைவில் அரசியலாகவும் மாற்றம் கண்டது. 

உலகின் மிகவேகமான கப்பல் வகையான க்ளிப்பர் கப்பல்
பட உதவி : 3.bp.blogspot.com

தேயிலை ஏகாதிபத்திய முறியடிப்பு

1800களின் மத்தியகாலம் வரையில் உலகத்தில் தேயிலைக்கான பிரதான, ஏகபோக உற்பத்தியாளராக இருந்தது சீனாவே. பொதுவாகவே வெளிநாட்டவர்களை சற்று அவதானத்துடனேயே நெருங்குவது சீனர்களின் வழக்கம். மேலும் தங்களுடைய கலாச்சாரத்தை பேணுவதிலும் அதிக அக்கறை கொண்டவர்கள். எனவே ஐரோப்பியர்களால் சீனாவுடன் வர்த்தகத்தை பேண முடிந்ததே தவிர, தேயிலை உற்பத்தி பற்றிய எந்தவிதமான தகவல்களையும் பெற முடியவில்லை. ஐரோப்பாவிலோ ஏகத்திற்கு தேயிலைக்கான கேள்வி உயர்ந்து வந்தது. வர்த்தகப்போட்டியும் உயர்ந்த வண்ணம் போக, சீனாவுக்கு அதிகளவு வெள்ளிக்காசுகளை செலுத்தியே தேயிலை வாங்கவேண்டிய நிலை ஏற்படவும் பிரித்தானியாவில் வெள்ளிக்கான தட்டுப்பாடு உருவானது. 

வங்காளத்து போதைச்செடி ஓபியம்
பட உதவி : demotywatory.pl

இக்காலத்தில் இந்தியாவின் பெரும் பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்தது. வெள்ளிக்கான தட்டுப்பாட்டை சமப்படுத்தும் வகையில் பிரித்தானியா சீனத்துடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டது. அதன்படி தேயிலைக்கு பதிலாக ஓபியம் என்ற வங்காளத்து போதைச்செடிகள் பரிமாற்றப்பட்டது. ஆரம்பத்தில் எல்லாம் சுமூகமாக சென்றாலும் சிறிதுகாலத்திலேயே சீனமக்கள் ஓபியத்திற்கு அடிமைகளாயினர். நிலைமை கைமீறிப்போவதற்குள் மக்களை காக்க எண்ணிய சீனாவின் சின் அரசு பிரித்தானியாவின் ஓபியத்தை தடை செய்ததுடன், சீன துறைகளில் நின்ற ஓபியம் படகுகளை அழித்தது. சின் அரசின் இந்த அதிரடியான செயல்பாடு சீனாவுக்கும் பிரிதானியாவுக்கும் இடையே 3 போர்கள் நடைபெற காரணமானது. 1839இல் இருந்து 1842 வரையில் நடந்த இந்த ஓபியம் போர்களின் இறுதியில் பிரித்தானியா வெற்றி பெற்றதுடன், ஹாங்காங் துறைமுகத்தை தன்னுடைய காலனிப்பகுதியாக மாற்றிக்கொண்டது. அதை தொடர்ந்து சீனாவுடன் இருந்த வர்த்தகத்தொடர்புகளில் அதீத கெடுபிடிகளையும் திணித்தது. 

சீனாவிற்குள் உளவாளியாக அனுப்பப்பட்ட ராபர்ட் ஃபார்ச்சூன்
பட உதவி : media.npr.org

பிரித்தானியா எத்தனையோ முயற்சிகளை செய்த போதிலும் சீனாவிடம் இருந்து தேயிலை விதைகளையோ, அதை பயிர்செய்யும் கலையையோ அறியமுடியவில்லை. எனினும் 1823இல் ஆங்கிலேயரான மேஜர் ராபர்ட் ப்ருஸ் இந்தியாவின் அஸ்ஸாமில் காட்டுத்தேயிலை பயிர்களை மக்கள் பயன்படுத்துவதாக கண்டறிந்தார். எனினும் அதனை சீனாவின் தேயிலைக்கு பதிலாக பயிரிடுவதற்கு பிரித்தானியா முன்வரவில்லை. எனவே தந்திரோபாயம் ஒன்றை கையாள முடிவெடுத்தது பிரித்தானியா. 1848 இல் தாவரவியல் அறிஞரான ராபர்ட் போர்சூன் (Robert Fortune) என்பவரை சீனாவுக்குள் ரகசிய உளவாளியாக அனுப்பினர். சிலவருட முயற்சிக்கு பின்னர் தரமான தேயிலை விதைகள், கன்றுகள் மற்றும் தேர்ச்சிமிக்க 80 தேயிலை விவசாயிகளுடன் இந்தியாவுக்கு திரும்பினார். இந்தியாவின் டார்ஜிலிங் பகுதியில் முதல் தேயிலை பயிர்ச்செய்கையை பரிசோதித்த பிரித்தானியா வெற்றியடைந்தது. த்தொடர்ந்து நீலகிரி உள்ளிட்ட இந்தியாவின் சிலப்பகுதிகளிலும், இலங்கையின் மலைநாட்டிலும், கென்யாவிலும் பாரிய தேயிலை தோட்டங்கள் உருவாக ஆரம்பித்ததும் சீனாவின் தேயிலை ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்தது. 

இலங்கை : தேயிலை தேசம். 

இலங்கையின் மிக ஆரம்பகால பெருந்தோட்ட பயிர்ச்செய்கையானது கறுவா. இது ஒல்லாந்தர் காலத்திலேயே அதிகளவில் நடை பெற்று வந்தது. எனினும் காலப்போக்கில் இலங்கையின் கட்டுப்பாடு பிரித்தானியாவின் கைவசம் வந்ததும் கறுவாவிற்கு பதிலாக கோப்பி பயிசெய்கை இலங்கையில் வலுப்பெற்றது. எனினும் 1800களின் இறுதியில் இலங்கையில் கோப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட இலைத்தொற்றால் பெருமளவு கோப்பி பயிர்கள் அழிந்தன. அதை தொடர்ந்து கோப்பிக்கு பதிலீடாக கோக்கோ முதலியவை பயிரிடப்பட்ட போதும் அவைகளும் குறித்த இலைத்தொற்றுக்கு ஆளாகின. 1870இல் கோப்பி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த முதலாளிகள் ஒரு மனதாக ஒரு புதிய பயிசெய்கைக்கு மாறினர். அப்பயிர் தேயிலை. 

இலங்கை மலையக தேயிலை பயிர்ச்செய்கை
பட உதவி : tea-gen.com

1824 இல் இருந்தே இந்தியாவின் அஸ்ஸாம் மற்றும் கல்கத்தாவில் இருந்து கொண்டுவரப்பட்ட காட்டு தேயிலை பயிர்கள் பேராதனை பூங்காவில் நடப்பட்டிருந்த போதிலும்,1867லேயே முதலாவது வர்த்தக நோக்க பயிர்செய்கைக்காக தேயிலை பயிரிடப்பட்டது. கண்டி மாவட்டத்தின் லுல்கந்துர பகுதியில் ஜேம்ஸ் டெய்லர் எனும் ஆங்கிலேயரே இதனை செயற்படுத்தினார். 19 ஏக்கர் நிலப்பரப்பில் உருவான இந்த தோட்டத்தில் இருந்து 1873இல் சுமார் 10கிலோகிராம் தேயிலை லண்டன் நகரத்தை அடைந்தது. இலங்கை தேயிலைக்கான மதிப்பு அதிகரிக்கவே 1899 அளவில் இலங்கை முழுவதிலும் சுமார் 400,000 ஏக்கர் தேயிலை தோட்டங்கள் உருவாகின. 

நேரடியாகவோ மறைமுகமாகவோ இன்றைய நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேயிலை உற்பத்தியில் தொடர்பு கொண்டுள்ளனர். இலங்கையின் சிங்கள மக்கள் தேயிலை பயிரிடலில் ஆர்வம் இல்லாமல் இருந்தபடியால், குறைந்த ஊழியத்தில் இந்தியாவில் இருந்து பல தமிழர்கள் இலங்கைக்கு பல்வேறு காலகட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர். தேயிலை தோட்ட வரலாற்றுக்கு முன்னமே சுமார் 100,000 தொழிலாளர்கள் இவ்வாறு குடிபெயர்ந்து வந்தனர். இன்றைய நாட்களில்கூட இவர்களின் சந்ததிகளே இந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்புகளாக நிற்கின்றனர். எனினும் அவர்களுக்கு அரசாங்கம் இன்றளவும் நியாயமான ஊதியத்திற்காக அவர்களை போராடவிடுவது, இந்நாட்டின் குடிமகன் என்ற ரீதியில் நாம் அனைவரும் வெட்க வேண்டிய விடயம்.

இலங்கையின் தேயிலை உற்பத்தியானது உலகளவில் நல்ல  வரவேற்பை பெற்றிருப்பதால் நாட்டின் மொத்த தேசிய வருமானத்திற்கு கணிசமான அளவில் பங்களிப்பு செய்கிறது. இலங்கையின் பிரதான தேயிலை ஏற்றுமதி நாடுகளாக இருப்பவை வடக்கு ஆசிய நாடுகளும், மேற்கு ஆசிய நாடுகளுமே. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 58% இந்த பகுதிகளுக்கே செல்கின்றன. 

தேநீர்

உலகில் பல்வேறு மக்கள் தொகுதிகளால் அருந்தப்படும் இந்த தேநீர் இடத்திற்கு இடம் வேறுபட்ட செய்முறைகளில் பரிமாறப்படுகிறது. நேபாளத்தில் உப்பும், யாக் மாட்டின் பாலுடனும் பரிமாறப்படும் அதே நேரத்தில், இந்தியாவில் இஞ்சி, ஏலக்காய் மற்றும் கறுவா போன்ற வாசனை திரவியங்களுடன் தேநீர் தயாரிக்கப்படுகிறது. 

சூடாக பரிமாறப்படும் சுவையான தேநீர்
பட உதவி : static.wixstatic.com

இத்தனை ஆர்வத்துடன் மக்கள் தேநீரை அருந்துவத்தில் நல்ல பயன்களும் இருக்கத்தான் செய்கிறது. சராசரியாக நாளொன்றுக்கு 2 தொடக்கம் 3 கோப்பை தேநீர் அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கு மனஅழுத்தம், பக்கவாதம் மற்றும் இதயநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு தேநீர் அருந்தாதவர்களுடன் ஒப்பிடும் போது குறைவாக உள்ளது. எனவே அடுத்த முறை ஒரு கோப்பை தேநீரை அருந்தும் போது முகத்தில் ஒரு புன்னகையை படரவிடுங்கள். ஏனெனில் தேநீர் நல்லது. 

முகப்பு பட உதவி : agridoctor.valartamilpublications.com

Related Articles