ஆஸ்திரேலிய பழங்குடிகள் நம் பங்காளிகளே….

“கல்தோன்றி மண் தோன்றாக்காலத்து மூத்தகுடி-  தமிழர்களாகிய நாம் உச்சரிக்கும் சொற்றொடர். இது மிகைப்படுத்தபட்ட வார்த்தைகளா? இல்லை உண்மை இருக்கிறது. உலகின் பல மொழிகளில் தமிழில் உச்சரிக்கப்படும் அதே அர்த்தத்தோடு பல வார்த்தைகள் புழக்கத்தில் இருக்கின்றன. தமிழர்களின் பண்பாட்டோடு நெருக்கமான உறவுகொண்ட  பல பழங்குடி மக்கள் உலகம்  முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள். இன்றைக்கு ஐரோப்பியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட ஆஸ்திரேலியாவின் மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, மொழி உள்ளிட்ட பல அம்சங்கள் தமிழர்களின்  பண்பாட்டை பிரதிபலிக்கிறது. அவ்வளவு ஏன் அவர்களுக்கும், நமக்குமான மரபணு ஒற்றுமை இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் இன்று தமிழர்கள்

29,67,909 சதுர அடி  பரந்த வெளி கொண்ட கண்டம். ஒரு பெரிய தீவே ஒரு கண்டமாகவும், நாடாகவும்  உள்ள தேசம் ஆஸ்திரேலியா. குதித்து, குதித்து ஒடும் கங்காரு ஆஸ்திரேலியாவின் சிறப்பு மிக்க விலங்கு.

உலகின் பிற பகுதிகளோடு பல நூற்றாண்டுகளாக தொடர்பு இல்லாத காரணத்தால் கங்காரு உள்ளிட்ட பல பிரத்யோகமான விலங்குகள் ஆஸ்திரேலியாவுக்கே உரியவை. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குடியேறத்  தொடங்கிய ஐரேப்பியர்கள் இன்றைய ஆஸ்திரேலியாவின் அரசை நிர்வகிக்கும் சமூகமாக மாறியிருக்கிறது. சூமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் குடியேற்றம் தொடங்கிவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு 1788 தொடங்கி, 1837 -38 களில் விவசாயக் கூலிகளாக தமிழர்களை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் அழைத்து வந்தது. நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா, தலைநகரான கேன்பாரோ ஆகிய பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். மலேசியா , சிங்கப்பூர், பிஜி, மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து தமிழர்கள் குடியேறியிருக்கிறார்கள்.

படம்: thetab

40,000க்கும் அதிகமாக வசிக்கும் தமிழர்களில் இலங்கை தமிழர்களும் அவர்களின் வம்சாவளியினருமே அதிகம். இன்றைக்கு ஆஸ்திரேலியாவின்  அரசியலில் பங்களிப்பு, தொலைக்காட்சி, வானொலி, தமிழ் இதழ்கள், தமிழ் பள்ளிகள் , தமிழ்சங்கம் என இன்றைய நவீன காலத்திற்கேற்ப வாழ்ந்து வருகிறார்கள்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில்

இன்றைய ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் ஒரு அழகான மணி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 19 ம் நூற்றாண்டில் நியூசிலாந்து கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வெங்கலமணி. அது 15ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் அல்லது அதற்கு முற்பட்டதாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. அந்த மணியின் வெளிப்புறத்தில் “முகைதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி ” என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வெங்கலமணி ஐரோப்பியர்களின் குடியேற்றத்திற்கு பல நூற்றாண்டுக்கு முன்பே தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறினர் என்பதற்கு அசைக்க முடியாத  ஆதாரம்.

படம்: wix

பழங்குடி மக்களின் பேச்சில் தமிழ்

ஆஸ்திரேலியாவில் 300க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். பண்டைய திராவிட இன மக்களின் மொழி, இனம் ,பண்பாட்டு ஒற்றுமைகள் இங்குள்ள சில பழங்குடி மக்களிடம் காணப்படுகிறது. “டிராக்மிலா சபோன்ஸ்கோவா” – பழங்குடிகளின் பேச்சில் ஏராளமான தமிழ் சொற்கள் வழக்கத்தில் உள்ளன.

படம்: sacredtexts

இதே போல “பக்லோவியர் ” – பழங்குடிகளின் பேச்சு மொழியில் தமிழ் இலக்கண அமைப்போடு நெருக்கமானதாக உள்ளது. ஏற்றத, முட்டி, மின்னல், பாம்பு, மகவு, நீறு போன்ற பல தமிழ் சொற்களும் பேசுகிறார்கள்.

வலைத்தடியும்பூமாராங்கும்

வளரி அல்லது வலைத்தடி என்பது  தாக்க வேண்டிய இலக்கைத்  தாக்கி விட்டு எய்தவர் இடமே திருப்பிவரும்  போர்க்கருவி.  தமிழகத்தில் இன்றைய சிவகங்கை பகுதியில் மன்னர்களாக  இருந்த  சின்ன மருது, பெரிய மருதுவும் இந்த வலைத்தடியை ஆங்கிலேயர்களுக்கு எதிரான  போரில் பயன்படுத்தியதாக ஜெனரல் வெல்ஸ் என்ற ஆங்கிலேய ராணுவ தளபதி தனது ராணுவ குறிப்புகளில் தெரிவித்துள்ளார். இன்றும் தமிழகத்தின் முக்கிய சமூகங்களில் ஒன்றான  முக்குலத்தோர் வழிபாடுகளில் வலைத்தடி இடம்பெறுகிறது.

படம்: thetab

இதே வலைத்தடி பூமாராங் என்ற பெயரில் ஆஸ்திரேலிய பழங்குடியினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத வகையிலான இந்த ஒப்புமை கவனிக்கத்தக்கது.

நல்லபார் சமவெளி, மேற்கு ஆஸ்திரேலிய பகுதிகளிலேயே பழங்குடி மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள்.  மானிடவியல் ஆய்வாளர் வெ.சி.ரிச்சர்ட் ஆய்வுகளின்படி 30,000   ஆண்டுகளுக்கு முன்பே இவர்களுக்கும் திராவிடர்களுக்கும் தொடர்பு உண்டு. இந்தியாவின் தென்பகுதியில் இருந்ததாக கருதப்படுகிற குமரி கண்டம்  அழிந்தபோது இவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து ஆஸ்திரேலிய பகுதிகளுக்கு வந்தடைந்திருக்கலாம் என்கிறார்.

மரபணு ஒற்றுமை

2கோடி ஆண்டுகளுக்கு முன்னால் குரங்கு வகையிலிருந்து புதியவகை குரங்கு இனம் உருவாகத்  தொடங்கியது. 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் அந்த புதிய வகை  குரங்கு இனம் ஹோமோசேப்பியன்ஸ் -எனப்படுகிற மனித இனமாக வளர்ச்சியடைந்தது. கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதன் உருவாகி இன்று கணிணியுகம் நடந்து கொண்டு இருக்கிறது. மனித இனம் ஆப்பிரிக்காவில்தான் உருவானது என்பது உலக அளவில் ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அப்படி உருவான மனித இனம் இன்று உலகம்  முழுவதும் பரவி புறக்காரணிகளால் தோற்றத்தில் சிறு,சிறு மாறுபாடுகளோடு வளர்ச்சியடைந்திருக்கிறது .

படம்: sites.google

ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனித இனம் உலகின் எந்த எந்த நாடுகள் வழியாகப்  பயணித்திருக்கிறது என்பதைக்  கண்டறிய இத்தாலியைச்  சேர்ந்த லூகாகவாலி சக்போர்ஸா என்ற ஆய்வாளர் விரும்பினார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த ஆய்வு முறை மரபணு ஆய்வு முறையாகும்.

ஆப்பிரிக்க பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை ஆய்வு செய்து,  அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரிக்க தொடங்கினார். ரத்தமாதிரிகளிலிருந்து எம்130 ஒய் – என்ற புதிய மரபணுவை கண்டறிந்தார். இந்த மரபணு ஒரு ஆணிடமிருந்து அவனது ஆண் வாரிசுக்கு ஆண் தன்மையை சுமந்து சொல்லக்கூடிய y- குரோமோசோம் வகையைச்  சேர்ந்ததாகும்.

பிறகு ஆஸ்திரேலியா போன ஆய்வாளர் அங்குள்ள ஆதிவாசிகளிடமும் எம் 130 ஒய் மரபணு இருப்பதை தனது ஆய்வுகள் முலம் கண்டறிந்தார். இந்த ஆய்வுகள் மூலம்  60,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனித இனத்தின் நேரடி வாரிசுகள்தன் ஆஸ்திரேலிய பழங்குடிகள் என்பதை உலகிற்கு தெரிவித்தார்.

இங்கேதான் ஒரு சின்ன யோசனை ஆய்வாளருக்கு. ஆப்பிரிக்காவிற்கும் – ஆஸ்திரேலியாவிற்கும் இடைய  இந்தியாவிலும் ஆய்வு செய்ய வேண்டுமே. லூகாகாவலியின் ஆய்வை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக  பேராசிரியர் ஸ்பென்ஸர் வெல்ஸ் அவரது பாணியிலே தொடர்கிறார். ஸ்பென்ஸர் வெல்ஸின் ஆய்வில் மதுரை காமராசர்   பல்கலைக்  கழக நோய் தடுப்பாற்றல் துறை  தலைவர் பிச்சையப்பன் இணைந்து கொண்டார். அவரின் ஆனுபவ அறிவோடு மதுரை மாவட்டம் முழுவதும் தனது முதல் கட்ட ஆய்வை தொடங்கினார். எம்130ஒய் மரபணு மதுரை மாவட்டத்தில் பலரிடம் காணப்பட்டாலும் உசிலம்பட்டி அருகேயுள்ள ஜோதிமாணிக்கம் கிராமத்தில் வசிக்கும் விருமாண்டி என்பவருக்கு மிகச்சரியாக பொருந்தியது. பிச்சையப்பனின் இந்த ஆய்வுகளை மீண்டும் ஒருமுறை சரிபார்த்த பின்பு ஸ்பென்சர்வெல்ஸ் -ஆப்பிரிக்கவிலிருந்து புறப்பட்ட ஆதி மனிதர்கள் தென்னிந்தியாவழியாக கடந்து சென்று ஆஸ்திரேலியாவை அடைந்திருக்கிறார்கள் என்றார். இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது என்னவென்றால் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய பழங்குடிகள் தமிழர்களாகிய  நம் பங்காளிகளே.

ஆய்வுகள் தொடரும்…..

Related Articles