இலங்கைக்குரிய தொன்மையின் சின்னமான பூநகரிக் கோட்டை

இலங்கையில் யாழ்ப்பாணத்தையும் வவுனியாவையும் பிரிக்கும் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது பூநகரி என்ற சிற்றூர். இங்கு தான் இலங்கையின் தொன்மையான வரலாற்று சின்னமெனக் கருதுவதும் ஐரோப்பியர்கள் காலத்திலிருந்து பேசப்பட்டு வருவதுமான பூநகரிக் கோட்டை எனும் சிறிய கோட்டையானது அமைந்துள்ளது. 

யாழ்ப்பாண இராச்சியத்தை கைப்பற்றிய போர்த்துக்கேயர் 1620 தொடக்கம் 1658 ஆம் ஆண்டு வரை ஆட்சிசெய்துள்ளனர். அப்போது அவர்களின் ஆட்சியின் கடைசி காலங்களின் போது இக்கோட்டையானது அமைக்கப்பட்டிருக்கலாம் என்கிறது வரலாறு. வவுனியாவிற்கும் யாழ் குடா நாட்டிற்கும் இடையே சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்ற வணிக நடவடிக்கைகளை தடுப்பதற்காகவும் இக்கோட்டையான அமைக்கப்பட்டிருக்கலாம் என்கிற கருத்தும் சொல்லப்படுகின்றது.  

பூநகரி கோட்டையின் சிதைவடைந்த மதில் சுவர்கள்
படஉதவி – mapio.net

போர்த்துக்கேயர்கள் காலத்தில் பெருமளவு சேதப்பட்டிருந்த இக்கோட்டையானது 1658 இற்கு பிறகு ஒல்லாந்தர்கள் காலத்தில் சிறு சிறு திருத்த வேலைப்பாடுகள் செய்யப்பட்டு பாவனையில் இருந்துள்ளது. பின்நாட்களில் 1815 ஆண்டில் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்த இக்கோட்டையானது, புனரமைப்பு செய்யப்பட்டு அவ்விடத்தில் சிறு விடுதி ஒன்றும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

யுத்தத்தில் பாதிக்கப்பட்டு பராமரிப்புகள் இன்றி உள்ள
கோட்டையின் ஒரு நுழைவாயில் பகுதி
படஉதவி – mapio.net

சதுரமான தள அமைப்பு வடிவைக்கொண்ட இக்கோட்டையின் ஒருபக்க சுவர் 100 அடி நீளம் வரை காணப்பட்டுள்ளது. கோட்டையின் கிழக்கு மற்றும் மேற்கு மூலைகளில் இரண்டு கொத்தளங்கள் காணப்பட்டுள்ளன. வடக்குப்பக்கச் சுவரின் அதன் பிரதான நுழைவாயிலும் அதனை ஒட்டிய இரு பக்கங்களிலும் காவலர்கள் அறையும் காணப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் மேற்கு சுவரை அண்டிய வாசல்களில் போர்வீரர்கள் தங்கும் அறைகளும் மற்றும் கிழக்கு பக்கத்திலும் அறைகள் காணப்பட்டுள்ளன.

கோட்டையின் சிதைவடைந்த நிலையிலுள்ள மதில் சுவர் 
படஉதவி – mapio.net

பின்னர் இலங்கை அரசின் கீழ்வந்த இக்கோட்டையானது இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் 1991 ஆம் ஆண்டின் பின்னர் கைப்பற்றபட்டது. அதன் பின் நாட்டில் தீவிரமடைந்த யுத்தத்தின் தாக்குதல்களுக்கு உள்ளான இக்கோட்டையானது பெரிதும் சேதமடைந்துள்ளது. 

விளையாட்டுத் தளமாக மாறிப்போயுள்ள
இலங்கையின் வரலாற்று சின்னங்களில் ஒன்றான பூநகரி கோட்டையில் ஒரு பகுதி
படஉதவி – mapio.net

இலங்கை புராதனங்களுக்கு பெயர்போன என்பது நாம் அறிந்ததே. அக்காலங்களில் இலங்கையை ஆட்சி செய்தவர்கள் இங்கு விட்டுச் சென்ற நினைவுச்சினைகள் ஏராளம். அதிலும் குறிப்பாக ஐரோப்பியர்கள் காலத்தில் இலங்கையில் கட்டப்பட்ட கோட்டைகள் இன்றளவும் பல சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து சுற்றுலாத் துறைக்கு வருமானம் ஈட்டித்தருகின்றது என்றால் அது மிகையாகாது. அனால் இந்த பூநகரி கோட்டையானது உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் சில பகுதிகள் மட்டும் காணப்படுகின்றது. கடந்த 2017 ஆண்டு வரலாற்றுத் தொன்மையான இந்த கோட்டையில் எஞ்சியுள்ளதை பாதுகாக்க கோரிக்கையும் வைத்துள்ளனர். இது போன்ற வரலாற்று நினைவு சின்னங்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையும் மக்களின் பொறுப்பும் ஆகும்.

Related Articles