சேலை அணிவதில் தீண்டாமை.

திருவிதாங்கூர் – இந்தியாவின் தற்காலிக கேரள மாநிலத்தில் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின்  கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கிய ஒரு சமஸ்தானம் ஆகும். இங்கு தீண்டாமை, காணாமை, நடவாமை, கல்லாமை போன்ற சமூகக்  கட்டுப்பாடுகள் தாழ்த்தப்பட்டவர்கள் மேல் திணிக்கப்பட்டிருந்தது. அந்த காலக்கட்டத்தில் சாதியக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகியிருந்தனர். உயர் சாதியினர் வாழும் இடங்களில் கீழ்சாதியினரை விலக்கி வைத்தல், பொது குளங்கள், கிணறுகள், சந்தைகள், சாலைகள் ஆகியவற்றையும் பயன்படுத்த தடை விதித்தல் போன்றவற்றையும் செய்தனர்.

தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை போடுவதைத் தடை செய்திருந்தது உயர்ந்த சாதியின மக்கள். இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்கு தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவிதாங்கூர் ஒரு நடைமுறையை வகுத்தது. இதனால் சான்றுப்படி 18 சாதிகளைச் சார்ந்த  பெண்கள் மேலாடை அணியாமல் அவமதிப்புடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட பனையேறி நாடார் சாதியை சேர்ந்த மக்கள் தங்கள் சாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்து சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இதன் மூலமே தோள் சீலைப் போராட்டம் உருவானது.

கி.பி .7ஆம் நூற்றாண்டில் நம்பூதிரிகள் கேரள பகுதிக்கு குடி பெயர்ந்தனர். அவர்கள் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு வாழ்ந்தனர். இதனால் அரசர்களும் பிறரும் இவர்களை மதிக்கும் வண்ணம் உயர்வு பெற்றனர். நம்பூதிரிகளின் வழிகாட்டுதலில் அமைந்த சமூகத்தில் சாதிப் பிரிவுகளும் தீண்டாமையும் அடிமை வாழ்வும் நிலைபேறு பெற்றிருந்தன. வர்ண தர்மம் என்று அழைக்கப்படும் இந்து மதத்தில் நான்கு வர்ணங்கள் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) அடையாளங்காட்டப் பெற்றன. ஆனால் நம்பூதிரிகள் தங்கள் சுயநல நோக்கத்தில் அதை வேறுவிதமாக மாற்றி சவரணர், அவர்ணர் என்று பிரிவினை செய்தனர். கன்னியாகுமரி முந்தைய காலகட்டத்தில் திருவிதாங்கூரின் ஒரு பகுதியாக இருந்தது. அங்கே சாதியக் கொடுமைகள் மிக அதிக அளவில் இருந்தது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையினராக வாழும் பனையேறி நாடார் சமுதாயத்தினரும், கேரளாவில் ஈழவர்கள் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு ஈழத்துப் பிள்ளைமார் சமுதாயத்தினரும் என்பதே மறுக்கமுடியாத உண்மை. திருவிதாங்கூரில் மேலாடை என்பதை மேல்முண்டு என்று அழைக்கின்றனர். நாயர் பெண்கள் இன்னும் சில சமய வழிபாடுகளில் கடைப்பிடிக்கின்றனர். இவர்கள் மூன்று முண்டுகளை உபயோகிக்கிறார்கள்.

கேரளாவைச் சேர்ந்த பிராமணக் குடும்பம்
படம்: indiatimes

7,8ஆம் நூற்றாண்டில் ஜன்மி சம்பிரதாயமும் 10, 11ஆம் நூற்றாண்டில் நம்பூதிரிகளின் ஆதிக்கமும் கேரளாவில் தலைத்தோங்கியிருந்தது. இந்த காலக்கட்டத்தில்தான் சாதியக்  கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12ஆம் நூற்றாண்டில் இந்த ஜன்மி அமைப்பால்தான் மேல் சாதி இந்து, கீழ் சாதி இந்து என்று இரண்டு வகைகள் பிரிக்கப்பட்டது. இந்த தீமைகளில் ஒரு பிரிவுதான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இடுப்புக்கு மேலும், மூட்டுக்கு கீழும் துணி அணியக்கூடாது என்ற நடைமுறையை மக்களிடையே திணித்தது. உயர்ந்த சாதி இந்துக்கள் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன் மட்டுமே மரியாதை செலுத்த வேண்டும். கலாச்சாரம் என்ற பெயரில் இதைப்  பெண்களுக்கும் திணிதனர். அதேபோன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து நாடார் பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல்   நடமாட வேண்டும் என்றே மரபாக்கிவிட்டார்கள். இந்த உடைக் கட்டுப்பாட்டை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. உயர் சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி வழங்கப்பட்டது என்ற போதிலும் நம்பூதிரிப் பிராமணர்கள் முன்பு நாடார் சாதிப் பெண்கள் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது. இந்த உடை கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக கடைபிடிக்கப்பட்டன. உடை அணியும் விதத்தை வைத்தே மக்களை உயர்ந்தவர்களாகவும், தாழ்ந்தவர்களாகவும் அடையாளப்படுத்தினர். 1822ஆம் ஆண்டு ஒரு சிறு போராட்டமாகவே கொத்தனாவிளை என்ற ஊரில் தோள் சீலை போராட்டம் துவக்கியது. பின்பு 37வருடங்களாக இந்த போராட்டம் நடைபெற்றுக்  கொண்டுதான் இருந்தது. இந்த போராட்டம் மூன்று கட்டமாக நடைப்பெற்றது. முதல் கட்ட போராட்டம் 1822 முதல் 1823 வரையும்,  இரண்டாம் கட்ட போராட்டம் 1827 முதல் 1829 வரையும்,  மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையிலும் நடந்தது.

படம்: indiatimes

சார்ல்சு மீட் கிருத்துவ சமய சீர்திருத்தவாதியான இவர் கிருத்துவ பெண்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் கிருத்தவ பெண்கள் மேலாடை அணிந்தது மட்டுமின்றி மேலே ஒரு துணியும் போட்டுக்கொண்டனர். இதனால் மேல் சாதியினர் கலவரம் செய்தனர். இதன் காரணமாக சார்லஸ் மீட் ஐயர் என்ற ஐரோப்பிய மறைப்பணியாளர் ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இச்சம்பவங்களைப் பற்றி விரிவாக கடிதம் எழுதினார். இதன் காரணமாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடுகிறார். இதன் விளைவாக 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப் படி சீர்த்திருத்த கிறித்தவர்களுக்கு மட்டும் மேலாடை அணியத் தீர்ப்பளிக்கப்படுகிறது.

மிக அதிகளவு பாதிக்கப்பட்ட இடங்களான ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை, உடையார்விளை, புலிப்புனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827 ல் போராட்டம் வெடித்தது. 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தர தீர்வை வழங்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறித்தவப் பெண்கள் உயர்சாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடைகள் அணியக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இதனால் கிறித்தவ பெண்களுக்கு அதிருப்தி ஓங்கியது. கிறிஸ்தவ பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற உடையை  விடுத்து ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் சாதி பெண்கள் அணியும் ஆடைகளை அணிய ஆரம்பித்தனர். இதற்கு சூத்திர நாயர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விக்டோரியா மகாராணியின் பிரகடனத்தையடுத்து தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. நெய்யாற்றின்கரையில் தொடங்கியப் போராட்டம் பாறசாலை, நெய்யூர் போன்ற ஊர்களுக்கும் பரவிது. பல இடங்களில் தெருக்களிலும், சந்தைகளிலும் பெண்கள் தாக்கப்பட்டனர். பெண்களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகள் ஐரோப்பிய மறை பரப்பாளர்களின்  பங்களாக்களில் மறைந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தனர். 1859ஆம் ஆண்டு டிசம்பர் 30 தேதி அன்று கோட்டாறுப் பகுதியில் வைத்து நாடார் கிறித்தவர்கள் மற்றும் சூத்திர நாயர்களுக்கும் இடையே பெரிய சண்டை மூண்டது. இந்து, கிறித்தவர்களுடன் சேர்ந்து கைகோர்த்து கொண்டனர். 1829 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட அரசு ஆணையத்தில் இந்து மதத்தில் நீடிக்கின்ற சாணார் பெண்டிர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சாணார் பெண்டிர் போல் குப்பாயம் அணியலாம் என்று கூறப்படவில்லை. இந்த உத்தரவுப்படி இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கு தங்களது மார்பகங்களை மறைக்க உரிமை வழங்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமானது.

படம்: tamilgen

சுருக்கமாகக் கூறின் இதனால் கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கும் உரிமையும் பறிபோயிற்று. இதனால் மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. இப்போராட்டத்தை  மிஷனரிகள் பொறுப்பேற்று நடத்தினர். ஆனாலும் சாணார் கிறிஸ்தவர்கள் சற்றும் சளைக்காமல் நாயர்களுக்கு எதிராகப்  போராடி 1859 ல் வெற்றிவாகை சூடினர். அதன் பயனாக 1859 ஆம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி அதிகாரப்பூர்வ அரசு அறிக்கை வெளியானது.

அனைத்து சமயத்திலிருக்கும் சாணார் பெண்களும், கிறிஸ்தவ பெண்களைப் போல, குப்பாயமிட்டுக் கொள்ளவோ, மீனவப் பெண்களைப் போல கட்டிச் சீலை உடுத்திக் கொள்ளவும் செய்யலாம் எனவும், ஆனால் உயர் சாதிப் பெண்கள் மேலாடை அணிந்துகொள்வது போல அணியாமல் வேறு எவ்விதத்திலாவது மார்பை மறைத்துக்  கொள்ள வேண்டும் என்று அறிக்கை தெரிவித்தது. இந்த அரசானைப்படிதான் இந்து சமயத்தில் நீடித்த சாணர் பெண்களுக்கும் குப்பாயம் அணிய உரிமை கிடைத்தது. எனினும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு இது போன்ற சட்டம் கிடைக்கவில்லை. எனவே இந்த ஆணையைக்  கண்டித்து மிஸனரிகள் ஆங்கில அரசிடம் மேல் முறையீடு செய்தனர். பிறகு பல போராட்டங்களுக்கு பிறகு திருவிதாங்கூரில் வாழும் அனைத்துப் பெண்களும் மேலாடை அணியலாம் என்ற சட்டம் அமலுக்கு வந்தது. ரவிக்கை அணிவதற்கான உரிமையை கர்னல் மன்றோ (குடியுரிமை) 1823-ல் வழங்கிட கிறிஸ்தவ பெண்கள் அன்று முதல் பகிரங்கமாக அணிந்தனர். இப்போராட்டத்தின் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும் , திவானும், எல்லா நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் அணியலாம் என்ற உரிமையை வழங்கினர். இந்த வரலாற்று நிகழ்வு சாதிக் கொடுமைகளுக்கான முக்கியமான ஆவணம் என்பதால் நாமும் இங்கே பதிவிடுகிறோம்.

Reference:

Related Articles