Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

விஜயன் – நாடுகடத்தப்பட்டவர் இலங்கை மன்னரான வரலாறு

வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே இலங்கையில் பரவலான பல மனித குடியேற்றங்கள் காணப்பட்ட போதிலும், இந்தியாவில் இருந்து ஆரியர்கள் தெற்கு நோக்கி வந்த பின்னரே ஈழத்திற்கென சான்றுகளுடன் கூடிய நெடிய வரலாறு ஒன்று தோற்றம் பெற்றது. நாகர்களும் இயக்கர்களும் தமக்குள்ளும், தமக்கிடையும் பூசலிட்டு கொண்டிருக்க அண்டைய தீபகற்பத்தின் நாடுகத்தப்பட்ட ஓர் இளவரசன் தனக்கென ஒரு அரசை இத்தீவில் உண்டு பண்ணிக்கொண்டான். ஊற்றின் கண் நீரருவி உருவாவது போல இந்நாடோடி இளவரசனே லங்காவின் சிங்கள வரலாற்றுக்கு அகரம் என விளங்குகிறான். அவன் விஜயன். இலங்கையின் முதல் ஆரியன். 

விஜயனுக்கு முடி சூட்டுவதை போன்ற புராதன ஓவியம் – இடம்: அஜந்தா குகை

சிங்க வம்சாவளி 

வங்கதேசத்தின் மன்னர், கலிங்கத்தின் இளவரசியை மணம் புரிந்தார். இருவருக்கும் பெண்ணொருத்தி பிறந்தாள். ஜோதிடர்களின் கணிப்பின் படி இளவரசி விலங்கரசன் மனைவியாக ஆவாள் என்றனர். சாதாரண அரண்மனை பெண்கள் போலில்லாமல் மிகவும் சுதந்திரமாக வாழ விரும்பிய இளவரசி தன்னுடைய அரச அடையாளங்களை மறைத்துக்கொண்டு மகத நாட்டுக்கு செல்லும் யாத்திரை குழுவொன்றுடன் இணைந்து கொண்டாள். செல்லும் வழியில் லாடா தேசத்தின் எல்லையில் இருந்த காடொன்றில் யாத்திரை குழுவை சிங்கமொன்று தாக்கியது. இளவரசியை தவிர எல்லாரும் ஓட்டம் கண்டனர். ஆனால் அவள் மட்டும் சிங்கத்தை நோக்கி நடந்து சென்றாள். இளவரசியை கண்டு காதலுற்ற சிங்கம் அவளை தன்னுடைய குகைக்கு கொண்டு சென்றது. இளவரசி சிங்கபாகு என்ற மகனும், சிங்கசீவலி என்ற மகளுமாக இரட்டை குழந்தைகளுக்கு பிறப்பு கொடுத்தாள். பருவத்தை அடைந்த மகன் தன்னுடைய தாய், தங்கை சகிதமாக குகையை விட்டு நாட்டுக்குள் நுழைந்தான். 

தந்தையை கொன்ற தனயன்…

சிங்கபாகு தனது தந்தையான சிங்கத்தைக் கொல்வதை போன்ற கற்பனை ஓவியம்

மனைவி மக்களை பிரிந்த துயரால் வாடிய விலங்கரசன் நாட்டுக்குள் நுழைந்து தேடுதல் பணியை மேற்கொண்டது. எனினும் இளவரசி தன்னுடைய பிள்ளைகளுடன் தாய் வீடு மீண்டுவிட்டிருந்தாள். அரச பாரம்பரியங்களுக்கு இணங்கி அவள் தன் அத்தை மகனை மணம் கொண்டாள். வங்கத்தின் எல்லை புற மக்கள் சிங்கத்தினால் பெரிதும் துயருற்றதால் சிங்கத்தை வீழ்த்துபவர்களுக்கு உரிய சன்மானம் கிடைக்கும் என அரசாணை பிறந்தது. பரிசுத்தொகை ஏறிக்கொண்டே போன போதும் எவரும் முன்வரவில்லை. ஏற்கனவே தாயிடம் இரு முறை அனுமதி கோரி ஏமாற்றம் கண்டிருந்த சிங்கபாகு மூன்றாவது முறை நேரடியாக மன்னனையே அணுகி அனுமதி வேண்டினான். சிங்கத்தை வீழ்த்தினால் ஒட்டுமொத்த அரசையும் தந்துவிடுவதாக கூறினார் அரசர். ஆட்சியை பெறத் திண்ணம் கொண்ட சிங்கபாகு, தனது தந்தையான சிங்கத்தை தேடிச் சென்றான். தனது மகனைக் கண்ட சிங்கம் வாஞ்சையோடு அவனருகில் வர, சிங்கபாகு தனது தந்தையான சிங்கத்தைக் கொல்கிறான்.  தந்தையை கொன்ற தனயனாக நாடு திரும்பிய சிங்கபாகுவுக்கு ஆட்சி கிடைத்தது. 

நாட்டை விட்டுச் செல்லும் சிங்கபாகு 

சவாலை ஏற்றுக்கொண்டு காட்டுக்கு சென்ற சிங்கபாகு தந்தையை கொன்ற தனயனாக நாடு திரும்பினான். அரசர் தன் வார்த்தையின் படி சிங்கபாகுவை அரசனாக அறிவித்தார். ஆனால் சிங்கபாகு தனது சகோதரியான சிங்கசீவலியை மணம்புரிந்துக்கொண்டு அரசை தன் தாயின் கணவன் கைகளில் ஒப்புக்கொடுத்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறினான். தான் பிறந்த கானகத்தை அடைந்து அங்கு தனக்கென ஒரு நகரை அமைத்துக்கொண்டான். அதனை சுற்றிலும் கிராமங்களை அமைத்து சிங்கபுரம் என்ற அரசை நிறுவினான். தன்னுடைய தங்கை சிங்கசீவலியை அரசியாக்கி தன் நாட்டை ஆளத்தொடங்கினான். 

துஷ்டனாக மாறிய விஜயன் 

சிங்கபாகுவுக்கும், சிங்கசீவலிக்கும் 16 ஜோடி இரட்டையர்கள் பிறந்தனர். அந்தப் 16 இரட்டையர்களில் மூத்த இரட்டையர்தான் விஜயனும் அவன் இரட்டைச் சகோதரன் சுமித்தாவும் ஆவர். முடிக்குரிய இளவரசனான விஜயன் மிகவும் குழப்பம் விளைவிக்கும் முரட்டு இளைஞனாக இருந்தான். அவனும் அவனது தோழர்களும் மக்களுக்கு பெரும் தொல்லைகளை விளைவித்ததால், அவனைத் தண்டிக்க வேண்டும் என்று மக்கள், மன்னர் சிங்கபாகுவிடம் வேண்டினர்.

தந்தையால் நாடுகடத்தப்பட்டான் விஜயன் 

விஜயனும் அவனது 700 தோழர்களும் அரைவட்ட மொட்டையடிக்கப்பட்டு ஒரு கப்பலிலும், அவர்களது மனைவி மக்கள் இன்னொரு கப்பலிலுமாக ஏற்றி அனுப்பிவைக்கப்படுவதை சித்தரிக்கும்  கற்பனை ஓவியம்

விஜயனும் அவனது 700 தோழர்களும் அரைவட்ட மொட்டையடிக்கப்பட்டு ஒரு கப்பலிலும், அவர்களது மனைவி மக்கள் இன்னொரு கப்பலிலுமாக ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் நாகத்தீவு மற்றும் மகில தீபிகா ஆகிய இடங்களில் தரையிறங்கினர். அவர்களுக்கு கிடைத்த வரவேற்பு விஜயனுக்கு கிடைக்கவில்லை. இறங்கிய துறைகளில் எல்லாம் எதிர்ப்பை கண்ட விஜயன் தொடர்ந்து கப்பலில் பயணித்துக்கொண்டே போனான். அவன் கால்கள் இறுதியில் தனக்குரிய நிலத்தை கண்டுகொண்டது. ஈழம். 

தோழர்களைத் தேடித் செல்லும் விஜயன் 

இலங்கையின் வடமேற்கு கரையில் இறங்கிய விஜயனும் அவன் தோழர்களும் சூனியமான கடற்கரையை மட்டும் கண்டனர். சிறிது நேரத்தில் மரமொன்றின் அடியில் அமர்ந்திருந்த பிராமணரை கண்டு அவரை அணுகினார்கள். ‘மனித சஞ்சாரமற்ற இந்த தீவில் எந்த ஆபத்தும் உங்களை நெருங்காது இருக்கட்டும்’ என்று ஆசிகூறி அந்த பிராமணர் தன்பாத்திரத்தில் இருந்து புனித நீரை தெளித்து, கங்கணங்களை கட்டி ஆசிர்வாதம் அளித்து மறைந்துவிட்டார். கடற்கரையில் உலாவிய விஜயனின் தோழர்களில் ஒருவன் நாயொன்றை கண்டான். நாய்கள் நடமாடுவது அருகே மனித குடியேற்றங்கள் இருப்பதற்கான அடையாளம் என எண்ணிக்கொண்டு அதை பின்தொடர்ந்து சென்றான் அவன். நீண்ட நேரமாகியும் அவன் திரும்பாததால் அவனை தேடி இன்னுமொருவனும் சென்றான். இவ்வாறே விஜயனின் தோழர்கள் அனைவரும் ஒருவனை தேடி மற்றொருவனாக சென்றார்களே தவிர எவரும் திரும்பவில்லை. பொறுமை இழந்த விஜயன் தானே தன் தோழர்களை தேடிச் சென்றான். 

இளவரசே! என்று விழித்தாள் ஒருத்தி – யாரவள் ?

மரத்தடியில் பெண்ணொருத்தி நூல்நூற்றுக்கொண்டு இருந்ததை போன்ற கற்பனை ஓவியம்  

வழித்தடத்தில் தொடர்ந்து சென்ற விஜயன் அழகிய குளம் ஒன்றை கண்டான். தாகத்தை போக்கிக்கொள்ள நீரை எடுத்து பருகினான். குளக்கரை வரை தொடர்ந்த பாதச்சுவடுகள் அதன் பின்னர் காணப்படவில்லை. குளத்தருகே இருந்த மரத்தடியில் பெண்ணொருத்தி நூல்நூற்றுக்கொண்டு இருந்ததை கண்டு, அவள்மேல் ஐயமுற்று அவளை அணுகி தம்தோழர்கள் குறித்து வினவினான். எனினும் அவள் அதுகுறித்து எதுவும் அறியாதது போல் காட்டிக்கொண்டதுடன் விஜயனை ‘இளவரசரே ‘ என விளித்தாள். தன்னுடைய உயர்ந்த நிலையை இயல்பாகவே இவள் அறிந்திருப்பதை கண்ட விஜயன் தன்னுடைய வாளை அவள் கழுத்தில் அழுத்தி மறுகையால் அவள் தலைமுடியை பற்றி ‘அடிமையே! என்னுடைய ஆட்கள் எங்கே’ என கோபத்துடன் வினவினான். அச்சமுற்ற அந்த பெண் தன்னுடைய உயிருக்கு மாற்றாக ஒரு அரசை அளிப்பதாக உறுதியளித்தாள். அவளை தன்னுடைய பிடியில் இருந்து விடுவித்த விஜயன் தன்னுடைய ஆட்களை மீட்டுக்கொண்டுவரம்படி கூறினான். பிராமணர் கட்டிய கங்கணத்தின் சக்தியால் கொல்லப்பட முடியாது, தன்னால் மறைத்துவைக்கப்பட்ட விஜயனின் தோழர்களை மீண்டும் வெளிக்கொண்டுவந்தாள் அந்த பெண். அவள் பெயர் குவேனி என்றும், அவள் ஒரு யட்சினி என்றும் விஜயனுக்கு அறிமுகம் செய்துகொண்டாள். 

அழகியாய் மாறினால் அரக்கி 

குவேனி அழகியாக மாறியதும் உணவு சமைத்து பரிமாறியதும் போன்ற கற்பனை ஓவியங்கள்

உடைந்து கரையொதுங்கிய கப்பல்களில் இருந்து பெற்ற அரிசி மற்றும் தானியங்களில் இருந்து உணவு சமைத்து அனைவருக்கும் பரிமாறினாள். அன்று இரவே குவேனி தன்னை அழகிய இளம்பெண் போல மாற்றிக்கொண்டு விஜயனுடன் சேர்ந்தாள். இரவின் நடுவில் தொலைவில் இருந்து பாட்டும் இசையும் கேட்டு விழித்துக்கொண்ட விஜயன், அதுகுறித்து குவேனியிடம் வினவினான். ‘இந்த தீவில் வாழும் யட்சர்களின் தலைவனுடைய மகளுக்கு இன்று திருமணம். அதனால் யட்சர்கள் அனைவரும் சிரிசவத்து என்ற யட்ச தலைநகரில் கூடியுள்ளனர். ஏழேழு நாட்களுக்கு திருமண விழா தொடரும். மனிதர்கள் இந்த தீவில் வாழ்வதற்கு நான் உதவினேன் என அறிந்தால் யட்சர்கள் என்னை கொன்று விடுவார்கள். ஆனால் நாம் அதற்கு முன்பு அவர்களை தாக்கவேண்டும். இதுபோல ஒரு ஒன்றுகூடல் இனி நடக்க வாய்ப்பில்லை. எனவே இதில் யட்சர்களை கொன்றுவிட்டால் இந்த நாடு உங்களுக்கே!’ என்று விஜயனிடம் கூறினாள் குவேனி. குவேனியின் மந்திரசக்தியை கொண்டு ஆயுதங்களை வலுப்படுத்திக்கொண்ட விஜயனுடைய ஆட்கள், சிரிசவத்து நகரத்தின் மேல் திடீர் தாக்குதலை நடத்தி முடிந்தவரையில் அனைவரையும் கொன்று குவித்தனர். எஞ்சிய யட்சர்கள் உயிரை காத்துக்கொள்ள தப்பியோடினர். வெற்றிகரமாக தாக்குதலை முடித்த விஜயன் இயக்க அரசனின் ஆடையை எடுத்து அணிந்துகொண்டான். அவனுடைய ஆட்கள் மற்ற இயக்கர்களின் ஆடையை அணிந்துகொண்டனர். 

கையில் ஒட்டிய சிவந்த மண் – தம்பபன்னி

முதன் முதலில் விஜயன் கரையிறங்கிய இடம்

இலங்கையின் கரையில் முதன்முதலில் தரையிறங்கிய விஜயனும் அவன் ஆட்களும் மணல் மீது கையூன்றி அமர்ந்த போது மணலின் சிவப்பு நிறம் அவர்களின் உள்ளங்கையில் ஒட்டிக்கொண்டது. தாமிரநிறமான கைகளை பார்த்த விஜயன் அந்த தளத்தை தாமிரபரணி(தம்பபன்னி) என்று பெயரிட்டான். சிரிசவத்து நகரில் யட்சர்களை படுகொலை செய்த பின்பு தன்னுடைய தோழர்களுடன் தம்பபண்ணி திரும்பிய விஜயன் குவேனியுடன் வாழத்தொடங்கினான். சிங்கப்பாகுவின் வழியில் தோன்றியதால் சிங்களா என்றே விஜயனும் அவனுடைய ஆட்களும் அறியப்பட்டனர். காலம் செல்ல செல்ல விஜயனின் ஆட்கள் தங்களுக்கென குடியேற்றங்களை அமைத்துக்கொண்டனர். கதம்ப நதிக்கரையில் அனுராதா என்றவன் அனுராதகமத்தை நிறுவினான். குரு உபதிஸ்ஸ உபதிஸ்ஸகம என்ற கிராமத்தை அமைத்துக்கொண்டனர். இவ்வாறே உருவேலகம, விஜிதகம, உஜ்ஜைனி ஆகிய சிறு நகரங்கள் தோன்றியது. நாட்டில் புதுக்குடியேற்றங்களை நிறுவிய அமைச்சர்கள் விஜயனை மன்னராக முடிசூட்டும்படி வேண்டிக்கொண்டனர். 

முடிசூட தயாராகிய விஜயன் 

ஆரிய மரபின்படி அரசகுலத்து பெண்ணை மணம்கொண்ட பின்னரே அரியணை ஏற இயலும். அதன் பிரகாரம் விஜயனுக்கும், விஜயனின் அமைச்சர்களுக்குமான மணப்பெண்களை பெற வேண்டி தென்தமிழ் நாட்டின் தலைநகரான மதுரைக்கு தூதுக்குழு ஒன்று புறப்பட்டது. விமர்சையான வரவேற்பை பெற்ற தூதுக்குழு பாண்டிய அரசனிடம் விஜயனுக்கான மணமகளை வேண்டினர். திருமண தொடர்புக்கு சம்மதம் தெரிவித்த மன்னர் தன் மகள் விஜயாவையும், அமைச்சர்ப்பெருமக்களின் பெண்களையும், இளவரசியுடன் இலங்கை செல்வதற்கு சம்மதம் கூறிய ஏனைய பெண்களையும், யானைகள், குதிரைகள், வாகனங்கள், பலவகை தொழிற்பிரிவை சேர்ந்த மக்கள் என பெரும் சீர்வரிசைகளையும் அனுப்பிவைத்தார். இவர்கள் ஈழத்தில் வந்திறங்கிய இடம் மாதித்த(மகாதிட்ட) எனப்பட்டது. 

உயிரை இழந்தாள் குவேனி  

குவேனி இருந்த இடமாக பாதுகாக்கப்படும் இடம்

விஜயனுக்கு குவேனியின் மூலம் ஜீவஹத்த, திகல்ல என ஒரு மகனும் மகளும் பிறந்திருந்தனர். பாண்டிய இளவரசியின் வருகையை தொடர்ந்து விஜயன், குவேனி தன்னுடன் இருப்பதை விரும்பவில்லை. யட்சர்களுடனான உறவு குடிகளை பாதிக்கும் என கருதிய விஜயன் தன்னுடைய பிள்ளைகளை மட்டும் அரண்மனையில் விட்டுவிட்டு குவேனியை வெளியேற கூறினான். பலமுறை தன்னுடைய நிலையை விளக்கியும் அதனை விஜயன் புரிந்துகொள்ளவில்லை என்பதால் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தம்பபண்ணியில் இருந்து வெளியேறினாள் குவேனி. எனினும் அவள் யட்சர்களுக்கு செய்த துரோகம் மனதில் ஒரு பயத்தை உருவாக்கிக்கொண்டு இருந்தது. தம்பபண்ணியில் இருந்து வெளியேறிய குவேனி யட்சர்களின் நகரான லங்காபுரத்தை அடைந்தாள். பிள்ளைகளை நகரெல்லையில் விட்டுவிட்டு தான் மட்டும் உள்ளே சென்றாள். அவளை கண்டதும் ஆத்திரமுற்ற யட்சர்கள் அவளை ஒற்றறிய வந்தவள் என சாடி கலவரத்தை உண்டாக்கினார்கள். அதில் தன்னுடைய சொந்த மக்களின் கைகளாலேயே வதைக்கப்பட்டு உயிரிழந்தாள் அவள். 

குவேனியின் சாபமா?

மாத்தறையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியம் கோவிலில் இளவரசர் விஜய மற்றும்
அரக்கி குவேனி  ஆகியோரின் சிலைகளுக்கு வழிபாடு நடத்தும் காட்சி

கலவரத்தை காண சகியாமல் வெளியே வந்த குவேனியின் மாமன் ஜீவஹத்த, திகல்ல இருவரையும் பார்த்து யாரென வினவினார். குவேனியின் குழந்தைகள் அவர்களென அறிந்ததும் அங்கிருந்து தப்புமாறு அறிவுறுத்தினார். தாயை இழந்த பிள்ளைகள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள மலைநாட்டுக்கு தப்பிச்சென்றனர். அவர்களின் வழியே உண்டாகியவர்களே இலங்கையின் வேடர் இனத்தவர்கள். பாண்டிய மன்னரின் குமாரிக்கும் ஏனைய பெண்களுக்கும் தம்பபண்ணியில் விமர்சையான வரவேற்பு கிடைத்தது. முறைப்படி விஜயனுக்கும் ஏனையவர்களுக்கும் திருமணம் முடிந்த பிறகு விஜயன் இலங்கை தீவின் முதலாவது ஆரியமன்னனாக முடிசூடிக்கொண்டான். பழைய தீயவழிகளை எல்லாம் தவிர்த்து மக்களுக்கு உகந்த மன்னனாக ஆட்சிபுரிந்தான் என மகாவம்சம் தெரிவிக்கிறது. ஆனால் விஜயனுக்கு பாண்டிய பெண்ணின் மூலம் குழந்தைகள் எதுவும் உருவாகவில்லை. குவேனிக்கும் அவள் குழந்தைகளுக்கும் விஜயன் வழங்கிய நீதியின் சன்மானம் போலும். 

முகப்பு பட உதவி : wikipedia.org

Related Articles