Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

மூன்றாம் பானிபட் போர்

இந்திய வரலாற்றை புரட்டி போட்ட போர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் ஒன்று மூன்றாம் பானிபட் போர். திறன் மிகுந்த ஆளுமைகளை, தளபதிகளை காவு வாங்கிய போர் இது என்றால் அது மிகையாகாது. கோடிக்கணக்கான இந்திய மக்களை வெறும் 6,௦௦௦ ஆங்கிலேயர்கள் ஆளத்துவங்கிய கதை இந்த போருக்கு பின்னால் புதைந்துள்ளது. நமது வரலாற்றில் ஐந்து போர்கள் மிக முக்கியமான போர்களாக கருதப்படுகிறது. இரண்டாம் தாரைன் போர், முதலாம் பானிபட் போர், பிளாசி போர், பக்சர் போர் மற்றும் மூன்றாம் பானிபட் போர்.

பானிபட் நகரம் இதிகாச காலம் முதல் புகழ்பெற்றது. மகாபாரத கதையில் பாண்டவர்கள் உருவாக்கிய ஐந்து நகரங்களில் பானிபட்டும் ஒன்று. இந்நகரம் இன்றைய ஹாரியானா மாநிலத்தில் உள்ளது. இங்கு அரங்கேறிய மூன்று பானிபட் போர்களும் இந்திய வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்த காரணமானவை.

முதலாம் பானிபட் போர்

முதலாம் பானிபட் போர் வருடம் 1526, ஏப்ரல் 21 அன்று முகலாய பேரரசின் மன்னர்களில் ஒருவரான பாபருக்கும் லோடி சாம்ராஜ்ஜியத்தின் இப்ராகிம் லோடி ஆகிய இருவருக்கும் நடந்தது. இந்த போரில் வென்றதன் மூலம் முகலாய பேரரசு இந்தியாவிற்குள் நுழைந்தது. டெல்லியை கைப்பற்றி ஆளத்துவங்கியது. அடுத்த நான்கு ஆண்டுகளில் பாபர் உயிரிழந்தார். பின்பு அவரின் மகன்களில் ஒருவரான ஹூமாயூன் அரியணை ஏறினார். இந்த ராஜ்ஜியம் சுமார் 10 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. பின்பு அடுத்த பதினைந்து ஆண்டுகள் சூர் வம்சம் டெல்லியை ஆண்டு வந்தது.

Panipat War Museum (Pic: flickr)

இரண்டாம் பானிபட் போர்

வருடம் 1556, நவம்பர் 5 அன்று முகலாய பேரரசின் வாரிசான அக்பர், சூர் வம்சத்தின் ஹேமச்சந்திர விக்கிரமாதித்யா’வை எதிர்கொண்டார். அப்பொழுது அக்பருக்கு மிக குறைவான வயது என்பதால் அவரது படைத்தளபதி பைரம்கான் தலைமையில் களம் கண்டார். போரில் வெற்றி பெற்று மீண்டும் முகலாய அரசு டெல்லியில் நிறுவப்பட்டது. ஆக்ராவும் அக்பர் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

Second Panipat War (Pic: indiatimes)

முகலாய வாரிசுகள்

இதன் பின்னர் அக்பரின் மகன் ஜகாங்கீர் மன்னரானார். இவரின் தொடர்ச்சியாக வம்சாவளியாக குர்ரம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். குர்ரம் என்பது வேறு எவருமில்லை, தாஜ்மகாலை கட்டிய ஷாஜகானின் இயற்பெயர். ஷாஜகானின் குடும்பம் மிகச்சிறியது (?!!!). இவருக்கு ஒன்பது மனைவிகள். இவர்களில் மூத்த சகோதரர்கள் இருக்க பதவி வெறி பிடித்த ஔரங்கசீப் தன் சகோதரர்கள் மூவரையும் கொலை செய்துவிட்டு ஷாஜகானை சிறைவைத்து  ஆட்சியை கைப்பற்றுகிறார். முகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி வலிமை மிக்க மன்னர் இவர்தான். பெயர் சொல்லும்படி இவருக்கு பின் வந்த முகலாய மன்னர்களில் எவரும் வீரம் பொதிந்தவர்களாக இல்லை. இந்தியாவின் பெரும் நிலப்பகுதியை ஆண்டு வந்த முகலாயர்கள் சிறிது சிறிதாக அவைகளை இழக்க துவங்கினர். ஔரங்கசீப் இறந்த வருடம் 17௦7. சுமார் வருடம் 1680 ஆரம்பித்த மராத்தியர்களுடனான முகலாயர்களின் போர் இவருக்கு பின் முடிவுக்கு வருகிறது.

Mughal Architecture (Pic: sahapedia)

மராத்தியர்கள் செங்கொடி உயரப்பறந்தது

பொதுவாக மன்னர்கள் பலவீனமாக இருந்தால் அவர்கள் ஆளும் பகுதிகள் ஆங்காங்கே விடுபட்டு சுய அதிகாரத்துடன் வேறொருவரின் ஆளுமைக்கு வந்துவிடுவது வழக்கம். பலவீனமான தலைமை, அதிகாரத்திற்காக அவர்களுக்குள் நடந்த உள்நாட்டு சண்டை, நம்பகமான அதிகாரிகள் இல்லாமை, நீண்டகால போர் நிறுத்தம் போன்ற பல காரணங்களால் முகலாயர்கள் ஆட்சி சரிவுக்கு வந்தது. மராத்தியர்கள் வம்சாவளி சத்ரபதி சிவாஜியில் தொடங்கி ஆட்சிபீடத்தில் அமர்கின்றனர். வட இந்தியாவில் முகலாயர்களின் வெற்றிடம் மராத்தியர்களால் நிரப்பட்டது.

மராத்தியர்களின் ஆளுமைக்கு கீழ் உள்ள தலைமை அமைச்சர்களாக இருந்த பேஷ்வா’க்கள் இராணுவத்தை கட்டுபடுத்தி வந்தனர். இவர்கள் பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள். சிந்து நதிக்கரை வரை ஒவ்வொரு இடத்திலும் மராத்தியர்களின் கொடி பறந்தது. இந்த தருணத்தில் ஒரு வெளிநாட்டு மன்னரின் படையெடுப்பு நடக்கிறது. அவரின் பெயர் அஹ்மத் ஷா துரானி. ஆப்கானிஸ்தானில் இருந்து முன்னர் இந்தியாவிற்கு படையெடுத்த நாதிர்ஷா என்ற மன்னரின் தளபதியாக துரானி இருந்துள்ளார். தற்பொழுது துரானியின் அதிகாரத்தில் கீழ் ராஜ்ஜியம் வந்ததால் மீண்டும் படையுடன் இந்தியாவிற்குள் நுழைய முயற்சிக்கிறார்.

Maratha Army (Pic: wikipedia)

மூன்றாவது பானிபட் போர்

மூன்றாவது பானிபட் போர் வருடம் 1761, ஜனவரி 14 அன்று மராத்தா சாம்ராஜ்யத்திற்கும் அப்கானிஸ்தானின் துரானி பேரரசிற்கும் நடைபெற்றது. அகமது சா துரானியை ரோகில்லாக்கள் மற்றும் அவத் (அயோத்தியா) நவாபு சுஜா-உத்-தௌ ஆதரித்தனர். மராத்தியர்களுக்கு உதவ இராசபுத்திர படைகளும், சீக்கிய படைகளும் முன் வரவில்லை. இதற்கு இவர்களின் பகுதிகள் ஆக்கிரமிப்பு, இந்துக்கள் ஆதரிப்பு, வரி விதிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. சத்ரபதி சிவாஜி பேரரசாக முடி சூட்டிய அன்று பாலாஜி விஸ்வநாத்தை தன் முதலைமைச்சராக (பேஷ்வா) நியமித்தார். அன்றிலிருந்து அவரின் வம்சாவளி மராத்தியர்களுக்கு பக்க பலமாக இராணுவம் உள்ளிட்ட துறைகளில் ஆளுமையை செலுத்தியது.

போருக்கான காரணங்கள்

18 ஆம் நுற்றாண்டில் மிகப்பெரிய போராக இந்த போர் வர்ணிக்கப்படுகிறது. ஒரே நாளில் பல்லாயிரம் மக்கள் இரத்த வெள்ளத்தில் கிடத்திய போராக பதிவாகியுள்ளது. பாலாஜி பாஜி ராவு (நானா சாகிப் என்றழைக்கப்பட்டவர்) மற்றும் அவருடைய தளபதிகள் தம்முடைய எல்லைகளை விரிவு படுத்தி கர்நாடகா மற்றும் நிஜாம் பகுதிகளை கைப்பற்றினர். பாலாஜி ராவின் மகன் ரகுநாத் ராவு வருடம் 1958 ஆண்டு பஞ்சாபின் எல்லையை ஊடுருவினார். அப்பகுதியின் வளங்களை வாரி சுருட்டிக்கொண்டு தமது விசுவாசியான அதானி பெக் என்ற சர்தார் ஒருவரை ஆளுநராக நியமித்தார். இது அந்த பகுதியின் ஆளுமைகளான ரோஹிலாக்களுக்கும் ராஜபுத்திரர்களுக்கும் சினத்தை ஏற்படுத்தினாலும் மராத்திய படைகளை கண்டு அஞ்சினர். உள்நாட்டு போரும் அதற்காக உதவி கோருவதுமே வெளிநாட்டு படைகள் நம் வளங்களை ராஜ உபச்சாரத்துடன் எடுத்து செல்ல வழி வகுத்துள்ளது. எவ்வாறு ஜெய்சந்த் மொகமத் கோரிக்கு அழைப்பு விடுத்தாரோ, தவளத் கான் பாபருக்கு அழைப்பு விடுத்தாரோ அதே போல ரோஹிலாக்களும், ராஜபுத்திரர்களும் துரானிக்கு அழைப்பு விடுத்தார்கள்.

பயிற்சி பெறாத வீரர்கள்

இது துரானி சாம்ராஜ்யத்தின் நேரடி மோதலுக்கு வழி வகுத்தது. பாஜி ராவு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் தம்முடைய மாமா சதாசிவ ராவ் தலைமையில் படை ஒன்றை திரட்டுகிறார். சுமார் 45, 0௦0 முதல் 6௦, 0௦0 போர் வீரர்களை அவர்கள் குடும்பத்துடனும், 2,௦0,௦0௦ ஊர் மக்களையும் புனித யாத்திரைக்காகவும், போரின் பொழுது படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காண்பிக்கவும் இப்படியொரு ஏற்பாடு செய்யப்படுகிறது. மராத்திய வரலாற்றிலே இது போன்ற ஒரு பலவீனமான படை இருந்தது இல்லை என சொல்லலாம். அது போக குடும்பத்துடன் வந்த போர் வீரர்கள் எவருக்கும் முழு ஈடுபாட்டுடன் போர் புரியும் எண்ணமும் இருந்ததாக காணப்படவில்லை. அவர்கள் படூர் எனும் பகுதியில் இருந்து மார்ச், 196௦ ல் வடக்கு நோக்கி பயணிக்கிறார்கள். ரோஹில்லா படைகளுடன் ஆப்கான் படைகள் இணைந்ததால் இஸ்லாமிய படைகள் ஒன்றானது. ஆப்கான் படைகள் தங்குவதற்கான நீண்ட கால நிதி தேவையை ரோஹில்லா பூர்த்தி செய்தது.

முதல் போரில் வெற்றி

ஆகஸ்ட், 1960 ல் மராத்திய படைகள் மெல்ல டெல்லி வந்தடைந்தது. யமுனை நதிக்கரையில் குஞ்ச்புரா எனும் இடத்தில் வெறும் 15, ௦௦0 ஆப்கன் வீரர்கள் மட்டும் முகாமிட்டு இருந்தனர். எஞ்சியுள்ள அப்கான் படைகள் துரானியையும் சேர்த்து ஆற்றின் கிழக்கு பக்கம் முகாமில் இருந்தனர். மராத்திய படைகள் குஞ்ச்புரா பகுதியில் இருந்த ஆப்கான் படைகளை எதிர்கொண்டது. இதில் அமோக வெற்றி. மகிழ்ச்சி வெள்ளத்தில் அங்கே முகாமிட்டது. அவர்களுடைய நீண்ட கால தேவைக்கான உணவு அவர்களின் டெல்லி முகாமில் இருந்து வரவழைக்கப்பட்டது. நாட்கள் மாதங்களானது.

Panipat (Pic: defence)

பட்டினியின் கோரப்பிடியில்

அக்டோபர் மாதத்தில் துணிச்சலான முடிவு ஒன்றை எடுத்த துரானி பாக்பட் எனும் இடத்தில் ஆற்றை கடந்து முகாமிட்டார். இது டெல்லியில் இருந்து உணவு வரும் பாதையாக உள்ளதால் மராத்திய படைகளுக்கான உணவு சுத்தமாக நிறுத்தப்பட்டது. இரண்டு மாதங்கள் கடந்தது. உணவு சுத்தமாக தீர்ந்துவிட்ட நிலையில் மராத்தியர்களின் ஆயிரக்கணக்கான கால்நடைகள் அனைத்தும் உயிரழந்தன. பல நாட்கள் உணவருந்தாத மராத்திய வீரர்கள் அவர்களின் தளபதி சதாசிவ ராவிடம் பட்டினியால் சாவதை விட போரை சந்திப்பதே மேல் என்று மன்றாடி கேட்டுக்கொண்டனர். ஜனவரி, 1761 ல் இரு அணிகளும் பானிபட்டில் சந்தித்து கொண்டனர். நடந்த போரில் பலவீனமான மராத்திய வீரர்களால் சரியாக பதில் தாக்குதல் கொடுக்க முடியவில்லை. சுமார் 6௦, 00௦ பேர் போரில் மாண்டனர். பல்லாயிரம் மக்கள் காயமடைந்தனர். பலமுனை தாக்குதல் நடந்ததால் யாத்திரைக்காக கூட்டி வந்த போராளிகளுக்கு அவர்களால் சரியான பாதுகாப்பு வழங்க முடியவில்லை. போர் நடந்த மறுநாள் சுமார் 40, 000 மராத்திய மக்களை ஒரே நாளில் கொன்று குவித்தனர்.

wierd War (Pic: twitter)

இந்த போருக்கு பின்னர் மராத்தியர்கள் எல்லை விஸ்தரிப்புகளை முழுவதுமாக நிறுத்திக்கொண்டனர். பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மிர் உள்ளிட்ட கங்கை சமவெளி பகுதிகளை துரானிக்கு அளித்தனர். மராத்திய பேரரசு முழுவதும் சிதைந்து தனித்தனி நாடுகளாக உருவெடுத்தது. வலுவான எந்த பேரரசும் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை கிழக்கிந்திய கம்பெனி பயன்படுத்தி தங்கள் எல்லைகளை விரிவுபடுதிக்கொண்டது.

Web Title: மூன்றாவது பானிபட் போர்

Featured Image Credit: yugaparivartan

Related Articles