பொலன்னறுவையை தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட கதை

‘ஜனநாத மங்கலம்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இலங்கையின் நெற் களஞ்சியமாக கருதப்பட்டுவரும் பொலன்னறுவையின் பழம்பெரும் பேர்தான் ஜனநாத மங்கலம். இலங்கையின் தலைநகராக ஆயிரமாண்டு காலத்திற்கும் அதிகமாக வீற்றிருந்த அனுராதபுரம் வீழ்த்தப்பட்டதோடு, பொலன்னறுவை எழுச்சி பெற்றது. அடுத்த 180 ஆண்டுகளுக்கும் அதிகமாக பொலன்னறுவை ஆட்சி அதிகாரத்தை தன் வசம் வைத்திருந்த கதை மிகவும் சுவாரசியமானது.

வரலாற்று இலங்கையின் இரண்டாம் தலைநகர்

மகாவலி கங்கைக் கரையில், நிறுவப்பட்ட இலங்கையின் இரண்டாவது பாரிய நிர்வாகத் தலைமைப் பீடத்தினை உருவாக்கியது சோழர்கள் என்பது வரலாற்றில் அழிக்க முடியாத உண்மை. கிட்டத்தட்ட 1, 400 ஆண்டு கால பழமைப் பாரம்பரியம் கொண்ட அனுராதபுரம் நகரம், 1017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சோழர் படையெடுப்பில் வீழ்ந்தது. அப்போதைய அனுராதபுரத்தை ஆண்டுவந்த ஐந்தாம் மகிந்தன் போர்க்கைதியாக கைப்பற்றப்பட்டு, தமிழ்நாடு கொண்டுசெல்லப் பட்டான். அங்கேயே, 1029 ஆம் ஆண்டு அவனது உயிர் பிரிந்தது.

அனுராதபுரம் உள்ளிட்ட இலங்கையின் பெரும் நிலப்பகுதியை அப்போது சோழர்கள் கைப்பற்றியிருந்தனர். அந்தப் பிராந்தியத்தை ஆள்வதற்கான தலைநகரை புதிதாக உருவாக்கத் தீர்மானித்த சோழர்கள் அதற்காக பொலன்னறுவைப் பகுதியைத் தெரிவு செய்தார்கள். பொலன்னறுவையில் உருவான அந்தப் புதிய தலைநகரத்திற்கு “ஜனநாத மங்கலம்” என்று பெயர் சூட்டப்பட்டது. அந்தத் தலை நகரத்திலிருந்து சோழர்கள் இலங்கையை அடுத்த 53 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தார்கள் என்று கூறப்படுகின்றது.

சோழர்களின் ஆட்சிக்காலத்தில் அங்கு இந்துமதத்தின் செல்வாக்கு உயர்ந்தோங்கியது. பொலன்னறுவையில் இன்றும் காணக்கூடிய பல கோயில்கள் இந்தக் காலத்திலேயே உருவாக்கப்பட்டன. அங்கு பத்து சிவாலயங்களும் ஐந்து விஷ்ணு ஆலயங்களும் ஒரு காளி ஆலயமும் அமைக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் சில பிற்காலப் பாண்டியர் ஆட்சியின் போதும் கட்டப்பட்டிருக்கலாமெனக் கூறுவோரும் உளர்.

பொலன்நறுவையில் காணப்படும் சோழர் காலத்து வரலாற்று சின்னங்கள்

தமிழ்ப்பேரரசனாக அறியப்படும் முதலாம் ராஜராஜனின் காலத்திலேயே அனுராதபுர சாம்ராஜ்ஜியம் கைப்பற்றப்பட்டு, புதிய தலைநகராக பொலன்னறுவை உருவாக்கம் பெற்றது. அங்கிருந்து ஆட்சி செய்யப்பட்ட இலங்கையின் பகுதிகள் அனைத்தையும் இணைத்து, அதற்கு “மும்முடிச் சோழ மண்டலம்” என்று பெயரும் சூட்டப்பட்டது. பின்னாளில் அங்கிருந்து புறப்பட்ட முதலாம் இராஜேந்திர சோழனின் படைகள் இலங்கையில் ஏற்கனவே கைப்பற்றப்படாதிருந்த பகுதிகள் பலவற்ற்றிலும் தமது கொடியை நாட்டின என்று கூறப்படுகின்றது. இந்தப் படையெடுப்புக்கு தலைமை தாங்கியவன் “ஜயங்கொண்ட சோழர் மூவேந்த வேளான்” என்ற சேனாதிபதியென வரலாற்றுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

பெரும் படைபலத்துடனும் அரண் பலத்துடனும் விளங்கிட “ஜனநாத மங்கலத்தை”க் கைப்பற்றிய சிங்கள அரசனாக முதலாம் விஜயபாகு போற்றப்படுகின்றார். தென்னிலங்கையில் ருஹுணு இராச்சியத்தின் அரசனாக இருந்த முதலாம் விஜயபாகு 1070 ஆம் ஆண்டளவில் சோழர்களைத் தோற்கடித்து இலங்கையை விட்டே அகற்றினாரென வரலாறு கூறுகின்றது. விஜயபாகுவின் எழுச்சியுடன் தளர்ந்திருந்த பௌத்த பண்பாடு இலங்கையில் மீண்டும் மேலோங்கியதாக கூறப்படுகின்றது.

பொலன்னறுவை மீதான விஜயபாகுவின் முதலாம் தாக்குதல் வெற்றி பெற்றாலும், அந்த வெற்றியை பல நாட்களுக்கு தக்கவைக்க முடியவில்லை. தமிழகத்திலிருந்து பெற்ற உதவி கொண்டு சோழர்களின் படைகள் மீண்டும் தாக்கியமை காரணமாக, விஜயபாகு பின்வாங்க நேரிட்டது.  இதனால் மனம் தளராத விஜயபாகு தனது படையை சீரமைத்து, பொலன்னறுவை மீதான தாக்குதலை மீண்டும் தொடுத்தான். இந்தத் தடவை விஜயபாகுவுக்கு நிலையான வெற்றி கிடைத்தது. இந்தப் போரில் சோழர்களின் எதிரியான பாண்டியர்களின் உதவி, முதலாம் விஜயபாகுவுக்கு கிட்டியதாகவும் கூறப்படுகின்றது.

பொலன்னறுவையின் முதலாம் சிங்கள அரசனாக முடிசூடிய விஜயபாகு, “விஜயராஜபுர” என்ற புதிய பெயரை அந்த நகரத்திற்குச் சூட்டியதாக சொல்லப்படுகின்றது. பௌத்த மதத்தை புனர்நிர்மாணம் செய்த விஜயபாகு, அதற்கான உதவியை அக்காலத்தில் பர்மாவை ஆட்சி செய்த அனவ்ரத மன்னனிடம் பெற்றார். புத்தபகவானின் புனித தந்ததாதுவை வைப்பதற்கான, பொலன்னறுவையில் விஜயபாகுவால் புதிய ஆலயமொன்றும் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.

விஜயபாகுவிற்கு பின்வந்த பொலன்னறுவை சிங்கள அரசர்களில் அதி முக்கியத்துவம் வாய்ந்தவனாக கருதப்படுபவன் முதலாம் பராக்கிரமபாகு ஆவார். நாட்டின் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்த மன்னனாக அவன் புகழப்படுகின்றார். பொலன்னறுவை இராசதானி காலத்தில் வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெற்றிருந்தன. முதலாம் பராக்கிரமபாகு காலத்தில், இலங்கை நெல் உற்பத்தியில் தன்னிறைவு கண்டிருந்ததாக வரலாறு கூறுகின்றது. அத்துடன் நெல்லானது இந்தியாவிற்கும் தென்னாசிய நாடுகள் சிலவற்றுக்கும் ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆண்டுகால அனுராதபுரத்திற்கு அடுத்து வந்து வரலாற்றில் இரண்டு நூற்றாண்டுகளே நிலைபெற்ற போதும், பொலன்னறுவை, மானுட சமூக மாற்றத்தைப் பிரதிபலிக்கும் காலத்தின் கண்ணாடியாக இருக்கின்றது.

Related Articles