Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவளித்த நேதாஜி சுபாஷ் சந்த்ர போஸ்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்த்ர போஸ், பிரித்தானியாவின் கைகளிலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்கு போராடினார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் இலங்கையின் சுதந்திரப் போராட்டத்திற்கும் ஆதரவளித்தார் என்பது வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது. அடிமைச்சங்கிலியிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்காக, சுபாஷ் சந்த்ர போஸின் கீழ் ஒரு படைப்பிரிவு இயங்கியிருந்தது. அதைப் பற்றித்தான் நாம் பார்க்கப் போகின்றோம்.

அவர்கள் நான்கு பேர்

பிரித்தானியர் ஆதிக்கத்திலிருந்த தாய்நாட்டை விடுவிக்கும் பணியில் நாங்கு பேர் ஈடுபட்டிருந்தார்கள். 1944 ஆம் ஆண்டில், மலேசியக் கடற்பரப்பிலிருந்து பயணத்தை ஆரம்பித்த அவர்களின் நீர்மூழ்கிக்கப்பல், இலங்கையின் தென் பிராந்தியத்தில் உள்ள கரையோரப் பகுதியான கிரிந்த என்ற இடத்தினை, தனது இலக்காகக் கொண்டு பயணித்தது.

கடலில் ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டிக் கொண்டு, இலங்கைக்கான சுதந்திரத்தைப் பெறுவதற்காக, உளவுப் பணியொன்றைப் பொறுப்பேற்றுப் பயணித்த அவர்களின் குழுவில் நான்கு பேர் இருந்தனர். டுடர் குணரத்ன (Tudor Gunaratne), வெர்னொன் ஃபெர்னான்டோ (Vernon Fernando), எட்வின் ஜயக் கொடி (Edwin Jayakody) மற்றும் ஜோசெப் ஜெயக்கொடி (Joseph Jayakody) ஆகிய நால்வரில் எட்வினும் ஜோசெப்பும் சகோதரர்கள்.

இந்திய தேசிய இராணுவத்தின் – லங்கா ரெஜிமென்ட்

பிரித்தானியர் சூட்டிய அடிமைத்தளையிலிருந்து இந்தியாவை விடுவிப்பேன் என சபதம் பூண்ட, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சிங்கப்பூரில், ‘இந்திய தேசிய இராணுவத்தை’ அமைத்தார். மிதவாத அரசியற் போக்கு மூலம் பிரித்தானியர்களிடமிருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்காது என்பதை உணர்ந்த சுபாஷ், இந்தியாவிலிருந்து வெளியேறினார்.  இரண்டாம் உலகப் போரின் கரிய மேகங்கள் உலகைச் சூழ்ந்த வேளை  அது!

பிரித்தானியா மற்றும் அவற்றின் கூட்டு நாடுகளை எதிர்த்து ஜப்பான் மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப்படை சரமாரியாக யுத்தம் செய்த வண்ணமிருந்தது. வெற்றி தோல்விகள் இருதரப்பிலும் மாறி மாறி வந்த வண்ணம் இருந்தன. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் யப்பானியர்கள் பக்கமே வெற்றி சாயுமென திடமாக நம்பினார் சுபாஷ் சந்த்ர போஸ். அவர்களுடன் இணைந்த அவர், இந்தியாவை மீட்பதற்கான “இந்திய தேசிய இராணுவத்தை” பொறுப்பேற்றார்.

அந்த இந்திய தேசிய இராணுவத்தின் கீழ், லங்கா ரெஜிமென்ட் ஸ்தாபிக்கப்பட்டது தான் யாருக்கும் பெருமளவில் தெரியாத கதை!

இதுதான் நடந்தது…

1941 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி நள்ளிரவில், பிரித்தானியாவின் ஆதிக்கத்திலிருந்த மலேசிய – சிங்கப்பூர் நிலப்பரப்பினை, ஜப்பான் கைப்பற்றிக் கொண்டது. பசுபிக் கடற்பரப்பின் மீது நிகழ்ந்த முதலாவது பாரிய யுத்தமாக இதனைச் சொல்ல முடியும். பிரிட்டிஷ் இந்திய இராணுவமும் ஜப்பானியப் பேரரசும் இந்த யுத்தத்தில் மூர்க்கமாக மோதிக் கொண்டன. இறுதியில், சூரியன் அஸ்தமிக்காத பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய கேந்திரப் பகுதி ஜப்பான் வசமானது.

ஜன்னானிடம் சரணடைந்த பிரித்தானியர்
பட உதவி: macaudailytimes.com

பிரித்தானியர் ஆளுகையின் கீழ் மலேசியா – சிங்கப்பூர் பகுதிகள் இருந்த போது, இலங்கையிலிருந்து பலர் சென்று பணியாற்றினார்கள். பின்னர் அந்த நிலப்பரப்பு ஜப்பானியர் வசம் வந்த பின்னர் அங்கு இந்திய தேசிய இராணுவத்தின் ஒரு படைப்பிரிவாக லங்கா ரெஜிமென்ட் ஸ்தாபிக்கப்பட்ட போது, இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கைச் சிங்களவர்கள் அந்த படைப்பிரிவில் இணைந்து கொண்டார்கள். லங்கா ரெஜிமென்ட், நேதாஜி சுபாஷ் சந்த்ரபோஸின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கியதாக கூறப்படுகின்றது.

சுபாஷ் சந்த்ர போஸின் தலைமையிலான போர் நடவடிக்கையில், இந்தியா சுதந்திரத்தைப் பெறும் என்ற நம்பிக்கை, அப்போது அங்கிருந்த எல்லோரிடமும் மிக அதிகமாக காணப்பட்டது. பிரித்தானியரின் அடிமைத்தளையிலிருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதைப் போன்று இலங்கைக்கான சுதந்திரத்தைப் பெறுவது, லங்கா ரெஜிமென்ட்டின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

லங்கா ரெஜிமென்ட்டில் இருபத்தைந்து இலங்கையர்கள் பணியாற்றினார்கள். க்ளாட்வின் கொத்தலாவல (Gladwin Kotalawela) அவர்களுக்குத் தலைமை தாங்கினார். பின்னாளில் சுதந்திர இலங்கையின் மூன்றாவது பிரதமராக இருந்த ஜோன் கொத்தலாவலவின் மருமகனே இந்த க்ளாட்வின் கொத்தலாவல. 

லங்கா ரெஜிமென்டில் இணைந்து கொண்டவர்களின் அந்த முடிவுக்கு பல காரணங்கள் இருந்ததாக கூறப்படுகின்றன. பிரித்தானிய ஆளுகையை ஒழித்துக்கட்டுவது என்ற கொள்கை இலட்சியத்தோடு சில இணைந்தார்கள். இந்திய தேசிய இராணுவத்தின் வெற்றி, இலங்கைக்கும் சுதந்திரத்தைப் பெற்றுத்தருமென அவர்கள் நம்பினார்கள். லங்கா ரெஜிமென்டில் இணைந்து கொண்ட மேலும் சிலரின் காரணம் சுவாரசியமானது. அவர்கள் ஜப்பானியர்களின் தண்டனைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் அஞ்சியே இதில் இணைந்ததாக கூறப்படுகின்றது. 

சுபாஷ் சந்த்ர போஸின் தலைமையிலான ‘இந்திய தேசிய இராணுவம்.
பட உதவி: newsclick.in

ஜப்பானியர்கள் தமது ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் நடந்து கொண்ட விதம் மிகவும் குரூரமானது. ஜப்பானில் மட்டும் அணுகுண்டு வெடித்து, உலகின் மொத்த பச்சாதாபத்தையும் இரக்கத்தையும் அவர்கள் பெற்றிருக்காவிட்டால், அவர்களின் குரூரமான முகமே, அவர்களுக்கான இறுதி அடையாளமாக காலத்தின் நீண்ட சுவரில் வரையப்பட்டிருக்கும். 

இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பாளராக இருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜப்பானியர்களுக்கு நண்பனாக இருந்தமை காரணமாக, அந்தப் படையில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஜப்பானியர்களின் தண்டனைகளில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காகவே, லங்கா ரெஜிமென்ட்டுக்குப் போன இலங்கையர்களும் உண்டு. ஆனால், அது ஒரு தனிக் கதையாக எழுதப் பட வேண்டியது.

பிரித்தானியர்களிடமிருந்து இலங்கையை விடுவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட லங்கா ரெஜிமென்ட்டில் உள்ளவர்களுக்கு ஜப்பானியப் படைகளால் பயிற்சி வழங்கப்பட்டது. போர்ப் பயிற்சி மட்டுமல்லாமல், உளவு பார்க்கும் பயிற்சி உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன. 1944 ஆம் ஆண்டு, உளவுப் பணிகளை இலங்கையில் முன்னெடுப்பதற்காகவே அந்த நால்வரையும் ஜப்பான் இலங்கைக்கு தனது நீர்மூழ்கிக் கப்பலில் அனுப்பி வைத்தது.

மரணத்தை விடவும் சோகமான முடிவு

இரவும் பகலும் தெரியாமல் கடலின் அடியில் இலங்கையின் தென்கோடிக் கிராமமான “கிரிந்த”யை அடைந்து விடுவதென்ற நோக்கத்திலேயே, அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். பிரித்தானியரின் கடற்படையான “றோயல் நேவி”யின் கப்பல்கள் வங்காளக் கடலில் அங்குமிங்குமாக சஞ்சரித்துக் கொண்டே இருந்தன. அவற்றின் கண்காணிப்பில் சிக்காது, அடிக்கடலினூடாக இந்த நான்கு பேரும் தமது நீர்மூழ்கியைச் செலுத்தினர். தமது பயணத்தின் இறுதியில் அவர்கள் பிரித்தானியரின் ஆளுகையின் கீழ் இருந்த மண்ணைச் சென்றடைந்தனர்.

ஆனால் அது இலங்கை அல்ல!

அவர்களின் நீர்மூழ்கிக் கப்பல், பாதை மாறி அவர்களை தமிழ்நாட்டின் மெட்ராஸ் கரையோரத்திற்கு கொண்டுபோய்ச் சேர்த்தது. அங்கு பிரித்தானியரால் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் கொல்லப்பட்டார்கள். இலங்கையின் வரலாற்று ஏடுகளிலிருந்தும் அவர்கள் மறக்கப்பட்டார்கள் என்பது தான், அவர்களது மரணத்தை விடவும் சோகமானது.

Related Articles