ஆபிரகாம் லிங்கனின் அந்த ஏழு நாட்கள்

‘ஜனநாயகம், மக்களுக்காக மக்களால் மக்களைக்கொண்டு நடத்தப்படுகிறது’ என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு தந்த தலைவன் ஆபிரகாம் லிங்கன். இவரின் வாழ்வில் நடந்த 7 முக்கிய நிகழ்ச்சிகள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் நடந்தேறியது உண்மையிலேயே ஒரு அதிசயமான செயல் தான். வியப்பாக உள்ளதா?.   

ஞாயிற்றுக்கிழமை…

அடிமைகளுக்கு விடுதலையாய் பிறந்த தலைவன்

நினைவுச் சின்னமாய் மாறியுள்ள லிங்கன் பிறந்த மர வீடு

1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் திகதி ஐக்கிய அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தைச் சேர்ந்த ஹாட்ஜன்வில் பகுதியில் ஹார்டின் எனும் ஊருக்கு அருகே உள்ள ஒரு மர வீட்டில் பிறந்தார் ஆபிரகாம் லிங்கன். செவ்விந்தியர்களால் படுகொலை செய்யப்பட்ட இவருடைய தாத்தாவின் நினைவாக இவருக்கு இந்தப் பெயரைச் சூட்டினார் தந்தை தாமஸ் லிங்கன். அந்த நாள் ஒரு ஞாயிற்றுக்கிழமை. 

திங்கட்கிழமை…

செருப்பு தைத்தவரின் மகன் அமெரிக்காவின்  ஜனாதிபதி ஆகினார். 

ஆபிரகாம் லிங்கன் பதவிப் பிரமாணம் செய்யும் காட்சியும் ஜனாதிபதியாக அவர் எடுத்த முதல் புகைப்படமும்

1861 ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் திகதி ஆபிரகாம் லிங்கனுக்கு அமெரிக்க மக்களுக்கும் ஒரு முக்கிய நாள். அன்று காலை வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள  வில்லார்ட் உணவகத்திலிருந்து ஹோட்டலில் இருந்து குதிரை வண்டியில் ஏறி கெபிட்டல் கட்டிடத்தை நோக்கி பயணமானார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி  ரோஜர் பி. தானே (Roger B. Taney) முன்னிலையில் அமெரிக்காவின் 16 வது ஜனாபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்டார். அந்த நாள் ஒரு திங்கட்கிழமை.  

செவ்வாய்க்கிழமை…

தந்தையாய் மாறிய லிங்கன் 

லிங்கனின் மனைவி மற்றும் முதற் குழந்தை ராபர்ட் டொட்

ஆபிரகாம் லிங்கன் மற்றும் மேரி டொட் லிங்கன் தம்பதியினருக்கு 1843 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி இல்லிநொய்ஸ் நகரத்தில் முதற் குழந்தை பிறந்தது. ரொபர்ட் டொட் லிங்கன் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற இவர் யூனியன் ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரல் யுலிஸஸ் எஸ். கிராண்டின் ஊழியர்களின் உறுப்பினராக பணியாற்றினார். முதற் குழந்தை பிறந்த அந்த நாள் ஒரு செவ்வாய்க்கிழமை. 

புதன்கிழமை…

பள்ளி படிப்பை ஒரு வருடத்திற்கும் குறைவாக படித்த ஆபிரகாம் லிங்கன் வழக்கறிஞரானார் எப்படி? 

நீதிமன்றத்தில் வழக்கறிஞராக லிங்கன்  வாதாடுவதை சித்தரிக்கும் காட்சி

இல்லினாய்ஸ் உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் ஆபிரகாம் லிங்கனுக்கு அனைத்து இல்லினாய்ஸ் மாநில நீதிமன்றங்களிலும் சட்டம் பயிற்சி செய்வதற்கான உரிமத்தை வழங்கினர். அதனைத் தொடர்ந்து 1837 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் திகதி இல்லினாய்ஸ் உச்சநீதிமன்றத்தின் எழுதுவினைஞர் முன்னிலையில் இல்லினாய்ஸ் உச்ச நீதிமன்ற அலுவலகத்தில் உள்ள வழக்கறிஞர்களின் பட்டியலில் ஆபிரகாம் லிங்கனின் பெயரும் பதியப்பட்டது. அந்த நாள் ஒரு புதன்கிழமை.  

வியாழக்கிழமை…

வெறும் 271 சொற்களில் அமைந்த உரை உலகப் புகழ் பெற்றது. 

கெட்டிஸ்பேர்க் உரை நிகழ்வதற்கு சற்று முன் எடுத்த புகைப்படம்.
சிவப்பு அம்புக்குறி குறிப்பது லிங்கனை

அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் 1863 ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி பிற்பகல் பென்சில்வேனியாவின் கெட்டிஸ்பர்க்கில் உள்ள சிப்பாய்களின் அர்ப்பணிப்பை பற்றி தேசிய கல்லறையில் ஆற்றிய உரை அமெரிக்க வரலாற்றில் நன்கு அறியப்பட்ட உரைகளில் ஒன்றாகும்.

“நான்கு மதிப்பெண் மற்றும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு” என்ற சொற்றொடரில் ஆரம்பித்த அவரது உரை இறந்தவர்களுக்கான கௌரவம், போர்வீரர்களின் தியாக நோக்கம், நாட்டின் சமத்துவம், சுதந்திரம் மற்றும் தேசிய ஒற்றுமை ஆகிய அனைத்தையும் பற்றி கேட்போர் மனதில் கிட்டத்தட்ட  271 சொற்களில் பதியவைத்தார். வழக்கறிஞருக்கு பேச கற்றுத் தரவா வேண்டும்? “கெட்டிஸ்பேர்க் உரை” இடம் பெற்ற அந்த நாள் ஒரு வியாழக்கிழமை. 

வெள்ளிக்கிழமை… 

அது அமெரிக்காவின் துக்க தினம் 

ஃபோர்ட்ஸ் தியேட்டரில் லிங்கனை துப்பாக்கியால் சுடும் காட்சி மற்றும்
கொலையாளி ஜோன் பூத்.

1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி வாஷிங்டன், டி.சி.யில் உள்ள ஃபோர்ட்ஸ் தியேட்டரில் “OUR  American Cousin” என்ற நாடகத்தை பார்வையிட சென்றிருந்தார் ஆபிரகாம் லிங்கன். லிங்கனின் கறுப்பின மக்களுக்கான விடுதலை உரையை கேட்ட பிரபல மேடை நடிகர் ஜோன் வில்கேஸ் பூத் அவரை கொலை செய்ய திட்டமிட்டான். நாடகம் அரங்கேறிக்கொண்டு இருந்த அதே சமயத்தில் பின்னாலிருந்து தனது துப்பாக்கியால் லிங்கனை தலையை துளைத்தான். லிங்கன் துப்பாக்கிக்கு இரையாகிய அந்த நாள் ஒரு வெள்ளிக்கிழமை.   

சனிக்கிழமை…  

நான் இறப்பதை போல கனவு கண்டேன்.” – ஆபிரகாம் லிங்கன் 

பீட்டர்சன் மாளிகையின் மரணப்படுக்கையில் ஆபிரகாம் லிங்கன் படுத்திருக்கும் காட்சி மற்றும் நினைவுச் சின்னமாய் மாறியிருக்கும் அவரது கட்டில்

குண்டடிபட்ட லிங்கன் பீட்டர்சன் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஒன்பது மணி நேரம் நினைவாற்றல் இல்லாமல் இருந்த லிங்கன் 1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி காலை 7 . 22 மணிக்கு இறந்தார். இச்சம்பவம் நிகழ பதினோரு நாட்கள் முன்பு வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் ஒரு சடலம்  இருப்பதை போல் கனவு காண்கிறார். கனவில், லிங்கன் ஒரு காவலரிடம் “வெள்ளை மாளிகையில் யார் இறந்துவிட்டார்?” என்று கேட்டாராம், அதற்கு “ஜனாதிபதி ஒரு கொலையாளியால் கொல்லப்பட்டார்.” என்று சிப்பாய் பதிலளித்தாராம். சட்டென விழித்தெழுந்த லிங்கன் தன்னை இந்த விசித்திர கனவு எரிச்சலூட்டியதாக தனது நண்பர்களில் ஒருவரான வார்டு ஹில் லாமெனிடம் கூறியிருக்கிறார். கனவு கண்ட பத்து நாட்களுக்குப் பிறகு தான் லிங்கன் மரணமடைந்தார். ஆபிரகாம் லிங்கன் இறந்த அந்த நாள் ஒரு சனிக்கிழமை.   

கறுப்பின மக்களின் விடிவெள்ளி 

தோல்விகள் எப்போதும் அவரைத் துரத்திக்கொண்டிருந்தபோதும், அதற்காக ஒருநாளும் அவர் கவலைப்படாமல்  நமக்கான வாய்ப்பு வரும் என்று தன் கடமையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்த லிங்கனின் மறைவிற்கு பின் பிரிந்து போன வட தென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன. அமெரிக்க தென் பகுதியில் அடிமைப் படுத்தப்பட்டிருந்த  கறுப்பின மக்கள் விடுதலைப் பெற்றனர். வரலாற்று முக்கியத்துவம் மிக்க அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியை கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதையான ஆபிரகாம் லிங்கன் அப்போது உயிரோடு இல்லை என்பது கவலைக்குரிய விடயமே. 

ஒரு மனிதன் தன் வாழ்நாளின் முக்கிய நிகழ்வுகளை வாரத்தின் ஏழு நாட்களிலும் கடந்து வந்துள்ளான் என்பது ஆச்சர்யத்தை உண்டாக்கும் என்பது லிங்கனின் வாழ்வில் உண்மையானது. ஆபிரகாம் லிங்கன் இறந்து 150 ஆண்டுகள் கடந்த போதிலும் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளார் என்றால் மிகையாகாது. 

Related Articles