Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

கார்கில் நினைவுகள்

விடிகின்ற பொழுது இனிதாகவே விடியும் என்ற நம்பிக்கையுடன் தான் சராசரி மனிதர்களான நாம் தினமும் உறங்கச் செல்கிறோம். நமக்குள் தினமும் அத்தகைய நம்பிக்கை பூப்பதற்கான காரணங்கள் பல. அதில் முக்கியமானவர்கள் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள். இந்திய அரசு நமது ராணுவ வீரர்களை 1947லேயே சரியாக அங்கீகரிக்கத் துவங்கிவிட்டது. ஒவ்வொரு இந்தியனுக்கும் தேசப்பற்று இருக்கும் ஆனால் இராணுவ வீரனுக்கோ சற்று கூடுதலாகத் தான் இருக்கும்.  தேசிய பாதுகாப்பு அகாடமியின் பயிற்சியின் போதே தேசப்பற்றும் தனியாக உணர்வு அறிவு சார்ந்து ஊட்டப்படுகிறது. அத்தகைய இராணுவ வீரர்களுக்கே சவாலென்றால் விட்டுவிடுவார்களா என்ன ? நமது இந்தியாவின் 90 களின் மழலைகளுக்கும் தெரியும் கார்கில் போரின் உணர்வுகளைப் பற்றி, அதன் நினைவுகளே இந்த கட்டுரை.

அந்நியர்களின் முதல் ஊடுருவல்

கார்கில், காஷ்மீரின் தலை நகர் ஸ்ரீநகரிலிருந்து லே(லெஹ்) என்கிற ஊருக்கு செல்லும் வழியில் இருக்கிறது. 1999ன் மே இந்தியாவின் ராணுவ வீரர்களை சற்று குழம்பவும், சுதாரிக்கவும் செய்தது, பாகிஸ்தானின் ஹிஜ்புல் முஜாஹிதீன் என்கிற சிறப்பு ராணுவப்படையின் அத்துமீறிய ஊடுருவல் தான். இந்த ஊடுருவல் மூலம் கார்கில் வரை வந்தடைந்தனர் அந்த ஆயுதம் ஏந்திய படையினர். இந்த ஊடுருவல் திட்டத்திற்கு பாகிஸ்தானியர்கள் தேர்ந்தெடுத்த காலம் தான் மிகவும் வேடிக்கையானது. அது மே மாதம் அந்த இமாலய பள்ளத்தாக்கில் பனியின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் குளிர் தாங்கமுடியாத ராணுவ வீரர்கள் தாங்கள் தங்கி இருந்த முகாம்களை விட்டு அருகில் உள்ள குன்றுக்கு பெயர்ந்து சற்று ஓய்வெடுத்த நேரத்தில் ஆளில்லாத முகாம்கள் இருந்த பகுதியில் ஊடுருவி அங்கே இருந்த இந்திய ராணுவ வீரர்களின் முகாம்களைத் தகர்த்திருக்கின்றனர். தகர்த்ததோடு மட்டுமல்லாமல் இந்திய எல்லைப் பாதுகாப்புக் கோட்டை தாண்டி நமது நாட்டிற்குள் ஊடுருவினால் எல்லை பாதுகாப்பு கோட்டில் இருந்தே நமது ராணுவ வீரர்கள் மீது கடும் தக்குதலை நடத்தியிருக்கின்றனர்.

Kargil Penetration (Pic: dnaindia.com)

பிரதமர்களின் நிலைப்பாடு

இந்திய ராணுவ வீரர்கள் இந்த அத்துமீறிய ஊடுருவலை அறிந்ததை உணர்ந்த முஜாஹிதீன் படையினர் நமது ராணுவ வீரர்கள் மீது கடும் தாக்குதல்களை ஏற்படுத்தினர். நிலைமையை சோதிக்கச் சென்ற 5 இந்திய ராணுவ வீரர்களையும் சிறை பிடித்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்காமல் விடுவார்களா நமது இந்திய ராணுவ வீரர்கள்.அதுவும் சற்று சிந்தித்து இந்திய பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்யாயிடம்  நிலைமையை முறையே கூறி புரியவைத்து, வாஜ்பாயின் உத்தரவு கிட்டிய பின்னரே இந்திய ராணுவம் தனது தாக்குதலைத் தொடங்கியது. அதாவது அதிகாரப்பூர்வமாக ஆப்பரேஷன் விஜய் துவங்கப்பட்டது. இந்த பிரச்சனையில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் முதலில் இந்த தக்குதலுக்கு எந்த பொறுப்பையும் ஏற்காத பாகிஸ்தான் நாட்டின் அன்றைய பிரதமர் திரு. நவாஜ் ஷெரிப்புக்கே அவரது ராணுவப் படைத்தளபதி பெர்வேஸ் முஷரப் தான் இதன் பின் இருந்து செயல்பட்டிருக்கிறார் என்பது தெரியாது.

போர் மூண்டது. நாடெங்கும் பதற்றம் சூழ்ந்தது. பாகிஸ்தான் ராணுவமும் இதில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உண்மையை பின் நாளில் உணர்ந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஜ் ஷெரீஃப், இந்திய பிரதமர் வாஜ்பாயிடம் வந்து சமாதானம் பேசினார். சமாதானத்திற்கு வாய்ப்பே இல்லை என்று வாஜ்பாய் திட்டவட்டமாக தெரிவித்தது நிச்சயம் ஒரு சிறந்த தீர்மானம் தான். இல்லையெனில் இன்று சிந்துபாத் போன்று இழுப்பறியாக இருக்கும் காஷ்மீர் பிரச்சனையில் இன்னொரு தீர்க்க முடியாத குழப்பம் எழுந்திருக்கும். காஷ்மீர் மாநிலத்தின் முழு பகுதியும்  நம்மிடம் பத்திரமாக இருந்திருக்குமா என்பதும் சந்தேகம்தான். இரு நாடுகளிடமும் சமாதானம் செய்து வைக்க பல சர்வதேச அமைப்புகள் முன் வந்தன. அனைத்து அமைப்புகளுக்கும் வாஜ்பாய் தெளிவாக இந்தியாவின் சூழ் நிலையை எடுத்துரைத்து, போரை நிறுத்தினால் இந்தியாவுக்கு வரும் பாதிப்புகளை விளக்கி போரை நிறுத்தும் எண்ணம் இந்தியாவிற்கு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் அந்த போருக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் பாதுகாப்பு அமைச்சரின் உதவி கொண்டு துரிதமாக செய்து தந்தார்.

இந்தியா பகிஸ்தான் பிரிவினை

இந்தியாவை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்று பிரிக்கின்ற தருவாயில், அதிகாரத்தில் இருந்தவர்கள் பிரிவினையின் போது பல கோணங்களில் கருத்துகளை வைத்திருந்தது தான், இரண்டு நாடுகளுக்கும் எல்லைப் பிரச்சனை இவ்வளவு பெரிய தலைவலியாக இருக்கிறது. இதைப் போன்ற எல்லைப் பிரச்சனை உலகம் முழுக்க இருக்கும் பல நாடுகளுக்குள்ளும் இருக்கிறது என்றாலும். எல்லை சிறப்பு இராணுவப்படையை தனது நாட்டுப் பிரதமரின் கவனத்திற்கே தெரியாமல் இவ்வகையான பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கு அத்துமீறிய வன்முறையில் ஈடுபடச் செய்த பெர்வேஸ் முஷரகின் நடவடிக்கை, முறை தவறியது மட்டுமல்லாது, தர்மத்திற்கு எதிரானது.

India Pakistan Partition (Pic: openthemagazine.com)

ஹிஜ்புல் முஜாஹிதீன்

சரி யார் இந்த ஹிஜ்புல் முஜாஹிதீன். இது பாகிஸ்தானின் சிறப்பு ராணுவப் படை. 1989ல் காஷ்மீர் பிரிவினைப் பிரச்சனைக்காக பாகிஸ்தானில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு ராணுவப்படை. கார்கில் போரின் ஊடுருவலின் போது இவர்கள் அமெரிக்கர்களிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கி பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இதனை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. இப்பொழுதும் சிறு சிறு குழுக்களாக காஷ்மீர் மாவட்டத்திலும், பாகிஸ்தானிலும் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருவதாக செய்தி.

HIzbul Chief Sayed Salahudeen (Pic: dnaindia.com)

போரின்போது இந்திய ஊடகங்கள்

கார்கில் போரின்போது, இந்தியாவில் உள்ள அநேக தாய்மார்கள் தனது மகன்களை போருக்கு அனுப்ப துணிந்தனர். அந்த காலகட்டத்து மழலைகளுக்கும் கார்கில் போர் பற்றிய அறிவும், உணர்வும், ஆழமாக புரிந்திருந்தது இன்னொரு ஆச்சர்யமான விடயம் தான். இதற்கு முக்கிய காரணம் சம காலத்தில் செயல்பட்ட இந்திய ஊடகங்கள். ஒரு வேளை இப்போது இருப்பது போன்ற சமூக ஊடகங்கள் அப்போது இருந்திருந்தால் ஒவ்வொரு இந்தியனும் தனது உணர்வினை சமூக வலைதளத்தில் பதிந்திருப்பான். அது நமது அரசையும், ராணுவ வீரர்களையும் கூடுதலாக ஊக்கப் படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒன்று மட்டும் உறுதி, அன்றைய இந்திய ஊடகங்கள் நிச்சயமாக தனது தர்மத்தோடு தான் செயல்பட்டிருக்கிறது. அந்த காஷ்மீர் மலைகளினுள்ளும் பள்ளத்தாக்குகளுக்கும் நமது ராணுவ வீரர்களுடன் தோளோடு தோள் சேர்த்து, அவர்களுக்கு துணையாகவும் இருந்து, கார்கில் நிகழ்வுகளை மக்கள் பார்வைக்கு உடனுக்குடன் அளித்த பத்திரிக்கையாளர்களும், நிருபர்களும் நிச்சயம் ராணுவ வீரர்களுக்கு நிகரானவர்கள் தான் என்று அன்றைய வார இதழ் ஒன்றில் கட்டுரையாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார், அதை நானும் ஆமோதிக்கிறேன். அந்த நிருபர்களின் குடும்பத்தினர்களும் ஒரு வித பதற்றத்தில் தான் இருந்திருப்பார்கள். பனியின் உக்கிரத்தில் ராணுவ வீரர்களோடு பசி தூக்கம் அனைத்தையும் மறந்து செயல்பட்டது நிச்சயம் உயரிய மகுடத்திற்கு உகந்த செயல் தான். அந்த செயலில் சில பெண் நிருபர்களும் ஈடுபட்டனர் என்பது கூடுதல் சிறப்பு.

Barkha Dutt (Pic: pinterest.com)

போரின் வெற்றியை நோக்கிய பயணம்

இந்த கார்கில் போரில் பல ராணுவ வீரர்களின் மனைவிகள் தங்கள் குடும்பத்தினரை நாட்டுக்காகத தியாகம் செய்தனர். அத்தகைய நிகழ்வுகளால் ஒவ்வொரு இந்தியனின்  மனமும் வெதும்பின. ஆனால் ஊடகங்கள் வாயிலாக அந்த பெண்மணிகள் வெளிப்படுத்தியது ஒத்த கருத்தையே. ”கணவனின் இழப்பு தங்களை தவிக்க விட்டாலும் அவர்களது வீர மரணம் எங்களை பெறுமைப் பட வைத்தது”, என்று கூறியதோடு, அவர்கள் பேசிய உணர்வுப் பூர்வமான பேச்சுகள் களத்தில் இருக்கும் இராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தியது.

பாகிஸ்தானது முக்கிய குறிக்கோள் காஷ்மீரைக்  கைப்பற்றுவதாகவே இருந்தது. ஜூன் 6 ஆம் தேதி தனது முழு பலமான தாக்குதலைத் துவங்கிய இந்திய ராணுவம், முதலில் தனது இரண்டு முக்கிய  போர்த் தளங்களை கைப்பற்றியதில் துவங்கி, கார்கில் மாவட்டத்தின் தராஸ் பகுதி, மேலும் டைகர் சிகரத்தின் முக்கிய சோதனை மையங்களான 5060 மற்றும் 5100 என ஒவ்வொன்றாக தன் வசப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஜூலை 2 ல மீண்டும் தாக்குதலை வலுவாக துவங்கியது. இது வெறும் ஆள் நடமாட்டத்தை சோதிக்கத்தான் என்றாலும், போரின் ஒரு முக்கிய செயலாக கருதப்பட்டது. இந்த போரின் முடிவிலும் ஒரு வேடிக்கை இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி நவாஜ் ஷரீஃபை அமெரிக்க பிரதமர் சந்தித்த பிறகு தான் நவாஜ் ஷெரிப் தங்களது போரை நிறுத்திக்கொள்வதாகவும், தனது ராணுவப் படை வீரர்கள் பாகிஸ்தானுக்கு திரும்பும்படியும் அறிவித்தார், எந்த நாட்டிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கி இந்த போரை நிகழ்த்தினாரோ, அதே நாட்டு குடியரசுத் தலைவரின் சந்திப்பிற்கு பிறகு பின் வாங்கல் அறிவிப்பு. முஷாரஃபின் அறிவிப்பிற்கு பிறகும் அந்த முஜாஹிதீன் படையினர் சில இடங்களில் தாக்குதலை நிறுத்தவில்லை. அது ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் அவர்களை கோபமடையச் செய்தது. அத்தருவாயில் இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரி என்ற பொறுப்பில் பகிரங்கமாக அவர் பேசிய பேச்சு போரை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தது.

George Fernandes (Pic: intellectsreview.com)

போருக்கான நன்கொடைகள்

இந்த கார்கில் போரில் பல ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசால் நமது இராணுவத்திற்கு போதுமான செலவினங்களை செய்யும் வண்ணம் வளமாக இருந்த போதிலும், போருக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கமாக மக்களிடம் இருந்தும் நாங்கள் நிதியை திரட்டித்தருகிறோம் என்று கூறி திரைத்துறையினர் கலை நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி கார்கில் போருக்கான நிதியாக பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ஜார்ஜ் ஃபெர்னாண்டஸிடம் அளித்தனர். அதைப் போன்று எத்தனையோ கூட்டமைப்புகளும் இயக்கங்களும், நிறுவனங்களும் கார்கில் போருக்கு தேவையான நிதி உதவிகளை செய்தது குறிப்பிடத்தக்கது.

Donations for Operation Vijay (Pic: deccanchronicle.com)

சவப்பெட்டி

கார்கில் போரில் உயிரிழந்த பல வீரர்களின் சடலங்களை எடுப்பதற்கென்றே தனியாக நிதி ஒதுக்கப்பட்டு சவப்பெட்டிகள் செய்யப்பட்டன.பொதுவாக நமது நாட்டில் அரசு நிதிகள் திட்டமிட்டு சரியாக பயன்படுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. அவ்வண்ணமே இந்த கார்கில் போரில் உயிரிழந்தவர்களின் இறுதி மரியாதைக்காக செய்யப்பட்ட சவப்பெட்டிகள் தயாரித்ததிலும் ஊழல் நடந்திருப்பதாக செய்திகள் கசிந்தன. அதில் ஆளும் கட்சியின் சில மந்திரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வந்த செய்தி பொதுமக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின் நாளில் அந்த செய்தி, ஊடகங்களில் பெரும் கவனத்திற்கு உட்பட்டதெல்லாம் இங்கே இருக்கும் நிர்வாகத் திறனுக்கு கரும்புள்ளி தான்.

Coffins (Pic: azdailysun.com)

என்னதான் இருந்தாலும் கார்கில் போர் நமது இராணுவத்தின் வலிமையை உலகுக்கு பறைசாற்ற ஒரு வாய்ப்பாக அமைந்தது ஒன்று தான். நமது உரிமையையும், நமது நிலப்பரப்பையும் நம்மோடு தக்க வைத்துக் கொள்வதற்கு பலர் செய்த தியாகங்கள் மிகப் பெரிய விடயம் தான். அதை விட முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று ராணுவ வீரர்களின் குடும்பத்தினரது நிலையும் பரிதவிப்பும். இந்திய அரசு அதிகாரிகளுக்கும் சம்மந்தப்பட்ட மந்திரிகளுக்கும், ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கும், இந்திய மக்களுக்குள்ளும் இருந்த தேசப் பற்று உண்மையாகவே இருந்திருக்குமேயானால், வீரர்களுக்காக செய்யும் சவப்பெட்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் நடந்திருப்பதை கண்டுகொள்ளாமல் விட்டிருக்க மாட்டார்கள். ஆனால் உயிரிழந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கும், அவர்களுக்குள் இருந்த தேசப்பற்றை மதித்து சில சவப்பெட்டிகளை வழங்கியது நமது இராணுவம். அத்தகைய கண்ணியத்தோடும், தேசப்பற்றோடும், தனது உயிரையும் தியாகம் செய்யத் துணிந்து செயல்பட்ட ஒவ்வொரு வீரர்களையும், போரில் உயிரிழந்த ஒவ்வொரு ராணுவ வீரர்களின் குடும்பத்தினரையும் நினைவுக்கூர்த்து உள்ளம் நெகிழ்ந்து தலை வணங்குகிறேன்.

Web Title: Memories of Kargil War

Featured Image Credit :newsmobile.in

Related Articles