காணாமல் போன தமிழக கோயில்களின் சிலைகளின் பின்னணி

என்ன நடக்கிறது தமிழகத்தில்?

மணல் கொள்ளை ஒரு புறம், இயற்கை சார் வளம் கொள்ளைப் போகிறது மறுபுறம். கலை சார்ந்த திருட்டுகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. சமீபத்தில் விஸ்வரூபம் எடுத்திருப்பது இராஜ ராஜ சோழனின் வருகையும், தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் போலி சிலைகளும் தான்.

சிலைகளுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?

சிலைகள் யாவும் பண்டைய தமிழகத்தின் வரலாற்றினைப் பிரதிபலிக்கும் சாட்சியங்கள். களவு செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படும் பட்சத்தில், நம்முடைய வரலாற்று சான்றுகளும் தொலைந்து போகிறது. ஒரு தொல்லியல் ஆராய்ச்சி முடக்கப்படும் சமயத்தில் நாம் எதையெல்லாம் இழக்கின்றோமோ அவை அனைத்தையும் தான் சிலைகள் வழியாகவும் நாம் இழக்கின்றோம்.

யார் இந்த சிலைகளையெல்லாம் வாங்குகிறார்கள் என்றால், வெளிநாட்டினர் தான். நம் நாட்டின் மீது இருக்கும் மோகம், மற்றும் பல்வேறு பழங்கால கலைப் பொருட்களை சேமித்து வைப்பவர்களால் தான் சிலைகள் திருடப்படுகின்றன.

சிலைக்கடத்தல் தடுப்பு சட்ட அதிகாரி பொன். மாணிக்கவேல் செய்த சாதனைகள்

உளவுத்துறை டிஐஜியாக பதவி வகித்துக் கொண்டிருந்த பொன். மாணிக்கவேல் அவரை, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவிற்கு கடந்த 2017 ஆண்டு மாற்றினார்கள். அதுவரை தமிழகத்தில் கொள்ளை போன சிலைகள் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. இந்நிலையில் புதிய பிரிவில் பதவியேற்ற பொன். மாணிக்கவேல் திறம்பட செயல்பட்டு 25 லட்ச ரூபாய் மதிப்பிலான சிலைகளில் தொடங்கி, சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள இராஜ ராஜன் மற்றும் அவரின் துணைவியார் சிலைகளை மீட்டு தமிழகத்தில் சேர்த்துள்ளார்.

Ponmanickavel (Pic: thehindu)

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிற்கு தமிழக அரசு செய்து தரக் கூறிய வசதிகள் என்னென்ன?

விருதுநகர் மாவட்டம்,  அருப்புக் கோட்டையில் இருக்கும்  ஆலப்பட்டி என்ற கிராமத்தில்  ஆரோக்கியராஜ் என்பவரின் நிலத்தில் இருந்து சிலைகள் கண்டுபிடிக்கபட்டது. அதை அவர் முறைப்படி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து ஒப்படைத்திருக்கிறார். இந்த சிலைகளை வாங்கிய  காவல் துறை அதிகாரி காதர் பாஷா அந்த சிலைகளை கடத்தல்காரர்களுக்கு விற்றுவிட்டார். இதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன், இந்த விசாரணையை சிலைத் தடுப்புப் பிரிவில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி  தரவேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார்.

இதை போல் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் பகுதியில் இருக்கும்  பசுபதீஸ்வரர் கோவில் சிலைகள் களவு போனதைப் பற்றியும், கீழ்மணக்குடி விஸ்வநாதசாமி கோவிலில் 5 சிலைகள் மற்றும் இடும்பேஸ்வரர் கோவில் விநாயகர் சிலை திருடு போனதை தொடர்ந்து மயிலாடு துறை அறநிலையத் துறையிடம் வெங்கட்ராமன் என்பவர் புகார் அளித்திருக்கிறார் . ஆனால் அறநிலையத் துறையிடமிருந்து எந்தவொரு பதிலும் வராததைத் தொடர்ந்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்த வழக்கை கையாள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இவ்விரண்டு மனுக்களையும் விசாரித்த நீதிபதி ஆர். மகாதேவன் 21 வசதிகளை நிறைவேற்றக்கோரி மாநில அரசிற்கு உத்தரவிட்டார்.

Chennai High Court (Pic: wikipedia)

21 உத்தரவுகளில் முக்கியமானவை சில

சிலைக் கடத்தல் வழக்குகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலுவையில் இருந்ததால், ஒவ்வொரு இடத்தில் இருந்தும் இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. அதனால் வெவ்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த சிலைக் கடத்தல்கள் மற்றும் திருட்டு வழக்குகள் அனைத்தையும் கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றச் சொல்லி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்டிருக்கும் மாநில ஆளுமைக்குட்பட்ட அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோவில்கள், அதன் அர்ச்சகர்களின் விபரங்கள் ஆகியவற்றை இப்பிரிவினருக்கு சமர்பிக்க வேண்டும்.

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளின் விபரங்கள் அனைத்தையும் மத்திய வருவாய் துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

வெளிநாடுகளுக்குச் செல்லும்  பார்சல் ஆகியவற்றை பரிசோதிக்க மத்திய சுங்கத் துறையின் அனுமதியைப் பெற்றுத்தர வேண்டும்.

பெரிய பெரிய கோவில்களில் சிலைகளை பாதுகாத்து வைப்பதற்கு தனி அறை அமைத்து தரவேண்டும் மற்றும் அந்த அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் எடுக்கப்படும் வழக்கு தொடர்பான முக்கிய முடிவுகள் மற்றும் விசாரணைகள் என அனைத்தும் திருச்சியை தலைமையகமாகக் கொண்டு தான் செயல்பட வேண்டும்.

இராஜ ராஜ சோழனின் சிலை குஜராத்தில் இருந்து தமிழகம் வந்த சில நாட்களிலே பொன். மாணிக்கவேல் மற்றும் அவர் தலைமையின் கீழ் செயல்படும் 10 அதிகாரிகளையும் பணி மாற்றம் செய்து அறிவித்தது தமிழக அரசு. இதற்கிடையில் இந்த 21 உத்தரவுகளை நிறைவேற்றுவது தொடர்பாக மீண்டும் வழக்கு ஜூன் இறுதியில் விசாரணைக்கு வந்தது.

இதற்கு நேரில் ஆஜரான ஐஜி பொன். மாணிக்கவேல் தமிழக அரசின் மீது அதிருப்தி தெரிவித்திருந்தார்.

Idol (Pic: tamil.samayam)

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழக அரசுக்கு எச்சரிக்கை

ஜூன் 27 அன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் முன்னிலையில் ஆஜரான ஐஜி பொன்.மாணிக்கவேல் “சிலை கடத்தல் பிரிவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தனக்கு கீழ் செயல்படும் அதிகாரிகளை தன்னுடைய அனுமதியின்றி இடம் மாற்றம் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர். பொன்.மாணிக்கவேல் அவர்களையே, இரயில்வே துறைக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.

இதனைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி இதற்கு காரணமாக இருந்த டிஜிபி மற்றும் தலைமை செயலாளர் ஆகியோரை எச்சரித்துள்ளார். வருகின்ற ஜூலை 11க்குள் 21 உத்தரவுகள் தொடர்பான இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நீதிபதி. இல்லையென்றால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என்று கூறினார்.

பணிமாற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதி, “நீதிமன்றங்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும், இந்நிலை நீடித்தால் டிஜிபி நேரில் வந்து விளக்கம் கூற வேண்டும்” என்றும் எச்சரித்திருக்கிறார்.

Nataraja (Pic: dnaindia)

பணிமாற்றம் தொடர்பாக சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதம்

நீதிபதியின் விசாரணைக்குப் பின்பு சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. “நீண்ட நாட்களாக மாணிக்கவேல் ஒரே துறையில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த காரணத்தால் தான் அவரை வேறொரு இலக்காவிற்கு மாற்றினோம்” என்று கூறினார்.

மாணிக்கவேல் கேட்டுக்கொண்ட வசதிகளை ஏன் செய்துத் தரவில்லை என்று ஸ்டாலின் கேட்க, திமுக ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை விட அதிமுக ஆட்சியில் நிறைய சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார் முதல்வர் எடப்பாடி. 

“அவர்கள் கேட்ட வசதிகள் அனைத்தையும் நீங்கள் செய்திருந்தால், மாணிக்கவேல் ஏன் நீதிமன்றத்தில் அப்படி சொல்ல வேண்டும்? நீங்கள் இத்தனை திட்டங்களை செயல்படுத்தியிருந்தால் அதை அரசு தரப்பு வக்கில்காள் சொல்லியிருக்க வேண்டும் தானே ஏன் சொல்லவில்லை” என்றும் வினவினார் ஸ்டாலின்.

M K Stalin (Pic: indianexpress)

தமிழகத்தில் அறநிலையத் துறைக்கு கீழ் இருக்கும் கோவில்கள் மற்றும் அதன் சிலைகள் பற்றிய ஆய்வு

தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிலகள் உள்ளன. அவற்றில் கற்சிலைகள், ஐம்பொன் சிலைகள், விக்ரகங்கள், உலோகத்தால் செய்யப்பட்ட கடவுள் திருவுருவங்கள் மட்டும் மூன்று லட்சம் வரை இருக்கிறது.

வெகு ஆண்டகளாகவே கோவில்களில் சிலை திருட்டு என்பது அறநிலையத் துறையினரின் உதவியுடனும், காவல் துறையின் உதவியுடன் நடந்து வருகிறது என்று மனுக்கள் உயர் நீதின்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வண்ணம் இருக்கிறது.

சிலைக்கடத்தல் மற்றும் திருட்டினை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகளும், சிலைத் தடுப்பு பிரிவினரும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக சிலைகளை பாதுகாத்து வைக்கும் அறை மற்றும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணி மிகவும் தீவிரமடைந்து வருகிறது.

Tamil Nadu Temple (Pic: pudhumanam)

சிலைகள் மீட்பு நடவடிக்கைகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் சில

இந்திய கலைகள் பராமரிப்பும் ஆங்கிலேய அரசும்

1784ல் இந்திய மொழியியல் அறிஞரான  சர் வில்லியம் ஜோன்ஸ் தலைமையில், கொல்கத்தாவினை தலைமையிடமாகக் கொண்டு கழகம் ஒன்று செயல்பட்டது. அதன் முழு நேர வேலையும் மரபுச் சின்னங்களைப் பாதுகாத்தல், கலைப் பொருட்கள் மற்றும் புராதான நகரங்களை மீட்டெடுத்தல் தான். 1861ல் இந்திய தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது. 1878ல் இந்திய புதையல் சட்டத்தினைக் கொண்டு வந்தனர் ஆங்கிலேயர்கள். அதன்படி நிலத்தில் கண்டெடுக்கப்படும் சிலைகள் மற்றும் பொக்கிஷங்கள் 100 ஆண்டுக்கும் பழமையாக இருந்தால்  அது அரசிற்கு சொந்தம் என்று அறிவித்தது. 1904ல் பழங்கால நினைவுச் சின்னங்க்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டு தொன்மையான பொருட்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வது தடுத்து நிறுத்தப்பட்டது.

தி இந்தியா ப்ரைட் புரோஜக்ட்

தி இந்தியா ப்ரைட் புரோஜக்ட் நிறுவனத்தை நடத்தி வருபவர் பெயர் சென்னையைச் சேர்ந்த எஸ். விஜயக் குமார். சிங்கப்பூரில் இருக்கும் கப்பல் நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்படும் சிலைகளை பத்திரமாக மீட்டு இந்தியாவிற்கு திரும்ப அனுப்பி வைப்பதன் பெரும்பங்கு இவரையே சாரும். சிவபுரம் விநாயகர் சிலை மற்றும் சோமஸ் கந்தர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் நார்டன் சைமன் மியூசம் பற்றி இவர் தான் கண்டறிந்து கூறினார்.

சுபாஷ் சந்திர கபூர்

உலக அளவில் சிலைத் திருட்டுகள் மற்றும் கடத்தல்களுக்கு பெயர் போனவர் தான் இந்த சுபாஷ் சந்திர கபூர். இந்த கடத்தல் துறையில் 35 வருடங்களாக ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்தியாவில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைப் பொக்கிஷங்களை வெளிநாடுகளுக்கு கடத்தி உள்ளார். தமிழக காவல் துறை இண்டர்போல் உதவியுடன் இவரை ஜெர்மனியில் இருக்கும் ஃப்ராங்க்ஃபூருட் விமான நிலையத்தில் வைத்து கைது செய்திருக்கிறார்கள்.

Kapoor (Pic: thehindu)

பொன். மாணிக்கவேலினை பல்வேறு காரணங்களுக்காக உளவுத்துறையில் இருந்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிற்கு அதிகாரியாக மாற்றினார்கள். அது நாள் வரை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு என்பது மற்ற அரசு அலுவலகங்களைப் போல கடமைக்கு செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் வரவும், நிலைமை மாறிவிட்டது. 531 வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, அவரிடம் இதுவரை 19 வழக்குகள் மட்டுமே தரப்பட்டிருக்கின்றன. ஆனால் அதிலும் திறம்பட செயல்பட்டு தன்னை யாரென்று நிரூபித்து வருகிறார் பொன். மாணிக்கவேல்.

Web Title: The Lost Statues Of Tamil Nadu Temples

Featured Image Credit: dnaindia

Related Articles