இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனைகளான மறத்தமிழச்சிகள்

நீண்ட காலமாக நடந்த இந்தியத் திருநாட்டின் விடுதலைப் போரில் லட்சோப லட்சம் மக்களை நாம் இழந்திருக்கிறோம். அதோடு ஆங்கிலேயர்களின் நரித் தந்திரத்தால் சீர்குலைக்கப்பட்ட ஒற்றுமை, ஆயுதக் கலாச்சாரம், தூண்டப்பட்ட ஜாதிச் சண்டைகள் போன்றவற்றினால் நம் மன்னர்கள் வீழ்த்தப்பட்டார்கள். குறிப்பாகத் தமிழ் மண்ணில் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில்  பீரங்கிகளுடனும், அன்றைய நவீன ரகத் துப்பாக்கிகளுடனும் பரங்கியன்  வேரூன்ற வரும்பொழுது அவர்களை எதிர்க்க நம்மிடம் இருந்தது நெஞ்சில் உரமும் கையில் வெறும் வாளும், வேலும்தான். அதை வைத்துக்கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து வென்ற தமிழ்நாட்டு ஆட்சியாளர்களை நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம்.

இன்று திரையில் பாகுபலியின்  தேவசேனையைப் பார்த்து வியந்து கொண்டிருக்கும் இளைய  தலைமுறை, அன்று  இந்திய நாடே அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில்  தன்  சொந்த நாட்டையும் இழந்து, முடிதுறந்த ஒரு பெண் நெஞ்சுரத்தோடு  போராடி  வெள்ளையர்களை வீழ்த்தி, மீண்டும் அரியணை ஏறிய நிகழ்வை எப்படிப் பார்க்க வேண்டும்?  அந்தச் சாதனையை  நிகழ்த்திக் காட்டிய இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையையும், அவருக்கு உற்ற துணையாக அவரோடு இணை நின்று போராடிய உலகின்  முதல் தற்கொலைப் படை வீராங்கனையாக  வரலாறு படைத்த அவரது மெய்க்காப்பாளரையும்  எப்படிக் கொண்டாட வேண்டும்? தாய்த் திருநாட்டிற்காக இன்னுயிரைப் பணயம் வைத்துப் போர் புரிந்த அந்த வீர மங்கைகளைத்  தொடர்ந்து முன்மொழியத் தவறுவதும், மறப்பதும் கூட  ஒரு வகையில் வரலாற்றுப் பிழையும், தேசத் துரோகமுமே ஆகும். பெண்ணியம் போற்றுவதில் இருக்கும் அசௌகரியமும் இந்தச் சமூகத்தை அப்படிப்பட்ட இழிநிலையை நோக்கி நகர்த்தி வந்திருக்கலாம் என்று கருதுகிறேன். ஆகவே என்னளவில்  அவர்களைப் பற்றிய இந்தச் சிறு பதிவின் மூலம் அந்தக் குற்றவுணர்விலிருந்து விடுபட்டுக் கொள்கிறேன்.

இராமநாதபுரம் செல்லமுத்து சேதுபதி மன்னருக்கும், முத்தாத்தாள் நாச்சியார் தம்பதிக்கும் மகளாக 173௦ ஆம் ஆண்டு பிறக்கிறார் வேலு நாச்சியார். மன்னருக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் ஆண் வாரிசாகவே வளர்க்கப்படுகிறார். போர் பயிற்சியின் அங்கங்களான குதிரையேற்றம், வாள் வித்தை,  வில்வித்தை, வளரி வீச்சு முதலியவற்றை சிறுவயதிலேயே கற்றுத் தேர்ந்தார். நம் இதிகாசங்கள் மட்டுமல்லாது பல மொழிகளும் இவருக்கு வசப்பட்டது. இவரின் அழகையும், வீரத்தையும் கண்டு காதல் வயப்பட்ட சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதத்தேவர் வேலுநாச்சியாரை  மணம் முடித்தார். வேலுநாச்சியார் சிவகங்கைச் சீமைக்குப் பட்டத்து இராணியானார். சீரும் சிறப்புடன் ஆட்சி நடத்தி வந்தனர்.

வேலு நாச்சியார்  படம்: quora

பெரியமுத்தன், ராக்கு தம்பதியரின் மகளாகப் பிறந்தவர் குயிலி. குயிலியின் தாயார் வீரத்தில் சிறந்தவர். எவராலும் அடக்க முடியாத காளையை அடக்க முற்படும்போது மாடு முட்டி மரணமடைந்தார். குயிலியின் சிறு வயது முதல் தன் தாயாரின் வீரத்தையும், வேலுநாச்சியாரின் போர் திறமையையும் பாசத்துடன் எடுத்துரைத்து வளர்க்கிறார் தந்தை. அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு வீரமிக்க பெண்ணாக உருவானார் குயிலி. பெரியமுத்தன் அரண்மனை ஒற்றனாகச் செயல்பட்டதால் குயிலி அரண்மனைக்கு வந்து வேலுநாச்சியார் அன்பிற்குப் பாத்திரமானார்.

முத்துவடுகநாதர் ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்ட மறுத்ததால் இருவருக்கும் பகை மூண்டது. ஆங்கிலேயர்களின் படை நவாப்பிற்கு உதவ முன் வரவே தக்க சமயம் பார்த்துக் காத்திருந்தனர். ஒரு நாள் முத்து வடுகநாதர் காளையார் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு வெளியில் வரும்பொழுது வெள்ளையர்கள் படை திடீர் தாக்குதல் நடத்தியது. மன்னர் படை வீரப்போர் புரிந்தது. இறுதியில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு மன்னரும், அவருடைய இரண்டாவது மனைவியும் இரையானார்கள்.

காளையார் கோவில் நவாப்பின் வசம் போனது. வேலுநாச்சியாரை கைது செய்ய ஒரு படை சிவகங்கை கோட்டைக்கு அனுப்பப்பட்டது. கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த வேலு நாச்சியார் அவரைக் காண காளையார் கோவில் விரைகிறார். எதிரில் வந்த படைகளை தன் வளரி வீச்சால் சிதறி ஓடச் செய்கிறார். நேராக காளையார் கோவில் வந்த வேலுநாச்சியார் பிணக்குவியல்கள் மத்தியில் தமது இறந்த கணவர் சடலத்தையும், இளவரசி சடலத்தையும் கண்டு கதறி அழுதார். இராணி கோட்டையை விட்டு வெளியேறிய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய நவாப்பின் படைகள் சிவகங்கை கோட்டையைக் கைப்பற்றியது. வேலுநாச்சியார் படைத்தளபதிகளான மருது சகோதரர்கள் மீண்டும் சிவகங்கையை மீட்டுத் தருவதாக வாக்குறுதி அளித்தனர். மீண்டும் அவர்களின் இராஜ்ஜியத்தின் கொடியான அனுமன் கொடியை சிவகங்கை கோட்டை மீது பறக்க விடுவதாக அனைவரும் சபதம் ஏற்றனர். இரவோடு இரவாக தளபதிகள் உதவியுடன் ஒரு பல்லக்கில் மதுரையை அடுத்த மேலூரை அடைந்த வேலுநாச்சியார் மறைந்து வாழத் துவங்கும் ஆண்டு 1772.

அப்போது விருப்பாச்சி கோபால நாயக்கர் அவருக்குப் பாதுகாப்பான அடைக்கலம் அளித்தார். வேலுநாச்சியாருக்கு சிறு வயது முதல் போர் பயிற்சி அளித்தவர்களில் ஒருவரான சிலம்ப வாத்தியார் வெற்றிவேல் அவருக்கு மெய்க்காப்பாளராக நியமிக்கப்படுகிறார். அங்கிருந்து படை திரட்டி இழந்த இராஜ்ஜியத்தை மீட்பதற்குத் திட்டமிட்டனர். பிற்காலத்தில் போராளிகளுக்கு அடைக்கலம் வழங்கியதற்காகவே ஆங்கிலேயர்களால் ஒரு புளிய மரத்தில் தூக்கிலிடப்படுகிறார் கோபால நாயக்கர். அவ்வளவு பாதுகாப்பான நம்பிக்கைக்குரிய இடமது.

குயிலி
படம்: puthuyugam

காடுகளுக்கு நடுவே அமைக்கப்பட்ட மறைவான கோட்டைகளை ஆயுதக் கிடங்காகவும், போர் பயிற்சிக்கான இடமாகவும் பயன்படுத்தினர். சக்கரபதி கோட்டை, அறியாகுறிச்சி கோட்டை, படமாத்தூர் கோட்டை, மானா மதுரை கோட்டை என ஆங்காங்கே பணிகள் நடந்தன. ஒரு நாள் குயிலி சிவகங்கை செல்ல தயாரானாள். இதையறிந்த சிலம்ப வாத்தியார் “உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?” என்று குயிலியிடம் கேட்க நன்கு தெரிந்திருந்தாலும் “தெரியாது” எனப் பதில் கூறுகிறார் குயிலி. உடனே குயிலியிடம் ஒரு ஓலை ஒன்றை கொடுத்துச் சிவகங்கை அருகில் உள்ள மல்லவராயனிடம் கொடுக்கச் சொல்கிறார் அவர். குயிலி அதை மறைவாகப் பிரித்துப்  படிக்கவே அதிர்ச்சியானாள். வேலுநாச்சியார் படைதிரட்டும் குறிப்பும், போர்த் தந்திரங்களும் அதில் எழுதப்பட்டிருந்தது. வெள்ளையனிடம் விலை போய்விட்டார் சிலம்ப வாத்தியார் என்பதைக் குயிலி உணர்ந்த அடுத்த கணமே வெற்றிவேல் இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கிறார். அந்தக் குறிப்பை வாங்கிப் படித்த வேலுநாச்சியார் குயிலியை தன் மெய்க்காப்பாளராக நியமித்தார். அடுத்தடுத்து இரண்டு சம்பவங்களில் வேலுநாச்சியாரை கொல்ல ஆங்கிலேயர்கள் திட்டமிடுகின்றனர். குயிலி தன் இரத்தம் சிந்தி அவரைக் காக்கவே குயிலியை தன்னுடைய பெண்கள் படையின் தளபதியாக நியமித்தார் வேலுநாச்சியார்.

மைசூரை ஆண்ட மன்னன் ஹைதர் அலி திண்டுக்கல் கோட்டையில் இருப்பதாகச் செய்தி வருகிறது. ஆற்காடு நவாப்பிற்கு பரம எதிரி ஹைதர் அலி என்பதால் அவரிடம் உதவி கேட்பது என்று முடிவு செய்கிறார்கள். மூன்று வீரர்களுடன் திண்டுக்கல் கோட்டைக்கு குதிரையில் ஓலை கொண்டு செல்லப்படுகிறது. அவர்களை உள்ளே அனுமதித்த ஹைதர் அலி ஓலையை வாங்கிப் படித்துவிட்டு “வேலுநாச்சியார் வரவில்லையா?” என்று கேட்டார். அதில் ஒருவர் தன்னுடைய தலைப்பாகையைக் கழற்றுகிறார். அவர்தான் வேலுநாச்சியார். தன்னுடைய உள்ளக்குமுறலயும், தன்னுடைய இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் உருது மொழியில் விளக்கினார். அவரின் வீரமும், சரளமான உருது மொழியும் ஹைதர் அலிக்கு மிகவும் பிடித்துப் போகவே திண்டுக்கல் கோட்டையில் தங்க அனுமதித்து வேண்டிய வசதிகளைச் செய்துதர உத்தரவிட்டார்.

இப்பொழுது படைகளை பெருக்கத் துவங்குகிறார் வேலுநாச்சியார். 50௦0 பெண்களைக் கொண்ட படை விருப்பாச்சியில் குயிலி தலைமையில் தயார் நிலையில் இருந்தது. ஹைதர் அலி மன்னர் 12 பீரங்கிகள் கொண்ட படையையும், துப்பாக்கி ஏந்திய வீரர்கள் படை மற்றும் குதிரை படையையும் மனமுவந்து அனுப்பி வைத்தார். மருது சகோதரர்கள் தலைமையில் உள்ள படையும் வெறியுடன் காத்திருந்தது. சிவகங்கையைச் சுற்றிலும் ஆங்கிலேயர் படை சூழ்ந்திருந்தது. அன்று 1780ஆம் ஆண்டு ஐப்பசி திங்கள் 5 ஆம் நாள் வேலு நாச்சியாரின் படை பெரிய மருதுவுடன் வந்து காளையார் கோவிலைக் கைப்பற்றியது. சின்ன மருது தலைமையிலான படை திருப்பத்தூரில் வெள்ளையர் படையை துவம்சம் செய்தது.

மருது சகோதர்களுடன் குயிலி படம்: DNA-India

காளையார் கோவிலில் இருந்து சிவகங்கைக் கோட்டை வரை வழி நெடுகிலும் துப்பாக்கி ஏந்திய ஆங்கிலேய வீரர்கள் வரிசையாக நின்றார்கள். இறுதி இலக்கு, இலட்சியத்தின் கடைப் புள்ளி என்பதால் அனைவரிடமும் தவிப்பு இருந்தது. அன்று விஜயதசமி நாள். சிவகங்கை அரண்மனை ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்குள் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். சிறப்பு வழிபாடுகள் நடக்கும். மாறுவேடத்தில் வேலுநாச்சியாரும், சிறு சிறு குழுக்களாகப் பெண்கள் படையும் அரண்மனை கோவிலுக்குள் நுழைந்தனர். அவர்கள் ஆடைக்குள் மறைத்திருந்த ஆயுதத்தால் அங்கே காவலுக்கு இருந்த ஆங்கிலேயர்கள் தாக்கப்பட்டனர். திடீர் தாக்குதலால் வெட்டுப்பட்டவர்கள் கோட்டையை நோக்கி ஓடினர். தகவல் அறிந்த மற்ற வீரர்கள் தங்கள் ஆயுதக் கிடங்கை நோக்கி நகர்ந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் குயிலி தன் உடல் முழுவதும் நெய் எண்ணெய் ஊற்றிக்கொண்டு தனக்குத் தானே பற்றவைத்து மனித வெடிகுண்டாக மாறி ஆயுதக் கிடங்கை தவிடுபொடியாக்கி அவரும் உயிரிழந்தார்.

குயிலி
படம்: vikatan

தளபதி பாஞ்சோர் உட்பட அனைவரும் திகைப்படைந்தார்கள். வெள்ளையர்கள் கொடி இரக்கப்பட்டு மீண்டும் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. மீண்டும் தன் ஐம்பதாவது வயதில் அரியணை ஏறினார் வீரமங்கை வேலுநாச்சியார்.

நம் தேசத்தின் முதல் விடுதலைப் போர் இதுவாகக் கருதப்படுவதோடு,    உலகத்தின் முதல் தற்கொலை படைப் போராளி குயிலி எனவும் வரலாறு பதிவு செய்கிறது. ஆனால் இன்று அவர்கள் வாழ்ந்த கோட்டைகள் காடுகளுக்கு நடுவில், முட்புதர் மண்டிக்  கிடக்கிறது. அரசு அதைச் சிறப்பு கவனம் எடுத்துப் பராமரித்தால் நலம். சில சமூகத்தினர் ஜாதி அடிப்படையில் தங்களின் சின்னங்களாக அவர்களின் பிம்பத்தை முன் நிறுத்துகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் வெற்றிச்  சின்னமாக  அவ்வாறு அவர்கள் முன்னிறுத்தப்படுவது  இயல்புதான் என்றாலும்  நாட்டின் விடுதலைக்காகவும், தன்னாட்சி அதிகாரத்திற்காகவும், மக்களுக்காகவும் போராடியவர்களை ஜாதிச்  சின்னமாக மட்டும் முடக்குவதும் சரியல்ல.

 

Related Articles