களப்பிரர் ஆண்ட தமிழகம் | பகுதி 3 | இருண்டது காலம் | #தமிழ்பாரம்பர்யமாதம்

பகுதி 1 | வந்தார்கள் வென்றார்கள்
பகுதி 2 | வாழ்வியலும் கலையும்

‘என்னை வாழவைத்த தெய்வங்களே! நீங்கள் இல்லாமல் நானிங்கு இல்லை’ ‘மக்களின் சேவையே மகேசனுக்கான சேவை’ ‘உயிரைக்கொடுத்தேனும் மக்களின் துயர்துடைப்பேன்’ ‘ஊழல் இல்லாத தேசத்தை உண்டுபண்ணுவோம்’ என பற்பல நம்பிக்கை வார்த்தைகூறி ஓட்டுக்களை வெல்லும் அரசியல்வாதிகள், பதவியேற்றதும் தன்குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே முனைப்புடன் இறங்குவார்கள். உண்மையிலேயே மக்களின் நலனுக்காக ஒரு தலைவர் பாடுபட்டாலும் கூட அவருக்கு பின்வருவோர் ‘ஒற்றை ரூபாய் போதும்’ சபதம் செய்துவிட்டு கோடியில் புரண்டுகொண்டிருப்பார்கள். இதே போன்றதொரு நிலைமை எளிமையின் வடிவமாய் திகழ்ந்து வந்த புத்தபிக்குகளிடமும் உண்டாகியபோது களப்பிரர் தம் ஆட்சியை முடித்துக்கொள்வதற்கு காலம் வந்துவிட்டது என்பதை முன்னறிவித்தது.

களப்பிரர் ஆட்சியை தென்னகம் ஏற்றதற்கு பிரதான காரணமாக அமைந்தது பிராமணர்களின் போக்கு. வேள்விகளுக்காக விலைநிலங்களுடன் கூடிய கிராமங்களை பிரம்மதேயமாக பிராமணர்கள் பெற்று மக்களின் உழைப்பை சுரண்டியது மன்னர்க்கும், மக்களுக்குமான தொடர்பையே அறுத்தது. வேளாளரும் வணிகரும் வியர்வை சிந்தியுழைத்ததை, விரயம் செய்யும் விஷமிகளை களப்பிரர்கள் எதிர்த்தது, மக்களின் மனதை கவர்ந்தது. காலப்போக்கில் களப்பிரர்கள் ஆட்சியும் அதே அவலத்தை மீண்டும் நிகழ்த்திகாட்டியது மக்களின் முகத்தை சுளிக்கவைத்தது.

சமணர்கள் புறஉலகில் இருந்து தங்களை விடுத்துக்கொண்ட அளவுக்கு பௌத்தர்கள் செய்யவில்லை. தாங்கள் வேரூன்றும் நாடுகளில் தங்களை அசைக்கமுடியாத சக்திகளாக மாறும் உத்தியை அவர்களின் மூளை கொண்டிருந்தது.

சாணக்கியர் தன்னுடைய அர்த்தசாஸ்திரம் என்ற புகழ்பெற்ற நூலில் பௌத்தர்களை கூறியதாவது

‘அரசே! பௌத்தர்களை நாட்டிற்கு வெளியே உள்ள புறம்பாடிகளில் மாத்திரமே தங்குவதற்கு அனுமதி வழங்கு. அவர்கள் தங்கும் விகாரைகளில் சொத்துக்களை சேரவிடாதே. அவ்வாறு சொத்துக்கள் சேருமெனில் அவற்றை நீ பறிமுதல் செய்துகொள்’  காரணம் இல்லாமல் இங்ஙனம் கூறுவதற்கு வாய்ப்பில்லை. பௌத்தர்கள் குறித்து அவர் ஏதோ ஒன்றை அறிந்தமையாலேயே அரசனை எச்சரித்துள்ளார். களப்பிரர் ஆட்சியில் அந்த எதிர்வுகூறல் உண்மையானது. ‘மழைக்காலங்களில் ஒதுங்குவதற்காக விகாரைகளை கட்டிக்கொள்ளுங்கள்’ என கௌதம புத்தர் கூறிச்சென்றார். அவரின் காலத்துக்கு பின்னர் விகாரைகள் அரசின் நிலவுடைமை நிறுவனங்களாகின. அளவில்லா செல்வமும், படைகளும், அதிகாரமும் விகாரைகளை நிரப்பின. மன்னரும் கையேந்தும் அளவுக்கு விகாரைகள் நுணுக்கமாகவும், செல்வசெழிப்புடனும் விளங்கின. பூலங்குறிச்சியில் அமைந்த விகாரைக்கு பாண்டிநாட்டில் இருந்தும், கொங்குநாட்டில் இருந்தும் திரட்டப்பட்ட மொத்த வரியும் சென்று சேர்ந்தன. பிரம்மதேய நிலங்களை பறித்து மக்களிடம் ஒப்படைத்து போலவே விகாரைகளுக்கும் நிலங்களை வழங்கினார்கள்.

மனம் எனும் மாயக்குரங்கு மீண்டும் பழைய கிளைக்கே தாவிற்று. எளிமையின் மறுவுருவமாக வெளியே காட்டிக்கொண்டு, உள்ளே நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியுடனும், செல்வத்துடனும் நடந்த தன்மை மக்களின் மனதிலும், சிற்றரசர்கள் மத்தியிலும் மீண்டும் ஒரு மாற்றத்தை உருவாக்கியது. ‘புறத்தியான் ஒருவன் நம்செல்வங்களை இங்ஙனம் உரிமைகொண்டாடுவதற்கு, நம்மன்னர்களே ஆண்டுவிட்டு போகட்டும்’ என நினைக்கலாயினர் குடிகள்.

இயல்புடன் தம் தெய்வங்களை வழிப்பட்டுவந்த பழந்தமிழரால் ஈர்க்கப்பட்டு களப்பிர அரசர்கள் கந்தனையும், கொற்றவையையும் வழிபடலாயினர். தங்களின் நாணயங்களின் ஒரு புறம் குமரனை பதிக்கவும் செய்தனர். இது பௌத்த பிக்குகள் விரும்பவில்லை. மேலும் இயல்புவழிப்பாட்டில் இருந்து நிறுவனமயப்படுத்தப்பட்ட வழிபாட்டு முறையை களப்பிரர்கள் உட்புகுத்தியதால் மக்கள் மனதில் அச்சத்துடன் கூடிய எதிர்ப்பு ஒன்று உருவானது. இது களப்பிர அரசின் வீழ்ச்சிக்கு அடிகோலியது.

சனாதன சீர்திருத்தம்

வடக்கிலும்,தக்காணத்திலும் பௌத்தமும் சமணமும் பல அரசுகளால் போஷிக்கப்பட்டன. கி.மு 4ம் நூற்றாண்டு முதலே அசோகரின் ஆதரவால் முன்பு எப்போதும் இல்லாத பெருமையை பௌத்தம் அடைந்தது. இலங்கையிலும், சீனத்திலும் பௌத்தம் வைரஸ் காய்ச்சல் போல வேகமாக பரவியது. பௌத்தத்தின் கொள்கைகளுக்கு நிகரான கொள்கைகளையும், ஆகம முறைகளையும் கொண்டிருந்த சமணமும் மிகவேகமாக பரவியது. இதன் விளைவால் வைதீகம் தன்னை தானே புனருத்தாரனம் செய்துகொண்டது.

வேதகாலத்தில் ஆரியர்கள் இந்தியாவினுள் நுழைந்த தருணத்தில் இமாலய பழங்குடிகளுடன் பலபோர்கள் நிகழ்ந்தன. இந்த இமாலய பழங்குடிகள் தங்கள்மீது சாம்பலை பூசிக்கொண்டும், மிருகத்தோலை உடுத்திக்கொண்டும், சடைமுடியுடனும் இருந்த மூர்க்கர்கள் என்று வேதங்கள் கூறுகின்றன. இவர்களின் இறைவனே சிவன். பொதுவான எதிரியொருவன் தோன்றும் போது பிறர் அனைவரும் கூட்டுசேர்ந்துக்கொள்வது இயல்பே. அதன் பிரகாரம்  வைதீக கடவுள்களான இந்திரனும் அக்னியும், வருணனும் தம் புகழை இழக்க இமாலயபழங்குடி மக்களின் தலைவரான சிவனும், வேத நாயகர்களாக உருவாக்கப்பட்ட நாராயணனும், பிரம்மனும் முதன்மை பெறலாகினர். பௌத்தமும் சமணமும் போற்றிய ஜீவகாருண்யமும், சாத்வீகமும் புதிய சனாதன மதத்தின் அடிப்படை கொள்கைகளாயின. திருவிழாக்கள், உருவ வழிபாடு, பக்தி இயக்கம் என மக்களுக்காக தன்னை எளிமையாக்கிக்கொண்டது வைதீகம். சிவனுக்கென பலியாக்கப்பட்ட உயர்தர காளைகள் சிவனின் வாகனமாக்கப்பட்டது. அந்த அளவுக்கு சனாதன மார்க்கம் தன்னை சீர்திருத்திக்கொண்டது.

இவ்வாறு வேததர்மம் தன்னை சனாதன தர்மமாக சீர்திருத்திக்கொண்ட சமயத்தில் பௌத்தர்கள் கலையில் மறுமலர்ச்சி செய்த  குஷணர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. பலமான பௌத்த அரசு வீழ்ச்சியடைந்தது பிராமணர்களுக்கு வசதியானது. குஷணர்களை தொடர்ந்து ஆட்சியமைத்த பாரசிவர்கள்,வாகடகர்கள் ஆகியோர் சிவனை ஏற்றுக்கொண்டு தீவிரமாக சைவத்தை பின்பற்றினார்கள். வடக்கே மெல்லமெல்ல நாத்திக கோட்பாடுகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்தன. கி.பி இரண்டாம் நூற்றாண்டில் லகுலீசார் என்பவரால் உருவாக்கப்பட்ட பாசுபதம் என்ற சைவப்பிரிவு சமணர்களையும், பௌத்தர்களையும் அழிப்பதையே நோக்காக கொண்டு செயற்பட்டன. லகுலீசரின் சீடர்கள் காளாமுகம், கபாலிகம் என மேலும் இரண்டு பிரிவுகளை உருவாக்கி நாத்திக வாதங்களை அறுத்தனர்.

களப்பிரர்கள் தமிழகத்தில் ஆட்சியமைத்த வேளையில் வடக்கே இந்தியாவின் பொற்காலம் என வர்ணிக்கப்படும் பார்ப்பனிய ஆட்சியான குப்தர்கள் காலம் தொடங்கியது. ‘வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு’ என்றது களப்பிரர் வரலாற்றில் உண்மை. களப்பிரர் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ஏதோ ஒரு வகையில் துணைசெய்த குப்தர்களும், களப்பிரர் ஆட்சி உருவான அதே காலத்தில் உருவானவர்களே. வலுமிக்க குப்த அரசர்களால் சனாதன தர்மம் தழைத்தத்து. மேலும் களப்பிரர்கள் ஆட்சியமைத்த நூறு ஆண்டுகளுக்கும் மேலான பின்னர் (கி.பி 4ம் நூற்றாண்டின் இறுதி) பல்லவர்கள் என்ற புதிய மன்னர்குலம் தோற்றம் பெற்று வளர்ந்தது. நெல்லூர் பகுதியில் ஆட்சியமைத்த இவர்களில் மூத்தவரான ஸ்கந்தவர்மர் களப்பிரர்களின் மணிமுடியென விளங்கிய காஞ்சிநகரை கைப்பற்றினார். கல்வியில் சிறந்த காஞ்சியை இழந்தமையே களப்பிரர் அரசின் முதல் சரிவாக அமைந்தது. எனினும் பிற்காலத்தில் களப்பிரர் மீண்டும் காஞ்சியை கைப்பற்றினர். காஞ்சி ஒரு இழுபறிநிலையில் இருந்தது. பல்லவர் விஷ்ணுகோபர் காஞ்சியை ஆண்ட வேளையில், 1ம் சமுத்திரகுப்தர் காஞ்சியை தாக்கி வெற்றிக்கொண்டார்.

குப்தர்களின் ஆதிக்கம் இந்தியா முழுவதும் உயர்ந்தது. தமிழகத்திலும் நாத்திகவாதிகளான களப்பிரர்களுக்கு எதிரான ஒரு மனோநிலை உருவாகி வலுப்பெற்றது. நிலவிய சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு பல்லவர்கள் தலைவரான சிம்மவிஷ்ணு களப்பிரர் ஆட்சியில் இருந்த வடக்கு தமிழகம், சோழநாடு ஆகியவற்றை தாக்கினார். களப்பிரர் ஆட்சியால் மனக்கலக்கம் கொண்ட சிற்றரசர்கள் தஞ்சாவூர் முத்தரையர் தலைமையில் பாண்டிய அரசன் கடுங்கோனின் படைகளுடன் அணிவகுத்து பாண்டியநாட்டையும் அதன் சுற்றுவட்டத்தையும் விடுவித்தனர். பல்லாண்டு வஞ்சத்தை தீர்க்கும் வண்ணமாக களப்பிரர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். ஆனால் அழிக்கப்படவில்லை. காவேரிக்கரையில் ஒரு சிற்றரசென வாழுமாறு பாண்டியர்களும், பல்லவர்களுக்கு விட்டுச்சென்றனர். எண்ணம் தோன்றும் போதெல்லாம் அவர்களை தாக்கி மகிழ்வுறுவதற்கு போலும். மரணத்தை காட்டிலும் கொடுமையானது உரிமைகளும், கௌரவமும் பறிக்கப்படுவது. அத்தகைய குரூரநிலையை நம்மன்னர்கள் களப்பிரருக்கு விட்டுச்சென்றனர்.

வஞ்சம் தீர்த்தல்

களப்பிரர் ஆட்சியில் ஒடுக்கப்பட்டிருந்த பாண்டியர்கள் ஆட்சிக்கு வந்ததும் களப்பிரர் புகழ்ப்பாடிய அனைத்து கட்டிடங்களும் தரைமட்டமாகின. பூலங்குறிச்சியில் அமைந்த விகாரை தடம் தெரியாது அழிக்கப்பட்டது. புத்தசிலைகள் உடைத்தெரியப்பட்டன. சமணம், பௌத்தம் ஆகியவற்றால் அதிகம் பாதிப்புற்ற பிராமணர்களின் கைங்கரியமாகவே இவைகள் நிகழ்த்தப்பட்டன. காஞ்சி பல்லவர்கள் ஆட்சிக்குள் வந்த பின்னும் அங்கு இருந்த பௌத்த விகாரைகள், கடிகைகள் எல்லாம் தன்னியல்புடன் செயற்பட்டன. எனினும் அவற்றிடையே புதிய வேத கல்விக்கூடங்களும், சமஸ்கிருத மொழி கடிகைகளும் தோற்றம் பெற்றுவந்தன. காஞ்சிக்கடிகையில் பிராமணர்களும், பல்லவ அரசகுடியில் பிறந்த பீமவர்மரின் வாரிசுகளும் உறுப்பினர்களாயினர். மெல்ல மெல்ல பௌத்தவாதம் நீக்கப்பட்ட வண்ணம் சென்றது.

களப்பிரர்களால் நிலம் இழந்த பிராமணர்கலின் வாரிசுகள் பலர் பிற்கால பாண்டிய பல்லவர்களிடம் முறையிட்டு வேண்டி அந்நிலங்களை மீண்டும் வசப்படுத்திக்கொண்டனர். இந்நிலங்களை மீட்டு பிராமணர்களுக்கு ஒப்படைப்பது பெரும் புண்ணியமாக கருதினர் மன்னர்கள். ஐடில வர்மன் என்ற பாண்டியன், காமாக்கினி நற்சிங்கன் எனும் பிராமணனுக்கு பிரம்மதேயத்தை மீட்டளித்ததன் முகமாக வேள்விக்குடி செப்பேடுகளை வெளியிட்டான். தமிழக வரலாற்றில் இது இன்னும் முதன்மை செப்பேடாக உள்ளது. தொடர்ச்சியாக பல பாண்டிய அரசர்கள் இங்ஙனம் பிரம்மதேயங்களை மீட்டு பிராமணர்களுக்கு கொடுத்தவண்ணம் சென்றனர். களப்பிரர் ஆட்சியில் ஸ்டராடெஜிக் மையங்களாக விளங்கிய கூதமங்கை, புல்லமங்கை, விஜயமங்கை ஆகிய ஊர்கள் முழுவதும் பிராமணர்களுக்கு சமர்ப்பணமாகின. அதைதொடர்ந்தே அவ்வூர்கள் மங்களம் என்ற புதிய சேர்க்கையுடன் கூதமங்களம், விஜயமங்களம் என பெயர் மாற்றம் பெற்றன. சமணர்களும் பௌத்தர்களும் தங்கிய மடங்கள் கோவில்களாக்கப்பட்டன. அழகர்மலையை விஷ்ணுவும், பரங்குன்றதை முருகனும், அரிட்டாபட்டியை சிவனும் பங்கிட்டுக்கொண்டனர்.

சிற்றரசர்களாக சிறுமையுடன் வாழ்ந்த களப்பிரர் தம் எழுச்சிக்காக குண்டலகேசி, வளையாபதி உள்ளிட்ட காவியங்களை உருவாக்கினர். எனினும் அவ்வெழுச்சியை முளையிலேயே கிள்ளி எறிந்தாற்போல் அக்காவியங்களுடன் சேர்த்து களப்பிர படைகளும் அழிக்கப்பட்டது. ஈழத்தில் நடந்த இனப்படுக்கொலைகள் பற்றிப்பேசும் நம்மவர்கள் ஒரு விடயத்தை அறிந்திருக்க மாட்டார்கள். தமிழகத்தில் மதத்தின் பெயரால் நடந்த படுகொலைகள். இவற்றின் உச்சகட்டமாக 7ம் நூற்றாண்டில் உருவான பக்தி இயக்கம் மதச்சுத்திகரிப்பை தமிழகத்தில் உண்டுபண்ணியது. நாவுக்கரசரால் பல்லவன் 1ம் மகேந்திர வர்மரும், சம்பந்தரால் நின்றசீர் நெடுமாறனும் சைவ சமயத்தை தழுவினர். இதன் விளைவாக தமிழகத்தில் எஞ்சிய சமணமும், பௌத்தமும் கூட நலிந்து போனது. நன்னூல் எழுதி தமிழ்வளர்த்த சமணர்கள் எண்ணாயிரம் பேர் கழுவேற்றி கொலைசெய்யப்பட்டனர் நின்றசீர் நெடுமாறனின் ஆட்சியில் அதுவும் உமையாளிடம் பாலுண்ட சம்பந்தரின் கண் முன்னே!

இருண்டது காலம்

களப்பிரர்; சங்கத்துடன் சுருங்கிப்போன தமிழ்த்தாய்க்கு ஐம்பெருங்காப்பியம் என அணிசெய்து அழகு பார்த்தவர்கள். நன்னூல் என இலக்கணம் அமைத்து தமிழை காத்தவர்கள். எண்ணில்லா தமிழ் பொக்கிஷங்களைக்கொண்டு தமிழ்க்கருவூலத்தை நிறைந்தவர்கள். ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்திப்பாசுரம் பாட இசைக்களத்தை வலுவூட்டிவிட்டு சென்றவர்கள். கல்விக்கண் திறந்து அறிவை போற்றியவர்கள். முடியுடை மூவேந்தரையும் ஒற்றைக்களத்தில் வென்றவர்கள். மக்களின் நிலங்கள் மக்களையே சாரும் என முழக்கமிட்டு கூறியவர்கள். சாதிப்பாகுபாடு என்ற சாத்தானை அழித்தவர்கள். அட்டைகள் போல தான் உழைக்காமல் பிறரின் உழைப்பில் வயிறுவளர்த்த கயவர்களுக்கு பாடம் புகட்டியவர்கள். சங்ககால மன்னர்களை முதன்முறை வென்ற புறதேசத்தவர்கள். தாய்மொழி வேறாகினும் தமிழ்வளர்த்த மாந்தர்கள். கைக்கொண்டது வேற்று மதம் என்ற போதும் பிறதை ஒறுக்காத தன்மைகொண்டவர்கள்.

வரலாறு தோறும் வென்றவர்கள் தோற்றவர்களின் பெருமையை அழிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் களப்பிரர் வரலாற்றுக்கு இணையாக இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறு உலகில் மிகச்சொற்பமே. களப்பிரர் எழுதிய காவியங்கள் எரியூட்டப்பட்டும், கட்டிடங்கள் தகர்க்கப்பட்டும், வழிபாட்டுதளங்கள் தடம் மாற்றப்பட்டும் போனது. பல்லவ பாண்டிய வெற்றி எனும் வேள்வியில் பார்ப்பனியத்தால் களப்பிரர் வரலாறு ஆகுதியாக்கப்பட்டது. அதன் கரிப்புகை அவர்களின் ஆட்சியை இன்றளவும் இருண்ட காலம் என்ற பெயரை தாங்கவைத்துவிட்டது. வைதீகத்தை அவர்கள் போற்றியிருந்தால் இந்நேரம் தமிழக வரலாற்றின் பொற்காலமாக அறியப்பட்டு இருப்பார்களோ என்னவோ?

முடிவாக…

எந்த ஒரு விடயத்தையும் நாம் நேசிக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு எல்லையுண்டு. எல்லையற்று நாம் செய்யும் அன்பும், பற்றும் நிச்சயம் பிரிதை அழிக்கும். தமிழ் மீது தமிழர்களாக நாம் வைத்திருக்கும் அளவற்ற பற்று சோழர்களையும், பாண்டியர்களையும், சேரர்களையும் மீறி நம் வரலாற்றை பார்ப்பதற்கு விடுவதில்லை. பல்லவர்கள் நம் வரலாற்றுக்கு செய்துவிட்டு போனதையே நாம் அலட்டிக்கொள்ளாத போது களப்பிரரை கண்டுகொள்ளாதது வியப்பில்லை. சமகாலத்தில் பல அறிஞர்கள் தமிழக வரலாற்றின் இருண்ட பக்கங்களை ஒளியூட்டுவதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முயற்சி வெற்றி பெற்றால் தமிழர் வரலாற்றின் மெய்யான சிறப்பு இலகுவில் விளங்கும்.

வரலாறு என்ற தலைப்பை நாம் அணுகும் போதும் நடுநிலையும், நேர்மையும் நிச்சயமாக அவசியம். அப்போதே திருத்தமான வரலாற்றை அறிய இயலும். ஏனெனில் வரலாறு ஒரு சமூகத்தின் அத்திவாரங்கள்.

 ஆதாரங்கள்.

  • சமூக ஆய்வுவட்டம், வரலாற்று பேராசிரியர் பத்மாவதியின் உரை

http://samoogaaaivuvattam.blogspot.com/2014/12/30-11-2014.html?m=1

  • இந்திய வரலாறு : டாக்டர் ந. சுப்ரமணியன்
  • பாண்டியர் காலச்செப்பேடுகள் : டாக்டர் மு. ராஜேந்திரன்

 

Related Articles