Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ஆறுமுக நாவலரின் மானநஷ்ட வழக்கு

19ஆம் நூற்றாண்டில் தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் பேசப்பட்ட பெரும் சர்ச்சையாக, ‘அருட்பா-மருட்பா’ தர்க்கப் பூசல் நிலவியது. அதில் சம்பந்தப்பட்ட சிலர் இறந்த / மறைந்த பின்னரும்கூட அந்த தர்க்கம் நிற்கவில்லை. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு அந்த ‘அருட்பா-மருட்பா’ தர்க்கம் தொடர்ந்து நடத்தப்பட்டது.
 
தமிழ்நாட்டின் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவரும் அருட்பிரகாச வள்ளலார் என்று சொல்லப்பட்டவருமான இராமலிங்க அடிகளுக்கும், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் புகழ்பூத்த தமிழறிஞருமான ஆறுமுக நாவலருக்கும் இடையில் தோன்றிய கருத்து முரண்பாடே, இந்த ‘அருட்பா-மருட்பா’ தர்க்கத்தின் வித்தாக அமைந்தது.
 
சைவ மரபில் அருட்பாவாக கருதப்படுவது, தேவாரமும் திருவாசகமுமேயாகும். இந்த நிலையில், அருட்பிரகாச வள்ளலாரின் பாடல்கள் அக்காலத்தில் அருட்பா எனப் பெயர்சூட்டப் பெற்றதையடுத்து சைவ மதவாதிகளின் பாரிய எதிர்ப்பைப் பெற்றது. ஆன்ம அனுபூதிநிலையைப் பெற்றவராக கூறப்படும் வள்ளலார் தனது பாடல்களூடாக, சமூகக் கட்டமைப்புகளை விமர்சித்தார். அக்காலத்தில் கடுமையாக பின்பற்றப்பட்டு வந்த சாதிமுறை வள்ளலாரின் பாடலில் கடுமையாக விமர்சிக்கப் பட்டது. 
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் புகழ்பூத்த தமிழறிஞருமான ஆறுமுக நாவலரும், அருட்பிரகாச வள்ளலார் என்று சொல்லப்பட்டவருமான இராமலிங்க அடிகளும்.
ஆறுமுகநாவலர் கட்டுக்கோப்பான சைவசமயி என்ற முறையில், சைவ சமயத்திற்கு எதிரான அம்சங்களை எதிர்த்து அக்காலத்தில் குரல்கொடுத்து வந்தார். சைவத் திருமுறைகளுக்கு நிகராக வள்ளலாரின் பாடல்கள் நிலைபெற்று வந்ததையும் அவற்றுக்கு அருட்பா என்று பெயரிடப்பட்டதையும் கண்டு மனம்பொறுக்காத ஆறுமுகநாவலர், வள்ளலாரின் பாடல்கள் அருட்பா அல்ல எனவும், அவை மருட்பா எனவும் அறிவித்தார். தமிழ்ச்சமூகத்தின் பிரசித்தி பெற்ற அந்த ‘அருட்பா-மருட்பா’ தர்க்கம் இந்தப்புள்ளியில் தான் ஆரம்பித்தது.
 
இரு பெரும் அறிஞர்களும் அவர்களின் அடிப்பொடிகளும் இந்தத் தர்க்கத்தில் அதி தீவிரத்துடன் பங்குபற்றினர். ஆறுமுகநாவலர் மற்றும் வள்ளலார் ஆகியோரின் கருத்து வெளிப்பாடுகளை விடவும், அவர்களின் அடிப்பொடிகளின் வாதங்கள் நாகரிக எல்லைகளைக் கடந்து தனிமனிதர் மீதான தாக்குதல்களாக அமைந்தமை அதிர்ச்சிக்குரியது. 
 
தர்க்க ரீதியில் தொடங்கிய இந்தப் பூசலானது, விரைவிலேயே ஏசிப்பேசி வசைமாரி பொழியும் நிலைக்கு ஆளானது. அக்காலத்து முறைமையின்படி கருத்து வெளிப்பாடுகள் பெரும்பாலும் ஆவணங்களாகவும் பிரசுரங்களாகவுமே வெளியாகின. 
 
குதர்க்காரணிய நாச மகா பரசு கண்டனம், இராமலிங்கதப்பிள்ளை அங்கதப்பாட்டு, குதர்க்கிகளின் பொய்க்கோள் விலக்கு, சைவ தூஷணப் பரிகாரம் என்பது போன்ற தலைப்புகளில் அந்தப் பிரசுரங்கள் அமைந்திருந்தன. இந்தத் தலைப்புகளைப் பார்க்கும்போதே, ‘அருட்பா-மருட்பா’ தர்க்கப் பூசல் எந்தளவு உச்சத்தில் இருந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
 
இருதரப்பிலும் சண்டையை வளர்ப்பதில் இன்பம் கொண்டவர்கள் இருந்தார்கள். ‘ஆறுமுக நாவலர் இணையற்றவர்’ என்று நாவலரின் அடிப்பொடிகள் சொன்னால், அதற்குப் பதிலடியாக ” ஆறுமுக நாவலர் இணை (வாழ்க்கைத்துணை) அற்றவர் எனவும் அதனால் அவருக்கு ஆண்மையில்லை எனவும், வள்ளலாரின் அடிப்பொடிகள் தூற்றினர்.
 
இந்தப் பழிச்சொல்லுக்குப் பதிலாக, ஆறுமுகநாவலரின் அடிப்பொடிகள் வள்ளலாரை “பூப்புப் பெண்களைப் புணர்ந்தார்…” என்றும்,  “பகலிலே துறவி, இரவிலே காமுகர்” எனவும் “புறப்புணர்ச்சி செய்பவர்” என்றும் தூற்றினர்.
 
இந்தப் பிரச்சினையில் இரு தரப்புத்தான் உள்ளதென இன்றுவரை பலராலும் கருதப்பட்டு வருகின்ற நிலையில், மூன்றாவது தரப்பொன்று சத்தமில்லாது இந்த இரு தரப்புகளையும் முட்டி மோத விட்டுக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகின்றது. அது “தில்லை வாழ் அந்தணர் தம் அடியாருக்கும் அடியேன்” என்று முற்காலத்தில் சுந்தரரைப் பாடவைத்த சிதம்பரம் தீட்சியர்கள் தரப்பு!
 
சைவக் கோயிலில் பூசை செய்த போதும் தீட்சிதர்கள், சைவர்களின் மூலத்திருநூற்களான தேவாரம், திருவாசகத்திற்கு முதன்மை கொடுக்க மறுக்கும் நிலைப்பாடு உடையவர்கள் என்பதை அண்மைக்கால வரலாறு மூலமே அறியலாம். வடமொழிக்கும் அது சார்ந்த பண்பாட்டுக்குமே அவர்களின் முன்னுரிமை கிடைத்தது. அவர்களுடைய இந்தப்போக்கு, ஆறுமுக நாவலர் மற்றும் வள்ளலார் வாழ்ந்த 19 ஆம் நூற்றாண்டில் இன்னும் தீவிரமாக இருந்தது.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தின்
முன்பு நின்டிருக்கும் சிவ தீக்ஷிதர்கள்.
பட உதவி: chidambaramhiddentreasure.com
சைவ முறைமைகளை மதித்து சிவபெருமானைப் பூசனை செய்வதற்குரிய சிவ தீக்ஷையினைப் பெறாத, தில்லைத் தீட்சிதர்களின் கையால் திருநீறு வாங்கக் கூடாது என ஆறுமுக நாவலர் முழங்கியதிலிருந்து, தீட்சிதர்களுக்கும் நாவலருக்கும் இடையிலான பகைமை சூல்கொண்டது.
 
ஆறுமுக நாவலர் மட்டுமல்ல, அருட்பிரகாச வள்ளலாரும் தில்லைத் தீட்சிதர்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் தான்! தில்லையில் ஆனந்தத் தரிசனம் அளிக்கும் நடராஜ மூர்த்தியை கண்குளிரக் கண்டு ஆத்மானுபவம் பெற்ற வள்ளலாருக்கு அந்தக் கோயிலை தீட்சிதர்கள் ஜாதி முறைமை உள்ளிட்ட கொடிய சட்டதிட்டங்களுடன் நடத்தியமை பிடிக்காமல் போயிருந்தது. இறை எனும் அருட்பெரும் சோதிக்கு முன்னால் அனைத்து உயிர்களும் சமம் என்ற கொள்கையுடைய வள்ளலார், சிதம்பரம் நடராஜப்பெருமான் ஆலயத்தை தீட்சிதர்கள் கொண்டு நடத்திய நிலையைப் பார்க்கப் பொறாது, போட்டிக் கோயிலாகவே வடலூர் சத்திய ஞானத் திருச்சபையை நிறுவினார் என்றும் கூறப்படுகின்றது.
 
தில்லைச் சிதம்பரத்தில் இருப்பது சிற்றம்பலம் தான் எனவும், வடலூரிலேயே பேரம்பலம் உள்ளது எனவும் கூறி பக்தர்களை ஜாதி, மதம், இனம் பார்க்காது இறைவனைத் தொழ அழைத்தார் வள்ளலார். அவரது இந்தச் செயல் தீட்சிதர்களுக்கு அறவே பிடிக்காமற் போனது.
 
இந்த நிலையில், யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலரையும், அருட்பிரகாச வள்ளலாரையும் மோதவைக்கும் நிலைக்கு ஆளாக்கியவர்கள் தீட்சிதர் தரப்பே என்று கூறப்படுகின்றது. அவர்கள் ஒரு கட்டத்தில் ஆறுமுகநாவலர் பக்கம் நின்றும் இன்னொரு கட்டத்தில் வள்ளலார் பக்கம் நின்றும் இந்தப் பூசல் தணிந்து விடாது பாதுகாத்தனர்.
 
வள்ளலாரை ஆதரித்து தீட்சிதர் தரப்பு நடத்திய ஒரு கூட்டமே, ஆறுமுகநாவலர் வழக்குத் தொடர்வதற்கு முழுமூல காரணமாகியது. அந்தக் கூட்டத்தில், நாவலர் என்ற சொல்லுக்கு பொய்யன், வித்தையில்லாதவன், நாவில் பழிச்சொல்லுடையோன் போன்ற அர்த்தம் தோன்றுமாறு வள்ளலார் பேசியிருந்தார். வள்ளலார் தனது எதிர்ப்பு வெளிப்பாட்டினை அந்த அளவோடு நிறுத்திக் கொண்ட போதும், தில்லைத் தீட்சிதர்கள் தரப்பு ஆறுமுக நாவலரை வசைபாடியது. அதன் உச்சக்கட்டமாக, அந்தக் காலத்து தில்லைத் தீட்சிதர்களுக்கு தலைமை தாங்கிய சபா நடேச தீட்சிதர் அந்தக் கூட்டத்தில் வைத்து, “நாவலரை அடித்து நொருக்கவேண்டும்” என்று வெளிப்படையாகவே அச்சுறுத்தல் விடுத்தார். இந்த அச்சுறுத்தலை அடிப்படையாக வைத்தே, மான நஷ்டம் அல்லது அவதூறு தொடர்பான வழக்கினை நாவலர் தரப்பு 1869 ஆம் ஆண்டு தாக்கல் செய்தது.
 
தமிழ்நாட்டின் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கட்டுக் கதைகள் அருள் உணர்வு பொங்க, இன்றும் பரவிக்கிடக்கின்றன.
 
இன்றும் கூட பலராலும் நினைக்கப்படுவது போல, இந்த வழக்கு,  ‘வள்ளலார் எதிர்  ஆறுமுக நாவலர் வழக்கு’ அல்ல. அது உண்மையில், ‘சபா நடேச தீட்சிதர் எதிர் ஆறுமுக நாவலர்’ வழக்கு ஆகும். ஆம்! இந்த வழக்கின் முதலாம் எதிரியாக சபா நடேச தீட்சிதரே முன்னிறுத்தப்பட்டார். அவரையடுத்து மேலும் நான்கு தீட்சிதர்களையே தனது அடுத்தடுத்த எதிரிகளாகக் குறிப்பிட்டு ஆறுமுக நாவலர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். வள்ளலார் பெயர் ஆறாவது எதிரியாக குறிப்பிடப்பட்டது.
இச்சரித்திர பூர்வ நிகழவை அடிப்படையாகக் கொண்டு ப.சரவணன் எழுதிய
“அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு” நூலின் முகப்பு அட்டை.
 
வழக்கு விசாரணைக்கு வந்த போது அந்த வழக்கினை ரொபேர்ட் என்ற ஆங்கிலேய நீதிபதியே விசாரித்தார். நாவலர் மீது சுமத்தப்பட்ட அவதூறு குறித்து விளக்கம் கேட்ட நீதிபதியிடம், தாம் “நாவலர்” என்ற தமிழ்ச்சொல்லுக்கான விளக்கத்தையே சிதம்பரம் கூட்டத்தில் கூறியதாகவும், அது ஆறுமுக நாவலர் என்ற மனிதரைக் குறிக்கவில்லையென்றும் வள்ளலார் சாட்சியமளித்ததாக கூறப்படுகின்றது. இதனடிப்படையில் வள்ளலாரை விடுதலை செய்த நீதிமன்றம், முதலாம் எதிரியான சபா நடேச தீட்சிதருக்கு தண்டனை விதித்தது. 
 
நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சபா நடேச தீட்சிதருக்கு 50 ரூபா (19ஆம் நூற்றாண்டு கால இந்தியப் பணம்) தண்டப்பணம் விதிக்கப்பட்டு தீர்ப்பு வெளியிடப்பட்டது. 
 
இந்த வழக்கு நடைபெற்று, தீர்ப்பு வெளியான பின்னரும் கூட, ‘அருட்பா-மருட்பா’ தர்க்கப் பூசல் நிறுத்தப்படவில்லை. தமிழ்ச்சூழலின் நாற்பது ஆண்டுகளைத் தின்று முடித்த பின்னரே, அந்தப் பூசல் அடங்கி மறைந்தமை சுட்டிக்காட்டத் தக்கது.
உசாத்துணை:
“அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு” : ப.சரவணன்.

Related Articles