கிரேக்க கடவுள் ஹெர்குலஸின் சாகசங்கள்

இந்த பரந்த பூமி பந்தில் பூத்த ஆதிமனிதர்கள் அனைவரின் வாழ்க்கையும் இயற்கையை சார்ந்தே இருந்தது. இயற்கையை அனுபவித்த அதே வேளையில் அதன் சீற்றங்களை கண்டு மிரட்சி கொண்டான். இயற்கையை கடவுளாக வழிபடத் தொடங்கினான். பஞ்ச பூதங்களான நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி ஆகியவைகளுக்கான கடவுள்களை அவன் கற்பனையில் உருவாக்கி கடவுளுக்கு விலங்குகளை பலி கொடுத்து படையல் வைத்தான்.  இதில் கிரேக்கர்கள் ஒன்றும் விதிவிலக்கு இல்லை.

கிரேக்க நாகரீகம் மிக பழமையானது. ஆதி கிரேக்கர்களுக்கு இயற்கை வழிபாடும் மத சடங்குகளும் உண்டு. பழங்கால கிரேக்கர்கள் பல கடவுள்களையும், பெண் தெய்வங்களையும் வழிபட்டு வந்தனர். கடவுள்களுக்கான வழிபாட்டு இடங்களை பேன்தீயன் என அழைத்தனர். விலங்குகளை பலியிடுதல் மூலம் இரத்தத்தால் மட்டுமே கடவுளுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதில் அவர்களுக்கு ஒரு ஆழமான நம்பிக்கை இருந்துள்ளது. அவர்களின் கடவுள்கள் அனைத்துமே ஒன்றுக்கொன்று உறவாக ஒரே குடும்பமாக பாவித்து அதற்கான தொன்மங்கள் வம்சாவளியினரால் கூறப்பட்டு வந்துள்ளது. கிரேக்கத்தின் வடக்கு பக்கத்தில் உள்ள ஒலிம்பஸ் மலைப்பகுதியில் இருந்து கிரேக்க கடவுள்கள் வந்ததாக ஒரு ஐதீகம். இவர்களின் கடவுள்கள் தான் ரோமானியர்களுக்கும் கடவுள். கிரேக்க கடவுள்களுக்கு ரோமானிய பெயர்களை வைத்தே அழைத்தனர். கிரேக்க தொன்மங்களில் ஹெர்குலிஸ் கதாபாத்திரம் உலகப்புகழ் பெற்றது.

யார் இந்த ஹெர்குலிஸ் ?

ஹெர்குலிஸ் என்றதுமே நம் நினைவிற்கு வருவது சைக்கிள்கள். இங்கிலாந்து நாட்டில் தொடங்கிய நிறுவனத்தின் இந்திய தயாரிப்புகள் இன்றும் நம் தெருக்களில் சாகசம் செய்வதை காண முடியும். நம் கதையும் சாகசங்களை பற்றி தான்.

புராண கதைகள் மற்றும் நாடோடி கதைகளுக்கும், அதன் கதாபாத்திரங்களுக்கும் பொதுவாகவே சான்றுகள் உண்டா என்பது கேள்விக்குறியாவது வாடிக்கையே. ஹெர்குலிஸ் கதைகள் பல கோணங்களில் பல பதிப்புகளில் சொல்லப்பட்டாலும் அதன் அடிநாதம் பெரும்பாலும் நாம் காணும் கதையை ஒட்டியே இருக்கும்.

வானவியல் சாஸ்திரப்படி கிரேக்க கடவுள் ஜுபிட்டரின் ரோமானிய பெயர் ஜீயஸ். கடவுள்களின் தலைவர், அனைத்து சக்திகளையும் பெற்றவர் ஜீயஸ். அவரின் மனைவி ஹெரா. கடவுள்களின் தலைவியாக போற்றப்படுபவர். அமைதியான அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. ஜீயஸ் கிரேக்க அழகியான அல்க்மேனா மேல் காதல் கொள்கிறார். அல்க்மேனாவின் கணவர் வெளியில் சென்றிருக்கும் வேளையில் ஜீயஸ் அவளை கற்பமாக்கி விடுகிறார். இது ஹெராவிற்கு மிகுந்த சினத்தை உண்டாக்குகிறது. அந்த குழந்தை பிறப்பதை தடுக்க சில முயற்சிகள் செய்கிறார் ஹெரா. ஆனால் பலனில்லை. அல்க்மேனாவிற்கு ஆண் குழந்தை பிறந்து ஹெராகில்ஸ் என்று பெயர் சூட்டப்படுகிறது. இந்த பெயர் ரோமானியர்களிடம் மருவி ஹெர்குலிஸ் ஆனது. ஹெராகில்ஸ் என்றால் “ஹெராவிற்கு அன்பளிப்பு” என்று பொருள் படுகிறது. ஹெராவின் சினம் தணியவில்லை. குழந்தையை கொன்று விட எண்ணி இரு பாம்புகளை குழந்தையின் அருகில் வீசுகிறாள். பலசாலி குழந்தையான ஹெர்குலிஸ் அந்த பாம்புகளை தன் கைகளில் அவற்றை பிடித்து தரையில் அடித்து விளையாட, பாம்புகள் இறந்தது. வருடங்கள் உருண்டோடியது. இந்த தவறான வழியில் பிறந்த குழந்தையின் வாழ்க்கையை சூனியமாக்குவது மூலம் ஜீயஸிற்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஹெராவை விட்டு நீங்கவில்லை. தருணத்திற்காக காத்திருந்தாள்.

Hercules slaying the Lernaean Hydra (Pic: alexanderhamilton)

அப்பல்லோ கடவுள்

இதற்கிடையில் ஹெர்குலிஸ் வாலிப வயதை அடைந்து சிறந்த வீரனாக உருவானான். திருமண வயதை எட்டியவுடன் மேகரா என்ற பெண்ணை மணக்கிறான். இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த மன வாழ்கையில் சூறாவளி வீசுகிறது. ஹெரா தனது மந்திர சக்தியால் சிறிது காலம் ஹெர்குலிஸ் மதி பிரள செய்கிறாள். தன்னிலை மறந்த ஹெர்குலிஸ் தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விடுகிறான். மீண்டும் சுய நினைவிற்கு திரும்பிய பொழுது நடந்த கொடூரத்தை எண்ணி வருந்தி அப்பல்லோ என்ற கடவுளிடம் இதற்கான விமோஷனத்தை கேட்கிறான். யாராலும் செய்ய முடியாத சில கடினமான வேலைகளை நிறைவேற்றவது மூலம் இந்த பாவங்கள் நீக்கப்படும் என்று கூறி உனக்கான கட்டளைகளுக்கு நீ யுரெஸ்தீசியஸ் மன்னனின் அரண்மனைக்கு செல் என்று கூறி மறைந்து விடுகிறார். யுரெஸ்தீசியஸ் சிறந்த நீதியரசராக ஆட்சி நடத்துபவர். யுரெஸ்தீசியஸ் கட்டளைகளை பிறப்பிக்க அதை நிறைவேற்ற கிளம்பினான் ஹெர்குலிஸ். சாகசப்பயணம் தொடங்கியது.

Apollo (Pic: eutouring)

கட்டளைகள்

முதல் கட்டளையாக நேமியா என்ற பகுதிக்கு சென்று அங்குள்ள சிங்கத்தை கொன்று அதன் தோலை எடுத்து வர சொல்கிறார். அந்த சிங்கம் ஆயுதங்களால் கொள்ள முடியாது. நேமியாவிற்கு சென்ற ஹெர்குலிஸ் தன்னிடம் உள்ள அம்புகள் மற்றும் ஆயுதங்களை சிங்கத்தை நோக்கி எய்கிறான். அது எந்த பாதிப்பும் இன்றி அனாயசமாக அமர்ந்திருக்கிறது. நேராக அதன் குகைக்குள் சென்று அதன் கழுத்து பகுதியை திருப்பி அதன் வாயை பிளக்கிறான். சிங்கத்தின் உயிர் பிரிகிறது. அதன் தோலை யுரெஸ்தீசியஸிடம் அளித்து விட்டு அதன் தலைப்பகுதியை தலைக்கவசமாக அணிந்து கொள்கிறான். பெரும்பாலான ஹெர்குலிஸ் படங்கள் சிங்கத்தலையுடனே இருக்கும்.

இரண்டாவது கட்டளையாக லேர்ணா நதியில் இருக்கும் ஒன்பது தலை கொண்ட பாம்பை கொல்ல வேண்டும் என்பதாகும். இதை நிறைவேற்ற தன்னுடைய உறவினரான லோலாசை உடன் அழைத்து செல்கிறான் ஹெர்குலிஸ். பெரும்பாலான ஹெர்குலிஸ் சாகசங்களில் லோலாஸ் இடம் பெறுவான். தீஞ்சுவாளைகளுடன் அம்புகளை நதியின் மேற்புறம் எய்தான் ஹெர்குலிஸ். ஒன்பது தலை பாம்பு மேலே சீறி பாய்ந்தது. அதன் ஒவ்வொரு தலையாக வெட்டினான். அங்கே இரண்டு தலைகள் உருவானது. லோலாசை உதவிக்கு அழைத்தான். இதன் இடையில் ஒரு பெரிய நண்டு ஒன்று ஹெர்குலிஸின் கால்களை கடித்து தடுமாற செய்து கொண்டிருந்தது. லோலாஸ் ஒவ்வொரு முறை தலையை வெட்டும் பொழுதும் அங்கு நெருப்பு வைத்தான். மீண்டும் தலை உருவாவது நின்றது. இறுதியில் பாம்பு கொல்லப்பட்டது.

ஹெரா யுரெஸ்தீசியஸ் உடன் இணைந்து ஹெர்குலிசை வீழ்த்த திட்டம் இடுவது போல் கதையில் காண்பிக்கப்படுகிறது. மூன்றாவது கட்டளை தயாராகிறது. அடர்ந்த காட்டிற்குள் வாழும் தங்கமான் ஒன்றை பிடித்து வர உத்தரவிட்டார். அது டயானா என்ற பெண்கடவுளின் விலங்கு. ஆகவே அதை பிடிக்கவோ, வேட்டையாடவோ யாராலும் முடியாது. அது தங்க கொம்புகளை கொண்டது. ஒரு வருடம் ஹெர்குலிஸ் அந்த மானை துரத்தியும் அதை பிடிக்க முடியவில்லை. ஒரு நாள் லேடன் நதிக்கரையை எதேச்சையாக மான் கடக்கும் பொழுது ஹெர்குலிஸின் அம்பால் மான் காயப்பட்டது. அதை தோளில் தூக்கி வரும்பொழுது அப்போலோ மற்றும் டயானா ஆகிய இரு கடவுளும் சினத்துடன் அங்கு தோன்ற மானை பிடித்து வர கட்டளை வந்ததாக ஹெர்குலிஸ் விளக்கம் அளிக்கிறான். அந்த மானை காயத்தில் இருந்து விடுவித்து அவனிடம் அளித்து விட்டு அவர்கள் மறைகிறார்கள்.

இது போல ஒவ்வொரு கட்டளையாக ஹெர்குலிஸ் கடந்து பதினோராவது கட்டளையை அடைகிறான். இது மற்றவைகளை மிக கடினமான கட்டளை. ஹெஸ்பேரைத்ஸ் தேவதைகள் தோட்டத்தில் இருந்து தங்க ஆப்பிள்களை திருடி வர வேண்டும். அந்த தேவதைகளின் தந்தை அட்லஸ். தனது தோள்களில் எப்பவும் அந்த வானத்தையும் நமது பூமியையும் சுமந்து நிற்பவர். அந்த தோட்டம் நூறு தலையுடைய டிராகனால் (பறக்கும் நாகம்) பாதுகாக்கப்படுகிறது. அந்த தோட்டத்தை தேடி பல நாடுகளுக்கு செல்கிறான் ஹெர்குலிஸ். அங்கு ஏற்படும் சம்பவங்கள், சாகசங்கள் என்று கதை நீளுகிறது. இறுதியாக, அட்லஸ் இருக்கும் இடத்தை அடைந்து தோட்டம் இருக்கும் இடத்தை கேட்கிறான் ஹெர்குலிஸ். “சதா சர்வகாலமும் இந்த வானத்தையும் பூமியையும் சுமந்து என் தோள்கள் மிக வலிக்கிறது. நீ இனிமேல் இதை சுமப்பதாக இருந்தால் நான் சென்று உனக்கு அந்த ஆப்பிள்களை பறித்து தருகிறேன்” என்று அட்லஸ் கேட்டார். அதற்கு ஹெர்குலிஸ் சம்மதிக்க வானமும் பூமியும் உலக உருண்டை வடிவில் ஹெர்குலிஸ் வசம் வருகிறது. அட்லஸ் அந்த அப்பிள்களை பறித்து வந்தவுடன் “சிறிது நேரம் இதை வைத்து இருங்கள். யுரெஸ்தீசியஸ் வசம் அப்பிள்களை ஒப்படைத்துவிட்டு வந்து உலகத்தை வாங்கி கொள்கிறேன்” என்று சொல்லி திரும்பினான் ஹெர்குலிஸ். அட்லஸ் இறுதியில் ஏமாற்றப்படுகிறார். (கதையில் ஹீரோ அகப்பட்டு விட்டால் பின் சாகசம் செய்வது யார் ? )

இது போல் பன்னிரெண்டு கட்டளைகளையும் ஹெர்குலிஸ் நிறைவேற்ற மோஷனம் பெற்று, கடவுளாகவே மாறுகிறான் ஹெர்குலிஸ்.

Hercules Statue (Pic: nyclovesnyc)

சாகசக் கதைகள்

இந்த கதைகளை தவிர ஹெர்குலிஸின் சாகசக் கதைகள் எண்ணற்றவை கிரேக்க தொன்மங்களில் உண்டு. இறுதியாக, இந்தியாவிற்குள் மெகஸ்தனிஸ் என்ற அறிஞர் வந்து சென்றவுடன் தான் ஹெர்குலிஸ் கதைகள் அங்கு தோன்றியதாம். நமது கிருஷ்ணரின் சாகசங்களே அங்கு ஹெர்குலிஸ் கதைகளாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக செவி வழிச்செய்தி ஒன்று உண்டு. இந்து கடவுளுக்கு இருக்கும் ஆயுதம் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் கிரேக்க கடவுளுக்கும் உண்டு. அந்த ஆயுதங்களின் உருவம் கிரேக்க கலாச்சாரத்தை சார்ந்து இருந்துள்ளது.

Hercules God (Pic: sciencesource)

மனிதனை நெறிமுறைப்படுத்த, ஆழ்மன பயத்தை நீக்க போன்ற பல காரணங்களுக்கு இவ்வகை கதைகள் உளவியல் ரீதியாக தேவையான ஒன்றே. நாம் சிறு வயதில் கேட்டுள்ள ஒரு சில கதைகளில் “அரக்கனிடம் ராணி அகப்பற்று கொண்டாள். அந்த அரக்கனின் குகை ஏழு மலை, ஏழு கடல் தாண்டி செல்ல வேண்டும்” என்ற வரிகளின் அர்த்தம் நாம் தினசரி வாழ்கையில் ஏற்படும் தடைகளையும் சோதனைகளையும் மனம் தளர்வடையாமல் அவற்றை கடக்க வேண்டும் என்பதையே மறைமுகமாக உளவியல் ரீதியாக வலியுத்தி வந்துள்ளன. நாமும் கலாச்சாரம், மரபு வழி கதைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்வோம்.

Web Title: The Great Hercules Tamil Article

Featured Image Credit: swordsandals

Related Articles