முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளலும் பறம்புமலையும்

கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்த வேள்பாரி பறம்பு மலையை தலைமை இடமாகக்  கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர். இயற்கை வளம் நிறைந்த மலை பறம்பு மலை. வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டார். இவரதுக் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு. பாரி பறம்புநாடு என்ற முந்நூறு (300) ஊர்களைக் கொண்ட பகுதியை ஆட்சி செய்தவர். அவ்வளவு சிறிய பகுதிகளை ஆட்சி செய்த போதிலும் அவர் மூவேந்தர்களை விடப் பெரும் புகழ் பெறக் காரணம் அவரது கொடைத் தன்மையே. கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.  இவர் கடையேழு வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர்.

பறம்பு மக்கள் எள்ளளவும் சோம்பலின்றி உழைப்பவர்களாக இருந்தனர். தினை, வரகு, எள், கிழங்கு வகைகள் போன்றவற்றை விளைவித்து அவற்றுடன் மா, பலா, வாழை போன்ற கனிகளையும் கொண்டுசென்று மலையடிவார ஊர்களில் பண்டமாற்று செய்து வாழ்ந்து வந்தனர். பொதுவாகவே, மக்கட்பிறப்பை அடைந்தவர் எல்லோரும் நல்ல உடல்பலம் பெற்றிருக்க வேண்டுமென்பது பாரியின் எண்ணம். ஆகையால், அவன் நாட்டின் ஊர்கள்தோறும் சிலம்புக்கூடங்கள் ஏற்படுத்தியிருந்தான். வாலிபரைச் சிறந்த வித்தைகளைப் பயிலச்செய்தான். பாரியும் அவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும்பொருட்டு தேகபலம் கொண்ட மிகச்சிறந்த வீரனாகவே  இருந்தான். காரணமாக, அவனுடைய படை பலம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. பாரி படை வீரத்தில் மட்டுமின்றி, கொடை தீரத்திலும் சிறந்திருந்தான்.

(படம்: Yarl)

பாண்டிய நாட்டில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர் கபிலர் எனும் புலவர். இவர் சங்கத்தமிழ் இலக்கியப் பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் கலையழகுமிக்க கவிதைகளைப் பாடியவர். ‘பொய்யாநாவிற்கபிலர்’ என்று புகழப்படுபவர். இவர் பாரியின் மிக நெருங்கிய நண்பராவார். பாரியைப் பற்றி இறவாப் புகழுடைய பாடல்களைப் பாடியவர் கபிலர்.

வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச் சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழு கொம்பின்றித் தவித்த முல்லைக் கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச் செயலே காரணம் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தான் ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலை சிறந்தவராகப் போற்றப்படுகின்றார். இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். ஆளுடைய நம்பி என்று புகழ் பெற்ற சுந்தரர் – ‘திருத்தொண்டத் தொகை’ என்ற புகழ் பெற்ற பதிகத்தைப் பாடியவர். பாரியையே கொடைக்கு எல்லையாகச் சுட்டுவர். பாரியைப் பற்றிய பாடல்கள் புறநானூறு என்னும் சங்கத் தொகை நூலுள் பல உள்ளன.

பாரியின் புகழ் மூவேந்தர்களை விட அதிகம் பரவியதால் அவர்கள் பாரி மீது கோபம் கொண்டு ஒன்றாக சேர்ந்து வந்து படை எடுத்து பறம்பு மலையை முற்றுகை இட்டார்கள், பல காலம் முற்றுகை இட்டும் அவர்களுக்கு வெற்றிக் கிடைக்கவில்லை. முற்றுகை இட்டக் காலத்தில் உணவுத் தேவையை சமாளிக்க கபிலர் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு பயிற்சி அளித்து அவற்றை அனுப்பி வயல்களிலிருந்து நெற் கதிர்களை எடுத்து வர செய்து மக்களுக்கு உணவளிக்க செய்ததாக ஒரு கதை உண்டு. அதே கபிலரே பின்னர் பாரி வீழ்ச்சிக்கும் காரணம் ஆனதாகவும் சொல்கிறார்கள். மன்னர்கள் முற்றுகை இட்டிருந்தாலும் புலவர்கள் வந்து செல்ல தடை இல்லாத நிலை. மூவேந்தர்கள் போர்க் களத்திலும் புலவர்களை மதித்தார்கள் போலும். அப்படி ஒரு முறை கோட்டைக்குள் இருந்து வெளியில் வந்த கபிலரிடமே அவர்கள் பல மாதங்களாக முற்றுகையிட்டு வெளியில் காத்திருந்து தோற்கடிக்க வழி தெரியாமல் பாரியின் நண்பரிடமே உதவிக் கேட்டார்கள். நாங்களும் பலக் காலமாக முற்றுகை இட்டு காத்திருக்கிறோம், எப்படி பாரிக் கோட்டைக்குள் இருந்துக் கொண்டு சமாளிக்கிறார் என்று கேட்டார்கள், மேலும் பாரியை எப்படி வெல்வது என்றும் வழிக்கேட்டார்கள்.

பாரி தன் அரசவையில் (படம்:tamil.boldsky)

கபிலர், பாரியின் பறம்பு மலையில் தேனடைகள் அதிகம் உள்ளது.  வேரில் பழுத்த பலா முதலிய பழங்களும்,கிழங்குகளும் உள்ளது, மேலும் மூங்கில் நெல் உள்ளது அவற்றைக் கொண்டே உணவுத் தேவையை சமாளித்துக் கொள்ள முடியும்.  நீங்கள் ஆண்டுக் கணக்கில் முற்றுகை இட்டாலும் வெல்ல முடியாது என்றார். அப்படி எனில் எப்படி தான் வெல்வது என்றுக் கேட்டதற்கு போரில் அவரை வெல்ல முடியாது. அதுவே நீங்கள் யாசகன் போல் போய் யாசகம் கேட்டால் இந்த நாட்டையே உமக்கு கொடுத்து விடுவான். உங்கள் துணைவியாருடன் பாணன் போல் சென்று பாடி ஆடி அவனை மகிழ்வித்தால் நிச்சயம் நீங்கள் என்ன கேட்டாலும் கொடுத்து விடுவான் நீங்கள் அவ்வாறு வேண்டுமானால் வேடம் அணிந்து செல்லுங்கள் என்று கூறினான் கபிலன். மேலும் சீக்கிரம் போய் கேட்டால் நல்லது பாரி ஏற்கனவே அவரது ஆட்சிக்குட்பட்ட 300 ஊர்களையும் தானம் அளித்து விட்டார்.  இப்போது இருப்பது இந்த மலையும்,  அரண்மனையும் மட்டுமே என்றார். ஆரம்பத்தில் மூவேந்தர்களும் தயங்கினாலும் வேறு வழி இல்லாமல் பாட்டுப் பாடும் பாணர்கள் போல மாறு வேடத்தில் பாரி அரண்மனைக்கு சென்று ஆடிப்பாடி அவரை மகிழ்வித்தார்கள்.

(படம்: coralsri)

மனம் மகிழ்ந்த பாரி என்ன வேண்டும் தயங்காமல் கேளுங்கள்,  என்னிடம் இருப்பது எதைக் கேட்டாலும் தருவேன் என்றார். மூவேந்தர்களும், உங்கள் நாடும்,  உங்கள் உயிரும் வேண்டும் என்று தயங்காமல் கேட்டார்கள். அவையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தானம் கேட்பதற்கும் எல்லை உண்டு நாட்டைக் கேட்டாலும் எப்படி உயிரைக் கேட்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். பாரிக்கும் வந்திருப்பது பாணர்கள் அல்ல மூவேந்தர்கள் என்பது தெரிந்து விட்டது எனினும்  சொன்ன சொல்லை மீறக் கூடாது என்று வாளை எடுத்து வைத்து விட்டு அவர்கள் முன் நின்று உயிரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அளித்துவிட்டார். இப்படி ஒருவன் உயிரையும் தானம் அளிக்க முன் வருகிறானே எனப் பாராட்டாமல் அவர்கள் நோக்கத்தில் உறுதியாக இருந்த மூவேந்தர்கள் தங்கள் வாள்களை பாரி மீது பாய்ச்சி அவர் உயிரை மாய்த்தார்கள். பாரி இறக்கும் தருவாயில், அவரது மகள்கள் அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் கபிலரிடம் ஒப்படைத்து ஒரு தந்தையாக என்னால் இவர்களுக்கு மணம் முடித்து வைக்கும் கடமையை நிறைவேற்ற முடியவில்லை,  நீங்கள் தந்தையாக நின்று அவர்களுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டார். இல்லை எனாது, கேட்டவர்களுக்கு கொடுக்கும் கொடை உள்ளம் கொண்ட பாரி தன் உயிரையும் அளித்து இரவாப்புகழ் பெற்றார்.

தன்னால் தான் பாரியின் உயிர்ப்போயிற்று என்று வருந்தி  இனி உயிரோடு இருக்கக் கூடாது என்று கபிலர் நினைத்தார் எனினும்  பாரிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முயன்றார். மூவேந்தர்கள் மீது இருந்த பயத்தால் எந்த மன்னர்களும் பாரி மகள்களை மணம் முடிக்க முன் வரவில்லை. மூவேந்தர்களைக் கண்டு பயப்படாத மற்றொரு கடை ஏழு வள்ளல் மலையமான் திருமுடிக்காரி என்பவர் தானாக முன்வந்து அவ்விரு பெண்களில் ஒருத்தியை மணம் புரிந்தார். மற்றப் பெண்ணுக்கு மணம் முடித்து வைக்க இயலாமல் மனம் உடைந்த கபிலர்,  அப்பெண்ணை சில அந்தணர்கள் வசம் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும் படி ஒப்படைத்து விட்டு காட்டுக்கு சென்று பட்டினி இருந்து தாமே உயிரைப் போக்கிக் கொண்டார்.

(படம்: yarl)

காரி  பாரியின் மகளை மணந்துக் கொண்டதனை அறிந்து கோபம் கொண்ட மூவேந்தர்கள் காரியின் மீதும் படையெடுத்து வந்து, போரில் காரியையும் கொன்று விட்டார்கள். காரி இறந்ததும் அவருடன் சேர்ந்து பாரியின் மகளும் உயிரை மாய்த்துக் கொண்டாள். ஆதரவின்றிருந்த பாரியின் இன்னொரு மகளுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணி ஔவையார் முயன்ற போது அதனைத் தடுக்க மூவேந்தர்கள் முயன்றனர். ஆனால் ஔவையார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கரபுரநாதர் கோவிலில் மணம் செய்து வைத்தார். அந்தக் கோவில் தற்போது சேலத்தில் உத்தம சோழபுரம் (சோழன் இருந்த இடம்) என்ற பகுதியில் உள்ளது. மேலும் அருகில் வீரபாண்டி (பாண்டியன் இருந்த இடம்), சேலம் (சேரநிலம்-சேரன் இருந்த இடம்) உள்ளது. பாரியை ஒளவைப் பெருமாட்டியும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

Web Title: The great Tamil king and philanthropist Pari

Featured Image Credit: kathakids

Related Articles