அமெரிக்காவின் சிம்மசொப்பனம் வடகொரியா…

உலகில் இன்றைய தேதிக்கு அமெரிக்காதான் பொருளாதாரத்தில், இராணுவ வலிமையில் வல்லரசு என்றால். அந்த வல்லரசு அமெரிக்காவிற்கு நீண்டகாலமாகத்  தண்ணி காட்டும் நாடுதான் வடகொரியா.  ஒருவனது வலிமையைப்  பற்றி அறிந்துகொள்ள வேண்டுமாயின் அவனது எதிரியின் பலத்தை மதிப்பிட வேண்டும். அந்த அடிப்படையில் வடகொரியாவைப்  பற்றி அறிந்து கொள்ள அதன் எதிரியாக உள்ள அமெரிக்காவின் பலத்தை ஒரு முறை யோசித்துக்கொள்வோம். சூரியன்  அஸ்தமிக்காத பிரிட்டிஷ் ராஜ்ஜியம், மாபெரும் கடற்படை வலிமை கொண்டிருந்த ஸ்பெயின்,  ஜப்பான் ஏகாதிபத்தியம், முசோலினியின் இத்தாலி, உலகையே மிரட்டிய ஹிட்லரின் நாஜி ஜெர்மனி என்று அனைவரையும் எதிர்த்து வளர்ந்த அமெரிக்காவின் பெருந்தலைவலி வடகொரியா.  ஸ்டாலினது சோவியத் கூட்டமைப்பு, மாவோவின் சீன மக்கள் குடியரசு, ஹோசிமின்னின் வியட்நாம், ஃபிடலின் கியூபா போலவே முதலாளிய அமெரிக்காவிற்குக்  கொரிய ஜனநாயக மக்கள் குடியரசும் ஒரு பெரும் நெருக்கடி.

:படம் : cnn

கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு வடகொரியாவின் அதிகாரப்பூர்வப் பெயர்.  கிழக்கு ஆசியாவின் கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு குட்டி நாடாகும். ஒரு காலத்தில் கொரிய தீபகற்பம்  முழுவதும் ஒரே நாடு, அதுதான் கொரியா. ஒரே மொழி பேசும் மக்கள், அதுதான் கொரிய மொழி. இரண்டாம் உலகப்போர் இறுதியில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியை வீழ்த்தி, கம்யூனிச கொள்கையால் கட்டமைக்கப்பட்ட சோவியத்தும், முதலாளித்துவம் முழுப்பெற்ற அமெரிக்காவும் உலக வல்லரசு ஆகின. உலக நாடுகள் இவ்விரு நாடுகளுள் ஏதேனும் ஒன்றில் சாய வேண்டிய சூழல். பல நாடுகளும் தங்களின் தேவையின் அடிப்படையிலும், அரசியல் சூழலின் அடிப்படையிலும் இணைந்து  அணிமாறிக்கொண்டிருந்தன. கோமிங்க்டாங்கை வீழ்த்தி சீனாவிலும் மாவோ தலைமையிலான கம்யூனிஸக்  கட்சி ஆட்சியமைத்த பிறகு, கிழக்காசிய பிராந்தியத்தில் தனது கை ஓங்க அமெரிக்காவிற்குக்  கொரியா தேவைப்பட்டது. அதேநேரம்  சோவியத்தும் தனது பிடியை தளர்த்திக்கொள்ளவில்லை. ஜப்பான், சீனா, ரஷ்யாவின் கிழக்கு முகம் என கொரியாவின் பூகோள ரீதியிலான முக்கியத்துவம் அளப்பரியது. அதிலும் உலகின் கடல் வர்த்தகம் மூன்றில் ஒரு பங்கு அந்த பிராந்தியத்தைச்சுற்றியே அமைந்திருந்தது. இந்த அதி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் ”கிம் இல் சுங்” தலைமையில் கம்யூனிசம் வேகமாய் வேரூன்றியது. தனது பிடியிலிருந்து கொரியா விடுபடுவதை ஜப்பானும் விரும்பவில்லை. விளைவு அமெரிக்கா, ஜப்பான் ஆதரவில் தென்கொரியா. சோவியத், சீனா ஆதரவில் வடகொரியா.

உலக வரலாற்றில், இன்று வரையில்  நீண்ட காலம் நிலைத்து நிற்கும் போர் நிறுத்தம் அதுவாகும்.படம்: dailymail

கொரிய தீபகற்பத்தின் கொள்கை மோதல்,  அமெரிக்காவுக்கும் சோவியத்துக்குமான  தனிப்பட்ட கௌரவப் பிரச்சினையாகவே  பார்க்கப்பட்டது. இருநாடுகளும் போட்டிபோட்டு வட,தென் கொரியாக்களை வளர்த்தனர். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், கொரியாவில் நடத்தப்பட்ட தேர்தல்களில் கொரிய கம்யூனிஸ்ட் கட்சி ஆதிக்கம் செலுத்திய இடதுசாரி ஐக்கிய முன்னணி பல இடங்களில் வெற்றி பெற்றது. அதை அமெரிக்கா விரும்பியிருக்கவில்லை. இதனால் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பம் யுத்தத்தில் முடிவடைந்தது. அமெரிக்கா தலைமையிலான ஐநா படைகள் ஓர் அணியில் கிம் இல் சுங் தலைமையிலான சீன, சோவியத் படைகள் ஓர் அணியில்.  இறுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கொரியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. உலக வரலாற்றில், இன்று வரையில்  நீண்ட காலம் நிலைத்து நிற்கும் போர் நிறுத்தம் அதுவாகும். இந்த சூழலில் சோவியத்தில் ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், சீனாவில் மாவோவின் மறைவுக்குப் பின்னர்  வடகொரியாவுக்கான உதவிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தன. 90களில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் விரைவாக வீழ்ந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட வட கொரியா இன்று வரை கொக்கரித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், கிம் ஜாங் இல்.  கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் தந்தை என பார்க்கப்படும் கிம் இல் சுங்கின் மகன் தான் இந்த கிம் ஜாங் இல்.  மார்க்சியம், மனிதநேயவாதம், தேசியவாதம்  போன்ற பல தத்துவங்களின் கலவையான “ஜூச்சே கொள்கை” என்ற ஒருவகை சோஷலிசத்தை முழுமூச்சாக நடைமுறைப்படுத்தினார்.

கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் தந்தை என பார்க்கப்படும் கிம் இல் சுங்கின் மகன் தான் இந்த கிம் ஜாங் இல்.  மார்க்சியம், மனிதநேயவாதம், தேசியவாதம்  போன்ற பல தத்துவங்களின் கலவையான “ஜூச்சே கொள்கை” என்ற ஒருவகை சோஷலிசத்தை முழுமூச்சாக நடைமுறைப்படுத்தினார். படம்: kfausa

1950 ல் ஏற்பட்ட கொரிய போரில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு  1953 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அது ஒரு போர் நிறுத்த ஒப்பந்தமே தவிர, சமாதான ஒப்பந்தம் அல்ல. அதன் அர்த்தம், இன்றைக்கும் வட கொரிய அரசு, தென் கொரிய அரசுடனும், அமெரிக்காவுடனும் போரில் ஈடுபட்டுள்ளது. ஆனால்ந டைமுறையில் போர் நடக்கவில்லை.  இருப்பினும் அவ்வப்போது நடக்கும் அசம்பாவிதங்கள் காரணமாக பதற்றம் நிலவுவதால் வட கொரிய அரசு தனது மக்களை இராணுவ மயப்படுத்தி வைத்திருப்பதுடன், தற்காப்புக்காக அணுவாயுதங்களையும் தயாரித்து வைத்துள்ளது. இராணுவ மயம் என்றால் சாதாரணமாக அல்ல  1.21 மில்லியன் வீரர்கள் கொண்ட இராணுவம்.  சீனா, அமெரிக்கா , இந்தியாவிற்கு அடுத்து உலகின் 4 ஆவது பெரிய இராணுவத்தை வடகொரியா கொண்டுள்ளது. அதுவும் மூன்று கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட, பரப்பளவிலும் சிறியதாகவே உள்ள ஒரு நாட்டின் இராணுவம் இவ்வளவு பெரியதாக உள்ளது உலக வியப்பு.  கடந்த பத்தாண்டுகளாக வடகொரியாவிற்கெதிராக ஒரு கப்பற்படைப்   பிரிவையும், இராணுவத்தையும் அமெரிக்கா தென்கொரியாவில் நிறுத்தியுள்ளது. பொருளாதாரத்தடை விதித்து பல நெருக்கடிகளை அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் கொடுத்து வந்தபோதும், அதை எதையும் வடகொரியா கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.  அவ்வப்போது அணு ஆயுதச் சோதனையை நடத்தி அமெரிக்காவையே மிரள வைக்கிறது அந்நாடு.  அணு ஆயுதம் இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஈராக் மீது போர்தொடுத்த அமெரிக்காவால் இன்று வரை வடகொரியாவை கண்டிக்க மட்டுமே முடிகிறது.  ஒரு அணுஆயுத நாடாக மட்டுமல்லாமல்  விண்வெளி ஆய்விலும் முழுக்கவனம் செலுத்தி வருகிறது வடகொரியா.

மூன்று கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட, பரப்பளவிலும் சிறியதாகவே உள்ள ஒரு நாட்டின் இராணுவம் இவ்வளவு பெரியதாக உள்ளது உலக வியப்பு.
படம்: pbs

வடகொரியாவைப் பற்றி பல வதந்திகள் அவ்வப்போது வெளிவரும். மேற்கத்திய நாடுகளினால் பரப்பப்பட்ட சில செய்திகளை வட கொரியா மறுத்தும் வந்திருக்கிறது.  வட கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹ்யோன்  2015ல் சுட்டுக் கொல்லப்பட்டதாக, தென் கொரிய புலனாய்வுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வந்தன.  அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தூங்கியதால் மரணதண்டனை விதிக்கப்பட்டதாக அப்போது பரப்பப்பட்டது. கொல்லப்பட்டதாக கருதப்பட்ட அந்த அமைச்சர் பின்னர் வட கொரிய தொலைக்காட்சியில் தோன்றினார். வடகொரிய விசயத்தில் எது பொய், எது உண்மை என்று அறுதியிட்டுக்  கூறிவிட முடியாத அளவிற்கு ஒரு இரும்புக்கோட்டையாக அந்நாடு இருக்கிறது. ஹேர் ஸ்டைல், சிரிப்பு, நடை போன்றவற்றுக்காக கவரப்படும் மூன்றாவது வாரிசு அதிபரான கிம் ஜாங் உன் குறித்துக்  கேலி செய்யும் “The Interview” படம் வந்தபோது, அப்படத்தை தயாரித்த சோனி நிறுவனத்தை ஹேக் செய்து ஸ்தம்பிக்க வைத்தனர் வடகொரிய ஹேக்கர்கள். அமெரிக்காவில் உள்ள அந்நிறுவனத்தை  ஹேக் செய்து விழிபிதுங்கச் செய்தனர். ஐ.நா. சபையும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதாரத்  தடைகளை விதித்துள்ளபோதும், வடகொரியா அதற்கெல்லாம் அடங்குவதாக இல்லை. இந்த நிலையில் வடகொரியாவை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கொரிய தீபகற்ப பகுதிக்கு அமெரிக்காவின் வலிமை மிகுந்த யுஎஸ்எஸ் காரல் வின்சன் விமானம் தாங்கி போர்க்கப்பலும், யுஎஸ்எஸ் வேனே இ மேயர், யுஎஸ்எஸ் மைக்கேல் மர்பி நாசகார கப்பல்களும் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முதல் முறையாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்டு, ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரிகளின் இலக்குகளை துவம்சம் செய்ய ஏற்ற ஏவுகணைகள் இடம்பெற்றிருந்தன. படம்: cnn

எந்த நேரத்திலும் வடகொரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும்  என்ற நிலை நிலவிய வேளையில் வடகொரியவை கட்டமைத்த  கிம் இல் சுங்கின் 105–வது பிறந்த தின அணிவகுப்பு நடைபெற்றது. அந்த அணிவகுப்பில் வடகொரியாவின் படை பலத்தை காட்டுகிற வகையில் பீரங்கிகள், கவச வாகனங்கள், தளவாடங்கள் இடம் பெற்றிருந்தன.  முதல் முறையாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்டு, ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரிகளின் இலக்குகளை துவம்சம் செய்ய ஏற்ற ஏவுகணைகள் இடம்பெற்றிருந்தன. இதுதான் அமெரிக்காவுக்கான பதிலடி.

அதிபர் ‘கிம் ஜாங் உன்’
படம் : cbc.ca

பசுபிக் கடல் வழியாக அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் என்று வட கொரியாவின் தாக்குதல் எளிதுதான் என்பது அப்போது உணர்த்தப்பட்டது.   வடகொரியாவோடு போரிட்டு வெற்றியே கிடைத்தாலும் அமெரிக்காவிற்கு பேரழிவே பரிசாகக் கிடைக்கும். காரணம், வட கொரியா ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட ஒரு புரட்சிகர தேசம். எப்போதும் வடகொரியா கொக்கரிக்கும்…

Related Articles