இலங்கையில் நடப்பட்ட முதலாவது ஈரப்பலா மரம்

இலங்கை மக்களின் அன்றாட உணவில் ஈரப்பலா, உருளைக்கிழங்கு, சீனிக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போன்றவற்றுக்கு சிறப்பான இடம் இருப்பதை பார்த்திருப்போம். நமது பிரதான உணவு அரிசி என்றாலும் பல கிராமவாசிகள் இன்னமும் அரிசிக்கு பதிலாக இந்த ஈரப்பலாவை உண்கின்றார்கள். இந்த ஈரப்பலாவானது சிங்கள மொழியில் “பத்-கச” அதாவது சோறுமரம் என்று கூட சொல்லபடுகின்றது. நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்போது, ஈரப்பலாவை அவித்து உண்ணவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம் என்றுகூட அரசியல் மேடைகளில் நீங்கள் கேட்டிருக்ககூடும். அந்தளவிற்கு அருசிக்கு ஈடான ஈரப்பலாவானது பார்க்கப்படுகின்றது.

இலங்கையர்களால் விரும்பப்பட்டு உண்ணப்படும் இந்த ஈரப்பலாவானது இலங்கைக்கு உரித்தானதொரு மரவகைக் காய் அல்ல. பிரபலமான உணவான இந்த ஈரப்பலாவை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஒல்லாந்தர்கள். காலிக் கோட்டைக்குள் தான் அவர்கள் முதன்முதலில் ஈரப்பலா மரமொன்றினை நாட்டினார்கள். ஏறக்குறைய 4 நூற்றாண்டுக்கு முன்னதாக நாட்டப்பட்டதாக கருதப்படும் இந்த மரமானது இன்னமும் காய்த்த வண்ணமுள்ளது என்கிற செய்தி அதிசமாய் உள்ளது!

ஈரப்பலா மரம்
படஉதவி – makemytrip.com

சிங்களத்தில் “பத்கச” என்று அழைக்கப்படும் இந்த ஈரப்பலாவானது ஆங்கிலத்தில் Bread Fruit என்று அழைக்கப்படுகின்றது. இம்மரத்தின் விஞ்ஞானப்பெயர் Artocarpus altilis என்பதாகும். அதிக விளைச்சலைத் தரக்கூடிய இந்த ஈரப்பலா மரத்தில் ஆண்டுக்கு சுமார் 200 க்கும் மேற்பட்ட காய்கள் காய்ப்பதாக சொல்லப்படுகின்றது. தென்பசுபிக் பகுதிகளில் ஈரப்பலா மரமானது 50 முதல் 150 வரையான காய்களைக் காய்கின்ற அதேவேளை தென்னிந்திய பிராந்தியத்தில் 150 முதல் 200 க்கும் மேற்பட்ட காய்கள் காய்கின்றன. இதன் தனித்துவம் என்னவெனில், இதற்கென்ற தனிப்பட்ட மண் வகைகள் தேவையில்லை. எவ்விதமான நிலத்திலும் இந்த ஈரப்பலா வேர்விட்டு காய் காய்க்கும்.

படஉதவி – amayaresorts.com

இப்படியான பல தன்மைகளைக் கொண்ட ஈரப்பலா மரமானது இலங்கையில் முதன்முதலில் காலி கோட்டைக்குள் தான் நடப்பட்டது. சீயான் என்று கருதப்படும் இலங்கையில் நடப்பட்ட அந்த முதலாவது மரம் இன்றும் உயிரோட்டத்துடன் கம்பீரமாக வளர்ந்து நிற்பதுதான் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகின்றது.

தென் மாகாணத்தின் தலைநகரான காலி பண்டைய காலங்களிலிருந்தே பேசப்பட்டுவரும் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தென்மேற்கு இராச்சியங்களின் போது காலி ஒரு துறைமுகமாகவும், வர்த்தக நகரமாகவும் செயற்பட்டு வந்த போதிலும், 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளின் வருகையுடன் காலி ஒரு கோட்டையாக மாற்றப்பட்டது. 1505ஆம் ஆண்டு போர்த்துகேயர்களின் வருகையின் பின்னர், அப்போதைய இலங்கையை ஆண்ட இளவரசர் தர்ம பராக்கிரமபாகு ஒப்புதலுடன் போர்த்துகேயர்கள் காலிக்கு வெளியே கடற்கரையை அண்மித்த சிறு கோட்டை ஒன்றைக் கட்டினர். அக்கோட்டையானது இப்போது கருப்புக் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. பின்னர் 1640ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தர்களின் வருகைக்குப் பின் காலிக் கோட்டையானது கைப்பற்றப்பட்டது. பின்னர் இக் கோட்டையானது விரிவுபடுத்தி கட்டப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் தான் இலங்கையில் முதல் ஈரப்பலா மரத்தை கோட்டையினுள் ஒல்லாந்தர்கள் நட்டுள்ளனர்.

காளிக்கோட்டைக்குள் நடப்பட்ட முதலாவது ஈரப்பலா மரம்
படஉதவி – timeout.com

ஒல்லாந்தர்கள் இலங்கைக்கு ஈரப்பலாவை அறிமுக்கப்படுத்தியது குறித்து பல கதைகள் சொல்லப்படுகின்றது. அதில் பிரதானமான ஒன்றுதான் இலங்கையர்களின் வீரச் செயல்களால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்ட ஒல்லாந்தர்கள் அவர்களை அடக்க ‘ஈரப்பலாவை’ அவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தி அதை விருந்தாக மாற்றி இலங்கையர்களுக்கு நோய்களை பரப்ப எண்ணியுள்ளனர் என சொல்லப்பட்டது. காரணம், ஈரப்பலாவானது அதிக உஷ்ணம் மிக்கது. அதனால் அதை உட்கொள்பவர்களுக்கு உஷ்ணம் தொடர்பான ஏதேனும் நோய்களை ஏற்படுத்தி அவர்களை எதிர்கொள்ளலாம் என ஒல்லாந்தர்கள் எண்ணியே இந்த ஈரப்பலாவை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளனர் என சொல்லப்படுகின்றது. ஆனால் இலங்கையர்கள் ஒவ்வொரு காய்கறிக்கும் அதன் தன்மைக்கேற்ப மாற்றீட்டு உணவுகளை சேர்த்து உட்கொண்டு வந்தவர்கள் என்பதால், ஈரப்பலாவின் உஷ்ணமானது அவர்களை பெரிதும் பாதிக்கவில்லை. கடல் உணவுகளை உட்கொண்டு வந்த இலங்கையர்கள் அதிகமான உஷ்ணம் மிக்க மீன்கள் சமைக்கும்போது அதனுடன் தேங்காயை சேர்த்துக்கொண்டனர். அந்தத் தேங்காயானது உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது. அந்த முறையைத்தான் ஈரப்பலாவுக்கும் எமது முன்னோர் கையாண்டுள்ளனர். ஈரப்பலாவுடன் தேங்காய் துருவலை சேர்த்து உட்கொண்டுள்ளனர். 

பிற கதைகள்

ஈரப்பலா குறித்த மற்றொரு கதை என்னவென்றால், வெலிதார பகுதியில் வசித்து வந்த பினோஸ் ஆராச்சி என்ற நபர் ஐரோப்பிய கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நடுக்கடலில் கப்பல்கள் நிறுத்திவைக்க, ஒரு சிறிய படகில் அந்தக் கப்பலை நெருங்குவாராம். அப்படி ஒரு சிறு படகில் சென்றுகொண்டிருந்த வேளை புயலில் சிக்கி ஒரு தீவையடைந்துள்ளார். தன்னந்தனியாக அங்கு சிக்கிக்கொண்ட பினோஸ் ஆராச்சி வெறும் ஈரப்பலாவை மட்டுமே உண்டு வாழ்ந்துள்ளார். பின்னர் புயல் ஓய்ந்து அந்தத் தீவிலிருந்து திரும்பும் வேளையில் அவர் ஈரப்பலா கன்றுகளைக் கொண்டு வந்து இங்கு நாட்டினார் என்றும் கர்ணப் பரம்பரைக் கதையாக சொல்லப்படுகின்றது.

பண்டிதர் வில்லியம் தனது காலி வரலாற்று புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதுபடி, அப்போதைய ஒல்லாந்தர் ஆட்சியின் போது இருந்த ஆளுநர் கோட்டையை கட்டுவதற்காக அங்கு வளர்ந்திருந்த அனைத்து பலா மரங்களையும் வெட்ட உத்தரவிட்டதாகவும், அதற்கு மாற்றீடாக ஈரப்பலா மரங்களை அறிமுகப்படுத்த வேண்டியிருந்ததாகவும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஈரப்பலாவானது பூர்வீக மக்களின் உணவாக இருந்தது என்று ஆங்கில இயற்கை ஆர்வலர் பென்னட் பதிவுசெய்துள்ளார்.

பிரிட்டிஷ் ஆளுநர் ஃபிரடெரிக் நோர்த் இலங்கையில் நடப்பட்ட முதல் ஈரப்பலா மரம் குறித்த ஆவணம் ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

அப்போதைய இலங்கை ஆளுநர் ஃபிரடெரிக் நோர்த்
படஉதவி – sundaytimes.lk

அதன்படி, அவர் 1801 இல் காலிக்கு விஜயம் செய்தபோது, காலி கோட்டையில் உள்ள டச்சு ஆளுநரின் மாளிகையைச் சுற்றி பல ஈரப்பலா மரங்களைக் கண்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மிகவும் பிரபலமான கருத்து என்னவென்றால், 1796 ஆண்டுகளில் டச்சுக்காரர்கள் காலி கோட்டையில் முதலாவது ஈரப்பலா மரத்தை நட்டு நாட்டுக்கு அறிமுகப்படுத்தினர் என்பதுதான்.

காலி கோட்டை

இலங்கையின் காலி பிரதேசம்
படஉதவி – auroragrandholidays.com

புராணக் கதைப் படி இலங்கையில் நடப்பட்டதாகச் சொல்லப்படும் முதலாவது ஈரப்பலா மரமானது காலி கோட்டையில் உள்ள தற்போதைய துறைமுக அதிகாரசபையின் ஓய்வுக் கட்டிடத்தில் (ரிசோட்ர் நிலப்பரப்பு) அமைந்துள்ளது. இந்தக் கட்டிடம் கடந்த காலங்களில் ஹார்பர் மாஸ்டரின் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தப்பட்டது. காலி கோட்டையில் 14 காவலர் தளங்கள் இருக்கின்றன. இதில் பதினோராவது காவலர் தளத்திலேயே இந்த முதலாவது ஈரப்பலா மரமானது அமையப்பெற்றுள்ளது.

போர்த்துகீசர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலி கோட்டையை டச்சுக்காரர்களுக்கு கையகப்படுத்திக் கொடுத்த தளபதி வில்லியம் ஜேக்கப் கோஸ்டரின் பிறப்பிடத்தை நினைவுகூரும் வகையில் அந்த 11ஆவது காவலர் தளத்தில் முதலாவது ஈரப்பலா மரத்தை நாட்டியுள்ளதாக சொல்லப்படுகின்றது.  துறைமுக அதிகாரசபை கட்டடத்தின் முன்பக்கத்தில் அமைந்துள்ள இந்த ஈரப்பலா மரமானது இன்றும் காய் காய்க்கின்றதாம். ஏனைய ஈரப்பலா மரங்களில் கிடைக்கும் காய்களை விட இலங்கையின் முதலாவது ஈரப்பலா மரமாகக் கருதப்படும் இதன் காய்கள் சுவை மிகுந்தது என்று இதனை சுவைத்த பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்புகள் சொல்கின்றன.

Related Articles