Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

காதலின் சின்னமாக திகழும் MOUNT LAVINIA HOTEL

இலங்கையின் தலைநகரிற்கருகில் இந்து சமுத்திரத்தை முன்னோக்கியபடி அழகிய கடற்கரைச்சூழலில் அமைந்துள்ள Mount Lavinia Hotel அதிக உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஒரு இடமாகவும், திருமண நிகழ்வுகளை நடாத்துவதற்கு மிக பொருத்தமான ஒரு இடமாகவும் திகழ்கின்றது. சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட MOUNT LAVINIA HOTEL ஆனது ஆரம்பத்தில் ஆளுநரின் வாசஸ்தலமாக இருந்ததும், இவ் ஆடம்பர விடுதியின் பின்னனியில் சுவாரஸ்யமானதொரு காதல் கதை இருப்பதும் உங்களுக்கு தெரியுமா?

இலங்கையின்(Old British Ceylon) இரண்டாவது ஆளுநராக Sir Thomas Maitland 1805ம் ஆண்டு தன்னுடைய 46-வது வயதில் நியமிக்கப்பட்டார். பிரம்மச்சாரியான அவருக்கு “King Tom” என்ற புனைப்பெயரும் இ௫ந்தது. அவருடைய கட்டுமஸ்தான உடலும், பொறுப்பில் கண்டிப்பான தன்மையுமே அவருக்கு இந்த சிறப்பு பெயர் வர காரணமாக அமைந்தது.

ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குட்பட்ட நாடாக இலங்கை மாறியதன் பின்னர் நியமிக்கப்பட்ட இரண்டாவது பிரித்தானிய தேசாதிபதி சேர் தோமஸ் மெயிற்லண்ட் – புகைப்பட விபரம்:Wikipedia.com

அவரை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடனக்குழுவின் முன் வரிசையில் “Lovina Aponsuwa” என்ற 17வயது நடனப்பெண் இருந்தாள். அவள் போர்த்துக்கீச, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நாடோடிப்பெண்ணாகும். அவள் சிங்கள தாய்க்கும் போர்த்துகீச தந்தைக்கும் பிறந்தவள் என நம்பப்படுகிறது.அவளுடைய தந்தையே அந்த நடனக்குழுவின் தலைவராக இருந்தார்.

அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய அவளுடைய கருங்கூந்தலினதும், பழுப்புநிற கண்களினதும் அழகைக்கண்டு மயங்கிய ஆளுநர் அவள் மீது காதல்வயப்பட்டார்.அவர் வயதானவராக இருந்தபோதிலும் அழகான தோற்றமுடையவராக இருந்தார்.இதனால் அவளும் அவர் மீது காதல்கொண்டாள். அவளும் அவளது குழுவும் ஒவ்வொரு நாளும் ஆளுநரின் மாளிகையில் ஆளுநருக்கும், அவரது விருந்தினர்களுக்கும் முன்னிலையில் நடனமாடி அவர்களை மகிழ்வித்து வந்தனர்.

Lovina வின் பெயர் ஆளுநருக்கு உச்சரிப்பதற்கு கடினமாக இருந்த காரணத்தினால் அவளுடைய பெயரை “Lavinia” என்றே அவர் அழைத்தார்.அதேநேரத்தில் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருந்த வாசஸ்தலம் தனது தகுதிக்கும், இலங்கை முழுத்தீவிற்கும் தானே பொறுப்பு என்ற பதவிக்கும் ஏற்றதாக அமைந்திருக்கவில்லை என அவர் எண்ணினார். இதனால் தன்னுடைய ஆளுமையையும், அதிகாரத்தையும் பறைசாற்றக்கூடிய வகையிலான ஒரு வாசஸ்தலத்தை அமைக்க வேண்டுமென அவர் விரும்பினார். 

சேர் தோமஸ் மெயிற்லண்ட் மற்றும் அவரது காதலி  Lovina Aponsuwa – புகைப்பட விபரம்:  hetorpidturtle.blogspot.com

இதற்கு பொருத்தமான இடமொன்றை தேடி அலைந்த ஆளுநர், இறுதியில் கொழும்பின் புறநகரில், தலைநகரிற்கு நெருக்கமாக இந்து சமுத்திரத்தை முன்னோக்கியபடி அழகான அமைப்பையும், சிறந்த சுற்றுப்புற சூழலையும் கொண்டமைந்த ஒரு இடத்தை தெரிவுசெய்தார். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விடயம் யாதெனில் அவர் தெரிவு செய்திருந்த இடத்திற்கு அருகிலேயே அவருடைய காதலி Lovinaன் வீடும் அமைந்திருந்ததாகும். இதனால் அவருடைய காதலியான Lovina அந்த கடல் பகுதியில் குளிப்பதை கண்டதாலேயே அவ்விடத்தை அவர் தெரிவு செய்ததாக ஒரு கதையும் உண்டு.

ஆளுநர் தனக்கான வாசஸ்தலத்தை அமைக்கும் போது அதை அமைக்கும் கட்டிட வல்லுனரிடம் தன்னுடைய மாளிகையில் மதுபாட்டில்கள் வைக்கும் நிலவறைக்கும் (Wine cellar) Lovinaன் வீட்டினுள் நீர் அருந்தும் இடத்திற்கும் இடையில் நிலத்தடி சுரங்கமொன்றை அமைத்துத்தரும்படி வேண்டினார். அதன்படி அமைக்கப்பட்ட நிலத்தடி சுரங்கத்தின் ஊடாக இருவரும் ஒவ்வொரு நாளும் இரகசியமாக சந்தித்து வந்தனர். 

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலும், இலங்கையிலும் வாழ்கின்ற ஆங்கிலேயர்களின் ஒழுக்கமும், கண்டிப்பும் நிறைந்த சமுதாய கட்டமைப்பாக காணப்பட்டதால் ஆளுநர் Lovina உடனான தன்னுடைய காதலை இரகசியமாக வைத்திருப்பதற்கு விரும்பினார்.

அதேநேரத்தில் Lovinaஐ பொறுத்தவரை அவள் அன்றையகால இலங்கை சமூக கட்டமைப்பில் சிங்கள உயர் வர்க்கத்தினரால் தாழ்வாக கருதப்படும் Rodiya என்ற சமூகத்தை சேர்ந்தவளாக இருந்தாள். தாழ்ந்த சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணோடு தான் தொடர்பு வைத்திருப்பது இலங்கையிலும், இங்கிலாந்திலும் உள்ள ஆங்கிலேயரிடம் தனக்கு பெருத்த அவமானத்தை பெற்றுத்தரும் என ஆளுநர் பயந்தார். இதன் காரணமாகவே இரகசியமாக சந்திக்கும் வகையில் நிலத்தடி சுரங்கமொன்றை அமைத்தார்.ஆளுநர் Lovina மீதான காதலினால் Lovinaஐ திருமணம் செய்ய விரும்பிய படைவீரன் ஒருவனை சுட்டுக்கொன்றதாக கூறப்படுகின்றது. அதேபோல் Lovinaன் மேலாடை அணியாத வெற்று மேனியான நெஞ்சுப்பகுதியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்த மற்றொரு படைவீரனையும் சுட்டுக்கொன்றாராம். 

அன்றைய இலங்கையின் சமூக அமைப்பில் தாழ்ந்த சாதி பெண்கள் மேலாடை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.ஆளுநர் Thomas Maitland மூலமாகவே இவர்களுக்கு மேலாடை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக  கூறப்படுகின்றது.

புகைப்பட விபரம்:  www.journalistontherun.com

என்றாலும் நடந்த சம்பவங்கள் காரணமாக இருவருக்கும் இடையிலான இரகசிய காதல் ஆங்கிலேயர் மத்தியில் பிரபலமாகி இறுதியில் இவர்கள் பற்றிய விடயம் மன்னர் ஜோர்ஜ்ன் காதுகளையும் சென்றடைந்தது. ஆளுநர் Thomas Maitland மன்னரின் செல்வத்தினை நாடோடி பெண்ணான Lovinaக்காக வீணான முறையில் செலவு செய்வதாக ஆங்கிலேயர்கள் மன்னரிடம் முறைப்பாடளித்தனர்.

இதன் காரணமாகவும், பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் காலத்திற்கு காலம் மேற்கொள்ளப்படும் இடம்மாற்றத்தினாலும் (Routine Transfer), ஆளுநருக்கு உடல்நலக்குறைவு காணப்பட்டதாலும் 1811ஆம் ஆண்டு ஆறு வருட௩்கள் இல௩்கையில் கடமையாற்றிய பின் Malta தீவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் அங்கே வாழ்ந்து அங்கேயே பிரம்மச்சாரியாக மரணித்தார். 

அவர் இலங்கையை விட்டு செல்லும் போது தனது வாசஸ்தலத்திற்கு தனது அன்புக்குரிய காதலியின் நினைவாக “Mount Lavinia” என பெயரிடும்படி வேண்டினார்.எனவே அவரது வேண்டுகோளின்படி அம்மாளிகைக்கு பெயர்மாற்றப்பட்டது.அத்தோடு தனது வாசஸ்தலத்திற்கு அருகாமையில் இருந்த “அத்திடிய” என்ற கிராமத்தை Lovina Aponsuwaற்கு பரிசாக வழங்கினார். இன்றும் அந்த இடத்தை சூழ Lovinaன் சந்ததிகள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

அதேநேரம் ஆளுநரின் பிரிவினால் கடும் துயருற்ற Lovina கவலை தா௩்கமுடியாமல் பாறை மீதிருந்து பாய்ந்து தன்னைத்தானே மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.Sir Thomas Maitlandக்கு பிறகு வந்த ஆளுநர்களால் அந்த மாளிகை காலத்துக்கு காலம் புனரமைப்புக்கும், விஸ்தரிப்புக்கும் உட்பட்டது. 1877ஆம் ஆண்டு அரசாங்கம் அந்த மாளிகையை நெருங்கியதாக ரயில் பாதை திட்டத்தை அமுல்படுத்தியதால் சுரங்கம் இரண்டாக பிரிந்தது. ரயில்பாதை திட்டம் வந்ததால் அந்த இடத்தை வருமானம் செழித்தோங்கக்கூடிய ஒரு இடமாக முதலீட்டாளர்கள் கருதினர். எனவே அம்மாளிகையை வாங்கி அதை ஒரு அதிசொகுசு ஆடம்பர விடுதியாக மாற்றினார்கள்.

1920ஆம் ஆண்டு நிலத்தடி சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டு சீல்வைக்கப்பட்டது. மாளிகையை சூழ இருந்த பகுதிகள் நவீன நகரமாக முன்னேற்றம் கண்டன. இதனால் அதற்கு “இருபது கற்பாறைகள்” என்ற அர்த்தத்தை கொண்ட சிங்கள சொல்லான “கல்விஸ்ஸ” (Galvissa) என்ற சொல்லை அடிப்படையாக கொண்டு “கல்கிஸ்ஸ” (Galkissa) என பெயரிடப்பட்டது. பிற்காலத்தில் Lovinaஐ நினைவுபடுத்தும் வகையில் “Mount Lavinia” என பெயர் மாற்றப்பட்டது.

சேர் மெயிற்லண்ட் மற்றும் லோவினா இரகசியமாக சந்திக்கும் என கருதப்படும் ஹோட்டலின் கீழ்சுரங்கப்பாதையின் ஒரு பகுதி – புகைப்பட விபரம்:   https://twitter.com/srinwantudey

1927 முதல் இந்த விடுதியானது பலருக்கும் கைமாறி சென்றது. 1939ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் அச்சு நாடுகளின் இலக்காக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இறப்பர் மத்தியநிலையமான இலங்கை மாறியது. இதனால் இலங்கையை பாதுகாத்துக்கொள்ள இவ்ஆடம்பர விடுதியானது அக்காலப்பகுதியில் பிரிட்டிஷ் இராணுவத்தின் இராணுவ வைத்தியசாலையாகவும், ஆயுத களஞ்சியமாகவும் செயல்பட்டு வந்தது

1947ஆம் ஆண்டு மீண்டும் ஆடம்பர விடுதியாக மாற்றப்பட்டு “Mount Lavinia Hotel” என பெயரிடப்பட்டது. இந்த ஆடம்பர விடுதியின் நுழைவாயிலால் நுழையும்போது எமக்கு ஆரம்பகால இலங்கை(Ceylon)யின் மாண்பை உணரக்கூடியதாக இருக்கும் வகையில் இவ்மாளிகை வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஆடம்பர விடுதியின் வாயிற்பகுதியில் “Lady Lovina”ஐ நினைவூட்டும்படி அவளின் அழகிய சிலை ஒன்றும் நீர்தடாகத்தின் நடுவில் வைக்கப்பட்டுள்ளது.

210 அறைகளைக் கொண்ட இவ் விடுதியின் அறைகள், Colonial rooms, Ocean view rooms, Direct ocean view rooms ஆகிய மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டதாகும். Colonial roomsல் இருக்கும்போது எமக்கு ஆளுநரின் விருந்தினர் என்ற உணர்வு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. Ocean view roomsல் இருக்கும் போது வானியல்ரீதியான அழகிய காட்சிகளை காணமுடியும். Direct ocean view roomsகளை இந்து சமுத்திரத்தை நேரடியாக நோக்கியபடி அமைத்துள்ளார்கள்.

 ஆளுநரின் காலத்தில் மதுபான நிலவறையாக (Wine cellar) காணப்பட்ட அறை இன்று ஆடம்பர விடுதியின் பிரதான சமையலறையாக காணப்படுகின்றது. நிலத்தடி சுரங்கத்தின் ஒரு பகுதி இன்றும் காணப்படுவதோடு அது ஆடம்பர விடுதியின் முக்கிய சில விருந்தினர்களுக்கு மாத்திரம் காண்பிக்கப்படுகிறது.ஆடம்பர விடுதியும் அது அமைந்துள்ள கடற்கரை சூழலும் திருமண நிகழ்வுகளுக்கு மிகப்பொருத்தமானதாக அமைந்துள்ளதால் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளும் நாட்டின் முக்கிய பிரமுகர்களும் திருமண நிகழ்வுகளை நடாத்துவதற்கு இவ் விடுதியையே நாடி வருகின்றனர்.

Mount Lavinia Hotel இன் அன்றைய தோற்றம் –புகைப்பட விபரம்: -Mount lavinia Hotel இன் முகநூல்

1957ம் ஆண்டு வெளிவந்த”The bridge on the River Kwai” என்ற படத்தின் சில காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டன. மேலும் 2006-ஆம் ஆண்டு இவ் விடுதியின் 200ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு “The Governor’s Palace” என்ற நூல் எழுத்தாளர் “Shevanthie Gunasekara”ஆல் எழுதி வெளியிடப்பட்டது. அத்தோடு 2011ஆம் ஆண்டு இந்த வாசஸ்தலத்தில் வாழ்ந்த நான்கு ஆளுநர்களான Sir Thomas Maitland, Sir Robert Brownrigg, Sir Edward Paget, Sir Edward Barnes ஆகியோரின் நீல கண்ணாடி வில்லைகள் (Blue plaques) ஆடம்பர விடுதியின் நுழைவாயிலில் வைக்கப்பட்டன.

பெல்ஜிய மன்னர் Leopold, ரஷ்ய விண்வெளி வீரர் யூரிககாரின், எழுத்தாளர் Somerset Maugham, ஆங்கில திரைப்பட இயக்குனர் David Lean, ஆங்கில நடிகர்களான Vivien Leigh, Kirk Douglas, Gregory Peck போன்ற பிரபலமானவர்கள் இந்த ஆடம்பர விடுதியில் வந்து தங்கி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles