இந்தியாவை சிதைத்துக் கொண்டிருக்கின்ற இந்துத்துவா பயங்கரவாதம்

“பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை. சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளவும் முயலவில்லை. கொலைபற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளை கொட்டி தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம்  எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என்மீது கருணைக்காட்ட வேண்டும் என்றும் நான் கேட்கவில்லை. பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. கொலைக்கு நானே பொறுப்பு..” 

என்று மிகவும் திருத்தமாக, நிதானமாக, எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாது 1948 நவம்பர் 8 ஆம் திகதி டெல்லி செங்கோட்டையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் காந்தியை கொலை செய்த கோட்சே சுமார் ஐந்து மணிநேரம் நின்றுக்கொண்டே தனது வாக்குமூலத்தை படித்தான். பாரதம் போற்றும் தேசபிதாவை, உலகம் முழுவதும் மகாத்மா என்று மரியாதையுடன் அழைக்கும் காந்திஜியை  கொலைசெய்த கொலைகாரன் கோட்சே உலகத்தின் முன் வைக்கின்ற பதில்களாக இவை இருந்தன.

மகாத்மா காந்தி அவர்கள் நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்ட போது – புகைப்பட விபரம் – GetDoHelp.com

இவ்வளவு பெரிய தீங்கினை செய்யக்கூடிய மனநிலைதான் அல்லது கருத்தியல்தான் இந்துத்துவா பயங்கரவாதம். வெளிப்படையாக சொல்வதானால் இந்திய தேசத்தின் பல்வகைமையினை பொதுமைப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறப்படி ஒரே ஒரு இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்க நினைத்தார்கள். பாரத நாட்டில் ஒரே மதம், ஒரே கலாச்சாரம்தான். அது இந்து சனாதன தர்மம் மட்டுமே இந்து  கலாச்சாரம் என நிறுவ முனைகின்ற ஒரு சித்தாந்தமே இந்துத்துவம். அக்கோட்பாட்டை, அக்கருத்தியலை தெளிவாக புரிந்துக்கொள்வதன்மூலம் இணைந்த பாரதக்கனவை சிதைக்கின்ற, அல்லது இந்தியாவின் தனித்துவமாக விளங்குகிற பல்வகைமை தன்மையினை ஆட்டம் காண வைக்கிற ஒரு அடிப்படைவாத மனநிலையைக்கொண்ட சித்தாந்தமே இந்துத்துவ பயங்கரவாதம் என்பதனை புரிந்துக்கொள்ள முடியும்.

இந்தியாவில் ஒரு வருடத்தில் அல்லது ஒரு நாளில் நடக்கின்ற வன்முறைகள், கலவரங்கள், இழப்புகள், மனித  உரிமை மீறல்கள் அல்லது இதுவரைகாலம் இந்தியாவில் ஏற்பட்ட இன, மத முரண்பாடுகள், கலகங்கள் என்பவற்றை ஆழ்ந்து கவனித்தால் புரியும், இந்தியாவை இந்துத்துவா பயங்கரவாதம் என்பது எந்தளவு சிதைத்துக்கொண்டிருக்கிறது என்பதை. பெரும்பாலான படிப்பறிவற்ற அப்பாவி இந்து மக்களை இந்துத்துவா பயங்கரவாதம் தவறான முறையில் வழிநடத்திச் செல்கின்றது. பல நூற்றாண்டுகளாக சகோதரர்களாக வாழ்கின்ற இந்தியாவின் ஏனைய மதங்களுக்கும், இனங்களுக்கும் இடையில் கலவரங்களையும், முரண்பாட்டையும் ஏற்படுத்துகின்றன. 

இப்படிப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த பயங்கரவாத இந்துத்துவ கருத்தியல் முற்று முழுவதுமாக தூய இந்து சமயத்தின் கொள்கையில் இருந்து வேறுப்பட்டது. இந்து சமயத்தின் அடிப்படை கொள்கையே உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் நிம்மதியாக, ஆயுள் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதே. அப்படிப்பட்ட சனாதன தர்மமான இந்து சமயம் ஒருபோதும் அப்பாவி முஸ்லிம்களை குஜராத்தில் இடம்பெற்றதுபோல இனப்படுகொலை செய்யாது. மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய பின்னரும் காந்தியை கொலை செய்த கோட்சேவைப்போல மனநிம்மதியுடன் நடமாட அனுமதிக்காது. இந்தியாவின் டெஹல்கா வார இதழின் முதன்மை ஆசிரியர் தருண். ஜெ. தேஜ்பால், குஜராத் படுகொலையின் பின்னணிகளையும் அதன் உண்மையையும் அறிய அதை நிகழ்த்திய இந்துத்துவ தீவிரவாத கும்பலுக்குள் இந்து சமயத்தை ஆய்வு செய்கிற மாணவன் என்று சொல்லிக்கொண்டு ஊடுருவுகின்றார்.  குஜராத் கலவரத்தில் ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணை வயிற்றில் உள்ள குழந்தையுடன் கொலைசெய்த பஜ்ரங்கி என்ற தீவிரவாதியின் குற்றவுணர்ச்சியற்ற பரவசத்தை அவனது வார்த்தைகளிலேயே பதிவு செய்கிறார். அதை கவனித்துவிட்டு, இந்துத்துவ பயங்கரவாதம் என்றால் என்ன? அது எப்படி தோற்றம் பெற்றது, அதன் தாக்கங்கள் எவ்வாறு இந்தியா சமுதாயத்தை சீர்குலைக்கிறது என்பதனை ஆய்வு செய்வதையே இக்கட்டுரை நோக்கமாக கொண்டுள்ளது. 

“ கர்ப்பிணி பெண் ஒருத்தியை பற்றிய டெஹெல்காவின் குறிப்புகள் “

பஜ்ரங்கி : இந்தக் கர்ப்பிணிப் பெண் அங்கே இருந்தாள். அவள் வயிற்றினை நான் பிளந்தேன். எது என்ன.. என்று அவர்களுக்கு காட்டினேன். என்ன மாதிரியான பழிவாங்குதலை நாம் நடத்தினோம்…! அவர்களை இனப்பெருக்கம் செய்யவே அனுமதிக்ககூடாது. நான் அதை இன்றைக்கும் கூறமுடியும். அவர்கள் யாராக இருந்தாலும், பெண்கள், குழந்தைகள் யாராக இருக்கட்டும்… அவர்களை வேறொன்றும் செய்யக்கூடாது. அவர்களை வெட்டிப்போட வேண்டியதுதான். 

டெஹெல்கா : முஸ்லிம்களைக் கொன்ற பிறகு உங்கள் உணர்வு எப்படியிருந்தது? 

பஜ்ரங்கி : மாஸா ஆயா ஹை… (உற்சாகமாக நான் அனுபவித்தேன்) இராணா பிரதாப் போல உணர்ந்தேன். 

கலவரங்களில் ஈடுப்படும் இந்துதவா அமைப்பினர் -புகைப்பட விபரம் – IndiaCurrents.com 

இப்போது இந்து மதத்தை பற்றிய சில உண்மையான புரிதலுக்கு வருவோம். இந்துமதம் எனப்படுவது ஏனைய மதங்களைப்போல ஒரு குறிப்பிட்ட ஞானியாலோ, கடவுளர்களாலோ உருவாக்கப்பட்டதல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் உருவாக்கப்பட்டதல்ல. இந்து மதத்திற்கென்று தனிப்பட்ட  பீடமோ, தலைவரோ இல்லை. அது எப்போதும் எண்ணற்ற கடவுள்கள், வழிப்பாட்டு முறைகள், வேதங்கள் என்பவற்றை கொண்டது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிற சகிப்பு மதமாக அது இருந்திருக்கின்றது. எப்போதும் இந்திய நாடானது அகிம்சையையும், கொல்லாமையையும் போதித்த சனாதனதர்மமாக  இருந்தது என்பதை உலக வரலாற்று ஆய்வாளர்கள் எவரும் மறுக்க முடியாது. மிகமுக்கியமான வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான மார்க்ஸ் என்பவர் ஜீலை 22 1853 இல் நியூயார்க் டெய்ஸி என்ற பத்திரிகைக்கு பின்வருமாறு கருத்தினை தெரிவித்திருந்தார். 

“ அறுதியிட்டு கூறமுடியாத தொன்மையான காலம் தொட்டு இந்த மகத்தான வியப்பூட்டும் நாடும், அதன் கீழான வகுப்பை சார்ந்தோரும் திறமை மிக்கவர்களாக வாழ்ந்துள்ளனர். அவர்களின் பணிந்து நடக்கும் குணம்கூட அவர்களின் அமைதியான பெருந்தன்மையால் நிதானப்பட்டதாக உள்ளது. வலிமையற்ற நிலையிலும் அவர்கள் தங்கள் வீரத்தால் பிரிட்டிஷ்காரரை வியப்படைய செய்துள்ளனர். அவர்களின் நாடுதான் நமது மொழிகளின் பிறப்பிடம். நமது மதங்களின் தாய்வீடு. அந்நாட்டின் வீரம்மிகுந்த ஜாட் இனத்தினர் பழங்கால ஜெர்மனியரையும், பிராமணர் கிரேக்கர்களையும் பிரதுநிதித்துவபடுத்துவார்கள் எனலாம். அரேபியர்கள், துருக்கியர், முகாலயர் என இந்திய மீது படையெடுத்துபிடித்துக்கொண்டவர்கள் அனைவருமே கடைசியில் இந்திய மயமாகினார். காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பாளர்கள் அந்த தோல்வியுற்று அடிமைப்பட்ட மக்களின் உன்னதப்பண்பாட்டல் அடிமைப்பட்டு தாங்களே கரைந்து போயினர். “

இப்படி உலகம் முழுவதும் தொன்மையும், ஒற்றுமையும் சேர்ந்த மக்கள் குழுவாக புராதன காலம் தொட்டு இந்திய மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இந்திய மண்ணின் சனாதன தர்மம் அதற்கு இடம் கொடுக்காது இருந்திருக்குமானால் அவர்களால் நிட்சயமாக உலகமே போற்றும் அகிம்சைவாதிகளாக இருந்திருக்க முடியாது. இப்படிப்பட்ட பெரும்பான்மை இந்துமதத்தை பின்பற்றுகிற அப்பாவி மக்கள்தான் உண்மையில் இன்று அதன் உள்நாட்டு வேற்றுமத மக்களுக்கு குறிப்பாக இஸ்லாமியருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். 

இந்து மதத்தில் இருந்து இந்துத்துவா தத்துவம் முற்றிலும் வேறுப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொண்டோமானால், இந்து மதத்தின் பெயரைக்கொண்டு மிகவு‌ம் கீழ்த்தரமாக இயங்குகின்ற பயங்கரவாத குழுவே இந்துத்துவா அமைப்பு என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இந்துத்துவா பயங்கரவாதத்திற்கு அடிப்படையாக காணப்படுகின்ற “ இந்துத்துவா தத்துவத்தை  உருவாக்கியவராக வி. டி. சவர்க்கர் என்பவர்  காணப்படுகின்றார்.  1923 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் ஒரு புத்தகத்தை எழுதுகிறார். அதன் பெயர் “இந்துத்துவா – யார் இந்து?  அதில் அவர் இந்துத்துவா என்ற தனது கோட்பாட்டை தெளிவாக விபரிக்கிறார். முதலாவது அவர் குறிப்பிடுவது இதைத்தான். இந்துத்துவா என்பது இந்து மதமல்ல, அதுவொரு அரசியல் தத்துவம். இந்து நாட்டை உருவாக்குவதே அதன் லட்சியம். ஒரே மதநம்பிக்கையை கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்குவது. பல இன மத மொழிகளை கொண்ட மக்கள் இந்தியாவில் வாழ்ந்தாலும் எப்போதும் எப்படி ஜெர்மனியில் ஜெர்மனியரோடு யூதர்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் ஒன்றாக மாட்டார்களோ அப்படியே இந்தியாவிலும் பல இன மக்கள் எப்போதும் ஒன்றாக போவதில்லை என்ற சிந்தனையை வெளிப்படுத்தியிருந்தார் . யூதர்களை ஒழித்து, ஜேர்மனியை  ஹிட்லர் தூய்மைபடுத்த முனைந்ததைபோல இந்தியாவை தூய்மைபடுத்தவேண்டும் என்று அவர் கருதினார். இந்தியாவை இந்து இந்தியா, முஸ்லிம் இந்தியா என்று பிரிப்பதை வி. டி சவர்க்கர் நியாயப்படுத்தினார். 

2002ம் ஆண்டு குஜராத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது –புகைப்பட விபரம் – Asianews.it

அவர் தொடர்ந்து  தனது இந்துத்துவா அரசியலை இந்தியாவின் பெரும்பான்மை மக்களாக இருந்த  படிப்பறிவற்ற அப்பாவி இந்துக்களிடம் விதைத்துக்கொண்டே இருந்தார். அந்த கருத்தியல் பகுத்தறிவு அற்றதாகவும்,  மக்களிடையே இன மத வெறியை தூண்டுவதாகவும் இருந்தது. “ நாம் – நமது  தேசியம்” , “இந்துராஷ்ட்ரா – சோசலிசமல்ல இந்துராஷ்டிரம்?”, “ சிந்தனைக் கொத்து” ஆகிய நூல்களில் இந்துத்துவா கோட்பாடு பற்றிய அடிப்படைவாத வன்முறை சிந்தனைகளை பரப்பிக்கொண்டே இருந்தார். இந்துத்துவா கொள்கையில் இருந்து உருவாகிய முக்கிய அமைப்பாக ஆர். எஸ். எஸ் இருந்தது. இந்துத்துவாவினால் 1925 இல் உருவாக்கப்பட்ட ஆர். எஸ். எஸ். இயக்கம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் சத்பவன் பிராமணர்களால்  உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக கே. பி. ஹெட்கேவார் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவர்கள் அவர்களது அடிப்படைவாத இனதுவேச கொள்கையில் தெளிவாக இருந்தனர். அதாவது வெளிப்படையாக இஸ்லாமியர்களை அவர்கள் எதிரிகளாக கருதியிருந்தனர். அவர்களுக்கு பிரிட்டிஷ் எதிர்ப்பு தேசபக்தியல்ல. அவர்களது உண்மையான எதிரியாக கருதுவது முஸ்லிம் மக்களையன்றி பிரிட்டிஷ் அரசை அல்ல. இந்துத்துவா கொள்கை முஸ்லிம் இனவெறுப்பை அடிப்படையாக கொண்டிருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை அழித்துவிடவும், அவர்களிடமிருந்து இந்தியாவை விடுதலைப்பெற வைப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது. 

இந்துத்துவா சிந்தனைகளின்படி  இந்து அல்லாதவர்கள் இந்துக்கலாசாரத்தையும், இந்துக்களின் மொழியான சமஸ்கிருதத்தையும் ஏற்றாகவேண்டும்.  அவர்கள் நிட்சயமாக இந்து மதத்தை மதித்தாகவேண்டும். இந்து மதத்தையும், கலாசாரத்தையும் பெருமைப்படுத்தும் கருத்துக்களை தவிர வேறு எதையும் யாரும் அனுமதிக்ககூடாது. இந்தியாவில் வாழ்கிற எவரும்  அன்னியர்களாக இங்கு வாழக்கூடாது. இந்து தேசத்தின் அடிமைகளாக வாழவேண்டும். குறிப்பாக இஸ்லாமியர்கள் அங்கு இந்துத்துவா கோட்பாட்டுக்கு உட்பட்டு வாழலாமே தவிர அவர்கள் அதைதாண்டி எவ்வித சிறப்பு மரியாதையையோ, சிறப்பு சலுகையையோ, குடிமக்கள் என்ற உரிமையையோ கேட்க கூடாது என்கிறது. 

 இந்துத்துவா கொள்கையை உருவாக்கிய கோல்வார்கர் இந்திய அரசியல் அமைப்பு இந்தியாவின் இஸ்லாமியர்களையும் கிறிஸ்த்தவர்களையும் ஒன்றாக சமமாக்கி இருவருக்கும் சம உரிமை வழங்குவதை எதிர்க்கிறார். இஸ்லாமியர்களையும் கிறிஸ்த்தவர்களையும் ஆர். எஸ். எஸ். குழுவினர் நன்றிகெட்டவர்கள் என்று கூறுகிறார்கள். 

இப்படி கூறுகிறார்கள், “அவர்கள் இந்த மண்ணுக்கு உண்மையானவர்களாக உள்ளார்களா? இல்லை. அவர்களுக்கு நன்றி உணர்வும், இந்த நாட்டின் மீதான அன்பும் பக்தியும் இல்லாமல் போய்விட்டது..”

“கிறிஸ்த்தவர்கள் தமது மதமாற்ற முயற்சிகளைத் தொடரும் வரை தம்மை சர்வதேசக் கிறிஸ்துவத்தின் முகவர்களாகக் கருதும்வரை தமது பிறந்த நாடான இந்தியா மீது நன்றியையும் பக்தியையும் காட்டவும், இந்த மரபுக்கும் பண்பாட்டுக்கும் தமது முன்னோர்க்கும் உண்மையானவர்களாகவும் இங்கு தஞ்சம் புகுந்தவர்கள் போல் வாழவேண்டும். அப்படியில்லாவிட்டால், அவர்கள் பகைவர்களாகவே நடத்தப்படுவர்”  என்கிறார்.  

அவர்கள் எப்போதும் இந்து இராச்சியம் பற்றிய வெறித்தனமான கனவில் இருந்தார்கள். வெளிப்படையாகவே  இந்துஸ்தானத்தில் இந்துவை தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது என்கிறார்கள். இந்து இனம், இந்துமதம், இந்து கலாச்சாரம், இந்து மொழி இவற்றை ஏற்காதவர்கள், இயற்கையாகவே நமது தேசியத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டவர்களாவர் என இந்துராஷ்டிரம் எனும் நூலில் சவார்கர் எழுதுகிறார். 

“இஸ்லாமை ஒரு மதமாக ஏற்பது தவறு, இந்த தவறிலிருந்து துளிர்ப்பனவே மற்ற தவறுகள் யாவும். மதச்சார்பின்மை என்பதே தேசத்துரோகம் ..” என தனது ‘மதச்சார்பின்மை’ எனும் நூலில் S. R. கோயல்  வெளிப்படையாகவே இஸ்லாமிய மத எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார். இவ்வாறான இந்துத்துவ அடிப்படைவாத கருத்துகள், மதவாதத்தை கையில் எடுத்துக்கொண்டு நிறுவனரீதியாக  மிகப்பலமான அமைப்பாக உருவாகத்தொடங்கியது. அதில் முக்கியமானது ஆர். எஸ். எஸ். பள்ளிகள். 1952 இல் கோல்வால்கரால் கோராப்பூரில் முதன் முதல் ஆர். எஸ். எஸ். பள்ளி துவக்கப்பட்டது. 1998 இல் பி. ஜே. பி. ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அதனுடைய கண்மூடித்தனமான ஆதரவினால் 14,000 வித்தியா மந்திர்கள், 80,000 சிசு மந்திர்கள் என ஆண்டுக்கு இருபது லட்சமென வறுமைப்பட்ட இந்துக்குழந்தைகளை தமது பாடத்திட்டங்கள், பயிற்சிகள் மூலம் ஆர். எஸ். எஸ். இன் பள்ளிகள் தமக்கு சார்பானவர்களாக உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.  அவர்கள் இந்தியாவின் உயரிய சட்டமான அரசியல் அமைப்பின் தனித்துவமும், சிறப்பம்சாக விளங்குகிற மதச்சார்பின்மை என்ற கருத்தையே தேசத்துரோகம் என்கிறார்கள். இப்படிப்பட்ட சிந்தனைகளை வளருகிற குழந்தைகளிடம், இளைஞர்களிடம் விதைக்கிறார்கள். அவர்களின் பாடத்திட்டங்கள் பிரதானமாக அவற்றையே போதிக்கின்றன. 

அவர்களின் பாடப்புத்தகங்கள் எவ்வாறு உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன என்பதற்கு இரு உதாரணங்களை தருகிறேன். அவர்களது நான்காம் வகுப்பு வரலாற்று பாடத்தில் அசோகன் மன்னன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது, “அகிம்சை  போதிக்கப்பட்டது. வன்முறைகள் அனைத்தும் தவறான குற்றங்கள் எனப்பட்டன. வேட்டையாடுதல், உயிர்பலித் தரும் யாகம், ஆயுதப்பயன்பாடு போன்றவை பாவமென ஒதுக்கப்பட்டன. இது நாட்டின் ராணுவ வலிமையைப் பாதித்தது. பௌத்த பிட்சுகளுக்கு உணவளிப்பது அரசின் பெரும் பணியானது. எனவே வேலையாட்கள் பிக்குகளானார்கள். ஆயுதம் கொண்டு போரிடுவது தவறு என போதிக்கப்பட்டது. போர் மூலம் வெற்றி பெறுவது தீங்கானதாக பார்க்கப்பட்டது. கோழைத்தனம் படிப்படியாக பரவியது. ராணுவ வீரர்கள் சோர்வடைந்தனர். இது வடநாட்டை பலவீனப்படுத்தியது..”அவர்களது பத்தாவது வகுப்பு பாடத்தில் பின்வருமாறு கூறியிருக்கின்றனர், 

“ஹிட்லர் நாம் நேசிக்கும் தலைவர். ஹிட்லர் ஜெர்மனிக்குப் பெருமை சேர்த்த பெரும் தலைவர். யூதர்களின் மேலாதிக்கத்தை ஒழித்து அகண்ட ஜெர்மனியை உருவாக்கி ஜெர்மனியின் பெருமையை உயர்த்தியவர் ஹிட்லர். ஜெர்மனியர் மனதில் பெருமிதத்தையும் வீரத்தையும் விதைத்தவர்” பாசிஸவாதிகளின் கொள்கையை பின்பற்றுகிற போக்கு அதிகமாக ஆர். எஸ். எஸ். இடம் காணப்படுகிறது. அவர்களது பெரும்பான்மையான கொள்கைகள் முழுவதுமாக நாசிகள் பக்கம் சாய்வதை நோக்கமாக கொண்டது என்பதை மேலோட்டமாக வாசித்தாலே உணரமுடியும். மேலும் அவர்களது பாடநூல்களில் அடங்கியுள்ள வினாவிடைகளைப்பாருங்கள், 

“வினா : கி. பி. 1528 முதல் 1914 வரை எத்தனை ராம பக்தர்கள் ராம கோவிலை விடுவிக்க உயிர்த்தியாகம் செய்துள்ளனர்? 

விடை : 3.5 லட்சம் பக்தர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். 

வினா : 1990 அக்டோபர் 30 வரை ராம ஜென்ம பூமியை மீட்க எத்தனை போராட்டங்கள் நடந்துள்ளன?

விடை : 78 போராட்டங்கள் 

இப்படி அகிம்சைக்கும் போர் மறுப்புக்கும் எதிரான கருத்துகளை அவர்கள் படிப்படியாக  இளைய தலைமுறையிடம் விதைத்தார்கள். அவர்கள் கொள்கையின்படி  மகாத்மா காந்தி, பெரியார், அம்பேத்கர், ராஜாராம் மோகன்ராய், கேசவசென் போன்ற மத ஒற்றுமையை பேசிய யாவரும் தேசத்துரோகிகள். எனவே அவர்கள் பாடப்புத்தகம், கொள்கை, கோட்பாடு போன்றன ஹிட்லர், முசோலினி போன்றவர்களை ஆதர்ச நாயகர்களாக, வழிகாட்டியாக கொண்டாடியது. ஆகமொத்தத்தில் மேற்கூறிய கருத்தியல்களுடன் மத வெறியும், இனவெறியும் கலந்து செயற்படுகிற அரசியல் இயக்கமே இந்துத்துவா பயங்கரவாதம். 

Related Articles