Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

கீழடி – வைகைக்கரை மீதமைந்த ஓர் சங்ககால நகர நாகரீகம்

1973 | கீழடி-சிவகங்கை மாவட்டம் | தமிழ்நாடு. 

சுமார் 46 ஆண்டுகள் முன்னர் மதுரையில் காலை வேளை எப்படி ஆரம்பித்திருக்கும்? இப்போது போல சாதாரணமாகத் தானே அப்போதும் இருந்திருக்கும். ஆனால் அன்று நடந்த சம்பவம் பின்னாளில் சரித்திரம் ஆகப்போகிறது என்பதை அந்த பள்ளி மாணவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் தான்.  சில மாணவர்கள் ஆர்வம் ததும்ப தமது வரலாற்று ஆசிரியரிடம் ஓடி வருகின்றனர். தாம் விளையாடும் இடத்தில் கண்டெடுத்த பழைய சுவடுகள் சிலவற்றை ஆசிரியர் பாலசுப்பிரமணியத்திடம் கையளிக்கின்றனர். ஆசிரியருக்கோ வியப்பு! கண்டெடுத்தவை தொல்லியல் சான்றுகள் என்பதை உணர்ந்தார்….  ஆனால் தமிழர்களின் வரலாற்றின் புதிய ஆதாரமாக கீழடி மாறப்போகிறது என்பதை அன்று அவர் அறியவில்லை.

2019 | கீழடி-சிவகங்கை மாவட்டம் | தமிழ்நாடு. 

சுமார் 46 ஆண்டுகள் கழித்து #KEEZHADIதமிழ்CIVILIZATION என்ற  ஹேஷ்டேக்கோடு ட்வீட்டுகள் ட்வீட்டரில் வலம் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்திய அளவில் பிரபலமான நேசமணிக்கு பின்னர் தமிழர் கொண்டாடிய ஹேஷ்டேக் இதுவே. 2600 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழிற்கும் இந்திய வரலாற்றிற்கும் இது ஒரு முக்கிய திருப்புமுனை.   

மூன்றாம் கட்ட அகழாய்வை ஆரம்பிக்கும் போது எடுக்கப்பட்ட படம்

சிந்து வெளி நாகரீகம்

இந்தியாவின் மிகப்பண்டைய நாகரீகமென்றால் சிந்து நதிக்கரையை கொண்டமைந்த சிந்துவெளி நாகரீகமே. இதன் காலம் கி.மு.3300–1300 ஆண்டளவில் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அதே போன்று பழைய நாகரீகம் தமிழ்நாட்டிலும் இருந்தமைக்கான ஆதாரங்கள் வெளியாகி இந்திய வரலாற்றையே புரட்டிப்போட்டிருக்கின்றன. இறுதியாக வெளியாகி உள்ள ஆய்வு முடிவுகளின் படி கீழடி நகரில் அமைந்த நாகரீகம் 2600 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்ற செய்தி எம்மில் பலருக்கு இனிப்பான செய்தியாக மாறியிருக்கின்றது. கார்பன் திகதியிடலின் படி சங்க காலம் நாம் எதிர்பார்த்ததை காட்டிலும் 300 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்பது உறுதியாகிவிட்டது. இந்தியாவின் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழாய்வு செய்யப்பட்ட தொல்லியல் சான்றுகள் கி.மு.6ம் நூற்றாண்டு – கி.மு.1ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டவையாகும். இது போன்ற பல வியக்கவைக்கும் உண்மைகள் அறிக்கையாக கடந்த வியாழக்கிழமை (செப்.19) வெளியிடப்பட்டன. நாமும் சமூகவலைத்தளங்களில் இது பற்றி பலவிடயங்களை பகிர்ந்திருப்போம், காணொளிகளாக கண்டிருப்போம். அவற்றில் சில முக்கிய அம்சங்கள் இந்த கட்டுரையில் உங்களுக்காக… 

நான்காம் கட்ட ஆய்வறிக்கை முடிவுகள்  

அகழாய்வில் கிடைக்கப்பெற்ற தங்க ஆபரணங்கள்

தமிழகத்தின் தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்பொருளியல்  துறைக்கான அமைச்சர் பாண்டியராஜன், கீழடியில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் முன்னர் நம்பப்பட்டதை விட 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என்று கடந்த 19ம் திகதி (19.09.2019) வெளியான புதிய அறிக்கையின் மூலம் தெரிவித்தார். தரைமட்டத்திலிருந்து 353செ.மீ. ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆறு மாதிரிகளில் ஒன்று கி.மு.580 ஐ சேர்ந்தது என தொல்லியல் ஆணையாளர் உதயச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்நாடு தொல்லியல் ஆய்வு துறை  இந்த அறிக்கைக்கு ‘கீழடி – வைகைக்கரை மீதமைந்த ஓர் சங்ககால நகர நாகரீகம்’ என தலைப்பிட்டு வெளியிட்டது. நான்காம் கட்ட அகழ்வாய்வின் படி “கி.மு.6ம் நூற்றாண்டளவில் கங்கை நதிக்கரையை போன்றே அதே காலப்பகுதியில் இரண்டாவது நகர நாகரீகமானது வைகைக்கரையில் உருவாகியுள்ளது (முதலாவது சிந்து வெளி).” அதுமட்டுமன்றி பலர் பரவலாக குறித்த பிரதேசத்தை கீழடி என்றுரைத்தபோதிலும் இந்த அறிக்கையானது கீழடி என்றே உச்சரிக்கிறது.

பழமையான தமிழ்–பிராமி (தமிழி) எழுத்துரு 

இந்த தமிழி எழுத்துக்கள் சிந்து வெளி நாகரீக எழுத்துக்கும் இன்றைய தமிழெழுத்துக்கும் இடைப்பட்டதாக உள்ளது. இவற்றை ஆழ ஆராய்ந்தால் சிந்து வெளியில் வழக்கிலிருந்தது தமிழே என்று நிரூபிக்க இயலும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிடுகின்றனர். அண்மையில் கிடைக்கப்பெற்ற விஞ்ஞான ஆய்வு முடிவின் திகதிகளின் படி  தமிழ்-பிராமி (தமிழி) எழுத்துருவின் காலம் மேலும் சில நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி நகர்கிறது. அதாவது கி.மு.6ம் நூற்றாண்டு. அறிக்கையின் 61வது பக்கத்தில் “அவர்கள் கி.மு. 6ம் நூற்றாண்டுக்கு முன்பதாகவே கல்வியறிவை அடைந்தோ அல்லது எழுதும் கலையை கற்றோ இருந்திருக்கிறார்கள் என்று இந்த முடிவுகள் அறுதியிட்டு கூறுகின்றன” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலை வடிவங்கள் பொறிக்கப்பட்ட பானையை கண்டெடுக்கும் காட்சியை படத்தில் காணலாம்

நான்காம் கட்ட அகழ்வில் பெறப்பட்ட ஆறு மாதிரிகள் ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவின் மியாமியில் உள்ள பீட்டா பகுப்பாய்வு ஆய்வு கூடத்துக்கு(Beta Analytic Lab) திணிவு முடுக்கி நிறமாலை திகதியிடலுக்காக (Accelerator Mass Spectrometry – AMS)  அனுப்பிவைக்கப்பட்டன. ஏ.எம்.எஸ். திகதிகளை பகுப்பாய்ந்த பின், கீழடி சில கருதுகோள்களுக்கு வலுச்சேர்க்கிறது என்பதை தொல்பொருள் ஆய்வாளர் ராஜன் உணர்ந்தார். எலும்புத்துண்டுகள் புனேயில் அமைந்துள்ள டெக்கான் கல்லூரி – முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இவற்றை ஆய்வு செய்ததில் மாடு/எருது, எருமை, செம்மறி ஆடு, ஆடு, நீலான்/ நிலகை  (நீலப்பசு – ஆசியாவின் மிகப்பெரிய மான் இனம், இந்திய துணைக்கண்டத்துக்கு உரித்தானது), கலைமான், காட்டுப்பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்களின் எலும்புகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. “இதன்மூலம் கீழடியில் வாழ்ந்த சமூகம் குறித்த உயிரினங்களை விவசாயத்துக்காக முக்கியமாக பயன்படுத்தியது” என்று திரு.உதயச்சந்திரன் தெரிவித்தார். 

தமிழ்-பிராமி(தமிழி) பானை ஓடுகள் 

தமிழ்-பிராமி(தமிழி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஐம்பத்தாறு பானை ஓடுகள் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வு துறையினால் மாத்திரம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது. இவ்வாறு எழுதப்பட்ட ஓடுகள் இரண்டுவகைப்படுகின்றன. ஒன்று பானை செய்யப்படும்போதே எழுதப்பட்டது. மற்றையது பானையை செய்து சூளையில் சுட்டபின் எழுதப்பட்டது. பானை செய்யும் போதே எழுதப்படின் அந்த பானையை செய்பவர் எழுதக்கூடியவர். ஆனால் பெரும்பாலான பானைகள் சுட்ட பின் எழுதப்பட்டிருக்கின்றன. அதாவது பானையை வாங்கிச்சென்று அதில் எழுத்துக்களை பொறித்திருக்கிறார்கள். எனவே அந்த சமூகம் முழுவதுமே நன்கு எழுத்தறிவு படைத்தது என்று இதன் மூலம் ஆய்வாளர்கள் முடிவுக்கு வருகின்றனர்.  அனேகமான பானைகளில் குவிரன், ஆதன் என்ற இரு பெயர்களே பொறிக்கப்பட்டிருக்கின்றன. கீழடியில் கிடைக்கப்பெற்ற பானை மாதிரிகள் வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் ஊடாக இத்தாலியில் உள்ள பீசா பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்டு கனிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதன் மூலம் நீர்கொள்கலன்கள், சமையற் பாத்திரங்கள் என்பன அந்த பகுதியில் கிடைத்த மூலப்பொருட்களை கொண்டே தயாரிக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் “10 சுருள் அச்சுக்கள், வடிவமைப்பு படைப்புகளுக்கு பயன்படும் 20 கூர்மைப்படுத்தப்பட்ட என்பு முனை கருவிகள், நூலை தொங்கவிடும் கற்கள், களிமண் கோலங்கள் மற்றும் நூற்பு, தறியிலமைத்தல், நெசவு பின்னர் சாயமிடல் போன்ற நெசவு கைத்தொழிலின் பல்வேறு கட்டங்களில் திரவத்தை உறுதிப்படுத்த பயன்படும் மண் பாத்திரங்கள் மீட்டெடுக்கப்பட்டன” என கூறப்பட்டுள்ளது. 

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளை படத்தில் காணலாம்

மேலும் சாதாரண மக்கள் உபயோகிக்கும் தங்க ஆபரணங்கள், யானை தந்தத்தினாலான சீப்பு, விளையாட்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அன்றைய மக்கள் செல்வச்செழிப்போடு வாழ்ந்துள்ளனர் என்பது நகைகள் மூலம் புலப்படுகிறது. விளையாட்டு பொருட்கள் மற்றும் தாயக்கட்டைகள் கிடைக்கப்பெற்றதன் மூலம் குறித்த சமூகமக்கள் மிகவும் நாகரீகமான ஒரு வாழ்வியலை வாழ்ந்துள்ளார்கள் எனலாம். தாயக்கட்டைகள் பற்றி சங்ககால பாடல்களும் விவரிக்கின்றன.  

 ஆய்வின் கதை 

2013-2014 ஆம் ஆண்டளவில் இந்தியத் தொல்பொருள் ஆய்வகம் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு மூலம் வைகை நதிக்கரை வழியாக தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 293 இடங்களை தெரிந்து ஆய்வு நடத்த விழைந்தது. அதில் இரண்டாம் கட்ட ஆய்வு சிவகங்கையை சேர்ந்த கீழடியில் பள்ளிச்சந்தை திடலில் நடைபெற்றது. ஏற்கனவே தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் 1876ம் ஆண்டு ஒரு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு அது ஈமைக்கிரியைகள் செய்யப்பட்ட பகுதி என முடிவு செய்யப்பட்டது. இங்கு முதுமக்கள் தாழிகள் பல கிடைக்கப்பெற்றன. முதுமக்கள் தாழி என்பது ஒருவர் இறந்த பின் அல்லது இறக்க முன்பே பானை ஒன்றில் அவர்களுக்கு விரும்பிய பொருட்களுடன் புதைத்தல் ஆகும். எகிப்திலுள்ள பிரமிடுக்களை ஒத்த சடங்கு இது. ஆதிச்சநல்லூரில் ஏராளமான தமிழ்மக்களின் மண்டையோடுகள் கிடைக்கப்பெற்ற அதேவேளை மொங்கோலிய, காக்கேசிய மண்டையோடுகள் சிலவும் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. ஆனால் கீழடியின் சிறப்பே இது ஒரு நகர நாகரீகமாக விளங்குவதுதான். திரு.அமர்நாத் அவர்களின் குழு ஆய்வின் போது கிடைக்கும் தொல்பொருட்கள் பற்றி பிரதேச மக்களுக்கும் எடுத்துரைத்ததால் குறித்த கிராம மக்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் அகழாய்வுக்கு உதவி புரிந்தனர்.  முதலிரு கட்டங்களும் ஒழுங்காக இடம்பெற்றாலும் அதன் பின் பல தடைகள் ஏற்படுகின்றன. அமர்நாத் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுதல், அகழாய்வுக்கு தடை விதித்து நிறுத்தி வைத்தல் போன்ற பல இன்னல்கள் ஏற்பட்டன. 

நவீன கருவிகளான காந்த அளவி(magnetometer), புவி ஊடுருவி ரேடார் (ground penetrating radar-GPR) ஆகியவை

முதல் மூன்று கட்ட அகழாய்வுகள் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தினால் (Archeological Survey of India) முன்னெடுக்கப்பட்டது. அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டன ஆனால் அவை வெளிவரவில்லை. நான்காம்  கட்ட அகழாய்வு (2018) தமிழ்நாடு தொல்லியல் ஆய்வு துறையினால் மேற்கொள்ளப்பட்டு குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஐந்தாம் கட்ட அகழாய்வு தமிழ்நாடு தொல்லியல் ஆய்வு துறையினால் தொடர்ந்து கொண்டுச்செல்லப்படுகிறது. இதில் நவீன கருவிகளான காந்த அளவி(magnetometer), புவி ஊடுருவி ரேடார் (ground penetrating radar-GPR) ஆகியவை பயன்படுகின்றன. ஜி.பீ.ஆர் மூலம் நிலத்துக்கு கீழ் சுவர் இருக்கிறதா என்பதை அறிந்து அதன் பின் தோண்டும் முறையை பின்பற்றுகின்றனர். 

இந்தியத் தொல்பொருள் ஆய்வகமும் பீட்டா ஆய்வகமும்

ஹரப்பா நகர கண்டுபிடிப்புகளும் கீழடி கண்டுபிடிப்புகளும் பெரிதும் ஒத்திருப்பதால் சிந்து வெளி மக்கள் தமிழர்களே என்பது ஊர்ஜிதமடைந்து வருகிறது. இதனாலேயே பல தடைகளும் எழுவதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெறுமனே 2 ஏக்கர் நிலப்பரப்பில் 102 குழிகள் அமைத்ததே பெரிய விடயம் அதிலும் இத்தனை தொல்லியல் சான்றுகள் கிடைக்கப்பெறுதல் என்பது ஆய்வாளர்களையே மலைக்கவைக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் 70 ஆண்டு காலமாக இந்த அளவு விரிவான ஆய்வு இடம்பெறாமையால் தமிழர் வரலாற்றில் இது மறுதலிக்க முடியாத அகழாய்வென்பது திண்ணம். 

Related Articles