சங்க கால தமிழர் உணவு முறையில் சிறந்து விளங்கிய சிறு தானியங்கள்

“உணவெனப்படுவது நிலத்தோடு நீரே”

– புறநானூறு

உலகில் ஒவ்வொரு பகுதியிலும் கிடைத்த இயற்கை விளைபொருட்களின் அடிப்படையில் அந்தந்தப் பகுதி மக்களின் உணவுப் பழக்கம் அமைந்திருந்தது. நிலவுடைமைச் சமூகத்தில் மனிதன் ஒரே இடத்தில் வாழத் தலைப்பட்ட பிறகே வகை வகையான உணவுகளைச் சமைத்து உண்ணும் வழக்கம் ஏற்பட்டிருக்கக்கூடுமென்பதும் உயிர் வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவையில் இருந்த உணவு சுவை இன்பத்திற்கானதாக அதன் பின்னரே மாறியிருக்கக்கூடும் என்பது பல ஆய்வாளர்களின் கூற்றாகும். 

நிலத்திற்கு ஏற்ப உணவு

தங்கள் மண்ணில் விளைந்த பொருட்களைப் பதப்படுத்தி வைத்துக் கொள்ளவும், அதனை சமைக்கவும் பழகிக் கொண்ட பின்னர் அந்தந்தப் பகுதி மக்களின் அடையாளமாகவும் உணவுகள் மாறிவிடுகிறது. உணவு என்பது ஒரு சமூகத்தின் அல்லது இனக்குழுவின் செழிப்பின், வசதியின் அடையாளமாகவும் மாறி விட்டிருக்கிறது.அதனால் தான் நதிக்கரைகளில், அதாவது விவசாயம் செய்யத் தகுந்த இடங்களில் நாகரிகம் தோன்றி வளர்ந்துள்ளது.

“உணவெனப்படுவது நிலத்தோடு நீரே’ என்னும் தெளிவு கொண்ட தமிழ்ச் சமூகத்தை மட்டுமே எடுத்துக்கொண்டாலும் நிலவியல் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியும் பல்வேறுபட்ட, ஆயிரக்கணக்கான வகையிலான தானியங்களை விளைவிக்கின்றன. அதன் அடிப்படையில் உணவின் வகைகளும் விரிகின்றன. வகைகள் பல்வகைப்பட்டதாக இருந்தாலும் நமக்கென ஒரு உணவு முறை வழக்கத்தில் உள்ளது. அறுசுவையோடு மருத்துவ குணம் நிறைந்த பொருட்களையே அடிப்படையாகக் கொண்டு ஒரு சமையல் முறை இங்கே இருந்துள்ளது. இந்த உணவு முறை நமக்கான அடையாளமாக நிலைத்து நிற்கிறது.

அப்படியெல்லாம் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக இருந்த தமிழ்ச் சமூகம் இன்றைக்கு உபயோகப்படுத்தக்கூடிய உணவுகள் என்ன? என்பதை பட்டியலிட்டுப் பார்த்தோமானால் மிகவும் வேதனை தரக்கூடிய விடயமாக இருக்கிறது. ‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்று இருந்த தமிழ்ச் சமூகம் இன்றைக்கு ‘உணவே நஞ்சு நஞ்சே உணவு’ என்ற கோட்பாட்டுக்கு ஒத்துக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. நாம் மறந்த ஒரு சில பாரம்பரிய சிறு தானியவகை உணவுகளின் சிறப்புக்கள் இதோ.

சங்ககால ‘ஏனல்’ – தினை

சிறுதானியங்களில் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் “தினை”. பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் வாழ் மக்களின் முக்கிய உணவாக தேன் மற்றும் “தினை” மாவு இருந்ததாக பதிவு செய்ய பட்டிருக்கிறது. இதிலிருந்தே நமது முன்னோர்கள் தினை தானியத்தின் மகத்துவத்தை நன்கு அறிந்திருந்தனர் என்று அறிய முடிகிறது. அப்படிபட்ட தினை தானியத்தின் பயன்கள் ஏராளம்.

தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தின்தோறும் ஒரு வேலை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும் அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக இந்த தினை கஞ்சியை ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள தாய்மார்கள் கொடுக்கிறார்கள்.

தினை நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள் போன்றவற்றை நீக்கும் தன்மை கொண்டது. உடலின் தசைகளின் வலுவிற்கும், சருமத்தின் மென்மைக்கும் மிகவும் அவசியமான புரதச் சத்து அதிகம் நிறைந்த உணவாகும். தினை கொண்டு செய்ய பட்ட உணவு வகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடலில் தசைகள் நன்கு வலுபெறும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்கும்.

அல்சைமர் நோய் என்பது ஒரு வகையான தீவிரமான ஞாபக மறதி நோயாகும். இந்நோய் வந்தவர்கள் பல சமயங்களில் தங்களையே மறந்து விடும் நிலைக்கு சென்று விடுவர். தினை மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, ஞாபகத்திறனை மேம்படுத்தும் சக்தியை அதிகம் கொண்டிருப்பதால், அதை சாப்பிட்டு வருபவர்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவதாக மேலை நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சாமான்யனின் சாப்பாடு – சாமை

சாமான்ய மக்களின் விருப்பு உணவாக திகழ்ந்த காரணத்தால் சாமை என்ற பெயர் பெற்றது. சிறுதானியங்களில் சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை. முல்லை நில மக்களின் உணவு சாமை என்கிறது இலக்கியம். சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. சாமை உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று.

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

மலச்சிக்கலை போக்க வல்லது. நோய்களுக்கெள்ளாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும். இதுமட்டுமல்லாமல் வயிற்றுக் கோளாறுக்கு சாமை அரிசி நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது. தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது. 

மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது – குதிரைவாலி

வாலரிசி எனப்படும் குதிரைவாலி சுவை மிகுந்த சிறுதானியமாகும். குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல் நீக்கப்பட்டு கிடைக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும். நூறு கிராம் குதிரைவாலியில் புரத சத்து 6.2கிராம், கொழுப்பு சத்து 2.2 கிராம், தாது உப்புகள் 4.4 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், மாவுச்சத்து 65.5 கிராம், கால்சியம் 11 மில்லிகிராம், பாஸ்பரஸ் 280 மில்லிகிராம் என அடங்கியிருப்பதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உடலைச் சீராக வைக்க உதவுகிறது, சர்க்கரை அளவினை குறைக்கிறது. இரும்புச்சத்து இரத்தசோகை வராமல் தடுக்கவும், அதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் சமிபாட்டிற்கும் உதவுகிறது. வாயுப் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு குதிரைவாலி ஒரு சிறந்த வரப்பிரசாதம் ஆகும்.

இடியைத் தாங்கும் தன்மை கொண்டது – வரகு

நமது சங்க இலக்கியங்களில் அதிகமாக குறிப்பிடப்படும் சிறு தானியம் வரகரிசியாகும். பழந்தமிழரின் அடிப்படையான உணவாக வரகரிசி திகழ்ந்துள்ளது. வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். இதன் விதை ஆயிரம் வருடம் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது.

வரகில் புரதம், கால்சியம், விட்டமின்கள் ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். இரத்தத்தில் அதிகளவு சேர்ந்துள்ள‍ ச‌ர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, மிதமான அளவுடன் பராமரிக்கிறது. கண்களில் ஏற்படவிருக்கும் நரம்புநோய்களைத் முற்றிலும் தடுக்கும் கேடயமாக செயல்பட்டு கண்களை காக்கிறது.

ழகரத்தின் அடிப்படையில் பெயர்பெற்றது – கேழ்வரகு

மனிதர்கள் எப்போதுமே ஒருபொருளை தனக்கு முன்பே அறிமுகமான ஒன்றோடு தொடர்புபடுத்தி பெயரிடுவது உலகநடைமுறை. வரகு என்ற சிறு தானியத்தின் நினைவாக கேழ் என்ற முன்னொட்டு சேர்த்து “கேழ்வரகு” என்று அழைக்கப்பட்டது.

தமிழில் ழகரம் இரண்டாம் இடத்தில் வரும் சொற்கள் அனைத்தும் “கீழ் , தாழ்வு , காழ்வு என்றே பொருள் தருகின்றன. வரகைப்போன்ற கீழ் நோக்கி அல்லது வளைந்து கதிர் ( பூட்டை ) விடும் தானியம் என்ற காரணம்கொண்டு கேழ்வரகு என்று பெயர்பெற்றிக்கலாம் என்கின்றனர் தமிழ் ஆய்வாளர்கள்.

கேழ்வரகை உண்பதால் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும் உடலில் நைதரசனின் அளவை கட்டுப்படுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய் மற்றும் தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.

புன்செய் நிலப்பயிர் – கம்பு

மானாவரி அல்லது குறைந்த நீர் தேவையுள்ள பயிர்களுக்கு புன்செய் பயிர்கள் என்று பெயர். கம்பும் அவ்வகை ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்திருக்கிறது. தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரதம் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான விட்டமின் A வை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.

வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். உடலுக்கு தெம்பு கிடைக்க பழந்தமிழர் கம்பை உண்டதாக தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சங்க கால உணவு முறை எட்டா கனி ஆகி விடுமா?

சங்ககாலத்தவரது வாழ்வை ஆராய்ந்தோர் “அக்காலத்தோரின் உணவு மரபு போற்றுதற்குரியது” எனக் குறிப்பிடுகின்றனர். மனித குலத்தின் உணவு தொடர்பான தேடலே அவர்களது பண்பாட்டு வளர்ச்சிக்கு வழி வகுத்தது என்கின்றனர். சங்ககாலத்தோரின் வியத்தகு வளர்ச்சியில் உணவுப் பாரம்பரியத்தின் பங்கு இன்றியமையாததாக இருந்துள்ளது.

மனிதனது உணவுத் தேவையானது இருப்பின் தேவையை நிறைவு செய்த போதும் அது இனம் சார்ந்த பண்பாட்டாலும், சுற்றுப்புறச் சூழல்களாலும் வரையறுக்கப்பட்டிருந்தது. சங்ககால இலக்கியங்கள் வெளிப்படுத்தும் உணவு தொடர்பான செய்திகள் ஒரே களத்தைக் கொண்டவையாகவும், ஓரே காலத்துக்கு உரியனவாகவும் இருக்கவில்லை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுப்பப்பட்ட வாழ்களங்கள் தோறும் மாறுபட்ட உணவு மரபுகளை அவதானிக்க முடிகின்றது. ஒவ்வொரு களத்திலும் குறிப்பிட்ட பொருட்களே கிடைத்தன அல்லது உற்பத்தி செய்யப்பட்டன.

பழந்தமிழர்கள் ஆரோக்கியமாகவும் திடமாகவும் முதுமையிலும் இளமையாக வாழ்ந்ததற்கு உணவே மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது எனலாம். இதற்கு சங்க கால இலக்கியங்களே மிகச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். நம் முன்னோர்களின் உணவு வகைகளின் வழக்கத்தை நாம் மீண்டும் புழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். எதிர்கால சந்ததிகளுக்கு இது எட்டா கனியாகிவிடாமல் பார்த்துக்கொள்வது தமிழர்களாகிய எமது தலையாய கடமை ஆகும்.

Related Articles