தென்னிந்தியாவின் முதல் ரயில்நிலையமான ராயபுரம் கடந்து வந்த பாதைகள்

கால வெள்ளத்தில் எவ்வளவு பெரிய விஷயங்களும் காணாமல்  போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான நிகழ்கால சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது ராயபுரம் ரயில் நிலையம்.  தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம். இங்கிருந்து தான் தென்னிந்தியாவின் முதல் ரயில் தனது பயணத்தைத் தொடங்கியது. இந்த ரயில்நிலையம் 157 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது ஆகும். இந்த உப கண்டத்திலேயே பழமையான பாரம்பரிய ரயில் நிலையலக்கட்டிடமாக இந்த நிலையம் இருக்கிறது. இந்தியாவில் கட்டப்பட்ட 2வது ரயில் நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ரயில் நிலையம், விரிசல் விழுந்த சுவர்களுடனும், மோசமான விளக்குகளுடனும், சுகாதார கேடுடனும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆனால் நாட்டின் முதல் ரயில்நிலையமான போர்பந்தர் ரயில் நிலையம் தனது நிஜமான வடிவுடன், பழமை மாறாமல் பாதுகாக்கபட்டு வருகிறது. ஆனால் ராயபுரம் ரயில்நிலையம் சற்றே கவலைக்கொள்ள வேண்டிய நிலையிலேயே உள்ளது.

இந்த ரயில்நிலையம் உருவான வரலாறை காண்போம்.  ஸ்டீபன்சன் நீராவி என்ஜினை கண்டுபிடித்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு,  தென்னிந்தியாவில் ரயில்களை இயக்குவது குறித்து லண்டனில் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து 1845ஆம் ஆண்டு ‘மெட்ராஸ் ரயில்வே கம்பெனி‘ தொடங்கப்பட்டது. ஆனால் அவர்கள் திட்டமிட்டு வேலையைத் தொடங்குவதற்கு முன்னர், 1849ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘தி கிரேட் இந்தியா பெனின்சுலா கம்பெனி’  இந்தியாவின் முதல் இருப்புப் பாதையை அமைத்துவிட்டது. 21 மைல் நீளத்திற்கு அமைக்கப்பட்ட இந்த இருப்புப் பாதையில் பம்பாயின் போர்பந்தரில் இருந்து தானே வரை இந்தியாவின் முதல் ரயில் 1853, ஏப்ரல் 16ந் தேதி இயக்கப்பட்டது.

படம் : thehindu

இதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் இருப்புப் பாதை அமைக்கும் பணியை மெட்ராஸ் ரயில்வே கம்பெனி தொடங்கியது. அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்தான் ராயபுரம். கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வசித்து வந்த புனித ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகில் ராயபுரம் இருந்ததால் தேர்வு செய்யப்பட்டது. பணிகள் அதிவேகமாக மேற்கொள்ளப்பட்டு, விசாலமான அறைகள்,  உயரமான தூண்கள்,  அழகான முகப்பு என பிரம்மாண்டமான ராயபுரம் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.

அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபு 1856, ஜூன் 28ந் தேதி இதனைத் திறந்துவைத்தார். இதனை அடுத்து,  ஜூலை 1ந் தேதி தென்னிந்தியாவின் முதல் ரயில் இங்கிருந்து புறப்பட்டது. ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற்காடு வரை இந்த ரயில் இயக்கப்பட்டது. இதற்கான ரயில் பெட்டிகளை அக்காலத்தில் புகழ்பெற்ற சிம்சன் கம்பெனி தயாரித்திருந்தது. ஆளுநர் ஹாரிசும், சுமார் 300 ஐரோப்பியர்களும் இந்த முதல் ரயிலில் பயணப்பட்டனர். ஆம்பூர் சென்றடைந்த ரயிலுக்கு துப்பாக்கி குண்டுகளும், பேண்டு வாத்தியங்களும் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் மற்றொரு ரயில் ராயபுரத்தில் இருந்து திருவள்ளூர் வரை இயக்கப்பட்டது.

படம் : flickr

இந்த நிகழ்ச்சி பற்றி லண்டன் பத்திரிகையான The Illustrated London News விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது. வழிநெடுகிலும் இந்த ரயில்களை ஏராளமானோர் பயம் கலந்த ஆச்சர்யத்தோடு பார்த்ததாக அந்த செய்தி தெரிவிக்கிறது. வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும், மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களும் ஒரு மிகப் பெரிய இரும்பு வாகனம் தங்களை நோக்கி விரைந்து வருவதைப் பார்த்து மிரண்டு ஓடினார்களாம். சில இடங்களில் மக்கள் விழிகள் விரிய பலத்த ஆரவாரத்தோடு இந்த ரயிலை ரசித்துப் பார்த்திருக்கிறார்கள். இப்படி அன்றைய மெட்ராஸ்வாசிகளுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுத்தன ராயபுரத்தில் இருந்து புறப்பட்ட முதல் இரண்டு ரயில்கள்.

முதல் ரயில் ஆம்பூர் சென்றடைந்ததும்,  அங்கு ஒரு சிறிய விழா நடத்தப்பட்டிருக்கிறது. அதில் பேசிய ஆளுநர் ஹாரிஸ் பிரபு,  மெட்ராஸ் ரயில்வே கம்பெனியையும், அதன் மேலாளர் ஜென்கின்சையும் (Major Jenkins) வெகுவாகப் பாராட்டி இருக்கிறார். ஒரு மைல் இருப்புப் பாதை அமைக்க 5,500 பவுண்டுகள் செலவானதாகவும், அது ஒரு நல்ல முதலீடுதான் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டிருக்கிறார். இப்படி கோலாகலமாக தொடங்கப்பட்ட ராயபுரம் ரயில் நிலையம்,  அடுத்த 17 ஆண்டுகளுக்கு மெட்ராஸ் மாநகரின் ஒரே ரயில் நிலையமாக கோலோச்சியது. 1873இல் இதற்கு போட்டிக்கு வந்தது மெட்ராஸ் சென்ட்ரல் ரயில் நிலையம். பின்னர் வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் சென்ட்ரலில் இருந்தும், தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் ராயபுரத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும் என சொத்து பிரிக்கப்பட்டது.

படம் :flickr

இதனிடையே சென்னை துறைமுகம் வேகமாக வளர்ச்சி அடைந்ததால், துறைமுகத்தின் சரக்குப் போக்குவரத்தும் ராயபுரம் ரயில்நிலையம் மூலம் நடைபெறத் தொடங்கியது. இதன் விளைவு,  புதிதாக முளைத்தது எழும்பூர் ரயில் நிலையம். பின்னர் தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் எழும்பூருக்கு இடம்பெயர்ந்தன. ராயபுரம் ரயில் நிலையம் மெல்ல மெல்ல தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ரயில் நிலையம், இன்று புதர்கள் மண்டி பொட்டல்வெளி போல காட்சியளிக்கிறது. சென்னை கடற்கரை மார்க்கத்தில் இயக்கப்படும் வெகு சில ரயில்கள் மட்டுமே இங்கு நின்று செல்கின்றன.

ராயபுரம் ரயில்நிலையம் நாட்டின் பழமையான,  தென்னிந்தியாவின் முதல் ரயில்நிலையம். சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் தொடங்கப்பட்ட பிறகு முக்கியத்துவம் இழந்து இப்போது சில நூறு பயணிகள் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்து தாம்பரத்தை 3வது முனையமாக்கப்படும் என்ற தகவல் வெளியானது முதல் தாம்பரத்துக்கு பதிலாக ராயபுரத்தை முனையமாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஒரு கட்டத்தில் எழும்பூரில் இருக்கும் ரயில் நிலையத்தை தாம்பரத்துக்கு மாற்றப்போவதாகவும் பிரசாரம் நடந்தது. அதற்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்தது. மேலும் ராயபுரத்தை முனையமாக்கும் அளவுக்கு இட வசதியில்லை என்றும் தகவல் வெளியானது.

ராயபுரத்தை முனையமாக்க தமிழகத்தைச் சேர்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து ரயில்வே வாரிய அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து  2012ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ராயபுரத்தை முனையாக்குவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் ராயபுரத்தை முனையமாக்கும் கோரிக்கை வலியுறுத்தி போராடி வரும் குழுவினர் சில நாட்களுக்கு முன்பு டெல்லிச் சென்று தமிழக அமைச்சர், தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசினர். அதனையடுத்து  நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, தெற்கு ரயில்வே தலைமை மேலாளர் ராகேஷ் மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ராயபுரத்தை முனையமாக்க போதியமான இடம் இல்லை என்றும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் இருந்தால் வசதியாக இருக்கும் என்று விவாதிக்கப்பட்டது. அதற்காக தமிழக அரசிடம் பேசி நிலத்தை பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஸ்டான்லி மருத்துவமனை ராயபுரம் ரயில்நிலையத்தை விட பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் : youtube

தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். சுமார் 75 ஆண்டுகள் பழமையான மருத்துவக்கல்லூரியும் இயங்குகிறது. ராயபுரத்தில் முனையம் அமைக்க ரயில்வேயிடம் போதிய இடம் இல்லை என்று பழமையான மருத்துவமனையிடம் 2 ஏக்கர் நிலம் கேட்க முடிவு செய்துள்ள தெற்கு ரயில்வே,  ஏற்கனவே ரயில் இன்ஜின்கள் பணிமனையை 50 முதல் 100 இன்ஜின்கள் நிறுத்தி வைக்கும் அளவுக்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

அதற்காக சில வாரங்களுக்கு  முன்பு டெண்டர் விளம்பரத்தை வெளியிட்ட தெற்கு ரயில்வே, ஸ்டான்லி மருத்துவமனையிடம் இடம் கேட்க முடிவு செய்த பிறகும் மீண்டும் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதன்படி ராயபுரத்தில் உள்ள இன்ஜின் பணிமனையை 3.9 கோடி ரூபாய் செலவில் 50 முதல் 100  இன்ஜின்கள் வரை நிறுத்தி வைக்கும் வகையில் விரிவாக்கம் செய்ய உள்ளது. அதற்காக குறைந்தது 4 ஏக்கர் வரை இடம் தேவைப்படும் என்கிறார்கள். அதுமட்டுமின்றி அப்பணிகளை 6 மாதங்களுக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளது.

Web Title: memories of the first railway station in royapuram

feature image credit: indiarailinfo, thehindu

Related Articles