இலங்கையின் முதலாவது சுதந்திர தினம் : கொண்டாட்டம் மிகுந்த தருணங்கள்

132 ஆண்டுகால பிரித்தானியரின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்ட நாள் 1948 ஃபெப்ரவரி மாதம் 4 ஆக இருந்த போதும், அது தொடர்பான வைபவங்களும் பிற நிகழ்ச்சிகளும் அந்த மாதத்தின் 17 ஆம் திகதிவரை நடைபெற்றிருந்தன. சுதந்திரம் அளிக்கப்படும் நாள் என்ற படியால், ஏற்கனவே அம்மாதம் 4 ஆம் திகதி முழு இலங்கைக்கும் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று ஒரு புதன் கிழமை. அதிகாலையிலேயே கோயில்கள், பௌத்த விகாரைகள், கிருஸ்தவ தேவாலயங்கள் ஆகியவற்றின் மணிகள் ஒலித்தன. பழைய நாடாளுமன்றத்தில் பிரித்தானியக் கொடிக்குச் சமமாக தேசியக் கொடியும் ஏற்றப்பட்டது. புதிய பிரதமராகத் தெரிவாகியிருந்த டி.எஸ். சேனாநாயக்கவுக்கு நல்வாழ்த்துக்கள் குவிந்தன. பிரித்தானியாவின் அப்போதைய பிரதமராக இருந்த Clement Attlee யிடமிருந்தும் வாழ்த்துச் செய்தி வந்திருந்தது.

படஉதவி : serendib.btoptions.lk

சுதந்திரமடைந்த இலங்கையின் கவர்னர் ஜெனரலாக Henry Monck Mason Moore பதவியேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வு ராணியின் மாளிகையை இடம்பெற்றது. (அந்த மாளிகையே தற்போது ஜனாதிபதி மாளிகை ஆக்கப்பட்டுள்ளது.) காலை 7.30 அளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.

இலங்கை சுதந்திரம் அடைந்தமை நாடளாவிய ரீதியில் அன்று வெகுவாக கொண்டாடப்பட்டது. அலரி மாளிகை, அரச அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் வீடுகள் ஆகியவற்றில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அனைத்து மத வழிபாட்டிடங்களிலும் சுதந்திர தினத்தையொட்டி விசேட வழிபாடுகள் செய்யப்பட்டன. களனி ரஜமகா விகாரையில் இடம்பெற்ற வழிபாடு, நாடு முழுவதும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.

சுதந்திர தினம் அன்று, தெஹிவளையில் உள்ள மிருகக் காட்சிசாலை பொதுமக்களின் பார்வைக்கு இலவசமாக திறந்து விடப்பட்டது. இதனையடுத்து ஒரு நிமிடத்திற்கு 350 பேர் அங்கு உள்நுழைந்தனர் என்று கூறப்படுகின்றது. அது சற்று மிகையாகவும் இருக்கலாம். எனினும் அன்றைய தினம் காலை 11 மணியளவில் மட்டும் எண்ணாயிரம் பேர் தெஹிவளை மிருகக் காட்சிசாலையை பார்வையிட்டிருந்தனர்.

பிரதமரும் கவர்னர் ஜென்றலும் புதிதாகப் பிறந்த சுதந்திர இலங்கைக்கு தமது உரைகளை ஆற்றிய பின்னர், பொல்வத்த விகாரையில் பிரதமர் கரத்தினால் மாங்கன்று ஒன்று நடப்பட்டது.

படஉதவி : archives.sundayobserver.lk

சுதந்திரம் அடைந்தமை தொடர்பான மிக முக்கிய வைபவம் அந்த மாதம் 10 ஆம் திகதியே இடம்பெற்றது. சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு அன்று நடைபெற்றது. பிரித்தானியப் பேரரசராகவிருந்த ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரின் பிரதி நிதியாக க்ளௌசெஸ்டரின் பிரபு, அந்த வைபவத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஏராளமானோர் கூடுவதற்காக பாரிய பரப்புள்ள இடமொன்று தேவைப்பட்டமை காரணமாக பழைய விமானத் தரிப்பிடமொன்று பரிந்துரைக்கப்பட்டது. அங்கு தற்காலிக மண்டபமொன்றை உருவாக்கும் பணி பொதுச்சேவைத் திணைக்களப் பொறியியலாளரான ஹப்புகொட ரண்கொத்கே ப்ரேமரத்ன வசம் ஒப்படைக்கப்பட்டது.

பாரம்பரிய அழகுடன் அந்த மண்டபம் உருவாக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. அந்த அலங்காரங்களுக்கு சிங்கள மரபுப்படியான சிங்கத்தின் உருவம் பொருந்திய பதாகைகளும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட நந்திக் கொடிகளும், முஸ்லிம் சமூகத்தினரின் அடையாளங்களும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்தத் தற்காலிக மண்டபத்தின் அலங்காரத்திற்காக 20,000 யார்ட் நீளமான வெள்ளைத்துணி பயன்படுத்தப்பட்டது. ஏறக்குறைய அதே அளவு நீளமான வண்ணக் காகிதங்களும் பயன்பட்டன.

படஉதவி : lespri.lk

அன்றைய தினம், நாளாளுமன்ற அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர், பிரித்தானியப் பேரரசரின் பிரதிநிதிகளாக அங்கு வருகை தந்த பிரபு மற்றும் அவர் மனைவி ஆகியோர் விமரிசையாக வரவேற்கப்பட்டனர். அவர்களை சுதந்திர இலங்கையின் முதலாவது கவர்னர் ஜெனரலும் பிரதமரும் வரவேற்றனர். அதனையடுத்து பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். அதன் போது 21 துப்பாக்கி வேட்டுகள் மரியாதை நிமித்தம் தீர்க்கப்பட்டன. அந்த மண்டபத்தில் நடுநாயகமாக வைக்கப்பட்ட அரியணையின் முன் பேரரசரின் கிரீடமும் வாளும் வைக்கப்பட்டது. அதனையடுத்து ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நாட்டின் முக்கிய அமைப்பான நாடாளுமன்றம் தனது முதலாவது அமர்வை நடாத்தியது.

படஉதவி : serendib.btoptions.lk

அந்த ஃபெபரவரி மாதத்தின் 13 ஆம் திகதியன்று, கண்டிக்குச் சென்ற பிரித்தானியப் பேரரசரின் பிரதிநிதி அங்குள்ள “மகுள் மதுவ” மண்டபத்தில் நிகழ்ந்த வைபவத்தில் கலந்து கொண்டார். அங்கு இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றி வைத்த அவர் இலங்கை சுதந்திரம் அடைந்ததை, உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இவ்வாறாக, பிரித்தானிய அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்ற இலங்கை, 1972 ஆம் ஆண்டில், சிரிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த காலத்தில் தன்னைக் குடியரசாகவும் பிரகடனப்படுத்திக் கொண்டமை குறிப்பிட வேண்டியத் தகவலாகும். 

Related Articles