Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

யாழ்ப்பாணத்தில் மிஷினரிகளால் நிறுவப்பட்ட பாடசாலைகள்

“குழந்தைகளின் நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் கல்வி உணர்ச்சிபூர்வமாகவும் கற்பிக்கப்பட வேண்டும்.”

– c.w.w.கன்னங்கரா

கல்வி என்ற வார்த்தை இன்றைய காலகட்டத்தில் இலங்கையரைப் பொறுத்தமட்டில் ஒரு முக்கியமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. ஆரம்பநிலை தொடக்கி பல்கலைக்கழகம்வரை ஏழை, பணக்காரன், சாதி, மதம், இனம், மொழி போன்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் பொதுவானதாகவும், அனைவராலும் ஆர்வத்துடனும் போட்டி மனப்பான்மையுடனும் முறையான கல்வித் திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.

குறிப்பிட்டளவு வாய்ப்புக்களை பாரியளவு மக்களுக்கு வழங்குவதில் இலங்கை போன்றதொரு நாடு எதிர்நோக்கும், சமூக, பொருளாதார சவால்களின் விளைவாக மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு தங்களது வாய்ப்புக்களைத் தக்கவைத்துக்கொள்ள போராடும் நிலையையும் நாமறிவோம். ஏழை விவசாயி ஒருவரது பிள்ளை கூட தனது திறமையை வெளிப்படுத்தி கல்வியில் உயர் மட்டங்களை அடையலாம் என்ற நிலையில் இன்று இருக்கின்ற இலங்கையின் கல்வியானது கடந்த காலங்களில் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

சிலோனில் கல்வியின் ஆரம்ப நிலை

கிமு 6ஆம் நூற்றாண்டில் கல்வி எனப்படுவது பௌத்த விகாரைகளையும், துறவி மடங்களையுமே ஆக்கிரமித்திருந்தது. அக்காலத்திலேயே கல்வி, கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் போன்றவை சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருக்கும் துறவிகளுக்கும் பிக்குகளுக்குமே போதிக்கப்பட்டன. மேலதிகமாக வசதிபடைத்த, செல்வாக்குள்ளவர்களின் பிள்ளைகளுக்கு துறவிகளால் கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் மதம் சார்ந்த கல்வியோடு, உலோக வேலை, நெசவு, கட்டிடக்கலை, மரவேலை, ஓவியம் சிற்பக்கலை போன்ற விடயங்களே கற்றுக்கொடுக்கப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில் சமூகத்தில் வாழ்ந்த ஏனைய மக்களுக்கு கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. அவர்கள் பெரும்பாலும் கல்வியறிவு அற்ற சாதாரண மக்களாகவே வாழ்ந்துவந்தனர். காலனிய ஆட்சி இலங்கையை ஆட்கொள்ளும் வரை இலங்கையின் கல்வி முறைமை இவ்வாறே இருந்தது.

கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது

16ஆம் நூற்றாண்டில் போத்துக்கேயர் வருகையின் பின்னர் இலங்கை மக்களுக்கு கல்வியைப் பெற்றுக்கொள்ள ஓர் வித்தியாசமான வாய்ப்புக் கிட்டியது என்பதே உண்மை. போத்துக்கேயர் ரோமன் கத்தோலிக்க மதத்தை பரப்புவதனை நோக்காகக் கொண்டு ஆரம்பித்த போர்த்துக்கேய மிஷனரிகள் பின்னர் ஒல்லாந்தரின் வருகையின்போது கிறிஸ்தவ ஆரம்ப நிலைப் பாடசாலைகளாக தோற்றம்பெற்றன. ஒரு நூற்றாண்டுகாலம் நிலைத்துநின்ற இப்பாடசாலைகள் 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் ஆங்கில மொழிக் கற்கைகளை வழங்கியது.

ஆங்கிலம் என்றதுமே தெறித்து ஓடுகின்ற கலாசாரம் அன்றும் இருந்ததனாலோ என்னவோ இப்பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் அளவு மிகச் சொற்பமாகவே இருந்தது. கோல்புரூக் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, 1836 இல் ஒரு நிலையான அரச கல்லூரி அமைப்பை பிரித்தானியா ஸ்தாபித்தது. இன்றுவரையில் தொடரும் அரச நிதியில் இயங்கும் பாடசாலை அமைப்புக்கு இது வழிகோலியது. பெரும்பாலான அரச பாடசாலைகளில் உள்ளுர் மொழிகளிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது. எனவே, பாடசாலைகளுக்கு மாணவர்கள் வரும் வீதமும் அதிகரித்தது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூன்றாம் நிலைக் கல்வி நிலையங்கள் பிரித்தானியாவினால் ஸ்தாபிக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஏனைய மத பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டன. 

காலி ரிச்மண்ட் கல்லூரி

ரிச்மண்ட் கல்லூரி – Richmond College என்று அழைக்கப்படும் ‘The Galle School’ பழைய மற்றும் புதிய அமைப்பு

இலங்கையில் பிரித்தானியர்களால் நிறுவப்பட்ட முதல் பாடசாலை இப்போது காலியில் ரிச்மண்ட் கல்லூரி – Richmond College என்று அழைக்கப்படும் ‘The Galle School’ ஆகும். 1814 இல் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷனால் நிறுவப்பட்ட பாடசாலை ஆகும். இன்று அரசாங்கத்தின் நிதியில் இயங்கும் இப்பாடசாலை ஒரு தேசிய பாடசாலை ஆகும். ஆசியாவிலே முதன் முதலில் நிறுவப்பட்ட மெதடிஸ்ட பாடசாலையாகும். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏராளமான பாடசாலைகள் தோற்றம் பெற்றுள்ளன. அவற்றில் அதிகமானவை வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ளன. இவை பெரும்பாலும் பிரித்தானிய மற்றும் அமெரிக்க மிஷனரிகளால் நிறுவப்பட்டவை ஆகும். 1834 ஆம் ஆண்டில் பாஸ்டனில் நடந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் வெளிநாடுகளில் நிறுவப்பட்ட பாடசாலைகளை விட யாழ்ப்பாண பாடசாலைகள் சிறந்து விளங்குவதாக அமெரிக்க ஆணையகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் மிஷனரிகளால் நிறுவப்பட்ட சில பாடசாலைகளின் பட்டியல் இதோ..

யூனியன் கல்லூரி – Union College

யூனியன் கல்லூரியின் நுழைவாயில்

யாழ்ப்பாண மாவட்டத்தில் மிஷனரிகளால் நிறுவப்பட்ட பழமையான பள்ளிகளில் ஒன்றுதான் தெல்லிப்பழையில் உள்ள யூனியன் கல்லூரி. 1816 ஆம் ஆண்டில் அருட்சகோதரர் டேனியல் புவரால் கிறிஸ்தவ செய்தியை சமூகத்தில் பரப்பும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. 1818 ஆம் ஆண்டில் குடும்ப உறைவிடப் பள்ளியாக மாற்றப்பட்டு 1825 ஆம் ஆண்டில் முன்பயிற்சி பாடசாலையாக மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து 1818 ஆம் ஆண்டில் ‘Chellappah English School’ என்ற பெயரில் இன்னுமொரு புதிய பாடசாலை அதே வளாகத்தில் நிறுவப்பட்டது. ஆனால் இதனை கையகப்படுத்திக்கொண்ட இலங்கை அமெரிக்கா மிஷன் 1901 ஆம் ஆண்டில் அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பள்ளி என்று பெயர் மாற்றியது. 1939 ஆம் ஆண்டில் இரண்டு பள்ளிகளும் தெல்லிப்பலை யூனியன் உயர்நிலைப்பள்ளியாக இணைக்கப்பட்டன. 1940 இல் யூனியன் கல்லூரி என்று மாற்றப்பட்டது.

யாழ்ப்பாண மத்திய கல்லூரி – Jaffna Central College

யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் பழைய மற்றும் புதிய தோற்றம்

1817 இல் வட இலங்கையின் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷனால் நிறுவப்பட்டதுதான் யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பள்ளி. இது நிறுவப்பட்டதன் நோக்கம் யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகியவற்றில் இருக்கும் தமிழ் பேசும் இலங்கை மக்களுக்காவே ஆகும். அருட்சகோதரர் ஜேம்ஸ் லிஞ்ச் அதன் முதல் அதிபராக இருந்தார். இந்த பள்ளி முதலில் யாழ்ப்பாண கோட்டைக்கு எதிரே அமைந்திருந்தது. ஆனால் 1825 ஆம் ஆண்டில் வேம்படியிற்கு மாற்றப்பட்டது. 1834 ஆம் ஆண்டில் அருட்சகோதரர் Dr.பீட்டர் பெர்சிவால் இந்த பாடசாலையை யாழ்ப்பாண மத்திய பாடசாலை என பெயர்மாற்றினார். இன்று இது கட்டணம் வசூலிக்கப்படாத தேசிய பாடசாலையாகும்.

புனித ஜோன்ஸ் கல்லூரி – St. John’s college

புனித ஜோன்ஸ் கல்லூரியின் நுழைவாயில் மற்றும் உள்கட்டிடங்கள்

1823 ஆம் ஆண்டில் ஆங்கிலிகன் தேவாலயத்தின் Church Mission Society (CMS) நல்லூர் ஆங்கில செமினரி என்ற பெயரில் இப்பாடசாலையை நிறுவியது. அருட்சகோதரர் ஜோசப் நைட் இப்பாடசாலையின் முதல் அதிபராக இருந்தபோது தொடக்கத்தில் ஏழு மாணவர்கள் மட்டுமே இருந்துள்ளனர். 1845 ஆம் ஆண்டில் இந்த பள்ளி சுண்டிகுலிக்கு மாற்றப்பட்டு சுண்டிகுலி செமினரி என மறுபெயரிடப்பட்டது, ஆனால் பின்னர் 1891 ஆம் ஆண்டில் புனித ஜோன்ஸ் கல்லூரி என மறுபெயரிடப்பட்டது. புனித ஜோன்ஸ் கல்லூரி கட்டணம் வசூலிக்கப்படாத தனியார் பாடசாலையாகும்.

யாழ்ப்பாணம் கல்லூரி – Jaffna College

யாழ்ப்பாணக் கல்லூரி ஆரம்பத்தில் பட்டிக்கோட்டா செமினரியாக – Batticotta Seminary இருந்தது. இது 1823 ஆம் ஆண்டில் அமெரிக்க சிலோன் மிஷனால் (ACM) வட்டுக்கோட்டையில் நிறுவப்பட்டது. செமினரி 1855 இல் மூடப்பட்டது. 1871 ஆம் ஆண்டில், பாட்டிகோட்டா செமினரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பிற உள்ளூர் கிறிஸ்தவர்கள் செமினரியை மீண்டும் திறக்க ஒரு பிரச்சாரத்தை வழிநடத்தினர். 1871 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கல்லூரி முன்னாள் செமினரி தளத்தில் திறக்கப்பட்டது.

உடுவில் மகளிர் கல்லூரி – Uduvil Girls’ College

உடுவில் மகளிர் கல்லூரி (Uduvil Girls’ College) இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டதில் உடுவில் கிராமத்தில் அமைந்துள்ளது. பெண்கள் பாடசாலையான உடுவில் மகளிர் கல்லூரி யாழ்ப்பாணத்தின் பிரபலமான பாடசாலைகளுள் ஒன்றாகும். 1824 ஆம் ஆண்டில் அமெரிக்க மிசனரியினைச் சார்ந்த ஹரியற் வின்சிலோ அம்மையாரால் பெண்கள் தங்கிப் படிப்பதற்கான வதிவிட வசதியுடன் நிறுவப்பட்டது. தெற்கு ஆசியாவிலேயே பெண்கள் தங்கிப் படிப்பதற்கான வதிவிட வசதியுடன் அமைக்கப்பட்ட முதலாவது பெண்கள் கல்லூரி இதுவேயாகும். ஹரியற் வின்சிலோ அம்மையாரே இக்கல்லூரியின் முதல் அதிபராகவும் இருந்தார்.

வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை – Vembadi Girls’ High School

வேம்படி மகளிர் கல்லூரியின் நுழைவாயில் மற்றும் முன்பக்க கட்டிடம்

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை (Vembadi Girls’ High School) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலையாகும். இது 1834 ஆம் ஆண்டில் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷனால் நிறுவப்பட்டது. முதலில் யாழ்ப்பாண வெஸ்லியன் ஆங்கிலப் பள்ளியின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் இது யாழ்ப்பாண மத்திய கல்லூரியாக மாறியது. 1897 ஆம் ஆண்டில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி என மறுபெயரிடப்பட்டது. இதனை அருட்சகோதரர் ஜேம்ஸ் லிஞ்ச் என்பவர் நிறுவியதாக கூறப்படுகின்றது. வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை இன்று கட்டணம் வசூலிக்கப்படாத தேசிய பாடசாலையாகும்.

ஹார்ட்லி கல்லூரி – Hartley College

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள ஒரு பாடசாலையாகும். முதலில் வெஸ்லியன் மிஷன் சென்ட்ரல் (Wesleyan Mission Central School) என இப்பாடசாலைக்கு பெயரிடப்பட்டது. 1838 ஆம் ஆண்டில் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷனால் நிறுவப்பட்டது. 1912 ஆம் ஆண்டில் கிறிஸ்ட் சர்ச் என மறுபெயரிடப்பட்டு பின்னர் 1916 இல் ஹார்ட்லி கல்லூரியாக மாறியது.1960 ஆம் ஆண்டில் ஹார்ட்லி கல்லூரி அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு இன்று ஒரு தேசிய பாடசாலையாக உள்ளது.

யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி – St. Patrick’s College

St. Patrick’s College இன் நுழைவாயில் மற்றும் உள்கட்டிடங்கள் 

மொன்சைனர் ஒராசியோ பெட்டாச்சினி (Monsignor Orazio Bettacchini) என்பவர் இதனை நிறுவினார். அடுத்த ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் ஆண்கள் செமினரி (Jaffna Boys’ Seminary) ஆனது. 1881 ஆம ஆண்டில் இது முழு அளவிலான உயர்தரப் பாடசாலையாகப் பதிவு செய்யப்படதுடன், இதன் பெயர் சம்பத்தரிசியார் கல்லூரி என மாற்றப்பட்டது. 1961 ஆம் ஆண்டில் இலங்கையிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட்டபோது, சமய நிறுவனங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இப் பாடசாலையை கட்டணம் அறவிடாத தனியார் பாடசாலையாகவே பேணுவதென முடிவு செய்யப்பட்டது. ஆண்களுக்கான இப் பாடசாலையைக் கத்தோலிக்க திருச்சபையே நடத்தி வந்தாலும் பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மாணவர்களும் இங்கே கல்வி கற்கின்றனர். 1887 ஆம் ஆண்டு முதலே இது விடுதியுடன் கூடிய பாடசாலையாக இயங்கி வருவதால் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கு தங்கிப் படித்தனர்.

சுண்டிக்குளி மகளிர் கல்லூரி – Chundikuli Girls’ College

சுண்டிக்குளி மகளிர்க்கல்லூரியானது 1896 ஆம் ஆண்டு தை மாதம் 14 ஆம் திகதி அங்கிலிக்கன் தேவாலய திருச்சபை சமூகத்தைச் சேர்ந்த மேரி காட்டர் அம்மையால் நிறுவப்பட்டது. பாடசாலை நிறுவப்பட்ட காலத்தில் 9 மாணவர்களையே கொண்டிருந்தாலும் 1896 ஆம் ஆண்டு இறுதிக்குள் மாணவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. 1900 ஆம் ஆண்டு சுண்டிக்குளி மகளிர்க்கல்லூரியானது மானியங்கள் உதவியில் இயங்கும் பாடசாலை ஆகியது. 1915 ஆம் ஆண்டு பாடசாலை அதிபராக கடமையாற்றிய சோபியா லூசிண்டாவினால் ஸ்தாபிக்கப்பட்டது. 1916 ஆம் ஆண்டு தமிழ் முதல் மொழியாக கற்றுத்தரப்பட்டது. அடுத்த வருடம் பாடசாலையானது முற்றாக ஒழுங்கமைக்கப்பட்ட இரண்டாம் நிலை பாடசாலையாக பதிவு செய்யப்பட்டது. இலங்கை வட பகுதியின் முதல் இரண்டாம் நிலை பாடசாலை எனும் பெருமை சுண்டிக்குளி மகளிர்க்கல்லூரியையே சாரும்.1960 ஆம் ஆண்டில் இலங்கையிலுள்ள பெரும்பாலான தனியார் பாடசாலைகள் அரசாங்கத்தினால் உள்வாங்கப்பட்டிருந்தன. எனினும் சுண்டிக்குளி மகளிர்க்கல்லூரியானது தனியார் பாடசாலையாகவே தொடர்ந்து செயற்பட்டது. அனைத்து தனியார் பாடசாலைகள் போலவே நிதி மற்றும் மாதக்கட்டணங்கள் அளவிடப்படுகிறது.

Related Articles