Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ரேடியோ சிலோன் – நினைவில் நின்ற காற்றலை

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சுட்டும் “ரேடியோ சிலோன்” என்ற வார்த்தையை இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அறிந்திருக்க முடியாதுதான். இப்போது அது S.L.B.C. என்றே சுருக்கமாக அழைக்கப்படுகின்றது. ஆனால் ஒரு காலத்தில் “ரேடியோ சிலோன்” என்ற வார்த்தை தென்னாசியாவிலேயே பிரபலமாக இருந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். தமிழ்நாட்டில் அதனை “சிலோன் ரேடியோ” என்று அழைத்தார்கள். 

“ரேடியோ சிலோன்” இன் தமிழ்ச்சேவையை காலையில் கேட்டே நாளொன்று புத்துணர்ச்சியுடன் ஆரம்பித்த காலங்கள் இருந்தன. அதன் செய்திகளைக் கேட்டுக் கொண்டே மாணவர்கள் பாடசாலைக்கு தயாரானார்கள். தமிழ்ச்சேவையின் “பொங்கும் பூம்புனல்” நிகழ்ச்சியில் இனிமையான உள்நாட்டுப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட நாட்கள் நினைவை விட்டு நீங்காதவை. காலை வேளையைப் போலவே, இரவுகளிலும் தனது நேயர்களை இனிமையான பாடல்கள் மூலம் தாலாட்டியது “ரேடியோ சிலோன்”.

ரேடியோ சிலோனின் கதை 1925 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே முளை விட்டுத் தொடங்குகின்றது. ஆரம்ப நிலையில்  “கொழும்பு ரேடியோ” என்று அழைக்கப்பட்டது. Edward Harper என்பவர் 1921 ஆம் ஆண்டில் தந்தித்திணைக்களத்தின் தலைமைப் பொறியியலாளராக இருந்தார்.  அவரே கொழும்பு ரேடியோவின் பரீட்சார்த்த ஒலிபரப்பை முன்னெடுத்தார். இந்தப் பரீட்சார்த்த ஒலிபரப்பு 1923 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. 

இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை என அழைக்கப்படும் Edward Harper

சிலோன் தந்தி அலுவலகத்திலிருந்து கிராமபோன் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட இசை,  அந்த அலுவலகப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட ட்ரான்ஸ்மீட்டர் மூலம் ஒலிபரப்பப்பட்டது. இந்த ட்ரான்ஸ்மீட்டரின் உருவாக்கத்தின் பின்னாலும் சுவாரசியமான கதை இருக்கின்றது. ஜேர்மனியின் நீர்மூழ்கிக்கப்பலொன்றை பிரித்தானியா கைப்பற்றிய போது, அதிலிருந்து பெறப்பட்ட ஒலிபரப்புக் கருவியை மேம்படுத்தியே, இந்த ட்ரான்ஸ்மீட்டர் சிலோன் தந்தி அலுவலகத்தில் உருவாக்கப்பட்டது.

“கொழும்பு ரேடியோ”  1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. உலகப் புகழ் பெற்றதும் இன்றும் பி.பி.சி. என்று அனைவராலும் அழைக்கப்படுவதுமான பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டு மூன்றே ஆண்டுகளில் “கொழும்பு ரேடியோ” தொடங்கப்பட்டது. அப்போது ஆசியாவிலேயே முதலாவது வானொலி நிலையமாக இது விளங்கியது. அதனை விட முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால் உலகிலேயே இரண்டாவது பழமையான வானொலியும் இதுதான். 

சிலோன் ரேடியோவின் பணியாளர்கள்
படஉதவி – wordpress.com

இரண்டாவது உலகப் போர்க்காலத்தில் அமெரிக்கக் கூட்டணிப் படைகள் வசம் இந்த ஒலிபரப்புப்பணிகள் சென்றதாக கூறப்படுகின்றது. Radio Seac என்ற பெயரில் அது வழங்கப்பட்டது. கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட,  David Jacobs மற்றும்  Desmond Carrington ஆகிய இரு அறிவிப்பாளர்கள் Radio Seac ல் பணியாற்றினார்கள்.  தென்கிழக்காசியாவில் அப்போதி இருந்த அமெரிக்கக் கூட்டணிப் படைகளுக்காகவே அந்த நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரின் முடிவின் பின்னர்   Desmond Carrington பிபிசியில் இணைந்து கொண்டார். போரின் பின்னர், Radio Seac ஆனது இலங்கையை ஆண்ட அப்போதைய ஆட்சியாளர்கள் வசம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. அப்போதே பிரசித்தி பெற்ற “ரேடியோ சிலோன்” என்ற பெயரை அந்த வானொலிச் சேவை பெற்றது.

ரேடியோ சிலோனில் அறிவிப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்ட போது
படஉதவி – burghersuk.com

1949 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்த இலங்கையில் “ரேடியோ சிலோன்” புது வடிவம் கொண்டது. அப்போதைய அரசாங்கம் வானொலி ஒலிபரப்புக்காக தனியான திணைக்களம் ஒன்றையும் அமைத்தது. 1966 ஆம் ஆண்டில், இலங்கையின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிலோன் ஒலிபரப்புக்கூட்டுத்தாபன சட்டத்தின்படி, 1967 ஆம் ஆண்டில் அந்தத் திணைக்களம் கூட்டுத்தாபனம் ஆக்கப்பட்டது.

கடந்த ஒரு நூற்றாண்டில் முழு உலகமுமே தொழில்நுட்ப மாற்றத்தை எதிர்கொண்டது. சடுதியாக ஏற்பட்ட பல தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்க முடியாத பல அமைப்புகளும் நிறுவனங்களும், களம் விட்டு அகன்றன. ஆனால், SLBC ஆக மாறிய ரேடியோ சிலோன் நவீன மாற்றங்களை உள்வாங்கத் தயங்கவில்லை. Medium Wave என்று சொல்லப்படுகின்ற அலைகளில் இயங்கிவந்த அந்த வானொலிச் சேவை, FM அலைவரிசைக்குத் தாவ வேண்டிய கட்டாயம் எண்பதுகளிலேயே உணரப்பட்டது. அதற்கமைய முன்னெடுக்கபட்ட செயற்பாடுகளுக்கு ஜப்பான் அரசாங்கத்தின் உதவியும் கிடைத்தது. 1993 ஆம் ஆண்டில் FM அலைவரிசைக்கு மாறிய  SLBC தனக்குள் புதிய உத்வேகத்தையும் ஆற்றலையும் உள்ளெடுத்துக் கொண்டது.

ஆரம்ப காலங்களில் எடுக்கப்பட்ட இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் புகைப்படம்
படஉதவி – flickr.com

1995 ஆம் ஆண்டில், நாடளாவிய FM அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் மூலம் SLBC இன் இயங்குதளம் விரிவாக்கப்பட்டது. இலங்கையின் அனைத்துக் கிராமங்களும் நகரங்களையும் அதனால் முழுமையாக எட்ட முடிந்தது. தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தனது வானொலிச் சேவையை முன்னெடுத்த SLBC, சிங்கள தேசிய சேவை, தமிழ்த் தேசிய சேவை உள்ளிட்ட பல சேவைகளை இன்றும் வழங்கி வருகின்றது. 90 களின் இறுதிப்பகுதியில் பல தனியார் வானொலிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் காரணமாக, SLBC தனது தனித்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத்தொடங்கியது. எனினும், இன்றும் தனது தனிப்பட்ட பாணியைத் தொடர்ந்தும் பேணி வரும் SLBCக்கென, தனிப்பட்ட நேயர் கூட்டமொன்று இந்தத் தலைமுறையிலும் இருப்பது குறிப்பிட வேண்டியதொரு விடயமாகும். 

இலங்கை வானொலி பற்றிய சில தகவல்கள் அடங்கிய காணொளி பின்வருமாறு :

Related Articles