இலங்கையில் ஆடப்படும் வடமோடித் தென்மோடிக் கூத்துகள்

இலங்கையைப் பொறுத்தவரை புராண இதிகாசங்களுக்குப் பெயர்போனதொரு பூமி. அதே போல் இங்கு எமது முன்னோர்கள் விட்டுச்சென்ற கலைசார்ந்த மரபுகளும் ஏராளம் உண்டு. அவற்றில் பெரும்பாலாவை பிற்காலத்து தலைமுறைகளால் மறந்து அழிந்து போனாலும், ஆங்காங்கே சில கலை அம்சங்கள் இன்றளவும் எதோ ஒரு வகையில் பின்பற்றப்பட்டு வருகின்றதை நாம் காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் பின்பற்றப்பட்டு வரும் வடமோடி தென்மோடி கூத்துக்களைப் பற்றிய சில தகவல்கள் அடங்கிய தொகுப்பே இது.  

இலங்கையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் தமிழர்களின் நெறி சார்ந்த ஆட்ட மரபுகளாக வடமோடி, தென்மோடி கூத்து ஆட்டங்கள் பார்க்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக தென் பகுதியான மட்டக்களப்பின் சில பகுதிகளில் ஆடப்படும் இந்தக் கூத்தானது சிறந்ததொரு பணபைப் பெற்றுள்ளது. இந்த இரு கூத்துகளிலும் ஆடல் மற்றும் பாடல் முறையானது வேறுபட்டுக் காணப்படுகின்றது. தெற்குப் பகுதியில் ஆடப்படும் தென்மோடி ஆட்டங்கள் வடக்குப் பகுதியில் ஆடப்படும் வடமோடி ஆட்டங்களை விட பல நுணுக்கமான அம்சங்களைக் கொண்டுள்ளது. 

படஉதவி – blogspot.com

நாட்டுக்கூத்தின் மோடிகளுள் தென்மோடிக் கூத்தே பழைவாய்ந்ததாக காணப்படுகின்றது. அலங்காரரூபன் நாடகம், அநுருத்திரன் நாடகம்  என்பன தொன்மை வாய்ந்த தென்மோடிக்கூத்துகள் ஆகும். வடமோடிக் கூத்தில் போர் சார்ந்த காட்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். தென்மோடிக் கூத்தில் காதல் சார்ந்த காட்சிகளுக்கு முதன்மை அளிக்கப்படும். இதன் காரணமாக வடமோடிக் கூத்தில் வீர உணர்வு முதன்மைபெற்று காணப்படும் அதேவேளையில் தென்மோடி கூத்தில் அலங்காரங்கள் அதிகமாகப் செய்யப்பட்டு ஆடப்படுகின்றது. 

பாடல்முறை 

படஉதவி – wordpress.com

தென்மோடிக் கூத்தில் பாட்டுக்களை இழுத்துப்பாட, வடமோடிக் கூத்தில் நடிகர் தன் பாட்டைப் படிக்க ஆரம்பித்த உடன் பக்கப்பாட்டுக்காரர் முழுதாக அதனை பாடிமுடிப்பார். தென்மோடியில் கடைசிப் பகுதியை மட்டும் பிற்பாட்டுக்காரர் படித்து முடித்துவிட்டு, பாட்டு முழுவதுக்குமுரிய தருவைப் பாடுவார். தரு என்பது கல்பித சங்கீதத்தைச் சேர்ந்தது ஆகும்.பொதுவாக இவை இசை நாட்டியங்கள், நாட்டிய நாடகங்கள் போன்றவற்றில்  இடம் பெறுகின்றன. இவ் உருப்படியை கதைப்பாட்டு எனவும் அழைப்பர்.

வடமோடித் தென்மோடிக் கூத்துக்களில் முதற்கண் காப்பு என்றொரு பாடல் பாடப்படுகின்றது. வடமோடி கூத்துகளில் இவை வெண்பா முறையிலும் தென்மோடிக் கூத்துகளில் விருத்தப்பாவாகவும் பாடப்படுகின்றது.

தாளக்கட்டு முறை 

இக்கூத்துகளில் ஒவ்வொரு பாத்திரத்தின் வரவு நடைபெறும் போதும் வெவ்வேறு வகையான தாளங்களை இசைகின்றனர். அத்தாளங்கள் வாயால் சொல்லப்படும்போது ‘பதவரிசை தாளக்கட்டு’ என்று சொல்லப்படுகின்றது. தாளக்கட்டு என்பது ஆட்டத்திற்குரிய தாளங்களை சொற்கோர்ப்பினாலேயே தொடுத்துப் பாடுதல்  ஆகும்.

படஉதவி – eelamtamilsdanceandmusi.com

இத் தாளக்கட்டானது கூத்து பாத்திரங்களின் வரவின்போது அண்ணாவியார் என்பவரால் தொடர்ந்து பாடப்படுகின்றது. இதில் அண்ணாவியார் என்பவர் பண்டைய நாட்களில் நாட்டுக்கூத்து பழக்கி நெறிப்படுத்தி மேடையேற்றுபவர். நடிகர்கள் எவ்வாறு நடிப்பது, வசனம்,பாடல்களில் எங்கே உச்சரிப்பு செய்ய வேண்டும், மற்றும் பாடல்களின் ஏற்ற இறக்கங்களைக் கூட்டிக்குறைப்பது போன்ற விடயங்களை இவரே தீர்மானிப்பார். இன்று இப்பணிகளைச் செய்பவர் நெறியாளுனர் அல்லது இயக்குனர் என்று அழைக்கபடுகின்றனர். 

இந்த தாளக்கட்டுகள் அண்ணாவியாரின் மன நிலைக்கேற்ப எட்டுமுறை, பன்னிரெண்டுமுறை என்ற எண்ணிக்கையில் அமையும். இவை ஆண்கள்,பெண்கள் இருபாலருக்கும் வெவ்வேறு வகைகளாக இருப்பதோடு பாத்திர வேறுபாட்டையும் பிரதிபலிக்கும் தன்மை கொண்டது. 

தாளக்கட்டு வகைகள் 

இக்கூத்துகளில் ஆண்களுக்குரிய தாளக்கட்டுக்களாக  உலா, பொடியடி, வீசாணம், எட்டு, நாலடி, குத்துமிதி,பாச்சல் என்பன  அமைந்திருக்கும். பெண்களுக்குரிய தாளக்கட்டுக்களாக ஒய்யாரம், பொடியடி, வீசாணம், எட்டு, தட்டடி, அடந்தை, குத்துநிலை என்பனவாகும். இத்தாளக்கட்டுக்களே வடமோடி தென்மோடிக் கூத்துகளின் உயிர்த்தன்மையாகும். இவை ஏனைய ஆட்ட முறைகளிலிருந்து வேறுபடுத்துவதோடு இதற்கென உரியதொரு கலைப் பண்பையும் தன்மையையும் பெற்றுக் காணப்படுகின்றன.

நடன முறை 

படஉதவி – arayampathy.lk

வடமோடியில் ஆட்டமுறையானது சற்று வேகமானதாக அமைந்திருக்கும் தென்மோடிக் கூத்து நுணுக்கங்கள் அதிகம் நிறைந்த ஆட்டமாக காணப்படும். வடமோடிக் கூத்தில் நடிகனது பாதம் முழுவதும் நிலத்தில் படும் வகையில் நடனம் ஆடப்படுகின்றன. தென்மோடிக் கூத்தில் பாதத்தின் முற்பகுதி அல்லது குதிக்கால் மட்டும் நிலத்தில் படும்வகையில் ஆடப்படுகின்றன. 

நம் மூத்தகுடி தமிழர்களின் பல பாரம்பரிய கலைகள் அழிவடைந்து போனாலும் ஆங்காங்கே இருக்கும் இவ்வாறான சில கலை அம்சங்களை பேணிப் பாதுகாத்துக் கொண்டுச் செல்லவதே தமிழ் கலைகளுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்றுச் சொன்னால் அது மிகையாகாது..! 

Related Articles