மதங்களின் வரலாறுகளைப் கூறும் வகையில் இலங்கையில் பல்வேறு இடங்களில் பல வரலாற்றுப் பொக்கிஷங்கள் காணப்படுகின்றமை நாம் அறிந்ததே. சமய கலாசார சின்னங்களுடன் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பொக்கிஷங்கள் காணப்படுவதென்பது அதிசயிக்கத்தக்க விடயமாகும்.

அந்தவகையில் தமிழர் தாயகமாம் யாழ்ப்பாண மண்ணில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க புராதன விகாரை தான் கந்தரோடை விகாரை. யாழ். சுண்ணாகம், கந்தரோடை பிரதேசத்தில் அமைந்துள்ளது இது சுமார் 2,500 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகின்றது. இந்த விகாரையில் பல்வேறு அளவுகளில் அமைக்கப்பட்டுள்ள தூபிகளே விசேடமாவை என்று பேசப்பட்டுவருகின்றது.

கந்தரோடை விகாரையில் காணப்படும் பழையான தூபிகள்
படஉதவி : deskgram.net
சிதைந்த நிலையில் காணப்படும் கந்தரோடை விகாரை தூபி
படஉதவி : deskgram.net

இலங்கைக்கு புத்த பெருமான் வருகை தந்த போது யாழ்ப்பாணத்திலுள்ள நாகவிகாரைக்கு செல்வதற்கு முன்னர் இந்த கந்தரோடை விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் தான் முதன் முதலில் வந்து ஓய்வு பெற்றதாகவும், அங்கிருந்தவாறே பல்வேறு தியானங்களில் ஈடுபட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

இதேவேளை, அரசமரக் கிளையுடன் இலங்கைக்கு வந்த சங்கமித்தா அவர்கள் தனது 60 பிக்குமார்களுடன் கந்துருகொட விகாரை அமைந்துள்ள பிரதேசத்திலேயே தங்கியிருந்ததாகவும் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி 60 பிக்குமார்களும் இங்கிருந்தவாறு தான் நாடு முழுவதிலும் பல்வேறு பௌத்த போதனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

கந்தரோடை விகாரையில் குடில் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை
படஉதவி : srilanka.blogspot.com

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமமொன்றில் அன்னதான நிகழ்வுக்கு சென்ற பிக்குமார்கள், அங்கு வழங்கப்பட்ட உணவு விஷமானதால் அவ்விடத்திலேயே உயிர் இறந்துள்ளனர். இதனையடுத்து பிக்குமார்கள் தங்கியிருந்த கந்தரோடை பிரதேசத்துக்கே அவர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன. பின்னர் உயிர் துறந்த பிக்குமார்கள் வகித்திருந்த பதவிகளுக்கு ஏற்ற வகையில் அவரவர் புதைக்கப்பட்ட இடங்களில் 60 தூபிகள் அவர்களின் நினைவாகக் கட்டப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

சேதமடைந்த நிலையில் காணப்படும் தூபிகள்
படஉதவி : jetwinghotels.com
நீர் நிரம்பிய நிலையில் காணப்படும் இலக்கங்கள் இடப்பட்டுள்ள பழமையான தூபிகள்
படஉதவி : deskgram.netd
அழிவுற்ற தூபிகளின் தடங்கலும் சேதமடைந்த தூபிகளும்
படஉதவி : jetwinghotels.com

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை இராசதானிகள் காலத்தைச் சேர்ந்த முதலாவது பரகும்பா மன்னன், மல்லவ மன்னன், லீலாவதி மற்றும் புவனேகபாகு ஆகியோரின் காலங்களில் இந்த விகாரை புதுப்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.  இந்நிலையில், யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன் காலத்தில் மேற்படி விகாரை சேதமாக்கப்பட்டதாகவும் அதனையடுத்து பிரதேசத்தில் காடுகள் வளர்ந்து தூபிகள் அனைத்தும் மண் மேடுகளால் மூடப்பட்டதால் விகாரை இருந்த இடம் புதையுண்டு காணப்பட்டிருந்துள்ளது.  

அகழ்வுகளின் போது கந்தரோடை கந்துருகொட விகாரை எடுக்கப்பட்ட புகைப்படம்
படஉதவி : nashaplaneta.net
அகழ்வுகளின் போது கந்தரோடை கந்துருகொட விகாரை எடுக்கப்பட்ட புகைப்படம்
படஉதவி : nashaplaneta.net
அகழ்வுகளின் போது கந்தரோடை கந்துருகொட விகாரை எடுக்கப்பட்ட புகைப்படம்
படஉதவி : nashaplaneta.net

இங்குள்ள 60 தூபிகளில் 56 தூபிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவைகளில் அத்திவாரங்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஏனைய நான்கு தூபிகள் தொடர்பில் இன்றளவும் ஆராய்ச்சிகள் செய்தவண்ணமுள்ளனர் ஆய்வாளர்கள். அத்துடன் விகாரை பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை காலங்களுக்கு உரித்தான புத்தர் சிலைகள்,நாணயங்கள் மற்றும் ஏனைய புராதனப் பொருட்கள் யாழ்ப்பாணம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்திவாரங்கள் மட்டுமே காணப்படும் சில தூபிகள்
படஉதவி : jaffna.city
கந்தரோடை விகாரையிலுள்ள 44 இலக்க தூபி
படஉதவி : deskgram.net
37 மற்றும் 39 இலக்க கந்தரோடை விகாரை தூண்கள் 
படஉதவி : deskgram.net

கந்தரோடை விகாரை அமைக்கப்பட்டிருந்த இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் படி இவைகள் கி.பி. 9ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தாக இருக்க கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். புராதானப் பொக்கிஷங்களுக்கு குறைவில்லாத இலங்கையில் நாளுக்கு நாள் இவ்வாறான வரலாற்றுத்தடங்கள் கண்டுபிடிக்கப்படுவது இலங்கையின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது.

 

தகவல்கள் : tamilmirror.lk,chavathulasi.blogspot.com