களப்பிரர் ஆண்ட தமிழகம் | பகுதி 1 | வந்தார்கள் வென்றார்கள் | #தமிழ்பாரம்பர்யமாதம்

வரலாறு எனப்படுவது மக்களால் ஒப்புக்கொள்ள முடிவு செய்யப்பட்ட கடந்தகாலத்தின் தொகுப்பே” -நெப்போலியன் பொனபார்ட்

கடந்து செல்லும் ஒவ்வொரு காலத்துளியும் வரலாறு எனும் பெருங்குளத்தையே அடைகின்றன. ஆனால் வெற்றி பெற்று நிலைகொண்ட மாந்தர்களே அவ்வரலாற்றை வருங்காலத்துக்கு பாய்ச்சுகின்றனர். தம் புகழுக்கு அணிசெய்பவை காக்கப்படும், அல்லாதவை அழிக்கப்படும். உலகவரலாற்றின் அநேக பக்கங்கள் வெற்றியால் விளைந்தவை. இப்பிரமானத்திற்கு எவரும் விதிவிலக்கல்ல. “கலைகளை போற்றி காருண்யம் போதித்தானாம் நம் மறத்தமிழன்” என மார்தட்டிக்கொள்ளும் எவரும் தம் வரலாற்றின் காரிருள் படிந்த பக்கங்கள் குறித்து அறிய முற்படுவதில்லை. ஆவண வரலாறு அமையாத காலத்தை நாம் காரிருள் காலம் என்பது தகும். ஆனால் முன்னும்,பின்னும் செழிப்பான வரலாறு அமைந்திருக்க ஒரு இடையீட்டுக்கலாம் மட்டும் கறுத்திருப்பதை கண்டும் அதை வினவாமல் இருப்பது முறையல்ல.  உற்றுநோக்கினால் உணரலாம் அவை காரிருள் பக்கங்கள் அல்ல, கயவர்கள் எரித்தழித்த பக்கங்களின் கரியும் சாம்பலும் என. சங்கம் அமைத்து தமிழ்வளர்த்த நம் வரலாறு முந்நூறாண்டுகள் மூடிக்கிடந்து திடீரென பல்லவர்களுக்கு திறந்து விடப்பட்டது போல தொடர்வது வாதத்திற்குரியது.

‘தமிழ்த்தேசியம்’, ‘தமிழர் நாடு’, ‘தமிழ் ஆட்சி’ சமகாலத்தில் சமூகவலைத்தளங்கள் தொட்டு சட்டங்கள் இயலும் பாராளுமன்றம் வரை பேசப்பட்டு வரும் ஒரு பொதுவான தலைப்பு. தமிழன் என்ற வகையில் நம்மில் பலருக்கும் இத்தகைய சுதந்திர கருத்துக்களை செவியுறும் போதெல்லாம் உள்ளூர ஒரு கர்வமும், பெருமையும், அச்சமும், ஆர்வமும் உண்டாகும். காரணம் நாம் கண்முன் கண்ட வரலாறு. நாம் செவியுற்ற வரலாறு. தமிழ் என்ற வரையறைக்குள் நிற்கும் போதெல்லாம் நம் பெருமைக்கு சான்றாக நாம் முன்னிறுத்திக்கொள்வது நம் வரலாறு.

“லெமூரியா ஆண்ட தமிழன், சங்கம் வளர்த்த தமிழன், கங்கை முதல் கடாரம் வரை ஆண்டு வந்த தமிழன், முப்பதாண்டுகளாய் வீரப்போர் செய்து சுயம் காத்த தமிழன்” என ஒரு குறுகிய வட்டத்தினுள் நின்ற வண்ணம் புகழ்ப்பாடிக்கொண்டு இருக்கிறோம். எது பிறரால் விரும்பி கேட்கப்படுகிறதோ, எது நமக்கு புகழை சேர்க்கிறதோ அதுவே நம் மனங்களில் நின்று விடுகின்றன. மற்றவை எல்லாம் ஆற்றில் கரைத்த புளிக்கு சமானம். கற்களில் காவியம் பாடிய பல்லவர்களும், காவியத்தில் புது உலகம் சமைத்த சேரர்களும் நம் மனங்களை விட்டு அகன்று விட்டனர். வெற்றிடத்தை நிரப்ப வேற்றுநாட்டில் இருந்து சேகுவாராவும், ஹிட்லரும் வந்து விட்டனர்.

“கடந்தகாலத்தை கொண்டு நிகழ்காலத்தை திட்டமிடுவதன் மூலம் எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள முடியும். நம் வரலாற்றை மறந்து செயற்படுவது அத்திவாரம் இல்லாத கட்டடத்திற்கு நிகர்த்தது” – பண்டித். ஜவஹர்லால் நேரு

அத்திவாரங்களின் அழகானது என்றும் வலிமை மட்டுமே, அதன் புறதோற்றம் இல்லை. ஆனால் நம்வரலாறு என்னவோ பெரும் அலங்காரங்களுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நம் கைகளுக்கு தரப்பட்டுள்ளது. ஆனால் அவைகள் நமக்கு பெரிய விடயமாக இல்லை. அவ்வாறே எவரேனும் அதை கண்டறிய விளைந்தாலும் நாம் அலட்டிக்கொள்வதில்லை. அண்மையில் கீழடி ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்ட நேரம் உருவான பரபரப்பு சிறிதே நாட்களில் flying kiss அடித்து ட்ரெண்டிங் ஆன ஒரு ட்ரைலரால் மறைந்து போனது. வீரதமிழன் என பெயர்பெற்ற நாம் என்று வாட்ஸாப் தமிழர்கள் ஆனோமோ அன்றே நம் வரலாறு ‘sharing’ எனும் வட்டத்துக்குள் முடக்கப்பட்டு விட்டது. நம்மூதாதைகள் நமக்கென விட்டுச்சென்றதுடன் மாத்திரம் வாழப்பழகிவிடாமல், காலத்துக்கு உவக்காதென அவர்கள் மறைத்து சென்றதையும் தேடியாக வேண்டும். நம்முடைய வரலாறு நமது அத்திவாரம் என்பதை நாம் உணரத்தலைப்பட ஆரம்பித்தால் அன்றி நம்சமூகம் என்ற கட்டிடம் சரிவதை நம்மால் வேடிக்கை மட்டுமே பார்க்க இயலும்.

 • சங்கம் எங்ஙனம் மருவிப்போனது?
 • மூவேந்தர்கள் மூன்னூறாண்டாய் எங்கு சென்றனர்?
 • எவர் ஆட்சி நிலவியது அப்போது?
 • ஏன் அந்தக் காலம், தமிழகத்தின் இருளான பக்கங்களானது?

தமிழக வரலாற்றை ஒரு வாசகன் என்ற ரீதியில் அணுகும் போது இவற்றை நான் வினவிக்கொண்டேன். விடைத்தெரியாத வினவல்கள் தரும் ஆர்வம் அளப்பரியது. என் ஆர்வத்துக்கு உயிரளித்தது போல இந்த ஆக்கத்தை அமைத்தேன். இருண்ட காலம் என அறியப்பட்ட சங்கம் மருவியகாலத்தின் முற்காலத்தையும், பிற்காலத்தையும், சமகாத்தில் நிலவிய மாற்றரசுகளின் ஆதாரங்களையும் கொண்டு இந்த படைப்பு உருவாக்கப்படுகிறது.

ஒளிக்கீற்று

கணினி மாந்தர்களாக மாறிப்போன நம்மில் ஒருவரின் கேரக்டர் ஐ தெரிந்துகொள்ள வேண்டுமெனில் முன்னரைப்போல அக்கம் பக்கத்தாரிடம் வினவவேண்டியதில்லை. அவர்களின் கைப்பேசியே போதும், காலத்திற்கும் அவர்கள் செய்தது, செய்வது, செய்யப்போவது என அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம். எனினும் எவர் அதனை கையளிப்பார் பிறரிடம்? வீட்டின் சாவியைக்கூட தந்துவிடுவார்கள், ஆனால் கைப்பேசியை கட்டிய மனைவியை போல பிறர் தீண்டா வண்ணம் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வார்கள். கைபேசி கிடைக்காவிட்டால் என்ன, சமூகவலைதங்கள் தான் மலிந்து போய் உள்ளனவே. ஏதோ ஒரு செயலியை தெரிவு செய்து நாம் அறியவிரும்பும் அன்பரின் பெயரை தட்டிவிட்டால் போதும். திறம்பட அவர்களை பற்றி அறிந்துகொள்ளலாம். ஒன்றில்லை இல்லையெனில் இன்னொன்றென ஏதோ ஒரு வலைதளத்தில் சிக்காமல் போக எவராலும் இயலாது. ஒரு தனிமனிதன் குறித்து அறிவதற்கே இத்தினத்தில் நம்மிடம் இத்தனை வசதிகள் இருக்க, வரலாற்றின் இருண்ட பக்கங்களை அலசிக்கொள்வதற்கு தகுந்த ஊடகங்கள் இன்றளவும் நம் கைகளுக்கு கிடைக்கவில்லை.

தமிழகத்தின் வரலாற்றின் இருண்ட காலம் என வர்ணிக்கப்படும் காலமானது மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டு வரையே ஆகும். இம்முந்நூறு ஆண்டுகள் பற்றி நமக்கு கிடைக்கும் வரலாற்று ஆதாரங்கள் மிகவும் சொற்பம். இதன் நிமித்தமே இக்காலப்பகுதி தமிழக வரலாற்றின் இருண்ட பகுதி என பொதுவாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் இப்பெயரிடலுக்கு பின்புறம் இன்னொரு காழ்ப்புணர்ச்சி மிக்க வரலாறும் அடங்கியுள்ளது என்பதை பின்பு நோக்கலாம். இருண்டகாலமான இந்த பெருங்குகையை ஊடறுத்துச்செல்ல சில ஒளிக்கீற்றுக்களே உறுதுணை செய்கின்றன. அவற்றுள்ளும் பெருவாரியானவை ஊகங்களை அடிப்படியாகக்கொண்டதும், கவித்துவம் மிக்கதும், பிறநாட்டு வரலாறுகளுடனும் தொடர்புடையதே ஆகும்.

ஒரு வரலாறு குறித்து அறிந்துகொள்ள இருவகையான மூலங்கள் பயன்படும். உள்வாரி மூலங்கள் (ஒருவரின் கைபேசியை போல) மற்றையது வெளிவாரி மூலங்கள் (சமூகவலைதளங்கள் போல). இவை இரண்டில் உள்ளக மூலங்களே பிரதானமானதும், பெரிதும் விரும்பப்படுவதும் ஆகும். ஆனால் இருண்ட காலத்தில் இத்தகைய உள்வாரி மூலங்கள் மிகவும் குறைந்த அளவே கிடைக்கின்றன.

 • 1979 இல் கண்டுபிடிக்கப்பட்ட பூலங்குறிச்சி (பொன்னமராவதிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர்)கல்வெட்டுகள் சங்கம் மருவிய காலத்தை அறிந்து கொள்ளப்பயன்படும் மிகப்பிரதான மூலாதாரம்.
 • கொங்குநாடு(அரசலூரில்) கண்டறியப்பட்ட கற்பலகை
 • கரூர் அருகில் கண்டுபிடிக்கப்பட்ட வட்டப்பாறை கல்வெட்டு
 • புத்ததத்தர் எழுதிய அபிதாமாவதாரம்
 • வச்சிரதந்தி அமைத்த திரமிளசங்கம்
 • ரோமநாணயங்கள், மட்பாண்ட சிதைவுகள்

வெளிவாரி மூலங்கள் என நோக்கும் போது சமகாலத்தில் கிடைக்கும் பிறநாட்டு ஆதாரங்களும், பிற்காலத்தில் கிடைக்கும் உள்நாட்டு ஆதாரங்களும் கிடைத்துள்ளன. அவை

 • வேள்விக்குடி செப்பேடுகள். இவையே சங்கம் மருவிய காலத்தை குறித்து முதன்முதலில் குறிப்பிடும் வரலாற்று ஆதாரம்.
 • திருஞானசம்பந்தரின் திருவையாற்றுப்பதிகம்
 • கால்லாடம், யாபெருங்கோல் விருத்தி, சில தனிப்பாடல்கள்
 • பெரியபுராணப்பாடல்கள்
 • சாதவாகன கல்வெட்டுக்கள்
 • சின்னமனூர் செப்பேடு
 • பல்லவர்கால செப்பேடுகள்
 • அபிச்சத்திரா, மதுரா, பிருந்தாவனம், புத்தகயா, வாரணாசி ஆகிய பகுதிகளில் கிடைத்த அகழாய்வு படிமங்கள்

இங்ஙனம் இந்தியா முழுவதும் கிடைத்துள்ள ஆதரங்களைக்கொண்டு மு.அருணாசலம் உள்ளிட்டோர் சங்கம் மருவிய காலம் தொடர்பான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதுவும் இருண்டகாலத்தை பற்றி தெரிந்துகொள்ள மிகவும் உதவுகிறது. சீவகசிந்தாமணி, மணிமேகலை ஆகிய காவியங்களை ஆதரமாகக்கொண்டு சங்கமருவிய காலம் குறித்த வாழ்க்கை முறைகளை ஒருவாறு ஊகிக்கவும் முடியும். கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை பயன்படுத்தி ஒரு எடுகோள் ரீதியான ஆக்கமாக இது உருவாக்கப்படுகிறது. ‘பேக் கிரௌண்ட்’ தெரியாமல் எந்த விடயத்தை ஆய்வு செய்தாலும் முழுமையான விளக்கம் கிடைக்காது. எனவே மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரான சங்ககாலத்தில் நிலவிய பேக் கிரௌண்ட் குறித்து முதலில் காணலாம்.

கங்கை – வைகை

வேதகாலம் என அறியப்பட்ட காலத்தில் இருந்தே ஆரியர்களின் குடிபெயர்வுகள் வட இந்தியா முழுவதும் நடைபெற்ற வண்ணம் இருந்தன. ஆரிய பிராமணர்கள் உள்நுழையும் இடங்கள் யாவும் ஆரியமயப்ப்டுத்தபட்டன. சுதேச வழிபாட்டு முறைகளை ஆரியத்துடன் இணைத்து அப்பகுதியில் வாழ்ந்த மக்களை வைதீக கோட்பாடுகளுக்கு உட்படுத்தி பிராமணர்கள் வயிறு வளர்த்தனர் என்பது பொதுவான வரலாற்று கருத்து. வைதீக கோட்பாடு, வர்ணாசிரம பிரிவு என்ற அடித்தளத்தில் அமைக்கப்பட்டது. கடுமையான சாதிப்பாகுபாடும், அடக்குமுறைகளும் மக்கள் மீது திணிக்கப்பட்டதன் விளைவாக பௌத்தம், சமணம் ஆகிய வேத எதிர்ப்பு(நாஸ்திக) மதங்கள் தோன்றி மக்களின் ஆதரவை பெற்றன. அதிகாரம் மிக்க பிராமண சமூகத்துக்கு எதிராக உருவான இந்த தன்மை ஒரு தாழ்த்தப்பட்ட ஹீரோ அதிகாரம் நிறைந்த வில்லனை எதிர்க்கும் தற்கால மசாலப்படம் போன்றது இல்லை. மாறாக கருணையற்ற வில்லனை கொண்ட கொரிய பேய்ப்படங்கள் போல இருந்தன. ஒன்றை ஒன்றும் விஞ்சும் போது சிலவேளைகளில் மனிதத்தின் எல்லைக்கோடுகள் மறக்கப்பட்டன.

கடலோரங்களில் வாழும் ஒரு புல் குறித்து நாம் பெரிதும் கேள்வியுற்றிருப்போம். ராவணன் மீசை. ஒரு இடத்தில் தன்னை நிலையாக பற்றிக்கொண்ட பின்பு தன் ஓடி வேர்களை ஒட்டி, கரைகளை முழுவதுமாய் கட்டிவிடும். ஒரு இடத்தில் தான் அழிந்தாலும் பிறிதிடத்தில் தன்னை வளர்த்துக்கொண்டே போகும். அங்ஙனமே பிராமண சமூகமும் தனக்கு வரப்போகும் ஆபத்தை முன்பே உணர்ந்தாற்போல் பாரதம் முழுவதும் தங்களை பரப்பிக்கொண்டனர். கங்கையின் கரைகளில் இருந்த பிராமண மீசை, வைகையின் கரைகள் வரை வேர்களை ஒட்டியது.

தோற்றுவாய்

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மூவேந்தர்களின் ஆட்சி தமிழகத்தில் நிலவிய காலமது. மக்கள் இயற்கையில் இறைவனை கண்ட காலம். பாலைமக்கள் கொற்றவையையும், குறிஞ்சிமக்கள் குமரனையும், நெய்தல்மக்கள் வாலியையும், முல்லைமக்கள் மாயோனையும், மருதநில மக்கள் வஞ்சிக்கோவையும் வழிப்பட்டகாலம். ஈஸ்வரனும்,நாராயணனும் தமிழகத்தில் உள்நுழையாத காலம். அக்காலத்தில் தமிழகம் தன்னிறைவான பொருளாதார முறைமையை கொண்டிருந்தது. தம்முடைய தேவை போக எஞ்சியது அரசுக்கு வரியானது. சங்ககாலத்தில் சிற்றரசர்களின் வகிபாகம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. அவர்களின் ஆதரவு இல்லாமல் இன்னொரு பெருநாட்டை போரில் வெல்ல இயலாத நிலை காணப்பட்டது. போர்களின் மூலம் போதுமான செல்வங்களை திரட்டிக்கொண்ட அரசுகள், அச்செல்வங்களை தன் சிற்றரசுகளுடன் பகிர்ந்து கொண்டது.பரதவர்கள் ஆழியை ஆட்சி புரிந்தனர்.  திறைகடல் ஓடி திரவியம் தேடிய வணிகர்கள் அரசுக்கு முதுகெலும்பென உதவி நல்கினார்கள்.

வடநாடுகளுடன் ஏற்பட்ட பொருளாதார தொடர்பு என்ற இழையை பற்றிய படி வேதியர்கள் தமிழகம் அடைந்து தங்களை நிலைப்படுத்திக்கொண்டனர். வேதியர்களின் ஆதிக்கத்தால் அரசன், வணிகன், வேளிர் என்ற பிரிவினை மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. வடநாட்டில் உருவான சாதிய அடக்குமுறைகள் போன்ற ஒரு சம்பவம் மெல்ல மெல்ல தமிழகத்தில் உருவாக ஆரம்பித்தது. அசோகர் காலத்தில் பௌத்தமும், சமணமும் கூட தமிழகத்தை அடைந்து அமைதியாக தம் வழியில் சென்றுகொண்டிருந்தன. இந்த நாஸ்திக(வேத எதிர்ப்பு)மதங்கள் மக்கள் மத்தியில் நல்ல அபிமானத்தை பெற்றிருந்தன.

யாதும் ஊரே யாவரும் கேளீர் தீதும் நன்றும் பிறர்தர வாரா என கனியன் பூங்குன்றனார் பாடியதில் சமணம் மற்றும் பௌத்தத்தின் தாக்கத்தை உணரக்கூடியதாக இருந்தது. பூம்புகார், காஞ்சி ஆகிய இடங்களில் விகாரைகள் மெல்ல முளைத்தெழுந்தன. மீண்டுமொரு வைதீக எதிர்ப்பு போராட்டத்திற்கான அடித்தளம் இடப்பட்டது. ‘இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழப்பழகு’ என்பது எப்போதும் வாய்மொழியுடனே கடந்து போகிறது. ஏதோ ஒன்று நம்மில் இருந்து வேறுபட்டு, கவரும் வண்ணம், உயர்ந்தது உள்ளது போல மனதின் ஒரு மூலையில் தோன்றிவிட்டால் போதும். அது உடனே நம்மிடையே ட்ரெண்டிங் ஆகிவிடும். சிறிது நாளில் ஃபாஷான் ஆகிப்போகும். பின்னர் நம் லைஃப் ஸ்டைல் என்றாகி நீண்ட இடைவெளியில் நம் கலாசாரமும் ஆகிப்போகும். நமக்கு இந்த பரந்த மனம் உருவாகிப்போக காரணம் நம்மூதாதைகள் காட்டிச்சென்ற வழி தான். தனித்தன்மையுடன் விளங்கிய ஆதித்தமிழ் மரபுகளை மறந்து வெள்ளைத்தோல் ஆரியர்கள் கடைப்பிடித்தவற்றை நம்மவரும் கைக்கொண்டனர்.

தமிழர்கள் தெய்வமான கொற்றவையும், குமரனும் வைதீகர்களின் பூசனைகளில் இடம்பெற்றனர். மக்களின் ஆதரவு வைதீகத்தை சேர்ந்தது. பார்ப்பனர்கள் தம்முடைய வேத வேள்விகள் குறித்து மன்னர்களுக்கு தெளிவுபடுத்த ஆரம்பித்தனர். போர்களில் வெல்வதற்காக யாகங்களை செய்யுமாறு மன்னனுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

வேத வேள்விகளை பிராமணர்கள் மட்டுமே செய்யவேண்டும் எனவும், வேதத்தை பிறர் கற்பது மஹாபாவம் எனவும் மக்களை நம்பசெய்தனர். வடக்கே பௌத்தமும், சமணமும் சமாதானத்தை போற்றி மக்களின் மனதை வென்றமையால் வேதவேள்விகள் மங்கிப்போயின. எனினும் தமிழகம் அப்போது தான் அதை கைக்கொள்ள தொடங்கியது.  போர்களுக்கு முன்னராக வேள்விகள் ஆற்றும் வழக்கத்தை மன்னர்கள் கைக்கொள்ள தொடங்கினார்கள். ராஜசூயம் வெட்ட பெருநற்கிள்ளி, பலயாகசாலை முதுகுடுமி பெருவழுதி ஆகிய மன்னர்கள் அதீத எண்ணிக்கையில் வேத வேள்விகளை செய்தனர்.

அவர்களின் பெயர்களே அதற்கு சான்று பகர்ந்து நிற்கிறது.  வேள்விகளை தொடர்ந்து போர்கள் வெற்றி பெறுமாயின் அவ்வேள்வியை நடாத்தி தந்த பிராமணர்களுக்கு பிரம்மதேயம் என்ற பெயர்களில் நிலங்கள் வழங்கப்பட்டன. சிலநேரங்களில் கிராமங்களும், கிராமத்தொகுதிகளும் கூட இத்தகைய தானங்களாக்கப்பட்டன. அந்நிலங்களில் வேளாளர்களை பணிக்கமர்த்தி விளைச்சலை பெற்று சுகபோகமான வாழ்க்கையை பிராமணர்கள் வாழத்தொடங்கினார்கள். போர்களில் படை தந்து உதவிய குறுநில மன்னர்களை காட்டிலும் பிராமணர்கள் உயர் அந்தஸ்த்தை பெற்றனர். மேலும் வேளாளரின் உழைப்பை கொண்டு வாழ்க்கை நடாத்தும் பிராமணர்கள் வேளாளரை சமூகத்தின் கீழ்நிலை பிரிவாக கண்ணுற்றனர். இந்நிலையால் சிற்றரசர்களுக்கும் மன்னர்களுக்கும் இடையிலே பிணக்கம் ஏற்பட ஆரம்பமானது. 

வந்தார்கள் வென்றார்கள்

வெறுமனே வேதங்களை ஒப்புவிப்பதற்கு விலையாக வளமான நிலங்களை பெற்று சுகபோக வாழ்க்கை நடாத்தும் பிராமணர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவு தந்த மூவேந்தர்களுக்கும் மக்கள் மத்தியில் இருந்த நற்பெயரும் கௌரவமும் சரிந்தவண்ணம் சென்றன. இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தென் கர்நாடக பகுதியை சேர்ந்த ஒரு குலத்தை சேர்ந்த சிலர் மூவேந்தர்களை வென்று தென்னகத்தில் வலுவான ஒரு ராஜ்யத்தை அமைத்தனர். அவர்கள் களப்பிரர் என அறியப்பட்டனர். சங்ககாலத்தில் போர்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்த சிற்றரசர்கள் மூவேந்தர்களுக்கு எதிராக களப்பிரருக்கு படையுதவிகளை செய்தனர். மக்களின் ஆதரவும் மூவேந்தர்களுக்கு சாதகமாக அமையாது போனதால் களப்பிரர்களின் வெற்றி மிகவும் எளிதாகிப்போனது. அண்ணளவாக கி.பி 250 இல் ஸ்தாபிக்கப்பட்ட களப்பிரர் அரசானது மூன்று நூற்றாண்டுகளாக கி.பி 550 இல் சிம்மவிஷ்ணு பல்லவரால் படையெடுக்கப்படுவது வரை தென்னிலம் முழுவதும் ஆட்சி செய்தது.

தமிழ்மன்னர்கள் வைதீகத்தை ஏத்திப்பிடித்து தங்களின் சுயத்தை இழந்து போன வேளையில். களப்பிரர் தங்களின் சுயமான தாய் மொழியை விடுத்து, தமிழை தாய் மொழியாக ஏற்றுக்கொண்டு மான்புடன் செயலாற்றினர். கல்வியும், கலைகளும், ஆட்சியும் புத்தாகம் பெற்றுவந்தன. எதிர்ப்புகளை ஒடுக்கிவிட்டு தம்பால் ஆதரவு நல்கிய மக்களுக்காகவும், குறுநில வேந்தர்களுக்காகவும் முடிந்த மட்டும் நலன்களை செய்து முடித்தனர். அவர்கள் நிகழ்த்திய புத்தாக்க மறுமலர்ச்சி தமிழகத்தில் நிலையான ஒரு மாற்றத்தினை உண்டு பண்ணியது. மூவேந்தரால் முடியாத எதனை இவர்கள் செய்தனர் என்பதை காண்போம் இனி.

பகுதி 2 | வாழ்வியலும் கலையும்

பகுதி 3 | இருண்டது காலம்

ஆதாரங்கள்.

 • சமூக ஆய்வுவட்டம், வரலாற்று பேராசிரியர் பத்மாவதியின் உரை

http://samoogaaaivuvattam.blogspot.com/2014/12/30-11-2014.html?m=1

 • இந்திய வரலாறு : டாக்டர் ந. சுப்ரமணியன்
 • பாண்டியர் காலச்செப்பேடுகள் : டாக்டர் மு. ராஜேந்திரன்
 • முகப்புப் படம் : https://twitter.com/JJayCreation

Related Articles