Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

தமிழகத்தில் சமணர்களின் வாழ்வும், கலைப்பணியும் குறித்த வரலாறு | #தமிழ்பாரம்பர்யமாதம்

வரலாற்றாசியர்கள் புறக்கணித்த காலம் அல்லது தமிழகத்தின் இருண்ட காலம் என்று அழைக்கப்படுவது மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை இருந்த காலம். இது களப்பிரர்கள் ஆண்டு வந்த காலம். இந்தக் காலகட்டத்தில் ஆண்ட களப்பிர மன்னர்கள் அதீத சமண மற்றும் பௌத்த மதத்தில் ஈடுபாடு கொண்டனர். களப்பிரர்கள் தாய்மொழி வேறாக இருந்தாலும், தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்தனர். ஆனால் சமண மற்றும் பௌத்த மதங்கள் அரச மதமாக இருந்ததால் பிற மதங்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை. இந்தக் காலத்தை வரலாற்றாசியர்கள் பதிவு செய்ய மறுத்தனர். களப்பிரர்களை வீழ்த்தி நாட்டைக் கைப்பற்றிய மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் நால்வராகிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் பெருந் தொண்டாற்றிட ஆதி சைவ மதம் மீண்டும் செழித்தது.

ஜீனரைக் கடவுளாக வழிபடுவது சமண மதம் என்றாகும். இதே காலத்தில் பிற பிரிவு மதங்களையும் அவர்கள் சமண மதமாகக் கருதினாலும், ஜைன மதமே சமண மதம் என்றழைக்கப்படுகிறது. திகம்பரர் என்றும் அழைக்கப்பட்ட சமணர்கள் திசையையே ஆடைகளாக அணிபவர் என்று பொருள். இவ்வகையைச் சேர்ந்தவர்கள் ஆடை அணிவதில்லை. நிர்வாண சாமியார்களாகவே இருந்தனர். இவர்கள் வழிபடுகின்ற கடவுள் சிலைகளும் இவ்வாறே காட்சியளித்தது. இவர்களில் இரு பிரிவினர் வெள்ளை உடை அணியும் சாமியார்கள் மற்றும் ஆகம நூல்களை வழிபடுவர் என்பனவாம்.

படம்: tamilnadujaintemple

பொதுவாக இவர்கள் அனைவரும் 24 தீர்த்தங்கரர்களையே கடவுளாக வழிபட்டனர். சிதறால் மலைக் கோயில் அல்லது சிதறால் சமணக்கோயில், திருச்சநாட்டு மலை மேல் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், சிதறால் எனும் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயில் பகவதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் இம்மலையை சொக்கன் தூங்கி மலை என்று அழைக்கின்றனர். இத்திருக்கோயில் ஆறாம் திகம்பர ஜைனர்களால்  கட்டப்பட்டது. பல்லவ மன்னர்களில் ஒருவரான மகேந்திர வர்மனின் ஆட்சியில் ஜைன மதத்தின் தாக்கம் இப்பகுதியில் பரவி வந்த வேளையில் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுகளில் ஒன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையிலான குறிப்புகள் உள்ளன. பதிமூன்றாம் நூற்றாண்டில் இக்கோயில் பகவதி கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. யானைமலை ஜைனர்கள் குகைக்கோயில் பக்திமான்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் இடமாக ஆனது.

மதுரைக்குள்ளும், மதுரை மாநகரைச் சுற்றியும் 1 ஆம் நூற்றாண்டு முதல் 2 ஆம் நூற்றாண்டு வரை 26 குகைக்கோயில்கள் அமைக்கப்பட்டன. யானைமலை, அழகர்மலை, முட்டுபட்டி, திருப்பரங்குன்றம், விக்கிரமங்களம், கருங்காலக்குடி, மாங்குளம், கொங்கர்புளியன்குலம், திருவடவூர், வரிச்சியூர் என்று பட்டியல் நீள்கிறது. மதுரையில் பழங்கால ஜைனர்கள் வாழ்ந்ததற்கான சான்றுள்ள எட்டு இடங்களில் யானைமலையும் ஒன்று. இபம் அல்லது அவம் என்பது யானையை குறிக்கின்ற சொல்லாகும். இந்தக் குன்று ஒரு யானை அமர்ந்திருப்பது போல் இருப்பதால் அது இவக்குன்றம் என்று அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

படம்: newsnviews

கழுகுமலை சமணர் படுக்கைகள் ஒரே பாறையில் சுமார் வரிசையாக நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கர்கள் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் இடம் இது. தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை என்கின்ற ஊரில் அமையப்பட்டிருக்கிறது. திகம்பரத் துறவிகள் இங்கு தங்கி சமண மதத்தைப்  பரப்பி வந்தனர். இத்திருக்கோயில் பாண்டிய மன்னர்கள் வரிசையில் பராந்தக நெடுஞ்சடையான் காலத்தில் அமைக்கப்பட்டது. கழுகுமலை வெட்டுவான் கோயில் என்ற முருகன் கோயில் இதன் அருகில் உள்ளது. அருமையான ஒன்றைப் பாறையில் செதுக்கிய நூற்றுக்கணக்கான சிற்பங்கள், கோயில் அருகில் தெப்பக்குளம், ரம்மியமான சூழல் என்று கழுகுமலையில் அனைத்துமே சிறப்பு.

திருமலை ஜைனர்கள் கோயில் திருமலை அல்லது பக்தி மலை என அழைக்கப்படும் இது திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு அருகில் உள்ளது. இங்குள்ள மிகப்பெரிய குகைக்கோயில் சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அந்தக் குகை முப்பது அறைகளாக பத்தாம் நூற்றாண்டில் பிரிக்கப்பட்டது. தீர்த்தங்கர்கள் மற்றும் யக்ஷி ஆகியோரின் படங்களை வரைவதற்காக இதைச் செய்திருக்கலாம். மலையடி வாரத்தில் கோபுரத்தின் அடியில் புதைந்துள்ள பாறைகளின் கல்வெட்டில் வைகை மலை என்று வெட்டப்பட்டுள்ளது. இது அவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம். இது அடிவாரத்திலுள்ள வைகவூர் என்னும் கிராமத்தின் பெயரேயாகும்.

படம்: wikipedia

குந்தவை ஜைனர் கோவில் மற்றும் மகாவீர் கோவில் இரண்டின் கல்வெட்டுகளும் , ஓவியங்களும் இன்றளவும் நம்மோடு பேசிக்கொண்டு இருக்கின்றன. சித்தன்னவாசல் குகைக் கோயில்  சித்தன்னவாசல் குடைவரை கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இங்குள்ள ஓவியங்கள் உலகப்பிரசித்தி பெற்றவை. இந்த ஓவியங்கள் பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வரையப்பட்டது. இந்த கோயிலைப் புனரமைத்த பாண்டிய மன்னர்கள் பற்றிய கல்வெட்டுக்கள் இங்கே உள்ளன. இங்குள்ள ஓவியங்களும் சேந்தன் மாரன் மற்றும் மாறவர்மன் அரிகேசரி என்பவர்களால் சீரமைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த கோயில் இப்பொழுது முழுக்கத் தொல்லியல் துறையின் பரமாரிப்பில் உள்ளது.

சமணர்கள் மலைமேல் காடுகளுக்குள் அமைக்கப்ட்டிருக்கும் குகைக்கோவிலுக்கு மட்டும் உரித்தானவர்கள். திராவிட கலாச்சாரத்தில் அமைந்திருக்கும் கோவில்கள் போல் நகரங்களுக்கும் ஊர்களுக்கும் நடுவே நூற்றாண்டுகள் பழமையான பல ஜைனக் கோயில்கள் உள்ளன. கொங்கு மண்டலமான ஈரோடு பகுதியில் வெள்ளோடு, அவல்பூந்துறை, சீனாபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால சமணர் கோயில்கள் தீர்த்தங்கர் சிலைகளுடன் உள்ளன. இவை அனைத்தும் வெவ்வேறு காலங்களில் புனரமைக்கப்பட்டது. திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தமிழகத்தின் அனேக சமணர் படுகைகள உள்ளன.

படம்: groups.google

பழங்காலத்தில் விவாதத்தில் ஒருவரை மற்றொருவர் வென்று விட்டால் அவருக்கு அடிபணிந்து மதம் மாற வேண்டும். இவ்வாறான விவாதத்தில் மகேந்திர வர்மன் கலந்து கொண்டு சைவ மத வழிபாட்டிற்கு மாறியதாக வரலாறு உண்டு. இதே கோயில்களும் ராஜாக்களுக்கு ஏற்றார்போல் கோயில்களிலும் கூடக் கடவுள்கள் மாற்றப்பட்டன. விவாதங்கள், சர்ச்சைகள் தமிழகத்தில் நடந்ததற்கான ஆதாரங்கள் நிறைய உண்டு. ஆனால் பெரியளவில் மதச் சண்டைகள் அல்லது கலவரங்கள் இக்காலகட்டத்தில் ஏற்பட்டதாக ஏதும் தகவல் இல்லை. சுமார் 70௦0 முதல் 8000 சமணர்கள் கழுவேற்றப்பட்டதாக காலம் காலமாக ஒரு செய்தி ஒன்று உண்டு. ஆனால் அது நடந்ததாகச்  சொல்லப்படும் மதுரையில் சகல வசதிகளுடன் சமணர் வாழ்ந்தனர் என்றே ஆதாரங்கள் சொல்கிறது. இன்றளவில் வைணவர் பின் பற்றி வரும் கழுமரம் ஏறுதல் சமணர்கள் மூலம் இங்கு வந்திருக்கலாம்.

கலுவேற்றத்தைப்  பற்றி அவர்கள் நூல்கள் வாயிலாக வைத்த குறிப்புகள் காலப்போக்கில் இவ்வாறு திரிந்து கூறப்பட்டிருக்களாம். வாய்மொழியாகப் பல கதைகள் உண்டு. காஞ்சிபுரத்தில்  புத்த மதத்தினருக்கும், சமண மதத்தினருக்கும் பெரிய விவாதம் ஒன்று நடந்துள்ளது. அதில் பௌத்தர்கள் தோல்வியடைந்தனர். அவர்கள் அனைவரையும் ஸ்ரீலங்காவிற்கு நாடு கடத்தியதாக ஒரு கதை கூட உண்டு. சமண மடத்தில் இருந்து இந்து மதத்திற்கு வந்து தொண்டாற்றிய அப்பர் தன்னுடைய இறுதி நாட்களில் மீண்டும் சமண மதத்திற்கே சென்று விட்டதாகக் கூறுவர். சமண மதத்தில் கடைசி தீர்தங்கரான மகாவீரர் ஒரு நாள் நள்ளிரவு வரை பக்தர்களுக்கு போதனைகள் செய்துவிட்டு அனைவரும் உறங்கிய உடன், அமர்ந்த நிலையிலேயே முக்தியடைந்துவிட்டார். இந்தச் செய்தி மன்னர் காதுக்கு வர மன்னர் அனைத்து மன்னர்களையும் கூட்டி முடிவெடுத்து அனைவருக்கும் ஞான ஒளியாகத் திகழ்ந்த மகாவீரர் முக்தி நாளை அனைவரும் தீபம் ஏற்றி கொண்டாடுவோம் என்று அறிவித்தார். பிற்காலத்தில் இந்துக்கள் சமணர்களின் பண்டிகையைக் கொண்டாட ஆரம்பித்ததாகக்  கூறுகின்றனர். இரண்டாயிரம் ஆண்டு பழமையான மதமும் அதைப்பற்றிய வெவ்வேறான கதைகளும் உலவினாலும் சமாதானத்தையும், அன்பையும் கடைபிடிக்கும் சமணர்கள் இனிமையானவர்களே !

Web Title: Scripture and architecture works of jains in tamilnadu

feature image credit: pinterestwikimapiawikipedia.

Related Articles