ஓர் தனியார் மாளிகை ஜனாதிபதி வாசஸ்தலமான கதை!

16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்த்துக்கேய புனித பிரான்சிஸ் (St Francis’s Church) தேவாலயமொன்றினை இடித்துவிட்டு  18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மாளிகையின் வரலாறு டச்சுக் காலத்திலிருந்து தொடங்குகிறது  எனலாம். இலங்கையின் இறுதி  டச்சு ஆளுநரான யொஹான் வான் அன்கெல்பீக்கின் (Johan Gerard van Angelbeek-15.07.1794 – 16.02.1796) தனிப்பட்ட இல்லமாக இருந்த இந்த மாளிகை பிரிட்டிஷ் கவர்னர்களின் உத்தியோகபூர்வ “அரச இல்லமாக” மாறியதன்  பின்னணியில் தமிழ்த் திரைப்படங்களில் வருவதுபோன்றதொரு சதி இருந்ததென்றுகூட சொல்லலாம். ஏனெனில் டச்சுக்காரர்களின் சொத்துக்களை ஆங்கிலேயர்கள் பறிமுதல் செய்ய இயலாது  என்கிற ஒப்பந்தத்துடனேயே  அவர்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்திருந்தனர். அப்படியிருக்கும்போது இந்த மாளிகை ஆங்கிலேயர் வசமானது எப்படி என பார்ப்போம்.

இலங்கையின் முதலாவது தேசாதிபதியாக பிரடெரிக் நோர்த் 1798ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டபின்னர், பிரிட்டிஷ் அரசிடமிருந்து நிர்வாக செலவுகள் மறுக்கப்பட்டிருந்தது. இதனால் கடுமையாக மனம் வெதும்பிக்கொண்டிருந்த ஆளுநரின் மனதில் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்ததுபோலிருந்து, இங்கிலாந்தின் லெவன் பிரபுவின் ஒரே மகனான   “ஜார்ஜ் மெல்வின் லெஸ்லி” என்பவருக்கு கொடுக்கப்பட்ட  PAYMASTER (Pay Master) பதவி. இராணுவத்தினருக்கு சம்பளம் கொடுக்கும் பதவி என பொதுவாக குறிப்பிடப்பட்டாலும்  நிதியமைச்சர் பதவிக்கு நிகரான அரசாங்க களஞ்சிய முகாமையாளர் பதவி என்பதே உண்மை .

ஆளுநர் ப்ரெட்ரிக் நோர்த்  – புகைப்பட உதவி:Wikipedia

ஆளுநரான தான்  வாழ்வதற்கு ஒரு உருப்படியான வீடு கூட இல்லாத நிலையில் யோர்க் வீதியில் ஒரு மர வீட்டை வாடகைக்கு எடுத்து அல்லாடிக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு  இளம் இளைஞருக்கு கொடுக்கப்பட்ட பதவியும் ,  டச்சுக்காரர்களின் சொத்துக்களை ஆங்கிலேயர்கள் பறிமுதல் செய்ய முடியாது என்கிற ஒப்பந்தமும் சதாசர்வகாலமும் பிரடெரிக் நோத்தின் மனதை அரித்துக்கொண்டேயிருந்தது. (அப்போது கொழும்பு கோட்டையில் ஏராளமான ஆடம்பரமான டச்சுக்கட்டிடங்கள் இருந்தன என்றாலும் அவற்றை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆங்கிலேயரால் கைப்பற்றிக்கொள்ள இயலவில்லை) புண்பட்ட மனதை புகையை விட்டு ஆற்ற நினைத்தாரோ என்னவோ ஆளுநர் பிரடெரிக்,  அடிக்கடி பார்ட்டிகள் வைக்கத்தொடங்கினார் . அந்த பார்ட்டியில் தவறாமல் கலந்துகொண்ட ஒருவர்தான் நம் இளம் Pay master லெஸ்லி.

இப்படி,  பார்ட்டிக்கு வந்துபோன லெஸ்லியின் மனதை கொள்ளையடித்தார் டச்சு அழகி “லகோம்னா கெர்ட்ரூட்” எனும் பெண்.  இவர் ஒன்றும்  சாதாரண பெண்ணல்ல, முன்னாள் டச்சு ஆளுநர் வான் ஏஞ்சல்பெக்கின் பேத்தி! தன்னுடைய பிரபுத்துவ கெளரவத்தையெல்லாம் பரணில் மூட்டையாக கட்டித்தொங்கவிட்டுவிட்டு, தம் நாட்டிடம் தோற்றுப்போன ஒரு நாட்டுப்பெண்ணின் காதலுக்காக ஏங்கிநின்றார் லெஸ்லி. தன்னுடைய ஆளுநர் பவரைக்காட்ட நினைத்த ”பிரடெரிக்”  இந்த காதலுக்கு எதிர்ப்புத்தெரிவித்த நிலையில்,  லெஸ்லியின் காதலியும்  பிரிட்டிஷ் அரச குடும்பத்தைப் போன்றே  உயர்ந்த டச்சு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிற காரணத்தினால் இங்கிலாந்து மகாராணியின் சம்மதத்துடன் திருமணம் நடந்தேறியது.  புதுமணத் தம்பதிகளுக்கு அன்புப்பரிசாக  இலங்கையின் இறுதி டச்சு  ஆளுநரும் லெஸ்லியின் மனைவி லகோம்னா கெர்ட்ரூட்டின் தாத்தாவுமான வான் ஏஞ்சல்பெக்கின் தனிப்பட்ட இல்லமான   இந்த “அரச மாளிகை” (அதாவது  தற்போதைய ஜனாதிபதி மாளிகை) கொடுக்கப்பட்டது.

திருமணத்திற்குப்பின், புதுமணத் தம்பதிகள் மாளிகைக்கு வசிக்கச் சென்றனர்  எனினும், கவர்னர் ஃபிரடெரிக் நோர்த்க்கு எப்போதுமே  இந்த மாளிகையைப் பார்க்கும்போதெல்லாம் அது  எப்போது தனது அதிகாரப்பூர்வ இல்லமாக மாறும் என்கிற எண்ணம் மட்டுமே சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்தது. மாளிகையில்  புதுமணத் தம்பதிகள் உல்லாசமாக இருந்த விதம் கவர்னருக்குப் பிடிக்கவில்லை. இலங்கையின் தலைமைக் குடிமகனாக இருந்தும் தனது அதிகாரத்துவத்தைக் காட்ட இது போன்ற மாளிகையொன்று இல்லையே என்கிற அதிருப்தியில் புதுமணத் தம்பதிகளின் காதல் விவகாரம் ஆளுநரின் உள்ளத்தில் அமிலத்தைக் கக்கிக்கொண்டிருந்த சமயத்தில், பழிதீர்க்கும் ஓர் சந்தர்ப்பம் பிரெடரிக் நோத்திற்கு கிடைத்தது.

ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் வரையப்பட்ட பழைய அரச மாளிகையின் தோற்றத்தினை விளக்கும் ஓவியம் – புகைப்பட உதவி:Daily FT

 கிட்டத்தட்ட 10,000 பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணத்தின் மதிப்பை சரியாக ஆவணப்படுத்தாததால் லெஸ்லி கவர்னரால் திடீரென இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆளுநரிடம் கொண்டு வரப்பட்ட லெஸ்லி, காவலில்  வைக்கப்படுவதற்கு  முன் இந்தத்  தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டது. (இந்த சதியின் பின்னால் ஆளுநர் நோர்த்தின் பின்புலம் இருந்ததென்றே கூறப்படுகின்றது). இறுதியில், லெஸ்லிக்கு வேறு வழியின்றி திருமணத்தின்போது  தன் மனைவிவழிவந்த அன்புப்பரிசான  அந்த  மாளிகையை ஆளுநர்  ஊடாக அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினார்.

மாளிகை அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே,பிரடெரிக்   தனது பொருட்களையெல்லாம்  எடுத்துக்கொண்டு அந்த மாளிகையில் குடியேறியதுடன்  சட்டப்பூர்வமாக அதை ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லம் என்றும்     அறிவித்துக்கொண்டார்.  இறுதியில், லெஸ்லி தனது மனைவியையும் குழந்தையையும்  அழைத்துக்கொண்டு இங்கிலாந்துக்கே  சென்றுவிட்டார்.

காலிமுகத்திடல்/ஓவியர் கேப்டன் Deschamps  – புகைப்பட உதவி:Daily FT

இப்படித்தான் ஓர் தனியார் பங்களா  அரச மாளிகையானது ! டச்சுக்காரர்கள் விட்டுச் சென்ற பல  கட்டிடங்களை  ஆங்கிலேய  உயர் அதிகாரிகள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்திக் கொண்ட போதும் மிகவும் உயரிய தரத்தில் கொழும்பில் இருந்த அரண்மனையாக இது  இருந்ததால் பிரிட்டிஷ் ஆளுநர்களின் இல்லமாக  தொடர்ந்தும்  பயன்படுத்தப்பட்டது. அதாவது இலங்கையின் முதற் பிரஜையின் இல்லமாக இது தொடர்ந்தது. இலங்கையை ஆண்ட 29 ஆளுநர்கள் இதில் வசித்திருக்கிறார்கள்.1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பு கொண்டு வரப்பட்டு, டொமினியன் அந்தஸ்திலிருந்து இலங்கை மீண்டதன் மூலம் பிரித்தானிய முடியிடம் இருந்து நிரந்தரமாக விடுதலையானது.  யாப்பின் பிரகாரம்  ஆளுநர்  நிலை கிட்டத்தட்ட ஜனாதிபதி பதவியாக மாறியது. அன்றிலிருந்து இராணி மாளிகை ஜனாதிபதி மாளிகையாக மாறியது.

இலங்கை ஜனாதிபதிகளில் மைத்ரிபால சிறிசேனாவைத் தவிர மற்றைய அணைத்து ஜனாதிபதிகளுமே  தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக கருதி இங்கே தங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles