Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையரின் உயர்கல்விக் கனவினை நனவாக்கிய சிலோன் பல்கலைக்கழகக் கல்லூரி

சிலோன் பல்கலைக்கழகக் கல்லூரி (Ceylon University College) பற்றித் தெரிந்தவர்களில் பலர் இன்று நம்மிடையே இல்லை. அது பற்றிய நினைவுகள் மெல்ல மெல்ல அழிந்து கொண்டு வருகின்ற வேளையில், அது குறித்த தரவுகள் ஆவணங்களில் உறங்குகின்றன. இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வி முதன் முதலில் வழங்கப் பட்டது சிலோன் பல்கலைக்கழகக் கல்லூரியில்தான் என்பதை பலரும் அறிய மாட்டார்கள். பிரித்தானியர் காலத்து இலங்கையில் பல்கலைக்கழகமொன்றின் உருவாக்கத்திற்கு முன்னோடியாக இருந்தது சிலோன் பல்கலைக்கழக கல்லூரி. 

1930ல் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக்கருதப்படும் சிலோன் பல்கலைகழக கல்லூரியின்
முன்னால் உள்ள பொதுப் பாதை. வலப் பக்கம் தூரத்தில் தெரிவது றோயல் கல்லூரி.
பட உதவி : pinterest/thearchivessl

இது 1921 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகக் கல்வி வழங்குநராக இருந்த போதும், அந்தக் கல்லூரி தனது சொந்தப் பெயரில், பட்டங்களை வழங்கவில்லை. இலண்டன் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பரீட்சைகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் பணியையே அது செய்தது. கொழும்பில் அமைக்கப்பட்டிருந்த இந்தக் கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி என்றும் அழைக்கப்பட்டது. 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையின் உயர்கல்வி வழங்கும் நிறுவனங்களாக சிலோன் மருத்துவக் கல்லூரி, சிலோன் சட்டக் கல்லூரி ஆகியனவே இருந்தன. அப்போதைய மேட்டுக் குடி மக்கள் தமது பிள்ளைகளை, உயர் கல்வி கற்பதற்காக பிரித்தானியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைத்தனர். அதேவேளை இலங்கையிலேயே ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் மெல்ல மெல்ல வலுப்பெற ஆரம்பித்தது. 

அந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக, சிலோன் பல்கலைக்கழக சங்கம் 1906 இல் ஆரம்பிக்கப்பட்டது. பிரித்தானியர் கால இலங்கையின் முக்கிய பிரமுகர்களாக இருந்த  சேர் பொன் அருணாசலம், ஜேம்ஸ் ஃபெர்னாண்டோ மற்றும் மார்கஸ் ஃபெர்னாண்டோ ஆகியோர் இந்த சங்கத்தை அமைத்தவர்களில் முக்கியமானவர்கள்.

1911 ஆம் ஆண்டில், அப்போது ஆளுகைப் பதவியிலிருந்த ஹென்றி மக்கலம் இது குறித்து ஆராய்வதற்காக பத்து உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்றை நியமித்தார். இந்தக் குழு தனது ஆய்வுகளை 1912 ஆம் ஆண்டில் நிறைவு செய்ததுடன், இலங்கையில் பல்கலைக்கழக கல்லூரியொன்றை ஸ்தாபிக்குமாறு பரிந்துரையையும் முன்வைத்தது.

1911 ஆம் ஆண்டில் இலங்கை ஆளுநரான ஹென்றி மக்கலம்
பட உதவி : wikipedia

ஆளுநர் ஹென்றி மக்கலம், அந்தப் பரிந்துரையை ஏற்று, பல்கலைக்கழக கல்லூரி அமைப்பதற்கான முன்மொழிவை, இங்கிலாந்தில் இருக்கும் காலனித்துவ விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளருக்கும் கல்விச் சபைக்கும் அனுப்பி வைத்தார். அவர்களால் இந்த விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, இலங்கையின் அடுத்த ஆளுநரான ரொபேர்ஃட் பதிலளித்தார். அந்த முன்மொழிவுகளின்படி, சிலோன் பல்கலைக்கழகக் கல்லூரியானது கொழும்பு றோயல் கல்லூரியின் கட்டிடங்களைப் பயன்படுத்தும் எனவும், இங்கிலாந்தின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் எனவும், அந்தக் கல்லூரிக்கான விடுதிகள் அப்போதைய அரசாங்கத்தினால் அமைத்துத் தரப்படுமெனவும் திட்டமிடப்பட்டது. 

மேலும், அமைக்கப்படும் சிலோன் பல்கலைக்கழகக் கல்லூரியானது பெண்களுக்குத் திறந்து விடப்படும் எனவும் திட்டமிடப்பட்டதோடு, விரைவில் அது தன்னாட்சியுடைய பல்கலைக்கழகமொன்றாக எதிர்காலத்தில் மாறும் தன்மை உடையதாகவும் இலக்கு வகுக்கப்பட்டது. இந்த முன்மொழிவுக்கு, பிரித்தானியாவின் காலனித்துவ இராஜாங்கச் செயலாளர் அனுமதி அளித்தார். எனினும், முதலாம் உலகப் போர் காரணமாக, இந்தத் திட்டங்களை எல்லாம் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பின்னர் 1917 ஆம் ஆண்டு இந்த சிலோன் பல்கலைக்கழக கல்லூரியை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்ட போதும், அவை மிக மெதுவாகவே நகர்ந்தன. 1920 ஆம் ஆண்டில் இந்தக் கல்லூரிக்காக ‘ரெஜினா வளவுவ’ என்று சொல்லப்படுகின்ற ஒரு தனியார் இல்லத்தை, அப்போதைய அரசாங்கம் விலைக்கு வாங்கியது. அந்தக் கட்டிடமே இன்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் தலைமையகமாக இருக்கும் College House கட்டிடமாகும்.

College House கட்டிடம் 
பட உதவி : pgim.cmb

பல தடங்கல்களையும் தாண்டி, 1921 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி சிலோன் பல்கலைக்கழகக் கல்லூரி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் திட்டமிட்டவாறு, அது ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படவில்லை. மாறாக, இலண்டன் பல்கலைக்கழகத்தின் நடுத்தர மற்றும் இறுதிப் பரீட்சைகளுக்கான கற்கைநெறிகளை அது வழங்கத் தொடங்கியது. Edwin Evans அதன் பதில் கல்விப் பணிப்பாளராக விளங்கியதோடு, அந்தக் கல்லூரியின் அதிபராகவும் பதவி வகித்தார்.

விஞ்ஞானம் தவிர்ந்த அனைத்து வகுப்புகளுக்கான விரிவுரைகளும் College House கட்டிடத்திலேயே இடம்பெற்றன. விஞ்ஞான விரிவுரைகள் மட்டும் அரசாங்க தொழினுட்பப் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டன. அதன் முதலாவது கல்வியாண்டில் 115 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் எட்டுப் பேர் மட்டுமே இலண்டன் பல்கலைக்கழகப் பரீட்சைக்குத் தோற்றியதோடு, அவர்களில் ஏழு பேர் மாத்திரமே சித்தியெய்தினர்.

1921 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியன்று சிலோன் பல்கலைக்கழகக் கல்லூரிக்கான விஞ்ஞான ஆய்வு கூடங்களை அப்போதைய பிரித்தானிய ஆளுநர் வில்லியம் மன்னிங் திறந்து வைத்தார். அன்று தொடக்கம் அரசாங்க தொழினுட்ப பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த விஞ்ஞான விரிவுரைகள் அந்த ஆய்வுகூடங்களுக்கே மாற்றப்பட்டன. மாணவிகளுக்கான விடுதி 1932 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது. 

பட உதவி : cmb.ac

சிலோன் பல்கலைக்கழகக் கல்லூரியானது, அதன் திட்டத்திலேயே பிற்காலத்தில் ஒரு தனித்துவமான பல்கலைக்கழகமாக மாற்றம் பெறுவதற்கான அம்சத்தைக் கொண்டிருந்தது. எனினும், அது அவ்வளவு சீக்கிரமாக நடந்தேறவில்லை. பல்வேறு பிரமுகர்களின் அழுத்தங்களினால், 1937 ஆம் ஆண்டு சிலோன் அரச சபை கண்டிக்கு அருகில் பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கு அனுமதி அளித்தது. பேராதனைப் பிரதேசம் அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிலோன் பல்கலைக்கழகக் கல்லூரியும் சிலோன் மருத்துவக் கல்லூரியும் இணைக்கப்பட்டு, இலங்கையில் 1942 ஆம் ஆண்டு சிலோன் பல்கலைக்கழகம் (University of Ceylon) உருவானது. இலங்கையர்களின் உயர்கல்விக் கனவும் நனவுநிலை பெற்றது.

Related Articles